வாழ்த்துக் கட்டுரை

மதுரை.ஆர்.கணேசன்

கற்றலில்  கல்வி  நாற்பது..!

ஆதியில் “..குருகுலத்தில்..” பயின்ற கல்வி வளர்ச்சியுடன் வகுப்பறை களம் கடந்து கால  சுழற்சிகளாலும், தொழில் நுட்ப வசதிகளாலும் இன்று “..ஆன் லைன்..” கருவிகள் வழியாக வீட்டுக்குள்ளும் பிரவேசித்திருக்கிறது. 

கல்விப்  பருவத்தில் மாணவர்களிடம் “..பாடப் புத்தகங்கள்..”  கிழியும் வரை நட்பாகின்றன. வாசிப்பின் மறுமுகமாக  “..புதுப்புது  செயலிகள்..”  வருகை  புரிந்து மேலும் வளரக் கரங்களுடன் கைகொடுக்கின்றது.  

அறம்  செய விரும்பு! அதேபோல  மாற்றங்களை நிகழ்த்தக் கற்றுக்கொள்!  என்றால் மிகையல்ல அப்படியான  கல்விச்சாலையில் “..கல்வி 40..” என்கிற  மொபைல் செயலி மாணவர்களுக்கான  புதிய அனுபவத்தைத்  தருவித்து சாதனை படைத்துக்  கொண்டிருக்கிறது..!

அதென்ன ‘கல்வி 40 ’ ன்னு பேரு..?  

“…மனித வாழ்க்கையில் கல்வி எந்தளவிற்கு  முக்கியம் என்பதை 10 குறளில் திருவள்ளுவர் 40வது அதிகாரத்தில் கூறியிருக்கிறார் அதன் அடிப்படையில் இச்செயலிக்கு கல்வி 40 என்று  பெயரிட்டிருக்கிறார்கள்…”

சென்னையைச் சேர்ந்த கோ. பிரேம்குமார்  43, கல்விக்கான “..பம்பிள்பி ட்ரஸ்ட்..” அறக்கட்டளையை உருவாக்கி
‘கல்வி 40 ’ செயலி மூலமாக அரசுப் பள்ளியில்  படிக்கின்ற கிராமப்புற மாணவர்களிடம் மேலும் கற்றுக்  கொள்வதற்கான சுயசிந்தனையைத் தூண்டியிருக்கிறார்.

‘கல்வி 40’ செயலி “..எளிய வழியில் புதுமைக் கல்வி..” என்கிற தாரக மந்திரத்துடன் செயல்படுகிறது. விளம்பரப் பயன்பாட்டுக்காக அல்லாமல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிராமப்புறக் குழந்தைகளுக்கு தாய்மொழி  மூலம் கல்வி கற்க  உதவியும், அப்பள்ளிகளில்  மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை உருவாக்குகிறது என்கிற வலுவான எண்ணத்துடன் ‘கல்வி 40 ’ செயலி இயங்குகிறது.   

‘கல்வி 40 ’ செயலி பிளேஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது ஆகவே மதிப்பிற்குறிய பெற்றோர்களே நீங்களும் ஆசிரியரே..! உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் இச்செயலி வழிகாட்டக் காத்திருக்கிறது.

கிராமப்புற அரசுப் பள்ளிக் குழந்தைகள் (குறிப்பாக  கல்வி  அறிவு  பெறாத மற்றும்  குழந்தைகளுக்கு கற்றுத் தரமுடியாத சூழலில் உள்ள பெற்றோர்களுக்காக) பள்ளி முடிந்த பிறகு, வீட்டில் இருந்தபடி பள்ளிப் பாடத்தை நயத்தகு வழியில் ‘கல்வி 40’ மூலமாக கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது. 

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் கற்பதற்காகவும், அதிக மதிப்பெண் எடுக்கவும், அறிவை விரிவு செய்யவும் மற்றும் கல்வியில் ஆர்வத்தை வளர்க்கின்ற வகையிலும் ‘கல்வி 40’ மொபைல்  செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகளுக்கு வளாகத்தில் கற்றுக்கொள்ளும்  வகையில்  நிறுவப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் அடிப்படையில் 3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அரசுப்  பள்ளி மாணவர்களை மனதில் கொண்டு ‘கல்வி 40 ’ செயலி இலக்காக கொண்டு  செயல்படுகிறது.

‘கல்வி 40 ’ன் அம்சங்கள், வீடியோக்கள் 1 முதல் 5 நிமிடம் வரை, சுயமதிப்பீடு செய்ய பயிற்சித்  தேர்வுகள், நேரம் அடிப்படையிலானது.ஒருநாளைக்கு  ஒரு கதை,  ஒருபுதிர்  வீதம் அமைக்கப்பட்டுள்ளது. 

இது  ஆன்லைன் செயலி மட்டுமே, சுயமதிப்பீடு மற்றும் பள்ளித் தேர்வுகளை எளிதில்  எதிர்கொள்ளலாம், மிகவும் எளிமையானது, கற்றல் திறனை அடைவதற்கான எளிய செயலி. கதைகள் வாயிலாக நற்சிந்தனையை தூண்டுகிறது, புதிர்கள் மூலமாகத் தகவல்களை திரட்டித் தருகிறது.  

‘கல்வி 40 ’ அடிப்படையிலான தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் புதுச்சேரி அரசு கிராமப்புற பள்ளிகளில் பரிசோதனை அடிப்படையில் அனுமதித்தபோது 57% மாணவர்கள் கற்றலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டினர். மாதிரி அளவு 352 மாணவர்கள் மற்றும் 50 ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருந்திருக்கின்றனர்.

“..கற்றதில்  கற்றதை  செயல்படுத்தி விடு..” என்று  வழிகாட்டும் ‘கல்வி 40’ செயலியின்  நிறுவனர் கோ.பிரேம்குமார்….

“..எங்களுக்கு பூர்வீகம் திருச்சி அம்மா அரசு பள்ளி ஆசிரியராகவும், அப்பா உதவிப்  பொது வழக்கறிஞராக பணியாற்றியவர் நான் B.E., M.B.A., முடித்திருக்கிறேன். ஐ.டி., துறையில் 19 ஆண்டுகள் அனுபவம். பென்டாசாஃப்ட், டி.சி.எஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளேன்.

அத்துடன் 2013 முதல் 2017 வரை, நான் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க்கில் எச்.சி.எல் டெக்னாலஜிஸில் பணிபுரிந்திருக்கிறேன்.

கல்வி எனக்கு அளித்த உலகளாவிய அனுபவத்தின் அடிப்படையில் நாட்டிற்கு திரும்பி வந்ததும் நாட்டின் முன்னேற்றத்திற்கான என்னுடைய பங்கு என்ன என்கிற அந்த உந்துதல் எப்போதும் எனக்குள் இருந்தது.

எனது முதல் முயற்சி விவசாயத் துறையில் நல்ல அனுபத்தைத் தந்தது. அதனைத்  தொடர்ந்து நான் கிராமப்புறங்களில் பயணம் செய்தேன்.  அங்கு நான் பார்த்த கேட்டறிந்த மாணவர்களின் கல்வியறிவு போதுமானதாக இல்லை எனத் தெரிந்தது. அதன்  விளைவாக  2018ல்  ‘கல்வி 40’  யோசனையில்  வேலை செய்யத் தொடங்கி  முறையாக  மார்ச் 2019 க்குள் பம்பள்பி டிரஸ்ட்டை அமைப்பாகப் பதிவு செய்தேன். 

இது, ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் கீழ் உள்ள ஒரே திட்டம்  ஆகும். ‘கல்வி 40  ’-க்கு சமீபகாலம் வரை, நெருங்கிய கனிவான நண்பர்கள் பலர்  ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.

பம்பிள்பி ட்ரஸ்ட்டின் நோக்கம் தேவைப்படும் குடிமக்களுக்கு முன்னேற்றத்தை வழங்க சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. தற்போது நாங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கி, மொபைல் பயன்பாடு  மூலம் தேவைப்படும் மாணவர்களைச் சென்றடைகிறோம்.

அடுத்து இந்தத் தீர்வைக் கிராமப்புறப் பள்ளிகளுக்கு கொண்டு செல்லவும், அதன் மூலம் மாணவர்களுக்கு நன்மைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இதுதவிர  முக்கியமாகக் காலப்போக்கில் மாணவர்களின் கருத்துக்களை அளவிட மற்றும் பெறத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்  மூலம்  மாணவர்களுக்கு கற்றலை சுவாரஸ்யமாக்குவதற்கு நாங்கள்  தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறோம். பள்ளிப் பாடத்திட்டத்தைத் தவிர, கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் ஒட்டு  மொத்த வளர்ச்சியும் எங்களது நீண்ட காலப் பயணமாக இருக்கும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை தமிழ் வழி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனுக்காக‘கல்வி 40 ’ யூடியூப் லைவ் நிகழ்ச்சியை நடத்துகிறது. இதுவரை 25 அத்தியாயங்களைச் சிறப்பாக முடித்துள்ளோம்.

‘கல்வி 40 ’ அடிப்படையில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே. தமிழ்நாடு பள்ளிப் புத்தக பாடத்திட்டத்தின் மூன்று பருவத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் கொண்டுள்ளது.

தற்போது  எங்களிடம் சுமார் 2000 வீடியோக்கள் உள்ளன. பருவம் 2 மற்றும் பருவம் 3-க்கு  கூடுதலாக  4000 வீடியோக்களை உருவாக்குவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதுதவிர  பொதுவான தலைப்புகளில், தற்போது சுவாரஸ்யமான கதைகள் தொடர், மற்றும் பேப்பர் போல்டிங் (ORIGAMI ) எனப்படும் செய்முறைத் தொடர்களும் உள்ளன.

அறிவியல் சோதனைகள், வெளிநாட்டு மொழி, கலை நுட்பங்கள் போன்ற பொதுவான தலைப்புகளைச் சேர்க்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இவை அனைத்தும் எளிமையாக விளக்கப்படும், 5 அல்லது 6 ஆம் வகுப்பு மாணவர்களால் மேலும் எளிதில் புரிந்து கொள்ளப்படும்.

எந்தவொரு செலவும், கவனச்சிதறலும் இல்லாமல் தரமான உள்ளடக்கம் கிடைக்கிறது. இன்று கிராமப்புற மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்புகொள்வது எளிதல்ல.  மொபைல் பயன்பாட்டு அணுகலில் மாவட்ட அளவிலான தன்னார்வலர்களை உருவாக்குவதிலும் பின்னர் பள்ளி அடிப்படையிலான ‘கல்வி 40’ டேப்லெட் தீர்வை செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த கட்டமாக பிற மொழிகளுக்கும் அளவிடக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்குகிறோம். பிறமொழி இணைப்புகள் காட்டிய ஆர்வம் இருந்த  போதிலும், முதலில்  தமிழ் மாணவர்களுக்கு இங்கு நிறைய வேலைகள் செய்யப்பட உள்ளன.

எனவே ‘கல்வி 40’ டிஜிட்டல் கல்வி மூலம் கிராமப்புற அரசுப் பள்ளியை ஆதரிக்கவும் இந்தப் பாதையை தேர்ந்தெடுத்தேன். இன்றைய  சூழலில் ‘கல்வி 40’ செயலியை 25,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

எந்த  லாபநோக்கமும் இல்லாமல் இந்தக்  “..கல்வி 40..” தளத்தை  உருவாக்கியிருக்கிறோம் இருந்தபோதிலும் நீங்கள் ஒரு நபருக்கு உணவைக் கொடுத்தால் அந்த சந்தோசத்தை உடனே பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மாணவருக்குக் கல்வியை கொடுத்தால் தலைமுறைக்கும் சுயமரியாதையுடன் வாழலாம்..!

இந்த நீண்ட மராத்தானில் நாங்கள் முதல் 100 மீட்டரைத் தொடங்கியிருக்கிறோம். எதிர்காலத்தில் அவர்களின் திறமையை ஊக்குவிக்க எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்.  கனவு காணுங்கள  அந்த கனவை நனவாக்க ‘கல்வி 40’ குடும்பம் என்றும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க  காத்திருக்கிறோம்.

இப்போதைக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் அவர்களின் அழைப்புகள், அல்லது எங்கள் தொடர்புகளின் போது நாம் கேட்கும்  கேட்டறிந்த கருத்துக்கள் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையும் கொடுக்கிறது. இதுவே நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்பதில் எங்களுக்கு மிகுந்த  திருப்தியை அளிக்கிறது….”

ஏழை மாணவர்களுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் ஒளிவிளக்காகச் செயலாற்றும் பம்பிள்பி டிரஸ்ட் மற்றும் அதன் வழிகாட்டி திரு.கோ.பிரேம்குமார் அவர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் ‘ஆளுமைச்சிற்பி’ தெரிவிக்கின்றது