ஊடகம் பழகு 14

திரு.மனோஜ் சித்தார்த்தன்

வ்வுலகம் மிகப்பெரிய இயந்திரம் என்கிறார் வள்ளுவர். அந்த இயந்திர இயக்கங்கள் போன்றது தான் இன்றைய மனித வாழ்வு. மிக விரைவானதாகவும், தேவைகள் மிக அதிகமாகவும் உள்ளது இன்றைய வாழ்வு. இவற்றில் மேம்பாடு அடைவதற்கு தகவல்கள் மற்றும் தரவுகள் மிக அவசியமாகின்றன. இதன் மூலமே இன்றைய ஒட்டுமொத்த உலகமும் இயங்கிக் கொண்டு வருகின்றது. அத்தகைய தகவல்களையும் தரவுகளையும் நமக்கு அளிப்பது ஊடகங்களே. அவற்றின் பணி மிக முக்கியமானது இது பொது மக்களுக்கு சேவை அளிக்கின்றது.அது எந்த ஊடகமாகவும் இருக்கலாம். அச்சு ஊடகங்கள்,காட்சி ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள் என எந்த மாதிரியான ஊடகங்களாகவும் இருக்கலாம் அவை மக்களுக்குப் பயன்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல் சமூக வளர்ச்சிக்கும், சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளைத் தேடும் தளமாக ஊடகங்கள் செயல்படுகின்றன. இவ்வளவு பெருமை வாய்ந்த இத் துறையில்  நாம் எவ்வாறு வாய்ப்புகளைப் பெறுவது.இதற்கு என்னென்ன தகுதிகள் தேவை, இதற்காக என்னென்ன படிப்புகள் தற்போது உள்ளன, தொழில்நுட்ப அறிவு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து, சற்று விரிவாகப் பார்ப்போம்.

 அதிகரித்து வரும் ஊடகங்களின் தேவைகள்

 என்னதான் டிஜிட்டல் ஊடகங்கள் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும், மற்ற ஊடகங்களுக்கான தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பொதுவாக தற்போது உள்ள காலத்தைப் பெருந்தொற்றுக்கு முன் பெருந்தொற்றுக்குப் பின் என பிரிக்கலாம். அதே போல தான் ஊடகத்துறையும் நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து தற்போது அதன் எதிர்காலம் மிகப் பிரகாசமாக அமைந்துள்ளது அதுவும் குறிப்பாக PIB (Press Information Bureau) 2024 ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒட்டுமொத்த அச்சு ஊடகங்களின் வளர்ச்சி 18 – சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முதல் தேர்வாக இந்த அச்சு ஊடகங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசும் இவ்வகை ஊடகங்களுக்குச் சிறப்பு சலுகைகள் அளித்து ஊக்கப்படுத்துகின்றது. NSR (NORTHERN SKY RESEARCH) எனப்படும் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி உலகெங்கிலும் உள்ள செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் பொதுமக்களைக் கவரும் வகையில் Ultra HD தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி DTH (Direct-to-Home) வீட்டிற்கு நேரடியாக செயற்கைக்கோள் வாயிலாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் முறைதான் இது.

தற்சமயம் வளர்ந்த நாடுகளில் 4K (3840 x 2160 பிக்சல்கள்) எனப்படும் வீடியோ தெளிவுத் திறன் உடைய தொலைக்காட்சிகள் அங்கு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் HD (1920 x 1080 பிக்சல்கள்), எனப்படும் வீடியோ தெளிவு கொண்ட தொலைக்காட்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பு செய்கின்றன. அது மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுகின்றன, அதற்கு தனி கட்டணம் என்றாலும் மக்கள் அதனை விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.மக்களுக்கு அந்தக் கட்டணங்கள் சுமையாக இல்லாமல் சுகமாக இருப்பதால் தொலைக்காட்சிப் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்கள்  இந்தியாவில் 4K தொலைக்காட்சிப் பெட்டிகளை  அதிக அளவில் விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும் இது போன்ற அதிநவீன தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளுக்கு மக்களிடத்தில் வரவேற்பு குறைவாக உள்ளது என்பதை மனதில் கொண்டு அவற்றைச் சரிவிலிருந்து மீட்டெடுக்கவும், மக்கள் மனதில் மீண்டும் இடம்பெறச் செய்யும் நோக்கில் உலகம் முழுவதிலும் Ultra HD தொழில்நுட்பத்தின் மூலம் 8K (7680 X 4320 பிக்சல்கள்)வீடியோ தெளிவு உள்ள அதிதுல்லிய தொலைக்காட்சி நிறுவனங்கள் 830 உலகம் முழுவதிலும் வர இருக்கின்றன.

இதில் பொழுதுபோக்கு தொலைக்காட்சி மட்டுமல்லாமல் அறிவியல், விளையாட்டு, செய்திகள், ஆன்மீகம் போன்ற அதிதுல்லிய தொலைக்காட்சிகள் உயர் வரையறை ஆடியோ (HD Audio) மற்றும் Dolby Audio,Dolby Atmos, 3D Audio, HEOS Built-in உடன் ஒரு திரையரங்கில் படம் பார்த்தால் துல்லிய ஒலி ஒளி காட்சிகளை பார்த்து ரசிப்போமோ அதேபோன்று இன்று தொலைக்காட்சிகளிலும் இது போன்ற வசதிகள் வந்துவிட்டன.

இதில் பழைய தொலைக்காட்சி நிறுவனங்களும் உள்ளன, பல புதிய நிறுவனங்களும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 530 தொலைக்காட்சி நிறுவனங்கள் இதுபோன்று வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துல்லியமான ஒலி அமைப்பிற்காக பல்வேறு தொழில் நுட்பங்கள் தற்போது வந்துள்ளன. அதன்படி Audio Mixing,
Sound Effects, Equalization போன்ற புதிய தொழில்நுட்பத்துடன் Sound Engineering எனப்படும் இவற்றிற்கு வருங்காலத்தில் இதற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஊடகத்துறை மட்டுமல்லாமல் பல்வேறு விதமான துறைகளில் இவற்றிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இதனால் தொலைக்காட்சி தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற அறிவிப்பு பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோன்று டிஜிட்டல் ஊடகங்களுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளைப்  போன்று பிரகாசமான எதிர்காலம் தற்போது அமைந்துள்ளது. எனவே செய்திகள் மற்றும் தகவல்களின் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற ஊடகங்களின் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றது.

 ஊடகக் கல்வி

 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஊடகத்துறைக்குள் வருவது என்பது இன்றைய காலங்களில் மிக மிக எளிது. அதற்காக கல்லூரிகளில்  பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என பல்வேறு வகையான கல்வி முறைகள் உள்ளன. குறிப்பாக இன்று மக்களிடத்தில் விசுவல் கம்யூனிகேஷன் Visual Communication மட்டுமே ஊடகத் துறைக்கான படிப்பு என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு, இந்தப் படிப்பில் சினிமா மற்றும் அது சார்ந்த துறைகளில் மட்டும்தான் இந்தப் பட்டப்படிப்பு பயன்படும். ஊடகங்களைப் பற்றி தெளிவாக இவற்றில் சொல்ல மாட்டார்கள்.

ஊடகத்துறைக்குள் கால் பதிக்க இளநிலைப் பட்டப்படிப்புகள் BJMC (Bachelor of Journalism and Mass Communication), BA in Media Studies, BBA MEDIA Management. முதுநிலை பட்டப்படிப்பு MJMC (Master of Journalism and Mass Communication), MA in Media Studies, MBA Media Management போன்றவை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் (Recognized University) மூலம் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC- University Grants Commission)அங்கீகாரம் செய்யப்பட்டு இளநிலைப் பட்டபடிப்பு (Bachelor’s degree) 3 ஆண்டுகளும் முதுநிலை பட்டப்படிப்பு(Master’s degree) 2 ஆண்டுகளும் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தரமணி சென்னை தமிழக அரசின் இந்த நிறுவனம் (Tamil Nadu Government M.G.R. Film and Television institute CIT Campus, Tharamani,Chennai) 3 ஆண்டுகள் முழு நேர டிப்ளமோ பயிற்சிகளை வழங்குகின்றன. DFTT (Diploma in Film and Television Technology). Sound Engineering, Sound Production போன்ற முழுக்க முழுக்க சினிமா மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகளும், கேமராக்கள் குறித்த பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

புகைப்படம் எடுப்பது துவங்கி, வீடியோக்கள் எடுப்பது அதில் உள்ள தொழில்நுட்ப உத்திகள் போன்றவற்றை மிகச் சிறப்பாக இங்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்தக் கல்லூரியில் வழங்கப்படும் டிப்ளமோ படிப்புகள் வாழ்வில் முன்னேற வழிகாட்டும். தமிழக அரசின் இணையதளத்தில் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும் DIPR-Department of Information and Public Relations எனப்படும் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் இணையதளத்திலும் இதற்கான தகவல்களை தரப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். l