சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 17

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

மெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திராத ஒரே அமெரிக்க ஜனாதிபதி’’ என்று பலராலும் புகழப்பட்ட பெருமைக்கு உரியவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். காரணம் பல ஜனாதிபதிகள் பெற்ற மதிப்பைவிட அதிக மதிப்பையும், மரியாதையையும் பெற்று இன்றளவும் நினைக்கப்படக் கூடிய ஒரு வரலாற்று நாயகர்.

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு பல்துறை வல்லுநர், அமெரிக்காவின் நிறுவனர்களில் ஒருவர், எழுத்தாளர், அச்சுப் பொறியாளர், அரசியல் கோட்பாட்டாளர், சுதந்திரப் போராளி, தபால் துறைத் தலைவர், விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், நகைச்சுவையாளர், ேதர்ந்த சொற்பொழிவாளர், மக்கள் நலம் மற்றும் குடிமை ஆர்வலர், இராஜ தந்திரி, எதிர்காலக் கனவுகளை விதைத்துச் செயலாக்கியவர் என்று பல்வேறு புகழாரங்களைப் பெற்ற பெருந்தகையாளர் ஆவர்.

84 – ஆண்டுகள் வாழ்ந்த மனிதர். பல நூற்றாண்டுகள் தன் பெயரைச் சொல்லும் அளவுக்கு ஒரு ஆழமான அடித்தளத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

இளமையும் தொழிலும்

17 – வயதில் அமெரிக்காவின் பிலடெல்பியாவுக்கு கையில் பணம் ஏதும் இல்லாமல் அந்நகரின் கடற்கரையில் வந்து இறங்கியவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். அவர் இறந்த போது அந்தக் கடற்கரையில் நின்ற அனைத்துக் கப்பல்களின் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் அனுசரிக்கும் அளவுக்கு உயர்ந்தவர்.

1705 – ஆம் ஆண்டு ஜனவரி 6 – ஆம் தேதி மசாசூசெட்ஸின் பாஸ்டன் நகரில் பிறந்தார். 17 – வயதில் பாஸ்டனை விட்டு பிலடெல்பியாவுக்கு வந்து சேர்ந்தார். படிப்பதற்கு அதிக ஆர்வம் கொண்டிருந்த ஃபிராங்க்ளினின் குடும்பச் சூழல் அதற்கு ஏற்புடையதாக இல்லை. எனவே அச்சுத் தொழிலைக் கற்றுக் கொண்டு ஒரு அச்சகத்தைத் தொடங்கினார்.

அந்த அச்சகம் அருகில் பல பழைய அச்சகங்கள் இருந்ததால், நிச்சயமாக வருமானம் கிடைக்காது, யாரும் வரமாட்டார்கள் என்று எல்லோரும் பயமுறுத்தினார்கள். ஒரு நாள் அவரது நண்பர் ஒருவர் ஒரு கிராமத்து மனிதரை அழைத்து வந்து ஒரு அச்சுப் பணியை முடித்துத் தரவேண்டும் என்று கேட்டார். அந்தப் பணியை மிகச் சிரத்தையோடு ஃபிராங்க்ளின் முடித்துக் கொடுத்தார். அதற்கு அந்த கிராமத்து மனிதர் ஐந்து ஷில்லிங்கன் பணம் கொடுத்தார். இதுதான் அவருக்கு நம்பிக்கை தந்த முதல் வருமானம்.

‘‘ஒவ்வொரு நாளும் எல்லோரும் தங்கள் கடைகளைத் திறப்பதற்கு முன்பே அச்சகத்தைத் திறந்து விடுவார் ஃபிராங்க்ளின். எல்லோரும் கடைகளை மூடிவிட்ட பின்பும் அச்சகத்தில் வேலை செய்து கொண்டிருப்பார்’’ என்று அவரது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். ஃபிராங்க்ளின் தனது அச்சுத் தொழிலை மிகுந்த சிரத்தையுடன் செய்தார். அதாவது தன்னிடம் அச்சடிக்கக் கொடுப்பவர்கள், அதை மற்றவர்களிடம் காட்டி, தனது அச்சகத்துக்கு ஆட்களை, நண்பர்களை அனுப்பிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு உழைத்ததாக எழுதினார். அவரது எண்ணம் போலவே, உழைப்புக்குப் பலன் கிடைத்தது; அச்சகம் செழித்து வளர்ந்தது.

தனது அச்சகத் தொழிலை விரிவு ெசய்து பல்வேறு ஊர்களிலும் அதனைத் தொடங்கினார். அதற்கு முதலீடு செய்தவர்களுக்கு எல்லா உதவியும் செய்ததோடு அவர்களது இலாபத்தில் ஒரு பங்கைப் பெற்றுக் கொண்டார். ‘ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ (Poor Richard’s Almanack) என்று ஒரு நூலை வெளியிட்டார். இந்த நூல் 1732 – முதல் 1758 – வரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது. அக்காலத்தில், அதாவது இன்றைக்கு 300 – ஆண்டுகளுக்கு முன்பு, கற்பனை செய்து பாருங்கள், ஆண்டிற்கு பத்தாயிரம் பிரதிகள் விற்பனையானது.

அந்த நூல் பருவ காலங்களில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வீட்டில் அன்றாடம் பயன்படுத்துவதற்கு, வாழ்வதற்குத் தேவையான பல குறிப்புகள், புதிர்கள் மற்றும் பொழுதுபோக்குக் கலைகள், பொன்மொழிகள், கவிதைகள், ஜோதிடத் தகவல்கள் என்று பல்வேறு சுவாரசியமான செய்திகளைக் கொண்டிருந்தது. இந்தப் புத்தகத்தின் விற்பனை அவருக்கு நிறைய செல்வத்தைக் கொடுத்தது. இந்தப் புத்தகத்தால் புகழ்பெற்ற பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பரவலாக மக்களால் அறியப்பட்டார். பல நாளேடுகள் மற்றும் பத்திரிக்ைககளிலும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

டேவிட் ஹாஸ் என்பவரோடு இணைந்து அச்சுத் தொழில் தவிர பிற தொழில்களிலும் ஈடுபட்டார். நல்ல வருமானம் கிடைத்தது. 1948 – ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டார். 1749 – இல் பிலடெல்பியாவின் ஒரு நீதிபதி பொறுப்பை ஏற்றார். 1751 – இல் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1753 – இல் வடஅமெரிக்காவின் துணை தபால்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அமெரிக்காவின் பெரும்பகுதி இங்கிலாந்து நாட்டின் ஆட்சியின் கீழாக இருந்தது.

விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர்

‘‘நோயைத் தடுக்க எடுக்கும் சிறுமுயற்சி, நோயைக் குணப்படுத்துவதற்கான பெரும் முயற்சி ஆகும்’’, ‘‘வாழ்க்கையை விரும்புகிறீர்களா? ஆம் என்றால் நேரத்தை வீணடிக்காதீர்கள். காரணம், நேரத்தினால் தான் வாழ்க்கை உருவாக்கப்பட்டுள்ளது.’’ இந்த இரண்டு பொன்மொழிகளும் உலகப் புகழ்பெற்ற பொன்மொழிகள். இவற்றைத் தன் நூலில் கூறியவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.

வாழ்க்கையை விரும்பி, நேரத்தை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தியவர்தான் ஃபிராங்க்ளின். அக்காலத்தில் மக்கள் சமையல் செய்வதற்கு விறகு அடுப்புகளோடு போராடினார்கள். அப்போெதல்லாம் வாயு எரிபொருள்கள் இல்லை. மக்களுக்கு உதவி செய்யும் வண்ணம் 1740 – ஆம் ஆண்டு, புகையைக் குறைக்கக் கூடிய மரங்களைக் கொண்டு எரிக்கும் ஒரு அடுப்பைக் கண்டறிந்தார் ஃபிராங்க்ளின். வெப்பச் சலனம் மற்றும் வெப்பம் கடத்து திறனை மனதில் வைத்து, தனது அறிவைப் பயன்படுத்தி சுயமாக ஒரு அடுப்பினை உருவாக்கினார். 1744 – ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் இந்த அடுப்பு அமோகமாக விற்பனையாகி அவருக்குச் செல்வத்தைத் தந்தது.

தனது நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து உயரும் என்று ஃபிராங்க்ளின் எழுதி வந்தார். எனவே, மக்கள் தொகையை அவ்வப்போது கணக்கிட்டு, எதிர்காலத்தில் ஏற்படும் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்திக்கு வழிசெய்ய வேண்டும் என்றும் சிந்தித்தார், எழுதினார். சிலர் அவரது கூற்றை ஏளனமாகவும், கிண்டலாகவும் பார்த்தார்கள். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் பென்சில்வேனியாவில், மெயின் ரோடு அருகில் தனது நிலத்தில் புதுமையான ஒரு செயலைச் செய்து காட்டினார்.

அதாவது, ஜிப்சம் கொண்டு ஒரு இலகுரக கனிமத்தை உருவாக்கி அதை உரமாகப் பயன்படுத்தினால் பல மடங்கு தானிய உற்பத்தி பெருகும் என்று நிரூபித்தார். தனது நிலம் அருகில் பெரிய பலகையில் ‘‘இங்கு ஜிப்சம் லேண்ட் பிளாஸ்டர் பயன்படுத்தப்படுகிறது’’ என்று எழுதி வைத்தார். இந்த நிலங்களில் மகசூல் அதிகம் கிடைத்ததால் ஃபிராங்க்ளின் புகழ்பெற்றார்.

ஃபிராங்க்ளின் தனது தெருவில் முதன்முதலில் ஒரு கம்பத்தில் விளக்கைப் பொருத்தி வைத்தார். இரவு நேரங்களில் தெருவில் செல்பவர்கள் பாதுகாப்பாகச் செல்ல இது உதவும் என்ற சிந்தனையை மக்களுக்கு விதைத்தார். அதன்பிறகு பலரும் தங்கள் வீடுகளுக்கு முன்னால் விளக்கை வைத்தார்கள். பின்னாளில் தெருவிளக்கு என்ற பெரியதொரு சமூகத் தேவை நிறைவேறிட, உருவாகிட இது காரணமானது. தெருவிளக்குகளின் நன்மையை நாம் இப்போது நன்கு அறிவோம்.

ஜுன்டோ கிளப், நூலகம்

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். அவரது ‘ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ என்ற நூலில் செல்வத்தை எப்படிச் சேர்ப்பது? சிக்கனமாக இருப்பது எவ்வாறு? என்பதைப் பற்றி விரிவாக எழுதினார். செல்வத்தைப் பெருக்கும் வழிகள் மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றுவது பற்றி நிறைய எழுதினார்.

ஃபிராங்க்ளின் தொடக்கத்தில் தன்னிடம் வேலை செய்தவர்களைப் பங்குதாரர்களாக்கி தனது தொழிலை விரிவுபடுத்தினார். 1727 – ஆம் ஆண்டு அவரது 21 – ஆம் வயதிலேயே தங்களுக்குத் தாங்களே, அது சுயதொழில் செய்து பிழைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்கிட ஜுன்டோ கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்தார். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மாலை தோறும் சந்திப்பார்கள். அவர்களைக் கொண்டு பல நல்ல திட்டங்களைச் சமூகத்துக்கு வழங்கினார் ஃபிராங்க்ளின்.

ஃபிராங்க்ளின் ஒரு கொடையாளராகவும் இருந்தார். தனக்கு உதவிய பைர்ட் போன்ற நண்பர்களுக்கும், பிறருக்கும் தன்னாலான உதவிகளைச் செய்ய முன்வந்தார். இதன் ஒரு பகுதியாக, ஃபிராங்க்ளின் ஆயிரம் பவுண்டுகளை பாஸ்டன் நகருக்குக் கொடுத்தார். இந்தப் பணத்தை அந்நகர மக்கள் வீணாக்கிவிடக் கூடாது என்பதற்காக, அதை ஒரு அறக்கட்டளையின் நிரந்தரப் பணமாக அனுப்பினார். அந்தப் பணத்தில் வந்த வட்டியைக் கொண்டு, தொழில் தொடங்கிட வசதியில்லாதவர்களுக்கு கடனாக வழங்கிட ஆவணம் செய்தார்.

இதேபோல ஆயிரம் பவுண்டுகளை பிலடெல்பியாவுக்கும் வழங்கி, அறக்கட்டளை நிதியாகக் கொடுத்தார். இந்த அறக்கட்டளை இப்போது 2.25 – மில்லியன் டாலர்களாகவும், பாஸ்டனின் அறக்கட்டளை நிதி 5 – மில்லியன் டாலர்களாகவும் வளர்ந்து பெருகியுள்ளது. ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தொழில் தொடங்கிட உதவியுள்ளது. ஒரு சிறிய அறக்கட்டளை நிதி பலுகிப் பெருகிப் பயன் தந்துள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஃபிராங்க்ளின் பள்ளிப் படிப்போடு தன் படிப்பை நிறுத்திக் கொண்டாலும், தீவிரமாகப் புத்தகங்களை வாசித்து வந்தார். குறிப்பாக அவருக்கு 42 – வயது முடித்த போது பல தொழில்களை விட்டுவிட்டு சமூகத்தின் மீதும், அரசியலிலும் பங்கெடுத்தார். அப்போது அவர் கவனித்தது, உலகின் பல அறிவுத் திரட்டுகள் புத்தகங்கள் வழி கிடைக்கின்றது; ஆனால் அது அன்றைக்கு அவர் அருகில் வசித்த மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்தார்.

எனவே, தனது ஜுன்டோ கிளப் மற்றும் நண்பர்கள் மூலம் நூலகம் ஒன்றை உருவாக்கவும், விரும்புபவர்கள் புத்தகத்தை எடுத்துச் சென்று படித்துவிட்டுக் கொண்டுவரலாம் என்ற திட்டத்தையும் தொடங்கினார். இந்த வாடகை நூலகம் 375 – புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. இன்று பிலடெல்பியாவின் புகழ்பெற்ற நூலகமாகி, ஐந்து இலட்சம் புத்தகங்களைக் கொண்டுள்ளதோடு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்து வருகின்றது. ஃபிராங்க்ளின் தொடங்கிய இந்த வாசிப்புப் பழக்கம் தான். பின்னாளில் அமெரிக்க விடுதலைக்கு, ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட உதவியது என்று பல கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இடிதாங்கி, பல்கலைக்கழகம்

அந்தக் காலத்தில் இடி விழுவதைக் கடவுள் தரும் தண்டனையாகப் பார்த்தார்கள். இடியாக, புயலாக வரும் சைத்தானை கோவில்களின் மணிகளை இயக்கி வென்று விடலாம் என்று மதகுருமார்கள் போதித்தார்கள். ஆகையால் புயல் மற்றும் இடி தாக்கும் நேரத்தில் பல ஆயிரம் எடையைக் கொண்ட கோவிலின் மணியை அடிப்பார்கள். ஆனால், அப்படி கோவிலின் மணியை அடித்த பலரும் இடிதாக்கி மடிந்தார்கள். மதகுருக்களின் பேச்சைக் கேட்பதா? அல்லது இந்த இடியை, மின்னலை எப்படி எதிர்கொள்வது என்பது பெரிய கேள்வியாகவும், தேடலாகவும் அன்று இருந்தது.

1700 – ஆண்டுகளின் மத்தியில் மட்டும் 400 – க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களை இடி தாக்கியது. காரணம் உயர்ந்த கோபுரங்கள் மற்றும் அங்கே இருந்த உலோகத்தால் ஆன ஆலய மணிகள். நூற்றுக்கும் மேற்பட்ட மணியடிப்பவர்கள் மின்னல் தாக்கும் போது மணியை அடித்து மாண்டு போனார்கள். இதுபற்றி பெஞ்சமின் ஃபிராங்க்ளின் யோசித்தார். வானில் உருவாகும் மின்னல் ஒரு மின்சாரம் என்று கருதி, அதனை ஒரு பட்டத்தை அனுப்பி உள்வாங்கி ஒரு கம்பியின் மூலம் நிலத்தின் ஆழத்துக்குக் கொண்டு சென்றார். இதுவே இடிதாங்கியானது. முதன்முதலில் தனது வீட்டில் இடிதாங்கியைப் பொருத்தி, அது செயல்படுவதை நிரூபித்துக் காட்டினார். பின்பு பெரிய பெரிய கட்டடங்கள், ஆலயங்கள் என்று எல்லா இடங்களிலும் இடிதாங்கி பொருத்தப்பட்டது.

இடிதாங்கியைக் கண்டுபிடித்து, அறிமுகம் செய்து சமூகத்துக்கு மாபெரும் பங்களிப்புத் தந்த பெஞ்சமின் ஃபிராங்க்ளினுக்கு 1753 – ஆம் ஆண்டு ஹார்வேர்டு மற்றும் யேல் பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துப் பாராட்டின.

1949 – ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் தனது நண்பர்கள் மூலம் ஒரு கல்வியகத்தை உருவாக்கிட வேண்டும் என்று முயற்சி செய்தார். இந்தக் கல்வியகம் மதம் சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்தாமல், தொழில் மற்றும் பொதுப் பணிகளுக்கு மாணவர்களை உருவாக்குபவையாக இருக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தையும் வெளிப்படுத்தினார். இதற்காக ஒரு முன்மொழிவைத் தந்து அதனை மாநிலமெங்கும் பரப்பினார்.

ஃபிராங்க்ளின் தனது முன்மொழிவில் இந்தக் கல்வி நிறுவனம் இளைஞர்களுக்கு நல்ல கல்வி புகட்டும், தனிப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு என்று இல்லாமல் இங்கு எல்லோருக்கும் கல்வி வழங்கப்படும், நல்ல மனப்பான்மை, திறமை மிகுந்த, மனித குலத்துக்குச் சேவை செய்யக் கூடிய, நாட்டுக்கு அதன் வளர்ச்சிக்கு துணை செய்யக் கூடிய இலட்சியத்தைக் கொண்டதாக அமையும் என்று எடுத்துரைத்தார்.

இந்தக் கல்வியகத்தில் மொழியின் உச்சரிப்புத் தொடங்கி, இராணுவத்தின் வரலாறு வரை எல்லாம் பயிற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார். 1751 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அக்கல்வி நிறுவனம் 1791 – ஆம் ஆண்டு பென்சில்வேனியா  பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. ஏறக்குறைய 235 – ஆண்டுகள் பழமை கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இருபத்து ஐயாயிரம் மாணவர்கள் கல்வி பயிலுகின்றார்கள். பல இலட்சம் மாணவர்கள், முன்னாள் மாணவர்களாக உலகமெங்கும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அமெரிக்காவில் முதல் மருத்துவமனையை 1751 – இல் தொடங்கினார். டா. தாமஸ் பாண்ட் என்பவரின் உதவியுடன் இதைச் செய்தார். இந்த மருத்துவமனைக்காக உருக்கமாக எழுதி, பேசி நன்கொடை பெற்றார். ‘‘ஒரு தனிநபரின் மருத்துவம் சிலருக்கு உடல்நலம் தரும். ஆனால், ஒரு மருத்துவமனை ஒரே நேரத்தில் பலருக்கு மருத்துவ உதவி தரும். மேலும், தனிப்பட்ட மருத்துவரிடம் வந்து மருத்துவம் பார்க்கும் வசதியில்லாத ஏழைகளுக்கு மருத்துவமனை உதவும்’’ என்று கூறினார். மேலும், மருத்துவமனைக்குக் கிடைக்கும் நன்கொைடக்கு இணையாக பென்சில்வேனியா நிர்வாகமும் நன்கொடை வழங்கும் என்று கூறி அந்த மருத்துவமனை பொது மக்களுக்கும், எல்லோருக்கும் சொந்தமானது என்று செயல்படுத்திக் காட்டினார்.

அமெரிக்க நாட்டில் முதன்முதலாக உருவானது பென்சில்வேனியாவின் மருத்துவமனை. இன்று பல ஆயிரம் மக்கள் தங்கி மருத்துவச் சேவை பெறுகின்றார்கள். ஒரு ஆண்டில் குறைந்தது ஐயாயிரம் குழந்தைகள் இந்த மருத்துவமனையில் பிறக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்கத் தந்தை

ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைய அமெரிக்க மக்கள் போராடினார்கள். பிரிட்டிஷ் அரசு துணைத் தபால்துறைத் தலைவவராக ஃபிராங்க்ளினை நியமித்திருந்தது. இப்படி உயர்பதவி வகித்த ஃபிராங்க்ளின் அரசியல் ரீதியாக உயர்ந்த இடத்திலும் இருந்தார். இவரது எழுத்தும், நூல்களும் கூட விடுதலைக்கு வித்திட்டன.

பிரான்ஸ் தேசத்துக்கான அமைச்சராக ஃபிராங்க்ளின் இருந்த காலத்தில், அந்நாட்டு மன்னர் முதல் அனைத்து ஆட்சியாளர்களையும் கவர்ந்து, அமெரிக்க மக்களின் விடுதலைப்  போராட்டத்துக்கு அவர்களின் உதவியைப் பெற்றுத் தந்தார்.

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட பல தலைவர்கள் தயங்கிய போது, ‘‘கையொப்பம் இட்டால் ஒருவேளை நாம் இணைந்து தூக்கிலிடப்படலாம்; இல்லையென்றால் தனித்தனியாகத் தூக்கிலிடப்படலாம்’’ என்று எழுதினார். எனவே கையொப்பம் இடுவதே மேலானது என்று சிந்திக்க வைத்தார். உடனே பலரும் கையொப்பம் இட்டார்கள்.

தொடர்ந்து அமெரிக்காவின் இறையாண்மை சாசனம் வெளிவந்த போதும் பலரும் தயங்கினார்கள். ஃபிராங்க்ளின் அவர்களிடம், அரசியலமைப்பு பல திட்டங்களைக் கொண்டுள்ளது; அதில் சில விஷயங்கள் தெளிவில்லாமல் இருக்கலாம்; அல்லது முரண்படலாம்; ஆனால், அதை வெளியிடாமல் பின்பற்றாமல் எதுவும் நிகழ்ந்துவிடாது. முதலில் இதனை ஆதரிப்போம்; தொடர்ந்து அது மாற்றங்கள் பெற்றுச் சரியாகிவிடும் என்று எடுத்துரைத்து அனைவரையும் கையொப்பம் இட வைத்தார். இதனால் அமெரிக்காவின் அரசியலமைப்பு உருவாகி, ஒரு நாடாக அங்கீகாரம் பெற்றது. இன்று உலக அளவில் தன் ஆதிக்கத்தையும் செலுத்துகின்றது.

பெஞ்சமின் ஃபிராங்க்ளினின் வயதான காலத்தில் வாசிக்கக் கடினப்பட்ட போது ‘பைபோகல்’ என்று சொல்லக் கூடிய கிட்டப்பார்வை மாற்றும் தூரப் பார்வையைச் சரிெசய்யும் கண்ணாடியைக் கண்டுபிடித்துக் கொடுத்தார்.

ஃபிராங்க்ளினின் 11 – வயதில் அவர் மரக்கட்டைகளைக் கட்டிக் கொண்டு கண்டுபிடித்த நீச்சல் துடுப்பு தான் அவரது முதல் கண்டுபிடிப்பு. ஆர்மோனிகா என்ற இசைக்கருவியை உருவாக்கினார். அமெரிக்க அரசியலில் முதல் கார்ட்டூனை உருவாக்கிட உதவினார்.

எழுத்தாளர், அரசியல் அறிஞர், கண்டுபிடிப்பாளர், சமூக சேவகர், பன்னோக்குச் சிந்தனையாளர் என்று பல்துறை நாயகராகத் திகழும் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் போன்ற தலைவர்கள் வளரும் தலைமுறையினருக்கு நல்ல முன்மாதிரிகள். உழைப்பால் உயர்ந்து, உயர்ந்ததும் சமூகத்தை வழிநடத்தி நல்வாழ்வுக்கு வழிவகுத்த இந்த மாபெரும் மனிதரின் புகழும் வாழ்வும் என்றும் நிலைத்து நிற்கிறது. l