கலாமைக் கொண்டாடுவோம் -01

இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
என்னைப் பேச வைப்பவர் ஒருவர்!
என் பேச்சுக்கு அவர் தான் தலைவர்!
ஒரு குற்றம் இல்லாத மனிதர்
அவர் கோயில் இல்லாத இறைவர்!
டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம்!
இந்த வரிகளைத் திருச்சியில் ஒரு மேடையில் நான் பேசிய போது அரங்கம் அதிரக் கைத்தட்டல். பார்வையாளர்களின் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகியது.
டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம், என்று உச்சரிக்கும் போது இந்த மந்திரச் சொற்கள் மனதுக்குள் நிகழ்த்தும் மாயங்களை நான் அணுஅணுவாக உள்வாங்கியிருக்கிறேன். நான் உற்ற அதே அனுபவங்களைப் பல்வேறு அலைவரிசைகளில் என் நண்பர்களும் பிறரும் பெற்றதை அறியும் போது, அப்துல் கலாமின் வீச்செல்லைகள் தேசத்தின் நீள அகலத்தில் அனைத்துக் குடிமக்களையும் ஆட்கொண்டு, எல்லை தாண்டியும் பல இதயங்களை வசீகரித்திருக்கிறது.
பள்ளிக்கூடங்களில் மட்டுமே விஞ்ஞானிகள் பேசு பொருள்களாவதுண்டு. வளாகச் சுற்றுச்சுவர்களில் விஞ்ஞானிகளின் படங்கள் வரையப்படுவதுண்டு. ஆனால், ராமேஸ்வரத்தில் மையம் கொண்ட அப்துல் கலாம் என்ற இந்தப் பொறியியல் புயல், தேசத்தின் பொதுப் புத்தியைப் புரட்டிப் போட்டது. தெருமுனை தேநீர்க்கடை முதல், பட்டிமன்றங்கள், சட்டமன்றங்கள், திரைப்படங்கள், சர்வதேச மேடைகள், வீட்டு வரவேற்பறைகள் என அப்துல் கலாம் தொடர்ந்து பேசப்படுகிறார்.
நானும் அவரும்
குன்றுகளுக்கிடையில் கடலென நிரம்பி, மெல்லிய அலைகள் விரவிக்கிடக்கும் கடகவாசலா ஏரி, மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பூனே நகரத்தில் இருக்கிறது. இந்த ஏரியின் ஒரு கரையில் குன்றின் மீது அமைந்திருக்கிறது ‘இராணுவப் பல்கலைக்கழகம்’ (Defence Institute of Advanced Technology – Deemed to be University). இங்கு தான் புதிதாகப் பணியில் சேரும் இளம் இந்திய இராணுவ விஞ்ஞானிகளுக்குப் புகுமுகப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இராணுவப் பல்கலைக்கழகம்
பல ஆண்டுகளுக்கு முன், இராணுவப் பல்கலையின் குளிரூட்டப்பட்ட கலையரங்கில் கனவுகள் நிறைந்த கண்களோடு பல இளைஞர்கள் யுவதிகள். இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் பயின்று, மிகக்கடினமான நுழைவுத் தேர்வில் வென்று, தேசத்தின் இளம் விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் நாள் பயிற்சிக்கு வந்திருப்பவர்கள். ராணுவக் கட்டுப்பாடு கொண்ட பயிற்சியின் விதிமுறையின் படி, இளைஞர்கள் அனைவரும் ‘டை’ கட்டியிருந்தார்கள்.
குரலைக் கனைத்தப்படி, டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தைப் பற்றி அறிமுகம் செய்து, மேடையில் பேசிய மூத்த விஞ்ஞானியின் வரிகள் காற்றில் கலந்து காதுகளை நிறைக்கின்றன. “…மற்ற அரசுத்துறைகளைக் காட்டிலும் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் பதவி உயர்வுக் கொள்கை மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. இன்று இளம் ராணுவ விஞ்ஞானிகளாகப் பணியில் சேர்ந்திருக்கிறீர்கள். படிப்படியாகப் பதவி உயர்வு கிடைக்கும். இந்தியக் குடியரசுத் தலைவர் வரை பதவி உயர்வு உண்டு”
அரங்கத்தில் மெல்லிய சிரிப்பலை. அந்த அரங்கில் சிவப்பு நிற டை கட்டி அமர்ந்திருந்திருந்த நான் சிலிர்ப்போடு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
மனம் அப்துல் கலாமை அசை போட ஆரம்பித்தது. பள்ளி மாணவனாக சென்னை, வியாசர்பாடியின் மகாகவி பாரதி நகர் பொது நூலகத்தில் வார இறுதிகளில் படிப்பேன். மின்சார வசதியில்லாத ஒரு எளிமையான வீட்டில், மண்ணெண்ணெய் விளக்கில் பள்ளிக்கூடப் புத்தகங்களை படிக்கிற எனக்கு நூலகத்தின் மின்சாரக் குழல் விளக்கு ஒரு அற்புதமான வாசிப்பனுபவத்தைத் தந்தது. அங்கு ஒரு பத்திரிக்கையில் தான் அப்துல் கலாம் என்ற பெயரை முதன் முதலில் வாசித்தேன். அவரின் அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தைப் பற்றிய சிலச் செய்திகள் ஆழப்பதிந்தன. அட்டையில் கலாமின் படத்தோடு தமிழ் இந்தியா டுடே இதழின் முகப்புக் கட்டுரை என்னுள் அதிர்வலைகளை அவிழ்த்துவிட்டது.
ஏதேனும் புதிதாகச் செய்ய வேண்டும் என்று விரும்புவேன். மாணவப் பருவத்தில், வீட்டில் அப்பாவைப் போல நானும் சில மரச்சாமான்களைச் செய்திருக்கிறேன். பேனாக்கள், கடிதங்களை வைக்க ஸ்டாண்ட் செய்திருக்கிறேன். புதியன செய்வதில் இருந்த ஆர்வத்தால், பின்னாளில் ஆராய்ச்சித் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தேன்.