கேட்டலும்அறிதலும் – 02

திரு. ப.திருமலைமூத்தபத்திரிகையாளர்
இப்போது தண்ணீர் குடிப்பதற்கான நேரம் முடிஞ்சது.. எல்லோரும் குடிச்சிட்டீங்களா..?
ஆமாம் ஐயா.. தண்ணீர் குடிக்காமல் எந்த உயிரினமாவது உயிர்வாழமுடியுமா ஐயா?
பாலைவனத்தில் வாழும் கங்காரு எலி என்னும் விலங்கு தனது வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கங்காரு எலிகளுக்குச் செரிமான அமைப்புச் சரியாகச் செயல்படத் தண்ணீர் தேவையில்லையாம். மேலும், கங்காரு எலிகள் அதிகமாக உறங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த வகை எலிகள் மிகவும் வேகமாக ஓடும் திறன் கொண்டவை. இவை நீண்ட கால்களைக் கொண்டிருப்பதால் இவை கங்காரு எலி என்றும் அழைக்கப்படுகிறது.
அகமதாபாத் விமான விபத்தில் இப்போது கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை அறிக்கை வந்திருக்கிறதே ஐயா.. கருப்புப்பெட்டி மூலம் இவ்வளவு தகவல்கள் கிடைப்பது வியப்பாக இருக்கிறது..
ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி விட்டால், அதற்கான காரணங்களைக் கண்டறிய கருப்பு பெட்டி பயன்படுகிறது. பைலட் அறையில் விமானிகளுக்கு இடையேயான உரையாடல்களையும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் அவர்கள் தொடர்பு கொண்டு பேசிய உரையாடல்களையும் பதிவு செய்யக் காக்பிட்டில் ஒரு வாய்ஸ் ரிகார்டர் எப்போதும் இருக்கும். மேலும் விமானம் பறக்கும் உயரம், காற்று வேகம், வானிலை, விமானத்தின் வேகம் ஆகிய தரவுகளைப் பதிவு செய்ய ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் செயல்படுகிறது. இந்த அமைப்புகள் அனைத்தும் கருப்பு பெட்டிக்குள் தகவல்களைச் சேகரித்து வைக்கின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இது விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.
கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பதற்கான நோக்கமே விமான விபத்தின் காரணங்களை அறிவதற்காககத்தானா?
ஜான்சன் தாமஸ் என்பவர் 1890 – களில் கப்பலில் விபத்துகள் நடந்தால், அதற்குரிய காரணங்களை அறிய ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். அதை அடிப்படையாகக் கொண்டே விமானங்களில் பயன்படுத்தப்படும் கருப்புப் பெட்டி உருவாக்கப்பட்டது.
அந்தப் பெட்டி, கருப்பாக இருக்குமா ஐயா?
இல்லை. கருப்புப் பெட்டி பிரகாசமான ஆரஞ்ச் வண்ணத்தில் தான் இருக்கும். இதன் மூலம் விபத்து நடந்த பகுதிகளில் இருந்து இந்தப் பெட்டியைக் கண்டறிவது எளிதாக இருக்கும்.