கல்வி-அறிவு-ஞானம்

மூன்று வகையான நினைவுப் பதிவுகள் குறித்து கடந்த இதழில் கண்டோம். இந்த இதழில் நாம் கற்கும் பாடங்களை நீண்டகால நினைவுப் பதிவுகளாக மாற்றும் வழிமுறைகள் குறித்துக் காணலாம்.

நாம் நம் புலன்களின் மூலம் உணரும் அனைத்துமே மூளையில் குறுகிய கால நினைவுப் பதிவுகளாக பதியும். மூளை முக்கியமான விஷயங்களை மட்டும் அல்லது மீண்டும் மீண்டும் காண்பவை, கேட்பவை, உணருபவை, சுவைப்பவை ஆகியவற்றை மட்டுமே இடைக்கால அல்லது நீண்டகால நினைவுப் பதிவுகளுக்குக் கொண்டு செல்லும். மற்றவை அனைத்தையும் குறுகிய கால நினைவுகளாகப் பதிவு செய்து, உடனுக்குடன் டெலீட் செய்துவிடும்.

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், நாம் வீட்டில் அமர்ந்து படிக்கும்போதும், அது நமக்குத் தேவையான ஒன்று என்பதால் மூளை அதை குறுகிய கால நினைவுப் பதிவுகளாக சேமித்து வைத்துக்கொள்கிறது.

மீண்டும் மீண்டும் அதே பாடத்தை நாம் திரும்பப் படித்தால் மட்டுமே அது குறுகிய கால நினைவு என்ற நிலையிலிருந்து நீண்டகால நினைவாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது.

குறுகிய கால நினைவுப் பதிவுகளை மிக நீண்ட கால நினைவுப்பதிவுகளாக மாற்றுவது எப்படி என்பதை தற்போது காணலாம்.

ஒரு மணி நேரம் படித்து முடித்த பின்னர் சுமார் ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அந்த ஐந்து நிமிடங்களும் சற்றே கண்களை மூடி நீங்கள் கடந்த ஒரு மணி நேரத்தில் படித்ததை சற்றே அசைபோடுங்கள்.

ஒரு மணி நேரம் படித்தது மிகக் குறுகிய கால நினைவாகப் பதிவாகியிருக்கும். நேரம் செல்ல செல்ல அது சிறிது சிறிதாக நினைவிலிருந்து அகன்று கொண்டேயிருக்கும்.

சுமார் நான்கு மணி நேரம் செல்லும்போது நீங்கள் படித்ததில் சுமார் 80 சதவிகிதம் மட்டுமே நினைவில் நிற்கும். இதுவே பத்து மணி நேரத்திற்குப் பின் 60 சதவிகிதமாகக் குறைந்து போகிறது. 24 மணி நேரத்திற்குப்பின் சுமார் 50 சதவிகிதம் மட்டுமே நினைவில் நிற்கும்.

ஒரு மணி நேரம் படித்ததை, ஐந்து நிமிடங்கள் அசைபோடும்போது, அது மீண்டும் ஒருமுறை நினைவில் பதியும். அடுத்த நாள் நினைவு படுத்திப் பார்க்கும்போது, 90-100 சதவிகிதம் நினைவில் நிற்கும். 24 மணி நேரத்திற்குப்பின், படிப்படியாக அது நினைவிலிருந்து அகலத் துவங்கும்.

இருபத்து நான்கு மணி நேரத்ததிற்குப்பின் மீண்டும் ஒருமுறை நேற்று படித்ததைத் திரும்பப் படித்தால் ஒரு வாரம் வரையில் அது நினைவிலிருந்து அகலாது.

ஒரு வாரத்திற்குப்பின் மீண்டும் ஒருமுறை அதே பாடத்தைப் படித்தால் ஒரு மாதம் வரையில் அது நினைவில் நிற்கும்.

ஒரு மாதத்திற்குப்பின் மீண்டும் ஒருமுறை படியுங்கள் – மூன்று மாதங்கள் வரை அது நினைவில் தங்கும்.

மூன்று மாதங்களுக்குப்பின் மீண்டும் ஒருமுறை படித்தால் ஆறு மாதங்கள் வரை அது நினைவில் அகலாது நிற்கும்.

ஆறு மாதத்திற்குப்பின் மீண்டும் அதைப் புரட்டிப் பாருங்கள் – ஒரு வருடம் வரை அது மூளையில் தங்கி நிற்கும்.

ஒரு வருட இறுதியில் கடைசியாக ஒருமுறை அதைப் படித்துவிட்டீர்களானால் அது மிக நீண்ட கால நினைவுகளாக மூளையில் ஆழமாகத் தங்கிவிடும். வாழ்நாள் முழுவதும் மறக்காது.

இதையே சுருக்கமாகக் கீழே தருகிறேன்.

முதல் நினைவூட்டல் – 1 மணி நேரத்திற்குப்பின்.

இரண்டாம் நினைவூட்டல் – 24 மணி நேரத்திற்குப்பின்.

மூன்றாம் நினைவூட்டல் – 1 வாரத்திற்குப்பின்.

நான்காம் நினைவூட்டல் -1 மாதத்திற்குப்பின்.

ஐந்தாம் நினைவூட்டல் – 3 மாதங்களுக்குப்பின்.

ஆறாம் நினைவூட்டல் – 6 மாதங்களுக்குப்பின்.

ஏழாம் நினைவூட்டல் -1 வருடத்திற்குப்பின்.

இந்த தந்திர யோக முறை காலங்காலமாக நமது நாட்டில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. அச்சுக்கலை தோன்றாத மிகத் தொன்மையான காலத்திலேயே வேதம் கற்கும் மாணவர்கள் நான்கு வேதங்களையும் வரிக்கு வரி மனப்பாடம் செய்தது இந்த முறையைப் பயன்படுத்திதான்!

இதே வழியை இன்றைய கல்வித் துறையிலும் பின்பற்றுகிறார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர்கள் தமது கல்வித் திட்டத்தில் இந்த முறையைப் புகுத்தினர். நமது தந்திர யோகத்திலிருந்து அவர்கள் இதை எடுத்துக் கொண்டார்களா அல்லது ஐரோப்பிய ஞானிகளும், விஞ்ஞானிகளும் இதைக் கண்டுபிடித்து கல்வித் திட்டத்தில் புகுத்தினார்களா என்பது தெரியவில்லை.

இது ஒரு தந்திர யோக முறை என்பதை அறியாமலேயே நமது பள்ளிகளில் இதை நாம் பயன்படுத்தி வருகிறோம்! எப்படி?

மூளை ஒரே வேலையில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குமேல் ஈடுபடும்போது சோர்வடைந்துவிடும். இதைத் தவிர்க்கவே ஒரு வகுப்பு (ஒரு பீரியட்) என்பது 45 நிமிடங்களிலிருந்து 60 நிமிடங்கள் வரை என வைத்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப்பின் சற்றே இடைவெளிவிட்டு, அடுத்த வகுப்பு துவங்கும் வேறு ஆசிரியர்: வேறு பாடம் மூளை அதற்குள் அடுத்ததற்குத் தயாராகிவிடும்.

ஒவ்வொரு வகுப்பும் முடியும் நேரத்தில், அன்று கற்றுக் கொண்டதை சுருக்கமாக ஆசிரியர் ஒரு ஐந்து நிமிடங்கள் நினைவூட்ட வேண்டும் என்பது விதிமுறை. இது முதல் நினைவூட்டல்.

அடுத்த நாள் அதே ஆசிரியர் அடுத்த பாடத்தைத் துவங்கும் முன்னர் நேற்று வகுப்பில் என்ன படித்தோம் என்பதை சுருக்கமாக நினைவூட்டிவிட்டு, புதிய பாடத்தைத் துவங்க வேண்டும். அன்று காலையில் மாணவனும் நேற்றைய பாடத்தை முடித்துவிட்டு வந்திருக்க வேண்டும். இது இரண்டாவது நினைவூட்டல்.

வாரம் ஒருமுறை ‘வீக்லி டெஸ்ட்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்தில் படித்த பாடங்களில் தேர்வு வைக்கிறார்கள். அந்தத் தேர்வுக்காக மாணவன் படிக்கும்போது அது மூன்றாவது நினைவூட்டலாகிறது.

அடுத்ததாக மாதம் ஒருமுறை ‘மந்த்லி டெஸ்ட்’ இது நான்காவது நினைவூட்டல்.

மூன்று மாதத்தில் நடைபெறும் காலாண்டுத் தேர்வு ஐந்தாவது நினைவூட்டல்.

ஆறு மாதத்தில் நடத்தப்படும் அரையாண்டுத் தேர்வு ஆறாவது நினைவூட்டல்.

ஒரு வருட இறுதியில் நடத்தப்படும் ஆண்டுத் தேர்வே ஏழாவது நினைவூட்டல்!

இந்த தந்திர யோக முறையை சரியாகப் புரிந்துகொண்டு, ஆசிரியர்களும், மாணவர்களும் செயல்பட்டால் பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றுக்கொள்பவை அனைத்துமே வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும். படிப்பிலும் அறிவிலும் உங்கள் குழந்தைகள் முதன்ைமயானவர்களாக மாற முடியும்.

(தொடரும்)