ஐந்து ஆறைவிடப் பெரியது 26


திரு.முகில்

‘எல்லோரும் ஓடுங்கள்! அவை நம்மை நோக்கித்தான் வருகின்றன’ – என்று மனிதன் பல நூற்றாண்டுகளாகப் பயந்து நடுங்கும் பூச்சிகள் என்றால் அவை பாலைவன வெட்டுக்கிளிகள்தாம். அவை படையெடுத்து வந்தால் ஒரு பிரதேசத்தின் பொருளாதாரமே வீழ்ந்து விடும். கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும். அதனால், பட்டினிச் சாவுகளும் நிகழும். இதற்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் உதாரணங்களைக் காட்டலாம்.

பொதுவாக, ஒரு பகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் வெட்டுக்கிளிகள், வறட்சி ஏற்படும்போது பசுமையைத் தேடி ஓரிடத்துக்குக் கூட்டமாக வந்து சேருகின்றன.

நெருக்கமாக ஒரே இடத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் சேரும்போது அவற்றின் உடலில் ‘செரட்டோனின்’ என்ற வேதிப்பொருள் உற்பத்தி அதிகம் தூண்டப்பட்டு, அவை அச்சுறுத்தும் உயிரினங்களாக மாறுகின்றன. அதன் பின், அந்த வெட்டுக்கிளிகள் இயல்பை இழந்து அதிக வேகத்துடன் பறக்கும் மூர்க்க நிலையை அடைகின்றன. அவை அந்த நிலையில் இனப்பெருக்கம் செய்யும்போது, புதிதாகப் பிறக்கும் வெட்டுக்கிளிகள் பெரிய மூளை, குட்டையான கால்களுடன் நீண்ட தூரம் பயணம் செய்யும் தகவமைப்போடு பிறக்கின்றன. பசுமையான பிரதேசங்களை நோக்கி தங்கள் படையெடுப்பைத் தொடங்குகின்றன.

மிகக்குறைந்த கால அவகாசத்தில் கோடிக்கணக்கில் பெருகும் இந்த அழிவுசக்தி வெட்டுக்கிளிகள் (பாலைவன வெட்டுக்கிளிகள் என்று அழைக்கப்படுகின்றன), கண்ணில் படும் பசுமையான பிரதேசங்களை எல்லாம் அசுர வேகத்தில் அழித்தபடி முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு புல், ஒரு செடி, ஒரு மரம் எதையும் விடாமல் அழிக்கின்றன. அதிக வேகத்துடன் ஒரு நாளைக்கு 100 கி.மீ. வரை பறக்கும் இவை, பெருங்கடல்களையும் அநாயமாகத் தாண்டி அடுத்தடுத்த தேசங்களையும் அசால்ட்டாக காலி செய்துவிட்டு நகர்கின்றன. சில ஆண்டுகள்கூட இவை தொடர்ந்து பறந்து பேரழிவை ஏற்படுத்திக் கொண்டே செல்கின்றன.

இவற்றை மனிதனால் கட்டுப்படுத்த முடியாது. அதுவும் இயற்கையால் மட்டுமே முடியும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இந்த அழிவுசக்தி வெட்டுக்கிளிகள், மூர்க்க நிலையிலிருந்து விடுபடுகின்றன. அவற்றின் அடுத்தடுத்த சந்ததிகள் இயல்பான, ஆபத்தற்ற வெட்டுக்கிளிகளாகப் பிறக்கின்றன. படையெடுப்பு நிறைவு பெறுகிறது.