சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன்
பேராசிரியர் எஸ்.மலைச்சாமி
கல்விப் பொறுப்புடன் வகுப்பறையில் கற்பிக்க, சொல்லாட்டமாடும் ஒரு பேராசிரியர் பொது வெளியில் பொலிவுடன் “..கரகாட்டம்..” ஆடிக் கவர்ந்திழுக்கிறார்!
தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் கரகக்கலையை மண் சார்ந்தும், மனசு சார்ந்தும் மக்களிடம் கொண்டு செல்லும் எஸ்.மலைச்சாமி (44), மதுரை லதா மாதவன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை பேராசிரியராக கடந்த நான்கு வருடமாகப் பணியாற்றி வருகிறார்.
கல்விப்பணியில் உதவிப் பேராசிரியர், பேராசிரியர் என்று பதினெட்டு வருடங்கள் ஆனாலும் சமூகத்திற்காக அப்பா, அம்மா இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்திற்கு உதவுகிறார்.
அத்துடன் மனநலம், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் மூலம் படிக்கட்டுகள் தொண்டு நிறுவனம் மூலமாக பல்வேறு சேவைகள் செய்து வருகிற இந்தக் கரகக்கலைஞர், பேராசிரியர், எழுத்தாளர், சமூகசேவகர் என அவதாரம் எடுக்கும் மலைச்சாமி கரகத்தில் தன்திறமையால் வியப்பில் ஆழ்த்துகிறார்!
கரகக்கலைஞர் மற்றும் மின்னணுவியல் துறைப் பேராசிரியர் எஸ்.மலைச்சாமி அவர்களிடம்….
“..மதுரையில் தியாகராஜர் மாடல் ஹைஸ்கூலில் நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அன்று பள்ளிக்கு “..கரகாட்டக்காரன் படத்தில் நடித்த நடிகர் ராமராஜனுக்கு டூப்போட்ட ஏ.லூர்துசாமி அய்யா வந்திருந்தார்.
நாட்டுப்புறக்கலை பற்றி மாணவர்களுக்கு கரகம் எடுத்து சொல்லிக் கொடுத்தார். அதன் மேலிருக்கும் டோப்புக்கிளி, அவர் கரகத்தை தலையில் தூக்கி வைத்து ஆடும் போது என்னை வெகுவாக கவர்ந்தது. என்னை அறியாமலே கரகாட்டம் மீது ஆர்வத்தை அவரிடம் வெளிப்படுத்தினேன். முதன் முதலில் அவரிடமே ஆட்டக்கரகமும் கற்றேன்.
மதுரையில் வி.வேலு அவர்களிடம் முறைப்படி கரகம் கற்றுக் கொண்டேன். முனைவர் பேராசிரியர் விஜயலட்சமி நவநீதகிருஷ்ணன், தேன்மொழி ராஜேந்திரன், முருகேஸ்வரி போன்ற மிகப்பெரிய கலைஞர்களின் தொடர்புகள் மூலமாகவும் அவர்களது குழுவிலும் இணைந்து கரகக் கலையை மேலும் மெருகேற்றிக்கொண்டேன்.
கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தனியார் கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகப் பணி செய்து பல்வேறு திருக்கோயில் திருவிழாக்கள், தனியார் நிகழ்சிகளிலும் பங்கு கொண்டு எனது கலைத் திறமையை மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
அந்த நாட்களில் பள்ளி, கல்லூரி விழாக்களில் நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளது. கலையை வளர்க்க, பெண்ணடிமை மற்றும் திருநங்கைகளின் நலன்களை முன்னிறுத்தி மேடை நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறேன்.
திருமணத்திற்கு பின்னர் கலையில் சற்று தொய்வு ஏற்பட்டது. என் மனைவியிடம் கரகக்கலையில் ஏற்பட்ட தீராத தாகத்தைச் சொல்லிப் புரியவைத்தேன்‘. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள்.
கல்லூரிக்குச் சென்றால் கற்பிக்கும் பணி. விடுமுறை நாட்களில் கலைப்பணி என்று பிரித்துக் கொண்டேன். இதனால் கல்விக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் கல்வியுடன் கலையும் வளர்த்துக் கொண்டேன்.
காவடியாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புரவியாட்டம் காளையாட்டம், பொய்கால் குதிரை, அம்மன்வேடம், கருப்பசாமி ஆட்டம், அடுக்குகரகம், பாட்டில்கரகம், போன்ற கலைகளில் திறமையை வளர்த்துக் கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறேன்.
கரகம் ஆடும் போது பார்வை யாளர்களை ஈர்க்க கண் இமையால் ஊசி எடுப்பது, எழுமிச்சம் பழத்தை குத்தி எடுப்பது, சோடா பாட்டிலை எடுப்பது, வட்ட தட்டில் நிற்பது, கைகளில் தீப்பந்தம் ஏந்தி ஆடுவது போன்ற பல்வேறு சாகசங்கள் செய்திருக்கிறேன்.
தேவராட்டம், பொம்மலாட்டம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு அதற்கான முயற்சியிலும் ஈடுபடுகிறேன். இன்னும் நான் கற்றுக்கொள்ள நாட்டுப்புறக் கலைகள் நிறைய இருக்கிறது.
இதுபோன்ற நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்குகின்ற வகையில், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு அவர்களையும் மேடை யேற்றி அழகு பார்க்கிறேன். தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகள் மூலமாகவும் ஆயிரக்கனக்காண கரகாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி யிருக்கிறேன்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை மூலமாக, சமீபத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு, நாட்டுப்புறக் கலைகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஐந்து அரசு பள்ளிகளில் கரகக் கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன்.
நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு ‘சங்கமம்’ போன்ற பல்வேறு வாய்ப்புகள் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், கலைகளை மேம்படுத்த பள்ளிப் பாடப் புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அதேபோல நாட்டுப்புறக் கலைகளை முறையாகப் படித்த பட்டதாரிகளுக்கு அரசு கலைக்கல்லூரி, இசைக்கல்லூரி, கவின் கலைக்கல்லூரிகள் மூலமாக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.
எனது கலைத் திறமையை பாராட்டி தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்டக் கலைப் பண்பாட்டுத்துறை “..கலைச்சுடர்மணி..” விருது வழங்கி பாராட்டியிருக்கிறது “..கலைமாமணி..” போன்ற விருதுக்கும் என்னை தகுதியாக்கிக் கொண்டிருக்கிறேன்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த இளைஞர் பெரு விழாவில் தங்கம் வெள்ளி உள்பட ஐந்து பதக்கங்கள், தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமிருந்து சமூகப்பணிக்காக இதுவரை முப்பதுக்கும் மேலான விருதுகள் பெற்றுள்ளேன்.
எனது கரகாட்டக்கலைகளில் உள்ள வாழ்வியல் மற்றும் அவர்களது வட்டார மொழி பேசுவதை மையப்படுத்தியும், அவர்களுடைய இணை ஆட்டக்காரர்கள் பற்றியும் இதில் கிடைத்த அனுபவங்கள் அதன் சார்ந்த நினைவுகளையும் 35 சிறுகதைகளாக எழுதியிருக்கிறேன்.
அந்தச் சிறுகதைகள் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளி வந்த திலிருந்து 14 சிறுகதைகளை மட்டும் தொகுத்து கடந்த ஆண்டு இறுதியில் “..டோப்புக் கிளியும் காகிதச் சிறகுகளும்..” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிக்கிறேன்.
கரகக்கலையை மக்கள் மறக்கவும் இல்லை, ஒதுக்கவும் இல்லை. காலமும் சூழ்நிலையும் கரகக்கலையை மீண்டும் மீண்டும் புதுபித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை!
என்னைப் பொறுத்த வரை “…கல்வியும் கலையும் ரெட்டை மாட்டு வண்டி போல ஓட்டிக்கொண்டிருக்கிறேன். அந்த ரெண்டிலுமே ஒன்று சேர்ந்தாற்போல கடந்த இருபது வருடமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன்…” என்று பகிரும், பேராசிரியர் அவர்களது சிறப்பான கலைப்பணி தொடர ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது. l