நம்பிக்கையே வாழ்க்கை! 22

‘அமுதா’B.பாலகிருஷ்ணன்
பலர் மற்றவர்களுக்கு வக்கப் பெயர் (Nick Name) வைத்துக் கிண்டல் பண்ணுவார்கள்.
தலை வழுக்கையாக இருந்தால் ‘½ கிரவுண்ட், ¼ கிரவுண்ட், ¾ கிரவுண்ட்’ என்று வழுக்கைக்குத் தகுந்த மாதிரி அளவு வைத்துக் கிண்டல் பண்ணுவார்கள்.
எப்பவும் ‘கர் புர்’-னு கத்துற அதிகாரியப் பார்த்து ‘கரடி’-னு கிண்டல் பண்ணுவாங்க.
இடத்துக்குத் தகுந்த மாதிரியும், வயசுக்குத் தகுந்த மாதிரியும் இந்தக் கிண்டல்கள் வேறுபடும்.
பெண்களைக் கிண்டல் பண்றது பொதுவான வழக்கமாயிருந்து, இப்ப அளவுக்கு மீறிப்போய் காட்டுமிராண்டித் தனத்திற்கு வந்திருக்கு.
‘ஈவ் டீசிங்’-குன்னு சொல்லி கைது பண்ணி, உள்ளே போடுற அளவுக்குக் காலம் மாறிவிட்டது.
வெளியிலதான் பெண்களைக் கிண்டல் பண்ணுறாங்க என்பதில்லை; வீட்டுக்குள்ளேயும் அவங்க பாடு திண்டாட்டம்தான்.
ஒரு மாமியார்; ‘அம்மாடி! நல்ல புத்தகம் கொடுத்த… சிரிச்சு, சிரிச்சு பாதி உயிர் போயிடிச்சு’- னு
மருமகளிடம் சொன்னார்.
‘அப்படின்னா இன்னும் ஒருமுறை படியுங்க அத்தே!’ – என்றாள் மருமகள்.
ஒரு நண்பர் அல்லது உறவினர், அவருக்குத் தெரிந்த ஒரு நண்பரையோ, உறவினரையோ, நமக்கு அறிமுகப்படுத்துறாங்க. நாம உடனே அவங்ககிட்ட நம்ம திறமையைக் காட்டுறோம்னு, ேஜாக்கடித்து கிண்டல் பண்ணித் தமாஷா பேசிவிடக்கூடாது.
அப்படிச் செய்தால்…
நம் மீது ஒரு அருவெறுப்பும், முகம் சுளிப்பும்தான் ஏற்படும்.
ஒத்தவர்களுடன் கிண்டல் பண்ணலாம்.
உத்தமர்களுடன் கிண்டல் பண்ணக்கூடாது.
ஜாலியாக கிண்டல் பண்ணலாம் – தப்பில்லை. கிண்டலும் கேலியும் விளையாட்டாக இருந்தால் பிரச்சினையில்லை.
விளையாட்டு வினையாக மாறிவிட்டால் பிரச்சினைதான்.
பெண்கள் மத்தியில் ஆண்களையும், ஆண்கள் மத்தியில் பெண்களையும் கிண்டல் பண்ணினால் வேறு வினையே வேண்டாம் – சமயத்தில் பகையாக மாறிவிடும்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனது நண்பர் ஒருவர், மொட்டையடித்ததை மறைக்கத் தலையில் தொப்பி போட்டிருந்தார்.
எல்லோரும் ஜாலியாகப் பேசிக்கொண்டு ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தோம்.
இன்னொரு நண்பர் அவரது தொப்பியைத் தட்டி விட்டார். தொப்பி பறந்துபோய் தூரவிழுந்தது. அங்கு நின்றிருந்த மாணவர்களும், குறிப்பாக மாணவிகளும் பலமாகச் சிரித்துவிட்டனர்.
நண்பர் தொப்பியைக் கூட எடுக்காமல், நேரே ஒடிப்போய் கம்பார்ட்மெண்டில் ஏறி உட்கார்ந்துவிட்டார்.
நாங்களெல்லாம் தொப்பியை எடுத்துக்கொடுத்து சமாதானம் சொல்லியும், அவரது கோபம் தணியவில்லை. எவ்வளவோ ‘சாரி’ சொல்லியும் அவர், அந்த நண்பரிடம் இரண்டு வருடங்களாகப் பேசவில்லை.
எனவே கிண்டலும் கேலியும் மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாமல் இருந்தால் நல்லது.
அக்பரின் அமைச்சர்களுக்குள், பீர்பால் மிகவும் சிறந்தவராக விளங்கினார் – அக்பருக்கு இவரை மிகவும் பிடிக்கும்; அதனால் மற்ற மந்திரிகளுக்கு இவர்மீது பொறாமை.
பீர்பால் அடிக்கடி ‘புகையிலை’ உபயோகிப்பார்.
மன்னருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் இது அருவெறுப்பாக இருந்தது.
ஒரு நாள் அரசரும் அமைச்சர்களும் தோட்டத்து வேலியோரம் போய்க் கொண்டிருந்தனர்.
வேலியோரம் வளர்ந்திருந்த ஒரு புகையிலைச் செடியினை ஒரு கழுதை தின்ன முயன்றது – செடியின் நெடி தாங்காமல் அதைத் தின்னாமல் போய்விட்டது.
அதனைக் கவனித்த மற்ற அமைச்சர்கள், ‘அரசே! பார்த்தீர்களா… நம்ம பீர்பாலுக்கு மிகவும் பிடித்த புகையிலை, கேவலம் அந்தக் கழுதைக்குக் கூடப் பிடிக்கவில்லை’ – என்றனர்.
‘‘அரசே! வாஸ்தவம்தான்; எனக்குப் பிடித்தது கழுதைகளுக்கெல்லாம் பிடிப்பதில்லை’’ – என்றார், பீர்பால்.
கிண்டல் உற்சாகத்தைக் கொடுக்கும்!
சமயத்தில் ஊக்கத்தையே ெகடுக்கும்.
கிண்டல் உறவை நெருக்கும்!
சமயத்தில் உறவை நெருடும்.
சோர்ந்து இருக்கும் போது கேலியும் கிண்டலும் உற்சாகத்தைக் கொடுக்கும்; களைப்பைப் போக்கும்; களிப்பைக் கொடுக்கும்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.