ஐந்து ஆறைவிடப் பெரியது 21

திரு.முகில்
‘அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜூனாகத் நவாப் அவர்களுக்கு,
என் வாழ்க்கையில் நான் புலி, கழுதைப்புலி, சிறுத்தை, மயில், முயல், காட்டுப்பன்றி, யானை, காண்டாமிருகம், கரடி, மான், பல பறவைகளை வேட்டையாடிக் களித்துள்ளேன். ஆனால், எனது வீரப் பராக்கிரம வாழ்க்கையில் சிங்கம் ஒன்றை வேட்டையாடும் வாய்ப்பு மட்டும் அமையவில்லை. அதுவும் நல்ல பிடரி கொண்ட ஆண் சிங்கம் ஏற்பாடு செய்து தந்தீர்கள் என்றால் என் துப்பாக்கிகள் உங்களுக்கு வாழ்நாளுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கும். எனது வேண்டுகோளை ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு…’
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த, இந்தியாவின் ஏதாவது ஒரு சமஸ்தானத்தின் மகாராஜாவின் பெயரை கடிதம் எழுதியவராகப் போட்டுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட எல்லோருமே ஜூனாகத் நவாபுக்கு, சிங்க வேட்டையாட அனுமதி கேட்டு கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதுவும் வைஸ்ராயோ, பிரிட்டிஷ் இளவரசரோ அல்லது வேறு பிரிட்டிஷ் உயரதிகாரிகளோ என்றால் கடிதம், கட்டளை வடிவில் நவாபை வந்து சேர்ந்தது.
சரி, அத்தனை பேர் சிங்க வேட்டைக்கு அனுமதி கேட்டபோது, ஆசிய சிங்கங்களின் புகலிடமான, கிர் காடுகளைத் தன் எல்லையாக் கொண்ட ஜுனாகத் நவாப் என்ன செய்தார்? அதைத் தெரிந்து கொள்ளும் முன் சிங்கங்களிடமிருந்து சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொள்வோம். அப்படியே கொஞ்சம் புலிகளிடம் இருந்தும்.
சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்! பன்ச் டயலாக் உண்மையா?
அதில் உண்மையும் இருக்கிறது. அது அந்தச் சிங்கத்தின் ‘விதி’யைப் பொருத்த விஷயம். சிங்கங்கள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. ஒரு கூட்டத்தில் பெண் சிங்கங்களே அதிகம் இருக்கும். அவை எல்லாம் பாட்டி, மகள், பேத்தி, சகோதரி, சித்தி, பெரியம்மா என்று ரத்த உறவு கொண்டவை. இரண்டு ஆண் சிங்கங்கள் இருக்கலாம். அவற்றுக்குள் கிராண்ட்பா, அங்கிள் உறவெல்லாம் கிடையாது. சகோதர உறவுக்கு வாய்ப்புண்டு. அதில் ஒரு ஆண் சிங்கம், கூட்டத்தின் தலைவனாக இருக்கும். தவிர, குட்டிச் சிங்கங்கள் இருக்கும்.
கூட்டத்தில் இருக்கும் ஓர் ஆண் சிங்கம், ‘மேஜர்’ ஆன பிறகு, அதாவது இணை தேடும் வயது வந்த பிறகு, அங்கிருந்து விரட்டியடிக்கப்படும். அந்த ஆண் இளஞ்சிங்கம், இன்னொரு கூட்டத்துக்குள் புகுந்து அங்கிருக்கும் தல சிங்கத்துடன் போரிட்டு வென்று, கூட்டத்துக்குள் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அதுவே கெத்து! நான்கைந்து ஆண்டுகளில் இந்த ஆண் சிங்கத்தை வெல்வதற்கு இன்னோர் இளஞ்சிங்கம் வரும்! வாழ்க்கை ஒரு வட்டம். தோற்றுப் போனால், ‘எதுவும் நிரந்தரம் கிடையாது ப்ரோ!’ என்று தத்துவம் பேசிவிட்டுக் கூட்டத்தை விட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.
ஒருபோதும் தம் வீரத்தை நிரூபிக்க இயலாத ஆண் பேச்சுலர் சிங்கங்கள், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அமைத்துக் கொண்டு தனியாகத் திரிவதுண்டு. அப்படி சக ஆண் சிங்கங்களோடு இணைய விருப்பமில்லாத சிங்கிள் சிங்கங்கள், நாடோடியாகத் தனியே தன்னந்தனியே திரிவதும் உண்டு. ஆக, ஆண் சிங்கங்களில் மூன்று வகை. கூட்டத்தோடு வாழ்பவை, நிரந்தர பேச்சுலர்ஸ், ‘தனி’க்காட்டு ராஜா’.
கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தின் முக்கியமான வேலை, தம் வாழ்விடத்தின் எல்லையைப் பாதுகாப்பது, சந்ததியைப் பெருக்குவது. பெரும்பாலும் வேட்டையாடுவதெல்லாம் பெண் சிங்கங்களின் வேலை. யானை, ஒட்டகச்சிவிங்கி போன்ற பெரிய மிருகங்களை வேட்டையாட ‘ஸ்கெட்ச்’ போட்டால் மட்டும் ஆண் சிங்கம் களமிறங்கும். மற்றபடி கூட்டத்தில் வாழும் ஆண் சிங்கங்கள் சுகவாசிகளே.
நிரந்தர பேச்சுலர் ஆண் சிங்கங்கள் குழுவாக வேட்டையாடுவதில் வல்லவை. நாடோடி சிங்கிள் சிங்கங்களே மற்ற அனைத்தையும்விட அபாரமாக வேட்டையாடக்கூடியவை. காரணம் எளிதானது. ‘நான் வேட்டையாடுனாதான் எனக்குக் கறி. எனக்குன்னு யாரு இருக்கா?’ என்ற தீரா விரக்தியிலேயே அவை தீரத்துடன் வேட்டையாடுகின்றன. பொதுவாகச் சிங்கங்கள், தாம் வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணுவதில்லை. எலும்புகளை ஒட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனை ஓநாய், கழுதைப்புலி முதலான விலங்குகள் உண்டு உயிர் வாழ்கின்றன. ஆக, காகத்துக்கு மட்டுமல்ல, சிங்கத்துக்கும் பகிர்ந்து உண்ணும் குணம் உண்டு.
பிடரிதான்யா ஆண் சிங்கத்துக்கே கம்பீரம்! என்று நாம் அவற்றிடம் சொன்னால், ‘மச்சி, என் கஷ்டம் எனக்குதான்யா தெரியும்’ என்று அவை சோகம் இசைக்கும். பெண் சிங்கங்களின் வேட்டை முறையும், ஆண் சிங்கங்களின் வேட்டை முறையும் மாறுபட்டவை. சத்தமே இல்லாமல் இரையை நெருங்கி, விருட்டெனத் தாக்கி வீழ்த்துவதில் பெண் சிங்கங்கள் ‘கில்’லேடிகள்! ஆண்கள் என்னதான் மறைந்து சென்றாலும் மண்டை மேலிருக்கும் பிடரி காட்டிக் கொடுத்துவிடும். ஆக, இரை எஸ்கேப் ஆவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. ஆக, துரத்திப் பிடித்து, அதிக வலிமையுடன் தாக்கி இரையை வீழ்த்தினால் மட்டுமே ஆண் சிங்கத்தின் பசி தீரும்.
குட்டிகளை வளர்த்தெடுப்பதிலும் பெண் சிங்கங்களே முழுப்பொறுப்பையும் எடுத்துக் கொள்கின்றன. அவை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இரண்டு முதல் ஐந்து குட்டிகள் வரை ஈன்றெடுக்கின்றன. ஆண் சிங்கங்கள், குட்டிகளை மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன. என்னை மீறி என் குடும்பத்து மேல வாயை வைச்ச, நீ செத்த! என்று கர்ஜனையால் எதிரிகளிடத்தில் வசனம் பேசுகின்றன. பின்பு அந்தக் குடும்பத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டு, ‘என் இனிய தனிமையே’ என்று முதுமையில் வாடி, வதங்கி வாழ்ந்து முடிக்கின்றன. சிங்கிள் ஆண் சிங்கங்களின் சராசரியாக 12 – ஆண்டுகள் வாழ்கின்றன. கூட்டுக்குடும்ப பெண் சிங்கங்கள் சராசரியாக 16 – ஆண்டுகள் வாழ்கின்றன. ‘ஆம்பள சிங்கம்டா!’ என்று மனிதர்கள் வீர வசனம் பேசினாலும் சிங்கங்களில் ஆண் பாவம் என்பதே நிஜம்.
பூனைப் பேரினத்திலேயே (பாந்த்ரா) அளவில் பெரியவை புலிகள்தாம். இருந்தாலும் சிங்கங்களே ‘காட்டின் ராஜா’ என்று அழைக்கப்படுகின்றன. ஏன்? காரணம், அவற்றுக்குள் இருக்கும் இந்த எல்லைப் பாதுகாப்பு உணர்வு, குடும்பக் கட்டமைப்பைக் காக்கும் குணம், தீரத்துடன் போராடும் எண்ணம், ஆண் சிங்கத்தின் கம்பீரத் தோற்றம் இவை எல்லாம்தான். இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். சிங்கங்கள் அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளில் வாழ்வதில்லை. புல்வெளிகள், புதர்கள் நிறைந்த காட்டிலேயே வாழ்வதை விரும்புகின்றன. புலிகளே அடர்ந்த காடுகளில் ‘ஆட்சி’ நடத்துகின்றன. ஆக, ‘எனக்கு ராஜாவா நான் வாழுறேன்…’ என்று புலிகளும் சொல்லக்கூடும்.
புலிகள், தம் வாழ்நாளில் ‘குடும்பஸ்தனாக’ வாழும் காலம் குறைவு. அவை இணை தேடும் காலத்திலும், இனப்பெருக்கக் காலத்திலும், குட்டிகளை வளர்க்கும் காலத்திலும் மட்டுமே குடும்பமாக இருக்கின்றன. பின், ‘என் வழி தனி வழி’ என்று தனித்தனியாகப் பிரிந்து அதனதன் வாழ்க்கையை வாழ்கின்றன.
புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பது முற்றிலும் உண்மை. அதன் வேட்டை முறை அப்படிப்பட்டதே. குறி வை. திட்டமிடு. பதுங்கு. தருணம் பார்த்து பாய்ந்து வேட்டையாடு. இரையைத் தப்பிக்க விடுவதோ, அதிக தூரம் துரத்தி ஓட விட்டுப் பிடிப்பதோ ஒரு புலிக்கு அழகல்ல. இதுவே மரபணு ரீதியாகவே புலிகளுக்குள் கடத்தப்பட்டு வரும் வேட்டை நுட்பம்.
அமுர் புலி என்றும் அழைக்கப்படும் சைபீரியன் புலி, உலகிலேயே மிகப்பெரிய பூனை இனமாகப் பார்க்கப்படுகிறது. உலகின் ஆகச்சிறந்த வேட்டைக்கார மிருகமும் இதுவே. பனி தாங்கும் புசுபுசு தோல் போர்த்திய மாபெரும் உருவம். உறுதியான தசையமைப்பு. சக்தி வாய்ந்த தாடைகள். படு கூர்மையான நகங்கள். இரையை ஓசையின்றி நெருங்கி, அதன் கழுத்தெழும்பைக் கவ்வி நொறுக்கி, வீழ்த்துவதில் வீர தீர சூர சைலண்ட் சைபீரியன் கில்லர். இவை வங்கத்துப் புலிகளை விட அளவில் பெரியவை.
இந்த சைபீரியன் புலிகள் வடகிழக்குச் சீனாவில் இருந்து கொரிய தீபகற்பம் மற்றும் கிழக்கு ரஷ்யா வரை பரவி வாழ்கின்றன. காடுகள் அழிக்கப்படுதல், வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் போன்ற பல்வேறு ‘மனிதக் காரணங்களால்’ இந்த பலசாலிப் புலிகளும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கடந்த எழுபது ஆண்டுகளாக சர்வதேச அமைப்புகள், ரஷ்ய அரசாங்கம் போன்றவை மேற்கொண்ட முயற்சிகளால், இந்த சைபீரியப் புலிகள் பூமியில் இன்னும் பிழைத்துக் கிடக்கின்றன.
சைபீரியப் புலிகளின் நெகிழ்ச்சியான காதல் கதை ஒன்றைப் பார்த்துவிடுவோம். 2012. ரஷ்யாவில் சிஹோடா மலைப்பகுதியில் அனாதையாகக் கிடந்த இரண்டு சைபீரிய புலிக்குட்டிகளை வனத்துறையினர் மீட்டார்கள். அவற்றை மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் வளர்த்தார்கள். அதில் ஆணுக்கு ‘போரீஸ்’ என்றும் பெண்ணுக்கு ஸ்வெட்லயா என்று பெயரிட்டார்கள். ஒன்றரை வயதில் அவற்றை வேறு வேறு வனப்பகுதிகளில் விட்டனர். அவை ஒன்றுக்கொன்று சண்டையிடாமல், தங்கெளுக்கென எல்லை அமைத்துக் கொண்டு வாழட்டும் என்று வனத்துறையினர் நினைத்தனர். ஆகவே பிரித்தனர்.
சைபீரியா வனப்பகுதியில் விடப்பட்ட போரீஸ் ஓரிடத்தில் தனக்கான எல்லையை அமைத்துக் கொண்டு தங்கவே இல்லை. அது நகர்ந்து கொண்டே இருந்தது. ஸ்வெட்லயா, வனத்துறையினர் விட்ட இடத்திலேயே தனது வாழ்க்கையைத் தொடர்ந்தது. இரண்டையும் வனத்துறையினர் கண்காணித்துக் கொண்டே இருந்தனர். நகர்ந்து கொண்டே இருந்த போரீஸ், மூன்று ஆண்டுகள் நிதானமாகப் பயணம் செய்து (சுமார் 200 கிமீ.), ஸ்வெட்லயா இருக்கும் வனப்பகுதியை அடைந்தது. பிரிந்தவை சந்தித்தன. சந்தோஷத்தில் உறுமின. உன் விழிகளில் விழுந்த நாட்களில் – நான் தொலைந்தது அதுவே போதுமே – வேறெதுவும் வேண்டாமே பெண்ணே!
ஆம், இதயங்கள் இணைந்தன. காதல் நாள்கள் இனித்தன. சாட்சியாக அவற்றுக்கு வாரிசுகளும் பிறந்திருக்கின்றன. வாழ்க வளமுடன் என்று வாழ்த்திவிட்டு, ஒரு முக்கியமான கேள்விக்கு வருவோம். சிங்கமும் புலியும் சண்டையிடுமா? அப்படிச் சண்டையிட்டால் எது வெல்லும்?
பெரும்பாலும் சிங்கங்களும் புலிகளும் வாழும் பிரதேசங்கள் வேறு வேறு என்பதால் அவை சண்டையிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படி ஒன்றை ஒன்று சந்திக்கும்போதுகூட, சிங்கத்துக்கு புலியோ, புலிக்கு சிங்கமோ இரை அல்ல என்பதால் மோதும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் பண்டைய ரோமில் சிங்கம் Vs புலி சண்டை நடந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சண்டை மூட்டி விட்டது சாத்தான் புத்தி கொண்ட மனிதன்தான்.
மாபெரும் மைதானங்களில், விலங்குகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு, கோஷமிட்டு வேடிக்கை பார்க்கும் குரூரப் பொழுதுபோக்கு ரோமானியர்களிடையே இருந்திருக்கிறது. அப்படித்தான் ஆப்பிரிக்கச் சிங்கங்களையும், ஆசியப் புலிகளையும் மோதவிட்டு, கொண்டாட்டாமாக வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். The Epigrams of Martial என்ற 1890-ம் ஆண்டு வெளிவந்த புத்தகத்தில், கி.பி.70-ம் ஆண்டில் ரோமப் பேரரசராக இருந்த டைட்டஸ், 225 – கிலோ எடை கொண்ட சிங்கத்தையும், 270 – கிலோ எடை கொண்ட புலியையும் மோத விட்டாரென காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கங்கள் ரோமானியர்களுக்குப் பரிச்சயமானவை. பேரரசர்கள் பலரும் செல்லப்பிராணிகளாக சிங்கங்களை வளர்த்திருக்கின்றனர். விருந்து நடக்கும்போது, தம் செல்லச் சிங்கத்தின் கூண்டைத் திறந்து விடுவதும், விருந்தினர்கள் அலறி ஓடுவதும், அதை வேடிக்கை பார்ப்பதும் பேரரசர்களின் ‘நல்வழக்கமாக’ இருந்தது.
அன்றைக்குச் சிங்கமும் புலியும் களத்தில் இறக்கப்பட்டவுடன், ஒட்டுமொத்த ரோமானியர்களின் ஆதரவும் சிங்கத்துக்குத்தான் கிடைத்தது. அதுவே அவர்கள் அடிக்கடி பார்த்துப் பழகிய விலங்கு. சிங்கத்தை வெல்வதெல்லாம் புலியால் இயலாது என்று நினைத்தனர். அரங்கம் அதிர, அந்தப் பேரொலி புலியின் கோபத்தைக் கடுமையாக உசுப்பியது. சிங்கத்தைத் துரத்தித் துரத்திய தாக்கிய புலி, தம் வலிமையான பாதங்களால் அதனை அடித்து வீழ்த்தியது. சிங்கத்தைவிட, புலியின் பற்களுக்கே வலிமை அதிகம். புலி இரையைக் கடிக்கும் வலிமையானது சிங்கம் கடிக்கும் வலிமையைவிட இரு மடங்கு அதிகம். ஆக, வயிறு கிழிந்து வீழ்ந்தது சிங்கம். பண்டைய ரோமில் நடந்ததுபோலவே, இந்தியாவிலும் மன்னர்கள், சிங்கத்தையும் புலியையும் மோதவிட்டு குரூரமாக வேடிக்கைப் பார்த்ததாகக் குறிப்புகள் உண்டு.
உண்மையில், புலிக்கு சிங்கமோ, சிங்கத்துக்கு புலியோ எதிரி அல்ல. இரண்டுக்கும் எதிரி மனிதனே. 1950-ம் ஆண்டில் உலகத்தில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சம். 1990-ம் ஆண்டில் உலகத்தில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். இன்று உலகத்தில் மீதமிருக்கும் சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் இருபதாயிரத்து சொச்சம். அவையும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இந்தியாவிலும் மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன.
தென் ஆப்பிரிக்கா. உலகில் வளர்ப்புச் சிங்கப் பண்ணைகள் கொண்ட ஒரே நாடு அதுவே. தென் ஆப்பிரிக்காவில் மட்டும் 160-க்கும் மேற்பட்ட சிங்கப் பண்ணைகள் இருக்கின்றன. அந்தப் பண்ணைகளின் உயரிய நோக்கமாக விளம்பரப்படுத்தப்படுவது ‘நாங்கள் சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இவற்றை நடத்துகிறோம்.’
சுமார் 8000 முதல் 12000 சிங்கங்கள் வரை பண்ணைகளில் இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனால், உண்மை நிலையோ அவலம் நிறைந்தது. பண்ணைகளில் வளர்க்கப்படும் பெண் சிங்கங்கள் வலுக்கட்டாயமாக அதிகமுறை கர்ப்பம் தரிக்க வைக்கப்படுகின்றன. குட்டிகள் ஈன்ற ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, தாயிடமிருந்து அவற்றைப் பிரித்து விடுகிறார்கள். காரணம், குட்டிகளுடன் தாய் இருந்தால் அதற்கு மீண்டுமொரு முறை கர்ப்பம் தரிக்கும் மனநிலை வராது என்பதால். ஆக, பெண் சிங்கங்கள் குட்டிகள் ஈன்று கொடுக்கும் எந்திரங்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றன.
பண்ணைகளில் வளரும் சிங்கக்குட்டிகளோடு சுற்றுலாப் பயணிகள் கொஞ்சிக் குலவலாம், ஓடி விளையாடலாம், அவற்றுக்குப் பாலூட்டித் தாலாட்டலாம்… கேட்கும் காசைக் கொடுத்துவிட்டு எல்லாம் செய்யலாம். அப்படி, சுற்றுலாப் பயணிகளால் சிங்கக்குட்டிகள் துன்புறுத்தப்படுவதே அநேகமாக நடக்கிறது. தாயின் அரவணைப்பின்றி, மன அழுத்தத்துடன், செயற்கையான சூழலில் போதிய பராமரிப்பின்றி வளர்க்கப்படும் இந்தச் சிங்கக்குட்டிகள், பெரும்பாலும் தங்களது இரண்டு வயதிற்குள்ளாகவே இறந்துபோவதும் உண்மை.
அப்படித் தப்பிப் பிழைத்து பருவம் அடையும் சிங்கங்கள், அடுத்ததாக இன்னொரு பண்ணைக்கு இடம் மாற்றப்படுகின்றன. வேட்டையாடப்படுவதற்காக. ஒன்றும் வேண்டாம், Lion Hunting South Africa என்று கூகுளில் தட்டினால் போதும். ‘நல்ல அழகான பிடரியுள்ள ஆண் சிங்கங்கள் நியாயமான கட்டணத்தில் வேட்டையாட ஏற்பாடு செய்து தரப்படும்’ என்னும்படியாக தளங்கள் விரியும். ஆம், தென் ஆப்பிரிக்காவில் சிங்க வேட்டை என்பது அரசால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆகவே, சிங்கப் பண்ணைகள் செழித்துக் கிடக்கின்றன. சிங்கங்களை மூலதனமாகக் கொண்டு மில்லியன் டாலர்களில் வியாபாரம் ஓஹோ.
கொடூரக் கருணையுள்ளம் கொண்ட தென் ஆப்பிரிக்க அரசு சிங்க வேட்டைக்குச் சில நிபந்தனைகளை மட்டும் விதித்துள்ளது. வேட்டையாடப்பட வேண்டிய சிங்கத்துக்கு மயக்க மருந்து கொடுக்கக் கூடாது. கூண்டுக்குள் அடைத்து வைத்தோ, பிற சிங்கங்களின் அருகில் வைத்தோ வேட்டையாடக் கூடாது. இப்படிச் சில நிபந்தனைகள். மற்றபடி, சுற்றுலாப் பயணிகளின் சந்தோஷமே எங்களுக்கு முக்கியம். சிங்கத்தை, எவ்வளவு அசிங்கப்படுத்திக் கொன்றாலும் பிரச்னையில்லை.
பண்ணையில் வளர்ந்த சிங்கங்கள் ஒருபோதும் காடு அறியாதவை. வேட்டையாடும் தம் இயல்பையும் கம்பீரத்தையும் உணராதவை. மனிதர்களைக் கண்டு அவற்றுக்கு எச்சரிக்கை உணர்வோ, பயமோ, கோபமோ தோன்றுவதில்லை. வேட்டையாட மனிதர்கள் நெருங்கி வந்தாலும், தேமேவென நிற்கும். துப்பாக்கி வெடிக்கும். அவ்வளவுதான். சிலர், அம்புகளால் சிங்கத்தை வதைத்துக் கொல்வதும் உண்டு. இந்த விதத்தில் தினமும் குறைந்தது இரண்டு சிங்கங்களாவது தென் ஆப்பிரிக்கப் பண்ணைகளில் வேட்டையாடப்படுகின்றன.
இப்படி வேட்டையாடப்படும் அப்பாவி ஆப்பிரிக்கச் சிங்கங்களின் ஆபத்பாந்தவர், சிங்கங்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஜீவகாருண்யர் – கெவின் ரிச்சர்ட்ஸன் (Kevin Richardson). இவர் சிங்கங்களின் மனிதர் – சிங்க மனிதர். தன் நண்பர் ரோட்னியின் உதவியுடன் தென் ஆப்பிரிக்காவில் Kevin Richardson Wildlife Santuary அமைத்து முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கங்களையும், பல்வேறு வன விலங்குகளையும் பராமரித்து வருகிறார். கெவினின் மனைவி மாண்டி, சரணாலயத்தை நிர்வகித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். தனக்குப் பிறந்த குழந்தைகளைக் கையில் முதன் முதலில் ஏந்திய தருணத்துக்கு ஒப்பாக இன்னொரு தருணமும் கெவினுக்கு வாய்த்திருக்கிறது. அவர் வளர்க்கும் பெண் சிங்கம் ஒன்று குட்டிகள் ஈன்றிருந்தது. கெவின் அவற்றைப் பார்க்கச் சென்றார். அந்தத் தாய்ச் சிங்கம், தன் குட்டியொன்றை கெவினிடம் அன்பாகத் தூக்கிக் கொடுத்த கணத்தில் நெகிழ்ந்து மகிழ்ந்தார் கெவின்.
தென் ஆப்பிரிக்காவில் மிஞ்சியிருக்கும் காட்டுச் சிங்கங்களின் எண்ணிக்கை 2300 இருக்கலாம். ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளிலும் காட்டு சிங்கங்களை வேட்டையாட இன்னும் தடை விதிக்கப்படவில்லை. இந்த வேட்டை வெறி தொடர்ந்தால், அடுத்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் எங்கும் சிங்கங்களே இல்லாமல்கூட போகலாம். அப்போதும்கூட கெவினின் பண்ணையில் மட்டும் ஆப்பிரிக்காவின் கடைசி தலைமுறை சிங்கங்கள் கர்ஜித்துக் கொண்டிருக்கும்.
இப்படி இந்தியாவில் இன்னமும் சிங்கங்கள் மிஞ்சிக் கிடக்கக் காரணமானவர்களாக ஜுனாகத் சமஸ்தானத்தை ஆண்ட நவாப்களைத்தான் சொல்ல வேண்டும். இந்தியாவில், ஏன் ஆசியாவிலேயே சிங்கங்கள் வாழும் ஒரே இடம் கிர் காடுகள்தான். 1880-ம் ஆண்டில் அங்கே வனப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை வெறும் 12. அய்யோ என்ற பதறிய நவாப் இரண்டாம் மகபத் கான், தன் சமஸ்தானத்தில் சிங்க வேட்டைக்குத் தடை விதித்தார். 1892-ம் ஆண்டில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 31. ஆனாலும், வேட்டைக்குச் சிங்கம் கேட்டு வந்த நச்சரிப்புகளுக்கும் கட்டளைகளுக்கும் குறைவே இல்லை. 1912-ம் ஆண்டில் தனது பன்னிரண்டாவது வயதில் ஜுனாகத் நவாபாகப் பொறுப்பேற்றார் மூன்றாம் மகபத் கான். சிறுவனாக இருந்தாலும், எவரையும் சிங்க வேட்டைக்கு அனுமதிக்கக்கூடாது என்பதில் தீவிரம் காட்டினார்.
அவர் தனது ஆட்சிக்காலத்தில் சிங்க வேட்டையைத் தடுத்து நிறுத்தியதால்தான் இன்றைக்கும் ஆசியாவில் சிங்கங்கள் பிழைத்திருக்கின்றன. அவர் ஆட்சிக்காலத்தில் பெருகிய எண்ணிக்கை சுமார் 290. (2020 கணக்கெடுப்பின்படி எண்ணிக்கை சுமார் 670.) கிர் காடுகள் சிங்கங்களின் அடையாளமாக இன்றும் திகழ்வதற்குக் காரணம், சுதந்தரத்தின்போது பாகிஸ்தானுக்குச் செல்ல நிர்பந்திக்கப்பட்ட நவாப் மூன்றாம் மகபத் கானே.
மூன்றாம் மகபத் கானை மற்றவர்கள் உசுப்பேற்றியதுண்டு. ‘இந்த கிர் காடே உங்களுடையது. இங்குள்ள சிங்கங்களை நீங்கள் வேட்டையாடினால் யார் கேள்வி கேட்க முடியும்? கிளம்புங்கள் நவாப்!’
நவாபும் யானை மீது ஏறி, துப்பாக்கியுடன் கிளம்புவார். சிங்கங்கள் இருக்கும் இடத்தை அடைவார். சுட்டால் கதை முடிந்துவிடும். ஆனாலும் நவாப், தூரத்திலிருந்தே சிங்கங்களை வேடிக்கை பார்ப்பார். அவை தம் காடுகளில் சுதந்தரமாக உலவுவதை ரசித்தபடி பொழுதைக் கழிப்பார். ஒருபோதும் துப்பாக்கியைக் கொண்டு சிங்கத்தை அவர் குறிபார்த்ததே இல்லை. l