கேட்டலும் அறிதலும் – 06

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
வணக்கம் ஐயா..
ஏன் இத்தனை பேர் லேட்டாக வந்திருக்கீங்க..
மழை பெய்வதால் சைக்கிளில் வரமுடியவில்லை. பேருந்திலும் கூட்டம் அதிகம் ஐயா. இந்த மழை எவ்வளவு நாட்கள் தொடரும் ஐயா.
மழையைப் பற்றி நீங்க தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். நமக்கு அதாவது தமிழ்நாட்டிற்குத் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய பருவமழைகள் மூலம்தான் பெரும்பாலான தண்ணீர் கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தான் அதிகளவில் பெய்கிறது.
இந்த ஆண்டு வழக்கமாக ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை மே 27ஆம் தேதியே கேரளாவில் தொடங்கியது. பொதுவாகத் தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யக்கூடிய மழை அளவைதான் வானிலை ஆய்வு மையம் கணக்கில் கொள்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையின் சராசரி அளவான 32.8 செ.மீ. என்பதையொட்டி, அதாவது 32.5 செ.மீ. மழை பதிவாகியது. இது இயல்பான மழைப்பதிவு ஆகும். இதில் திருநெல்வேலியில் இயல்பைவிட 250 சதவிகிதம் அதிகமாகவும், தலைநகரம் சென்னையில் இயல்பைவிட 29 சதவிகிதம் அதிகமாகவும் மழை கொட்டியிருக்கிறது. அதேசமயம், விருதுநகர், திருப்பூர், ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் சராசரியைவிட மிகக் குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.
இப்போது பெய்வது என்ன மழை ஐயா..
தென்மேற்குப் பருவமழையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மழைப்பொழிவில் அதிக மழையைக் கொடுக்கக்கூடியது வடகிழக்குப் பருவமழை. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான இந்தப் பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 44.2 செ.மீ. மழை பதிவாகும். இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்புக்கு அதிகமான மழைப்பொழிவு என்பது மகிழ்ச்சியான செய்தி. இதுமட்டுமல்லாமல், வடகிழக்குப் பருவமழை காலத்தில் வங்கக்கடலில் அவ்வப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் தாழ்வுமண்டலம் உருவாகி, அதன் காரணமாகவும் நல்லமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்போது பெய்யும் மழைதான் கோடைகாலத்தையும் சமாளித்து, அடுத்த தென்மேற்குப் பருவமழை வரை மக்களின் தண்ணீர் தேவைகளைப் பூர்த்திச் செய்யும். அதனால்தான் இந்தக் காலத்தில் பெய்யும் மழை நீரினை, நீர்நிலைகளில் தேக்கிவைக்கவேண்டும்.
நீர்நிலைகள் என்றால் என்ன?
சுருக்கமாகச் சொன்னால் ஆறு, குளம், கண்மாய், கிணறு எனச் சொல்லலாம். பண்டைத் தமிழர்கள் நீர்நிலைகளை 70க்கும் மேற்பட்ட வகையாகப் பிரித்து வைத்திருந்தனர். ஒவ்வொன்றின் பயன்பாடும் வித்தியாசமானவை. இன்றைக்கும் அந்தவகை நீராதாரங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி விரிவாகப் பின்னர் பேசுவோம்.
நான் நீர்நிலை என்றால் அணைகள் என்று தான் நினைத்திருந்தேன்.
நீ மட்டுமல்ல. பெரும்பாலானோருக்கு அணைதான் நினைவில் வரும். ஆனால், பல நூற்றாண்டுகளாக நமது வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வரும் குளங்கள், ஏரிகள் மிகமுக்கியம். காரணம் அவற்றின் நீர்க்கொள்ளளவு 347 டிஎம்சி. இது தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளின் மொத்த நீர்க் கொள்ளளவைக் காட்டிலும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் இத்தனை விஷயமும் வித்தியாசமும் இருக்கிறதா? நம்மூர் மனிதர்களுக்கும் வெளிநாட்டு மனிதர்களுக்கும் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதுபோல விலங்குகள், பறவைகள் இடையே வித்தியாசம் இருக்கிறதா ஐயா?
நிச்சயமாக. உதாரணத்துக்குக் காகத்தை எடுத்துக்கொள்வோம். வெளிநாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் பறவையாகவே காகம் பார்க்கப்படுகிறது. அங்குள்ள காகங்கள் நம்மூரிலுள்ள காகங்களை விட இரண்டு மடங்கு பெரியதானதாக இருக்கும். நம்மூர் காகங்களில் வால் கூர்மையாகவும். வெளிநாட்டுக் காகங்களின் வால் விசிறி வடிவிலும் காணப்படும். இந்த இரண்டு வகையான பறவைகளின் ஒலிகளும் வேறுபட்டவை. காகங்கள் ‘காவ் காவ்’ என்று கத்துகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் வெளிநாட்டுக் காக்கைகள் ‘குரோங் க்ரோங்க்’ எனப்படும் ஆழமான, கடுமையான ஒலியை எழுப்புகின்றன. இந்தியாவில் காகங்கள் கூட்டமாகவே வாழ்கின்றன. ஒரு காகம் இருந்தால் ஒட்டுமொத்த காகக் கூட்டமே அங்கு ஒன்று கூடி விடும்.
அப்படிக் கூட்டுக் குடும்பமாக வாழும் இனம் தான் காகம். ஆனால் வெளிநாட்டுக் காகங்கள் மனிதர்களுடனே நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கின்றன. மற்றொன்று அலகு வடிவம். இங்குள்ள காகங்களின் அலகு சிறியதாகவும், தட்டையாகவும் காணப்படும். ஆனால் அங்குள்ள காகங்களின் அலகு பெரியதாகவும், வளைந்ததாகவும் காணப்படும்.