சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –19

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

மெரினா கடற்கரையில் ஒரு தள்ளுவண்டிக் கடையில் கட்லெட், சமோசா, பஜ்ஜி, ஜூஸ், காபி, டீ போன்ற பதார்த்தங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார் ெபட்ரீசியா நாராயண். தனது இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றத் தனக்குத் தெரிந்த மற்றும் விருப்பமான சமையல் கலையை நம்பினார். வந்து சாப்பிட்டவர்கள் முகத்தில் திருப்தி நிலவியது. காரணம் விற்ற சிற்றுண்டிகளின் சுவை அவர்களுக்குப் பிடித்திருந்தது.

நாகர்கோவிலில் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ெபட்ரீசியா மூன்று பிள்ளைகளில் மூத்தவர். பெற்றோர்கள் இருவருமே அரசுப் பணியில் இருந்தவர்கள். வாழ்க்கை சுகமாகவே சென்று கொண்டிருந்தது. சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் படித்த போது நாராயண் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இவர்களது குடும்ப வாழ்க்கை ஆரம்பமானது.

திருமணம் ஆன பிறகு தான் தனது கணவர் நாராயண் குடிகாரர் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதைக் கண்டு கொண்டார் ெபட்ரீசியா. கணவரைத் திருத்தப் போராடிப் பார்த்த நாட்கள் வீண் போயின. உறக்கமில்லாத இரவுகள், போராட்டமான வாழ்க்கை, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிப் போன இவர் தொடர்ந்து நாராயணனுடன் வாழ இயலாத சூழலில் தன் பெற்றோரை நாடிச் சென்றார்.

பெற்றோர்கள் ஆரம்பத்தில் வேதனையை வெளிப்படுத்தினார்கள். பின்பு பேரக் குழந்தைகளுக்காக ஆதரவு தந்தார்கள். ெபட்ரீசியாவுக்குச் சுவையாகச் சமைப்பது என்பது ஆரம்பம் முதலே பிடித்த விஷயம். எனவே ஊறுகாய், ஜாம் மற்றும் பழச்சாறு கலந்த பானங்களைத் தன் வீட்டிலேயே செய்து வீட்டிற்கு அருகிலிருந்த தெரிந்தவர்கள் வீட்டில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். முதல் நாளிலேயே நல்ல விற்பனை. வாழ்க்கையில் துணிவோடு முன்னேறுவதற்குத் தனக்கான ஒரு வழி பிறந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார், ெபட்ரீசியா.
மனதில் ஒரு எண்ணம் உதிக்க சென்னையில் மெரினா கடற்கரையில் ஒரு சிற்றுண்டித் தள்ளுவண்டிக் கடையைத் தொடங்கினார். ஆரம்ப நாட்களில் ஐம்பது பைசா முதல் பத்து, இருபது ரூபாய் வரை மட்டுமே இலாபம் கிடைத்தது. மனம் தளராமல் தன் கடையை நடத்தினார். கடையில் விற்கப்பட்ட சிற்றுண்டிகளின் சுவையைக் கண்டவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களாக வர, வியாபாரம் ெதாடர்ந்து முன்னேறியது.

இந்தச் சூழலில் ஒரு சமயம் மெரினா பக்கம் வந்த குடிசை மாற்று வாரியத் தலைவர் சிற்றுண்டியை ருசித்த பின்பு, ெபட்ரீசியா அம்மையாருக்கு சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரியக் கேன்டீனை நடத்தும் வாய்ப்பைத் தந்தார். இதனைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் மதுரை மற்றும் நேஷனல் போர்ட் டிரஸ்ட் மேனேஜ்மெண்ட் நடத்திய பள்ளி ஆகியவற்றிலும் வாய்ப்புக் கிட்டியது.

‘போர்ட் டிரஸ்ட்’ நடத்திய பள்ளியில் பயின்ற 700 – மாணவர்களுக்கும் தினமும் உணவு வழங்கிடக் கிடைத்த வாய்ப்பு இவரது தொழிலுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் தந்தது.

1991 – ஆம் ஆண்டு தேசிய உணவு மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தம் இவருக்குக் கிடைத்தது. 24 மணிநேரமும் உணவகம் இயங்க வேண்டும்; ஏழு நாட்களும் இயங்க வேண்டும் என்ற கடுமையான விதிகளை ஏற்றுக்கொண்டு அந்த ஒப்பந்தப்படியே இரவு, பகலாக உழைத்தார். தன் உணவகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்புத் தந்து, பயிற்சி கொடுத்தார். ‘‘ஆண்களுக்கு மட்டுமே வாய்ப்புத் தருவோம்’’ என்று சொன்ன அந்த நிறுவனத்தில் போராடி வாய்ப்பைப் பெற்ற ெபட்ரீசியா, பெற்ற வாய்ப்பைக் காப்பாற்றித் தன் உழைப்பால் பெயர் பெற்றார்.

இங்கே அவர் பெற்ற அனுபவமே அவரது வாழ்வை உயர்த்தியது. பாத்திரம் கழுவுதல் தொடங்கி சமையல் பணி வரை அனைத்தையும் தன் மேற்பார்வையில் நடத்தி நல்ல பெயரைப் பெற்றார். இந்த உத்வேகத்தால் முதன்முதலில் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் முதல் உணவகத்தை ஆரம்பித்தார்.

மீண்டும் ஒரு புயல்

1998 – ஆம் ஆண்டில் அவருக்கு மாதம் 80,000 ரூபாய் சம்பளத்துடன் ‘சங்கீதா’ உணவகங்களில் சேவை புரிய வாய்ப்புக் கிடைத்தது. மிகச்சிறந்த முன்னேற்றத்துடன் இவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்த வேளையில் 2004 – ஆம் ஆண்டு சாலையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் ெபட்ரீசியாவின் மகள் சந்தீபாவும், அவரது கணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இந்தக் கொடுமையான சம்பவம் வாழ்க்கையைச் சோகமயமாக்கியது. அடுத்த இரண்டு ஆண்டுகள் எந்தப் பணியையும் செய்ய இயலாத வேதனை மிகுந்த மன நிலைக்குத் தள்ளப்பட்டார் ெபட்ரீசியா.

இளம் வயதில் கணவனைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுக்காகக் கடின உழைப்பைத் தந்து, வளர்த்த குழந்தைகளில் ஒன்று மலர்ந்து நின்ற காலத்தில் மறைந்துவிட்ட சோகம் தாயின் மனதை வாட்டி வதைத்தது. மகளை இழந்த சோகத்திலிருந்து தன் தாயை மீட்டு வர வேண்டுமென்று அவரது மகன் விரும்பினார்.

தன் சகோதரி ‘சந்தீபா’ நினைவாக ஒரு உணவு விடுதியை ஆரம்பிக்கலாம்; அப்போதுதான் சந்தீபாவின் நினைவோடு வாழமுடியும் என்று அன்னையைத் தேற்றினார். பெட்ரீசியா தன் மகனின் உதவியுடன் சந்தீபா உணவகத்தைத் தொடங்கினார். அச்சரப்பாக்கம் பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கினார். காரணம், தனது மகளும், மருமகனும் விபத்துக்குள்ளானபோது ஆம்புலன்ஸ் வசதி அங்கே கிடைக்காததாலேயே உயிரிழந்தார்கள் என்பதால் இதனைச் சேவையாகச் செய்தார்.

இன்று பல கிளைகளைப் பரப்பி பல இடங்களில் வளர்ந்துள்ளது ‘பிரசான் சந்தீபா’ உணவகங்கள். பிரியாணி, பல்வேறு உணவு வகைகளைக் கொண்ட தரமான உணவகமாக 200 – க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. பல கோடி வருமானம் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ள ெபட்ரீசியா அம்மையாரின் வாழ்க்கை ஒரு தள்ளுவண்டிக் கடையில் தான் ஆரம்பமானது.

உழைப்பு, தனக்குத் தெரிந்த தொழிலான சமையல் தொழிலில் இருந்த ஆர்வம், அதை நேர்த்தியாக வெளிப்படுத்தி உயர்ந்தது என்று வாழ்க்கைப் பாடத்தை மிக அருமையாக எல்ேலாருக்கும் புரிய வைத்துள்ளார் ெபட்ரீசியா நாராயண் அவர்கள். சோதனைகளை வென்று தனி மனிதராக நின்று போராடி ஜெயித்த இவரது வாழ்க்கை மிகப்பெரிய முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டு இலட்ச ரூபாய் வருமானம் பெறும் வகையில் இவரது உணவகங்கள் வளர்ந்துள்ளன. 2010 – ஆம் ஆண்டு இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைச் சங்கங்களின் கூட்டமைப்பு இவருக்குச் சிறந்த ெபண் தொழில் முனைவோர் விருதை வழங்கிச் சிறப்பித்தது.