சாதனையாளர் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்
இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடக்கின்றது, பெற்றோர்கள் கண்டறிந்து ஊக்குவித்தால் அவர்களால் எந்தத் துறையிலிலும் சாதனை படைக்க முடியும்..!!
பரதம் என்றால் பா-பாவம், வெளிப்படுத்தும் தன்மை, என்ற சொல்லிருந்து ர – ராகம்-இசை என்ற சொல்லிருந்தும், தா – தாளம் என்ற சொல்லிருந்தும் பிறந்தவைகளாக “..பரதக்கலையின் முன்னோடிகளால் சொல்லப்படுகிறது..!!!
அந்த வரிசையில் மதுரையைச் சேர்ந்த “..அம்சினி மகாதேவன் பரதநாட்டியத்தில்..” 2 வயதிலேயே காலெடுத்து ஆடியவர். இன்றளவில் 21 – வயதிற்குள் 390 – க்கும் மேலான மேடைகளில் தன்னுடைய தனித்துவ நடனங்களால் பேரும், புகழும் பெற்றுச் சாதித்துக் காட்டியிருக்கிறார்..!
மதுரை லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் B.Sc., தாவரவியல், நட்டுவாங்கத்தில் டிப்ளோமோ முடித்து விட்டு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்போது MFA மாஸ்டர் ஆப் பைன் ஆர்ட்ஸ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.
முதல் வருஷம் இராமேஸ்வரம் தவிர, மதுரை ராஜா முத்தையா மன்றம், தமிழ் இசைச் சங்கம் மற்றும் கலாகேந்திராவும் இணைந்து மகாசிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கடந்த 5 – ஆண்டுகளாக தொடர்ந்து 24-30 மணி நேரம் பரதம், குச்சிப்புடி, மோகினி போன்ற ஆட்டங்களில் உலக சாதனை படைத்திருக்கிறார்.
மீனாட்சி திருக்கல்யாணம், பாலகிருஷ்ணலீலை மற்றும் மதுரையாண்ட திருமலை நாயக்க மன்னர், மகான் இராமானுஜர், தேவாரத் (பாடல்கள்) திரட்டு உள்பட தனது தாயார் திருமதி.ஷைலஜா தயாரித்து இயக்கிய 15 நாட்டிய நாடகங்களில் நடித்திருக்கிறார்.
பரதநாட்டியம், வெஸ்ட்ரன் டான்ஸ், ஒயிலாட்டம், கோலாட்டம் கரகாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளில் “..நாட்டிய கலா ரத்னா, அபிநய தாரகை..” உள்பட 15 – க்கும் மேலான விருதுகள் பெற்றிருக்கிறார்.
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் நமது பூமி இயக்கம் சார்பில் நடனப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அம்சினி மகாதேவனுக்கு 2011 – ல் அன்றைய ஆட்சித் தலைவர் திரு.சகாயம் பாராட்டிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்துள்ளார்.