சாதனையாளர்கள் பக்கம்


மதுரை.ஆர்.கணேசன்

ல்விக் கூடத்தில் கல்வியையும், கலைக் குடும்பக் கூடத்தில் கலையும், கற்றுக் கொள்வதற்கும் ஒரு கொடுப்பினையும் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்..!

அப்படி ஒருபக்கம் ஹோம் ஒர்க் முடித்து விட்டு, இன்னொரு பக்கம் தினமும் தவிலிசை பயிற்சியும் ஒருசேர மாணவி லேகா எடுத்துக் கொள்கிறார்.

சென்னை திருநீர்மலையைச் சேர்ந்த ம.லேகா அப்பகுதியில் உள்ள பல்லாவரம் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் நர்சரி அன்ட் பிரைமரி ஸ்கூலில் நான்காம் வகுப்புப் படித்து வருகின்றார்.
லேகா தன்னுடைய எட்டு வயதிற்குள் தவில் இசையால் எல்லோர் மனதையும் வசீகரித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்..!!!

அப்பாவின் தவிலிசைக்கு சரிக்குச் சரியாக ஈடுகொடுக்கும் லேகா தனி யாவர்த்தனத்தில் இப்போதே மணிக்கணக்காய் வாசிக்கிறாள்..!

லேகாயிடம் தாளம் பற்றி கேட்ட போது ஆதிதாளம் என்றால் என்ன? ஆதிதாளம் 8 – அட்சரம் கொண்டதாகும் எனத் தெளிவாக விளக்குகிறாள்.

ஒரு ஆவர்த்தனத்திற்கு 8 – அட்சரமாகும், அப்படி 8 – அட்சரத்திற்கு 32 – சொற்கள், இப்படி தாளத்தைப் பற்றி மிகவும் நுணுக்கமாக பதில் சொல்லி அசத்துகிறார்..!!!
இனி நம்மோடு ம.லேகா..,

“..நான் நான்காம் வகுப்பு படிக்கிறேன், தமிழ், ஆங்கிலம் எனக்கு பிடிச்ச சப்ஜெக்ட், ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும் ஹோம் வொர்க் முடிச்சுட்டு தினமும் ஒன்னரை மணி நேரம் அப்பாவோடு சிலம்பக் கட்டை (தவில் பயிற்சி) அடிக்கப் போயிடுவேன். தவில் வாசிக்கிறது ரொம்ப பிடிக்கும் எனக்கு “..அப்பா தான் ரோல் மாடல்..” அத்துடன் பிரபலமான தவில் இசைக் கலைஞர்கள் வாசிப்பதும் கேட்டிருக்கிறேன், நானும் அவுங்கள போல வரணும்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் கீர்த்தனைகளும் பிடிக்கும்.

அப்பா கூடச் சேர்ந்து தவில் வாசிக்க பலநிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கிறேன், அங்க நான் தவில் வாசிக்கிறதைப் பார்த்து “…சூப்பர் நல்லா வாசிக்கிறீங்க..” என்று சொல்லி கைகொடுத்துப் பாராட்டி விட்டு, என்கூட செல்பியும் எடுத்துப்பாங்க..! ஹாப்பியா இருக்கும். எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் நான் தவில் வாசிக்கிறதைப் பார்த்து பாராட்டுவாங்க, என்னை ரொம்ப ஊக்கப்படுத்துவாங்க..!

தந்தை மணி, தவில் வித்துவான், சென்னை.

“..நாங்கள் பரம்பரை பரம்பரையாக (இது ஏழாவது பரம்பரை) “..ராஜவாத்தியமான நாதஸ்வரம், தவில் வாசிக்கின்ற கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் ம.லேகா தவிலிசைக் கலைஞர், சிறுவயதிலிருந்து தாள வாத்திய இசையை கேட்டு வளர்ந்தாள், ஒவ்வொரு நாளும் நாங்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது அவளும் கூர்மையாகக் கவனிப்பதைத் தெரிந்து கொண்டோம்.

அதாவது ரெண்டு வயது முதலே ஐந்து வயதிற்குள் விநாயகர் பாடல், தாளப்பாடங்கள் பாட ஆரம்பித்து விட்டார். எனது மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் பொழுது அவளும் அருகாமையில் இருந்து அந்தப்பாடங்களை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொள்வாள்.

அதை மிகவும் லாவகமாக உள்வாங்கி திரும்ப ஒப்பிக்கத் தொடங்கியதில் இருந்து எந்தளவிற்கு இசை மீதும், தாளம் மீதும், ஆர்வம் கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டோம்.

நாங்கள் முறையான பயிற்சியை வழங்கத் தொடங்கினோம், அப்படித் தான் தவிலிசையை ஆர்வமாக வாசிக்க தொடங்கினாள்.

இதிலுள்ள அடிப்படையாக ஐந்து தாளத்திற்கும், கீர்த்தனைக்கும் சிறப்பாக வாசிப்பாள், தனியாவர்த்தனம் மற்றும் நடைசொற்களும் மனோதர்மம் உருட்டு சொற்கள், சினிமா பாடல்களுக்கும் கற்பனையாக வாசிப்பாள்.

எங்க பொண்ணு பள்ளியிலும் மிகவும் நல்ல மாணவியாகவும், எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வருகிறார், மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாகயும் திகழ்கிறார் என்று சொல்கிறார்கள்.

லேகா படிக்கும் பள்ளியில் எனது மகள் கலைத்துறையில் மிகவும் ஆர்வமாக உள்ளதை உணர்ந்த பள்ளி நிர்வாகம் பள்ளி ஆண்டு விழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வாய்ப்புத் தந்து ஊக்கப்படுக்கிறார்கள். இவளது கலைத்திறமையை வளர்ப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். அதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது மகள் என்னோடு சேர்ந்து பலமேடைகளில் இணைந்து தவில் வாசித்து மக்கள் முன்பு மேடையில் பெருமை சேர்த்தது மட்டுமில்லாமல் கலைத்துறைக்கு சேவையாற்றுவதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகின்றோம்.

எங்க மகள் “..ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்..” என்று பொருந்தி நிற்கிறாள் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கும் திருக்கோயிலில் நடக்கும் கச்சேரிகளுக்கும் கூட லேகாயை அழைத்துச் செல்கிறோம்.

அங்கு அவள் மேடையில் தவில் வாசிப்பதை பார்த்தும், கேட்டும் பலரும் வந்து பாராட்டிச் செல்வார்கள், அந்தத் தருணங்கள் ஒரு பெற்றோராக ரொம்ப சந்தோசமாக இருக்கும் இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்..” என்றார்.

தவில் இசையால் தங்கமென ஜொலிக்கும் லேகா மென்மேலும் சிறக்க ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகிறது.