கலாமைக் கொண்டாடுவோம் -03


இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்

நீங்கள் நண்பரைச் சந்திக்கும் போது நலமா? எனக் கேட்கிறீர்கள். நலமா? என்ற சொல் உங்கள் உதடுகளிலிருந்து புறப்பட்டு உடனடியாக உங்கள் நண்பரின் காதுகளைச் சென்றடைகிறது. ‘நலமா’ என்ற சொல் எவ்வளவு வேகத்தில் காதுகளுக்குச் சென்றதோ அதை விட மூன்று மடங்கு வேகமாகப் பறக்கக்கூடியது பிரமோஸ் மீயோலி வேகச் (Supersonic) சீரியங்கு (Cruise) ஏவுகணை. சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பிரமோஸ் ஏவுகணை துல்லிய பதிலடித் தாக்குதலுக்கு பயன்பட்டது உங்களுக்குத் தெரியும்.

பிரமோஸ் விண்வெளி நிறுவனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றி அதன் முதல் முதன்மை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றியவர், விஞ்ஞானி முனைவர் சிவதாணுபிள்ளை. நாகர்கோயிலில் பிறந்து வளர்ந்த இவர், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் ஹாவர்டு மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டமும், பூனா பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களோடு இஸ்ரோ நிறுவனத்திலும், டி.ஆர்.டி.ஓ நிறுவனத்திலும்,

அதன் பின் பல நிலைகளிலும் ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இராணுவ விஞ்ஞானியாக நான் பயிற்சியில் சேர்ந்த போது, சிவதாணுபிள்ளை இளம் விஞ்ஞானிகளிடம் உரையாற்றினார். அப்போது தான் அவரை முதலில் சந்தித்தேன். பிறகு அவருடன் பழகிய அனுபவங்கள் சுவாரசியமானவை. அவருடன் அலுவல் நிமித்தமாகப் பயணம் செய்திருக்கிறேன். என் படைப்பிலக்கிய முயற்சிகளுக்குத் தொடர்ந்து உற்சாகம் அளிப்பவர்.

விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும், நானும் இணைந்து எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ நூலை சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டுச் சிறப்பித்தவர் சிவதாணுபிள்ளை!

கலாமைக் கொண்டாடுவோம் என்ற இணைய உரையாடல் தொடரில் அவருடன் அப்துல் கலாமைப் பற்றியும் அவருடன் இணைந்து பணிபுரிந்த ஆராய்ச்சி அனுபவங்கள் பற்றியும் உரையாடினேன். அதிலிருந்து ….

விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் எனது வீட்டில் மின்சாரம் இல்லை. திருவிளக்கில் (தெருவிளக்கு அல்ல) தான் படிப்பேன். என் மாமா மின்விளக்குத் தொடர்பான பணியிலிருந்தார். அவர் வீட்டிற்கு மின்விளக்கு வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் மின்சாரப் பொறியாளராக வேண்டும் என்று விரும்பி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், மின்பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். பல கருவிகளை நேரத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்தும் ஒரு சாதனத்தை நான் உருவாக்கியிருந்தேன். கல்லூரியில் நடந்த ஒரு பொறியியல் கண்காட்சியில் அதைக் காட்சிப்படுத்தினேன். கண்காட்சிக்கு வந்திருந்த விஞ்ஞானி சி.வி.ராமன் என்னைப் பாராட்டினார். பிறகு விஞ்ஞானி விக்ரம் சாராபாய் வந்தார். அவர் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார். உரையாடலைத் தொடர்ந்து, ‘உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது’ என்று கூறி, என் தோள் மீது கை வைத்து என்னைப் பாராட்டினார்.

அவர் என்னைத் தொட்ட போது எனக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்ததை நான் உணர்ந்தேன். மின்பொறியாளராக விரும்பிய நான் அந்த மின்சாரப் பாய்ச்சலுக்குப் பிறகு விஞ்ஞானியாக விரும்பி, 1969-ல் விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனம் (VSSC) என பின்னாளில் பெயரிடப்பட்ட தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தில் (TERL) விஞ்ஞானியாகச் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த முதல் நாளில் விக்ரம் சாராபாயை அங்கு சந்தித்தேன்.

ஏ.பி.ஜெ அப்துல் கலாமை எப்படிச் சந்தித்தீர்கள்? அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் எப்படிக் கிடைத்தது?

திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எஸ்.எல்.வி-3 (Satellite Launch Vehicle-3) வடிவமைப்பு ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. எஸ்.எல்.வி-3 நான்கு நிலைகளைக் (Stages) கொண்டது. நான்கு குழுக்கள் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தன. நான் முதல் குழுவில் இருந்தேன். அப்துல் கலாம் நான்காம் குழுவின் தலைவராக இருந்தார். ஆய்வுக்கூட்டங்களில் எனது குழுவின் பணிகளைப்பற்றி நான் பேசுவேன். நான் சிறப்பாக பேசுவதைக் கலாம் கவனித்தார். பின்னர் இந்த நான்கு நிலைகளும் இணைக்கப்பட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவராக அப்துல் கலாம் நியமிக்கப்பட்டார். அவரது குழுவினரைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

அவர் 14 பேர் கொண்ட தனது குழுவில் என்னை சேர்த்துக் கொண்டார். அதிலிருந்து அவரோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். விக்ரம் சாராபாய் ஒரு தீர்க்கதரிசி. அப்துல் கலாம் ஒரு செயல் வீரர்.