உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 19

முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் தமிழகத்தின் தற்போதைய சாதனைப் பாய்ச்சலுக்குக் காரணங்கள் பல உண்டு. நாட்டிலேயே முதன்முறையாக தமிழக அரசு இந்திய சதுரங்க கூட்டமைப்போடு இணைந்து 114 – கோடி செலவில் மாமல்லபுரத்தில் கடந்த

2022 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலகப் புகழ்பெற்ற 44 – வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது. 126 – நாடுகளைச் சேர்ந்த 1654 – விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
அதே ஆண்டில் சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து

2023 – ல் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியும் அதே ஆண்டில் 22.6 கோடி செலவில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியும் சென்னையில் நடந்தேறின.

சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற கேலோ இந்தியா – 2023 விளையாட்டுப் போட்டிகளில் 36 – மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 – விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் தமிழ்நாடு 38 – தங்க பதக்கங்களுடன் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றது. இவ்வாறான சூழ்நிலையில்தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்கும் சட்டம் தமிழக அரசால் 2004 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச உடற்கல்வி மற்றும் விளையாட்டு ஆண்டாக அறிவிக்கப்பட்ட 2005 – ம் ஆண்டு செப்டம்பர் 15 – ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு தமிழ்நாட்டில் இப்பல்கலைகழகம் செயல்படத் தொடங்கியது. தற்போது மூன்று புலங்கள், ஐந்து துறைகள், 27 – உறுப்புக் கல்லூரிகளோடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

சென்னை, வண்டலூர், கேளம்பாக்கம் சாலையில் மேலக் கோட்டையூரில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. NAAC B++ தரச் சான்றிதழோடு தொலை தூரக் கல்விக் கூடமும் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்

1. Department of Physical Education
2. Department of Yoga
3. Department of Exercise Physiology and Biomechanics
4. Department of Sports Psychology and Sports Management
5. Department of Advanced Sports Coaching and Sports Technology.

பல்கலைக்கழக வளாகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 27 (Approved Learners Support Centres ) எனும் பெயரில் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.