ஆளப் பிறந்தோம் – 32


திரு.இள.தினேஷ் பகத்

மது நாடு 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் தன் இன்னுயிர்களை நீத்துள்ளனர். இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரம் நம் முன்னோர்களின் தியாகத்தால் கிடைத்தது. இந்திய சுதந்திரத்திற்காக என்ன விலை கொடுத்தோம்? அதனை எப்படியடைந்தோம்? என்பதை நம் இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.

இந்த இதழில் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) Assistant Central Intelligence Officer பதவிக்கு மொத்தம் 3717 காலியிடங்களுக்கான அறிவிப்பு ெவளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் முழு விவரத்தையும் பார்க்கலாம். அதற்கு முன்னர் இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் அவர்களின் வரலாற்றை நினைவில் கொள்வோம்.

சாஹீது பகத்சிங் என அழைக்கப்படும் பகத்சிங் 1907 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 – ஆம் நாள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள ‘‘பங்கா’’ என்ற கிராமத்தில் சர்தார் கிசன் சிங் – வித்தியாவதி தம்பதியருக்கு 2 – வது மகனாகப் பிறந்தார்.
பகத்சிங்கின் குடும்பம் விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே பகத்சிங் நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார். லாகூரில் உள்ள DAV பள்ளியில் கல்வியைத் தொடங்கினார். லாலா லஜபதிராய் (ம) ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார்.

1919 – ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அப்பாவிப் பொது மக்களை ஆங்கில அரசு கொன்று குவித்தது. இந்தத் தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்தப் படுகொலைச் சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து போனார் பகத்சிங். அவர் வெள்ளையர்களை வாட்டச் சபதம் எடுத்தார்.

தன்னுடைய 13 – வயதில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் 1922 – ஆம் ஆண்டு நடைபெற்ற செளரி சௌரா வன்முறைக்கு எதிராகக் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது. ஆயுதம் ஏந்தினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும் என முடிவுக்கு வந்தார்.