கலாமைக் கொண்டாடுவோம் -02

இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்
திருவனந்தபுரத்தின் மிக அமைதியான புறநகர்ப் பகுதி. ஒரு குறுகலான தெருவில் அமைந்துள்ள வெள்ளை வீட்டின் பெயர் பலகையில் ‘நம்பி நாராயணன்’ என்ற பெயர். சாதனைகளுக்காக மட்டுமின்றி, சோதனைகளுக்காகவும் தேசத்தின் உதடுகளில் உரக்க உச்சரிக்கப்படும் பெயர் இது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முக்கிய மைல் கல்லான, விகாஸ் இன்ஜின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் தொழில்நுட்பச் சேவையை பாராட்டி மத்திய அரசு 2019-ல் இவருக்கு ‘பத்ம பூஷன் விருது’ வழங்கியது. தொடர்ந்து சில ஆண்டுகள் பத்ம விருதுகள் தேர்வுக் குழுவிலும் பங்காற்றினார். இவரது வாழ்க்கையை (வழக்கை) மையமாகக் கொண்டு வெளியான திரைப்படம் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ பரவலான வரவேற்பைப் பெற்றது. வெளியே மழை தூவும் ஒரு மாலை நேரத்தில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் சில மணி நேரம் உரையாடினேன். அதில் இருந்து சில துளிகள் இங்கே..
திருவனந்தபுரத்தை அடுத்த தும்பாவின் மேரி மகதலேனா தேவாலயத்தில், இஸ்ரோ தனது ஆய்வுப் பணியை தொடங்கிய காலத்தில், அப்துல் கலாமுடன் எளிமையான ஆராய்ச்சிக் கட்டமைப்பில் உங்கள் ஆராய்ச்சியை தொடங்கியவர் நீங்கள். அந்த அனுபவம் பற்றி…
கலாமுடன் ஒரே அலுவலக அறையில், இளம் விஞ்ஞானியாக எனது ஆராய்ச்சிப் பணியை ஆரம்பித்தேன். எனது மூத்த விஞ்ஞானியான கலாம், திட எரிபொருள் (Solid Propellant) ராக்கெட் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். நான் திரவ எரிபொருள் (Liquid Propellant) ராக்கெட் ஆராய்ச்சியைத் தொடங்கியிருந்தேன். சிலநேரம், நள்ளிரவைத் தாண்டியும் ஆராய்ச்சி தொடரும். அப்போது களைப்பில் படுக்கை விரிப்பை கடற்கரை மணற்பரப்பில் விரித்துத் தூங்கியிருக்கிறோம்.
எந்த அறிவியல் தத்துவத்தையும் நடைமுறையில் பரிசோதித்த பிறகே நம்பிக்கை பெற்றுத் தொடர்ந்து முன்னெடுப்பவர் கலாம். அவரும் நீங்களும் இணைந்து செய்த துப்பாக்கி வெடிபொருள் சோதனை ஆபத்தில் முடிந்ததே. அதுபற்றி…
70-களில் பிரடரிக் ஏபில் – ஆர்பிரெட் நோபல் (நோபல் பரிசை ஏற்படுத்தியவர்) இணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில் ‘வளிமண்டலக் காற்றழுத்தத்தைவிட மூன்றில் ஒரு மடங்கு குறைந்த அழுத்தத்தில் வெடிமருந்து தீப்பிடிக்காது’ என்ற தகவல் இருந்தது. இதைச் சோதித்துப் பார்க்க விரும்பினேன்.
கண்ணாடிக் குடுவையில் வெடிமருந்தை வைத்து, பம்ப் மூலம் காற்றை உறிஞ்சி காற்றழுத்தத்தைக் குறைத்து, வெடிமருந்தைப் பற்றவைத்தேன். வெடிபொருள் தீப்பற்றவில்லை. ஒன்பது முறை திரும்பத் திரும்பச் செய்தும், கடைசிவரை தீப்பற்றவில்லை. ஏபில் – நோபல் கூற்று சரிதான் என்பதைக் கலாமிடம் கூறினேன். அவர் நம்பவில்லை. ‘உசுப்பினால் வெடிபொருள் வெடிக்கும். பரிசோதனையை நேரில் பார்க்க வேண்டும்’ என்றார். அவருக்காக மறுபடியும் சோதனையைச் செய்தேன்.
கண்ணாடிக் குடுவையில் முகத்தைப் பதித்தபடி, வெடிபொருள் தீப்பற்றுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார் கலாம். அப்போதுதான், குடுவையை பம்புடன் இணைக்கும் வால்வு மூடியிருப்பதைக் கவனித்தேன். வால்வு மூடியிருந்தால் குடுவையில் இருந்து காற்றை பம்ப் உறிஞ்ச முடியாது. எனவே குடுவைக்குள் வளிமண்டலக் காற்றழுத்தமே இருப்பதால், வெடிபொருள் தீப்பற்றி சற்று நேரத்தில் வெடித்துவிடுமே.. அய்யோ.. கலாம் கண்ணாடிக் குடுவையில் கன்னத்தை வைத்திருக்கிறாரே.. சடுதியில் கலாமை கீழே தள்ளிவிட்டு அவருடன் உருண்டேன்.அடுத்த கணம்.. பயங்கர சத்தத்துடன் வெடிபொருள் வெடித்துச் சிதறியது. இருவரும் தப்பினோம். உடையை உதறியபடியே எழுந்த கலாம், ‘‘பார்த்தாயா, வெடித்து விட்டது. வெடிபொருள் வெடிக்கும் என்பதே உண்மை’’ என்றார் சிரித்துக்கொண்டே. வால்வு மூடியிருந்தது என்று விளக்கிய பிறகு, அதை மீண்டும் சோதித்த பிறகே கலாம் நம்பினார்.
விண்வெளி ஆராய்ச்சிகளைத் தாண்டி, கலாம் – உங்கள் குடும்பம் இடையிலான நல்லுறவு தொடர்ந்தது பற்றி…
என் குடும்பத்தாருடன் மிக அன்பாகப் பழகுவார் கலாம். ஒருமுறை குடும்பத்தோடு பிரான்ஸ் சென்றிருந்தேன். சிறுவனான என் மகனைத் தனியாக இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய சூழல். அப்போது, பிரான்ஸில் இருந்து இந்தியா திரும்பும் திட்டத்தில் இருந்த கலாம், தன்னோடு என் மகனை விமானத்தில் மும்பை வழியாக திருவனந்தபுரம் அழைத்து வந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு தொலைபேசியில் எனக்கு தகவல் சொன்னார்.
நாட்டுக்கான தங்களது முக்கிய பங்களிப்பு விக்ரம் அம்பாலால் சாராபாய் (Vikram
Ambalal Sarabhai-VIKAS) பெயரைக் கொண்ட விகாஸ் – திரவ எரிபொருள் இன்ஜின். 80-களில் உருவாக்கப்பட்ட விகாஸ் இன்ஜின் இன்றுவரை இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஏவூர்திகளின் (ராக்கெட்) முக்கிய சேவகனாக உழைத்து வருகிறது. இதன் ஆரம்பகட்ட ஆராய்ச்சி எப்படி இருந்தது?
இந்தியா – பிரான்ஸ் தொழில்நுட்பக் கூட்டு முயற்சியில் உருவானது விகாஸ் இன்ஜின். அதில் இருந்த ஒரு முக்கியப் பொறியியல் சிக்கல் அதன் சமநிலையின்மை (Instability).
நானும் இந்திய விஞ்ஞானிகளும் அதைச் சரிசெய்தோம். இதனால் பிரான்ஸ் விஞ்ஞானிகள் அவர்களது வடிவமைப்பு ஆய்வுக்குழுவில் என்னை உறுப்பினராக்கினர். பிரான்ஸின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டாலும், தரத்தில் பிரான்ஸ் இன்ஜினைவிட இந்தியாவின் விகாஸ் இன்ஜின் மேம்பட்டிருந்தது. இந்தியர்கள், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, சர்வதேச அரங்கில் நிறுவியது மிகுந்த மனநிறைவைத் தந்தது.