கலாமைக் கொண்டாடுவோம் -04

இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் தொடர்கிறது…
வளரும் நாடுகள் ஏவுகணையை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் வளர்ந்த நாடுகள் கொண்டு வந்த ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு முறையை எப்படி கலாம் எதிர்கொண்டு வெற்றி கண்டார்?
Technology denied is technology gained. மறுக்கப்பட்ட தொழில் நுட்பம், கைவரப்பெற்ற தொழில் நுட்பம். எப்படி? சொல்கிறேன். வளர்ந்த 9 – நாடுகள் இணைந்து பிற நாடுகள் ஏவுகணைகளை உருவாக்குவதைத் தடுக்கும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தார்கள். 1987 ஏப்ரல் 16 – ஆம் தேதி உருவான இந்த ஒப்பந்தம் தான் Missile Technology Control Regime (MTCR) என்ற ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு நடைமுறை என்பதாகும். இதன்படி இந்த நாடுகள் தத்தமது ஏவுகணைத் தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு தடை விதித்துக்கொண்டன. இதனால் ஏவுகணை உருவாக்கும் முயற்சியில் இருந்த வளரும் நாடுகளுக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் எட்டாக்கனியாக மாறின.

இந்தியாவில் ஆராய்ச்சியில் இருந்த ஐந்து ஏவுகணைகள் திட்டங்களை இந்தப் பாதிப்பிலிருந்து காக்க, வல்லரசுகளிடமிருந்து இறக்குமதியை எதிர்பார்க்காமல் முக்கியத் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்க முடிவு செய்யப்பட்டது. ஐந்து ஏவுகணைத் திட்டங்களுக்கும் சேர்த்து ஏறக்குறைய 200 தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியிருந்தது. டி.ஆர்.டி.ஓ நிறுவனத்துடன், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிற அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய தேசியக் கூட்டு முயற்சியைக் கலாம் முன்னெடுத்தார்.
உதாரணமாக, ஆகாஷ் ஏவுகணைத் திட்டத்தில் ‘பேஸ் ஷிப்டர்’ (Phase shifter) என்ற உபகரணம் நமக்குத் தேவைப்பட்டது. ஒரே சமயத்தில் பல இலக்குகளை நோக்கிப் பல ஏவுகணைகளைச் செலுத்த இந்த பேஸ் ஷிப்டர் உபகரணம் முக்கியம். இறக்குமதிக்கு வாய்ப்பில்லை. உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும். ஐ.ஐ.டி – டில்லி பேராசிரியை பாரதி பட், பேஸ் ஷிப்டர் தொடர்பான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருந்தார். வழக்கமாக கல்லூரிப் பேராசிரியர்கள் தொழில்நுட்பத்தை பாடத்தலைப்பாக அணுகுவார்கள்.
தொழில்நுட்பத்தை உருவாக்குகிற நடைமுறை அனுபவத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள். பேராசிரியரைத் தொடர்பு கொண்டு பேஸ் ஷிப்டர் உருவாக்கும் ஆராய்ச்சி முயற்சியில் அவரை இணைத்தோம். என்ன நடந்தது தெரியுமா?. பேஸ் ஷிப்டர் இந்தியாவில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. மத்திய மின்னணு நிறுவனத்தால் (Central Eleectronics Ltd) வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டது. அது மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. எந்தத் தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளால் மறுக்கப்பட்டதோ அதை உள்நாட்டிலேயே உருவாக்கிதோடு வெளி நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் நிலையை நாம் எட்டினோம். எனவே தான் ‘மறுக்கப்பட்ட தொழில் நுட்பம், கைவரப்பெற்ற தொழில்நுட்பம்’ என்றேன். We defeated MTCR!
தீர்க்கமான அரசியல் தலைமை, அறிவியல்-தொழில்நுட்ப முயற்சிகளுக்கு மிக முக்கியம். உங்களுடைய அனுபவத்தில் இதை எப்படி பார்க்கிறீர்கள்?
நிச்சயமாக. அணு சக்திச் சோதனைகளை அணுசக்தித் துறையும் டி.ஆர்.டி.ஓ நிறுவனமும் ஒன்று சேர்ந்து முன்னெடுத்தன. இதில் அப்துல் கலாமின் பங்கு மிக அதிகம். 1995-ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், தெர்மோ-நியூக்ளியர் என்ற வெப்ப – அணுச் சோதனையை நடத்த ஒப்புதல் வழங்கி விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தினார். 1996-துவக்கத்தில் சோதனை நடைபெற இருந்த சூழ்நிலையில், சோதனைக்கு எதிரான உலக நாடுகளின் அழுத்தம் பொருளாதாரத் தடைகளாக இந்தியாவின் வளர்ச்சியை அச்சுறுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் சோதனை ஒத்தி வைக்கப்பட்டது.
1996-ல் பொதுத்தேர்தல் நெருங்கும் நேரத்தில், தேர்தலுக்கு முன்பு சோதனை திட்டமிடப்பட்டது. ஆனால் பிரதமர் நரசிம்மராவ் தேர்தலைக் காரணம் காட்டிச் சோதனையை அவசரப்படுத்தியதை ஏற்காமல், தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம் என்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியாயின. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தான் பதவி விலகி வாஜ்பாயி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், நரசிம்மராவ் கலாமை அழைத்து வாஜ்பாயி உடன் விவாதித்தார்.
நிச்சயமாக அணுசக்தி சோதனை செய்யப்பட வேண்டும் என்ற தன் கருத்தை வலியுறுத்தினார் நரசிம்மராவ். கட்சியைத் தாண்டி தேசம் சார்ந்து நமது பிரதமர்கள் சிந்தித்தார்கள்.