நம்பிக்கையே வாழ்க்கை! 22

‘அமுதா’ B. பாலகிருஷ்ணன்
அன்பைத் தேடி
அறிவைத் தேடி
பொன்னைத் தேடி
பொருளைத் தேடி
இறைவனைத் தேடி
நிம்மதியைத் தேடி
தன்னையே தேடித்தேடி முடியாதபோது ஞானத்தைத் தேடி. தேடலின் கரைகாண
ஆக மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கையே எண்ணற்ற தேடல்களின் குவியல்தான்.
பிறப்பிலிருந்து இறப்பு வரை தேடிக்கொண்டேதான் இருக்கிறான்.
பிறந்ததும் தாயின் மடியைத் தேடுகிறான்.
தவழ்ந்ததும் விளையாட்டுப் பொருட்களைத் தேடுகிறான்
மூன்று வயதானதும் அரிச்சுவடியைத் தேட வைக்கின்றனர்.
ஐந்து வயதிலேயே அறிவைத் தேடுகிறான்.
வாலிப வயதில் (மனம் அலைபாய ) வலை வீசித் தேடுகிறான்.
படிக்கும் போது பார்வையைச் சிதற விட்டவன் பரீட்சையில் விடையைத் தேடி விழிக்கின்றான்.
படித்து முடித்ததும் வேலை தேடுகின்றான்.
அரசாங்க வேலை கிடைத்தால் அலுங்காமல் குலுங்காமல் சம்பளம் வாங்கலாமே என்று அதனையே தேடி அலைகின்றான்.
வாழ்க்கையை வளப்படுத்த வருமானம் தேட வேண்டும்
வளப்படுத்துகிறோமோ இல்லையோ… வாழ்வதற்கே. வயிற்றைக் கழுவுவதற்கே, காசு பணத்தைத் தேடித்தானே ஆகவேண்டும்.
இவன் வேலை தேடுவான்.
பெற்றோர்கள் இவனுக்குப் பெண் தேடுவார்கள்.
தூரமோ பக்கமோ…
வேலையைத் தேடி விட்டுத் திருமணம் பண்ணுபவன் உத்தமன்.
திருமணம் செய்துவிட்டு வேலை தேடுபவன் மத்திமன்.
திருமணம் செய்தபின்னும் வேலை தேடாமல் வீட்டிலே இருந்து தின்று கொண்டிருப்பவன் அதமன்.
மாப்பிள்ளை தேடி, பெண்ணைத் தேடி, நகை, ரொக்கம் எல்லாம் தேடி, நாளைத் தேடி, நட்சத்திரத்தைத் தேடி, திருமண மண்டபமும் தேடி, கல்யாணத்தையும் பண்ணி விடுவார்கள்.
குழந்தை பிறந்தபின், பள்ளிக் கூடத்தில் அட்மிஷன் தேடி அலைய வேண்டும்.
பின் அவனுக்கு வேலை தேடி, வாழ்க்கையைத் தேடி. ஆக, உலகம் உருண்டை என்பதைப்போல, தேடலும், சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கும்.
சிலர் எந்தப் பொருளை எங்க வைச்சோம்னு தெரியாமல் தேடுவாங்க.
முக்கியமான பொருளைப் பத்திரமாக வைக்க வேண்டும் என்று ஜாக்கிரதையாக வைப்பார்கள்.
தேவைப்படும் போது தேடுவார்கள். தேடுவார்கள் தேடிக் கொண்டேயிருப்பார்கள்.
இதில் விசேஷம் என்னவென்றால், தேடிய இடத்திலேயே திரும்பத் திரும்ப தேடுவார்கள்.
சிலர் வீட்டை மறந்து, சீட்டைத் தேடிப் போவார்கள்.
‘என்னங்க…. தோத்துப்போன பிறகும்கூட புத்திவரலியா திரும்பத் திரும்ப சீட்டாடப் போறீங்களே
உனக்கென்ன தெரியும்; தொலைச்ச இடத்துலதான தேடணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.
‘சூதாடலாம்னு சொன்னாங்களாக்கும்’ சில வாதங்கள் முடியும்,சில தொடரும்; தொடரும் வாதங்கள் சண்டையில் முடியும்.
ஒரு கணவனுக்கும், மனைவிக்கும் சண்டை. இருவரும் பேச மாட்டார்கள்.
ஏதாவது சொல்லணும்னா ஒரு பேப்பர்ல எழுதி டேபிள் மேல வைச்சுருவாங்க. பதிலும் ஒருத்தொருக்கொருத்தர் பேப்பர்ல எழுதி அது பக்கத்துல வைச்சுடுவாங்க.
புருஷன், ஒரு நாள், ‘விடியற்காலை 4.00 வெளியூருக்குப் போகணும் 3.00 மணிக்கு எழுப்பி விடவும்’னு மனைவிக்கு எழுதி தலையணை பக்கத்தில் வைத்து விட்டு படுத்து தூங்கினான்.
மனைவி எழுப்பவில்லை, காலையில் ஆறு மணிக்கு எழுந்தவன், ‘காச் மூச்’ சென்று கத்த ஆரம்பித்தான்.
‘உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா… மூணு மணிக்கு எழுப்புன்னு சீட்டெழுதி வைச்சேனே ஏன் எழுப்பல’-ன்னு கத்தினான்.
‘உங்களுக்குத்தான் அறிவில்லை….’மணி மூன்று ஆகிவிட்டது. எழும்புங்க’ – ன்னு ரெண்டரை மணிக்கே சீட்டு எழுதி வைச்சேனே ஏன் பார்க்கல” – ன்னு இவளும் கத்தினாள்.
‘பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்’ என்கிறார் கவிஞர் வைரமுத்து.
மண்ணைத் தேடி, பொன்னைத் தேடி, பெண்ணைத் தேடித்தான் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது!
மூன்றுமே மெல்லினத்தில் வருகிறது.
இந்த மெல்லினத்தைத் தேடி வல்லினத்தில் வந்து விழுந்து விடுகிறான் மனிதன்.
சரி இந்த மூன்றோடு முடிகிறதா இவனது தேடல் படலம்….?
இல்லையே!
இன்னும் தொடர்கிறதே.!