சாதனையாளர்கள் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்
தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாக தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வருவது பெருமைக்குரிய தருணமாகும்.!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் எத்தனையோ இருந்தாலும் மனிதர்களின் உடலுக்கு வலுவேற்றும் விளையாட்டுக்களில் “..மல்லர் கம்பம் விளையாட்டும் ஒன்றாகும்..!
அதாவது ஆட்டு உரலில் குழவி சுற்றுவது போல கம்பு செயல்பட்டால் அது சிலம்பம் விளையாட்டாகும், குழவி நிலைத்து நிற்க உரல் சுற்றுவது போல செயல்பட்டால் அது “..மல்லர் கம்பம்..” விளையாட்டாகும் என்று விளையாட்டுத் துறையில் அனுபவம் உள்ளவர்களின் கூற்றாகும்.
அந்த வகையில் விழுப்புரத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி அ. ஜெ.சிவசக்தி “..மல்லர் கம்பம் விளையாட்டில் தேசிய அளவிலும் சாதனை..” படைத்து வருகிறார்.
இனி நம்மோடு அ.ஜெ.சிவசக்தி..,
“..எனக்கு விழுப்புரத்தில் உள்ள சிந்தாமணி தான் சொந்த ஊரு, நான் தற்போது விழுப்புரம் சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன், என்னுடைய படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடப் போகிறேன்.
நம்முடைய முன்னோர்கள் வீரம், ஞானம், உடல் வலிமையுடன் பல்வேறு பாரம்பரியக் கலைகளில் சிறந்து விளங்கி, நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தார்கள், அவ்வாறான விளையாட்டுக்களில் “..மல்லர் கம்பம்..” விளையாட்டும் ஒன்று..!
என்னோட பனிரெண்டு வயது முதல் மல்லர் கம்பம், பயிற்சி பெற்று வருகிறேன் இந்த “..மல்லர் கம்பம்..” விளையாட்டில் தேசிய அளவில் (SGFI) மூன்றாம் இடம் பெற்று இரண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளேன்.
இதைத்தவிர யோகாவில் ஒலிம்பியாட் போட்டி, மாவட்டம் முதல் மாநிலம் வரை, ஜும்னாஸ்டிக்கில் தேசிய அளவில் பங்கேற்றுள்ளேன், சிலம்பத்தில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பங்கேற்றுள்ளேன்.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக இளம் வயதில் சாதனைகள் புரிந்தமைக்காக 2016-2017 ஆண்டிற்கான “..கலைஇளமணி..” விருது உள்பட பொது அமைப்புகள் சார்பாக பல்துறை வித்தகி உள்பட பத்திற்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன்.
விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகள் மற்றும் எனது பயிற்சிப் பள்ளியில் பயிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு 2022 ஆண்டு முதல் “..சிவசக்தி மால்கம் ஸ்போர்ட்ஸ் அகடெமி..” என்கிற பெயரில் “..இலவசமாக..” தினமும் காலை
6 – மணி முதல் 8 – மணி வரை பயிற்சி வகுப்பு எடுக்கின்றேன்.
இந்தப் பயிற்சி வகுப்பில் 120 – க்கும் மேற்பட்டவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, என்னால் முடிந்த வரை இவர்களுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றேன்.
தேசிய அளவில் மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற (எனது மாணவர்களுக்கு) வீரர்- வீராங்கனைகளுக்கு 2024 பிப்ரவரியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஊக்கத் தொகை அளித்துப் பாராட்டினார்கள்.
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிளான மல்லர் கம்பப் போட்டி யில் கடந்த மாதம் எனது மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.