கற்றல் எளிது -13

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
பாடமாக இருந்தாலும் சரி பணியிடங்களாக இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் அடைய வேண்டும் என்பதுதான் வெற்றியாளர்களின் எண்ணங்களாக இருக்கும். ஆனால் நிபுணத்துவம் என்பது எல்லோருக்கும் சாத்தியமா என்கிற கேள்வி வரலாம். உண்மையில், சாத்தியம்தான் என்கிறது அறிவியல். எப்படி எனப் பார்ப்பதற்கு முன்பு கொஞ்சம் பின்னால் போய் சில முக்கிய விஷயங்களை மட்டும் மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்வோம்.
நாம் ஒரு பாடத்தை உள்வாங்கிப் படித்து தொடர்ந்து பயிற்சி செய்யும்போது வலுவான மூளை இணைப்புகள் உருவாகுகின்றன எனப் பார்த்தோம் இல்லையா?இந்த மூளை இணைப்புகள் நமது நீண்ட கால நினைவாற்றலில் சேகரிக்கப்படுகின்றன. நாம் கற்றதைத் தேர்விலோ அல்லது நிஜ வாழ்க்கையிலோ பயன்படுத்தும்போது அல்லது அது சார்ந்து சிந்திக்கும்போது நம் தற்கால நினைவாற்றல் நீண்ட கால நினைவாற்றலில் இருந்து மூளை இணைப்பை எடுத்துப் பயன்படுத்திகொள்ளும் எனப் பார்த்தோம் இல்லையா? இதை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள்.
இப்போது நாம் ஒரு பாடத்தில் நிபுணர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம்.
ஒருவர் குறிப்பிட்ட பாடத்தில் நிபுணராவதற்கு அந்தப் பாடம் குறித்த மூளை இணைப்புகளைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும். நீங்கள் அறிவியலில் நிபுணர் ஆக வேண்டும் என்றால் அறிவியல் குறித்த பாடங்களை நிறையப் படித்து, அது தொடர்பான மூளை இணைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் நிபுணர் ஆக வேண்டும் என்றால் ஆங்கில வார்த்தைகளை, இலக்கணங்களை, கதைகளை தொடர்ந்து பயிற்சி செய்தால் அதுகுறித்த மூளை இணைப்புகள் நிறைய உருவாகும். அதன் மூலம் நீங்கள் ஆங்கிலப் பாடத்தில் நிபுணர் ஆகலாம்.
ஆனால் இது எப்படி வேலை செய்கிறது?
இப்போது கீழே தரப்பட்டுள்ள புதிரைப் பாருங்கள். இது போல பல துண்டுகளைச் சேர்த்து முழுப் படத்தை உருவாக்கும் புதிர் விளையாட்டை சிறு வயதில் நீங்கள் நிறைய விளையாடி இருப்பீர்கள். கீழே உள்ள புதிரின் துண்டுகள் தான் உங்கள் மூளை இணைப்புகள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து நிறைய மூளை இணைப்புகளை உருவாக்கும்போது, நீங்கள் ஒவ்வொரு துண்டாக உருவாக்கி இணைக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் போதுமான மூளை இணைப்புகளை உருவாக்கிவிட்டால், அந்தத் துண்டுகள் ஒவ்வொருன்றும் இணைந்து உங்களுக்கு படம் தெரியத் தொடங்கும். அதாவது அந்தப் படம் குறித்த புரிதல் உங்களுக்கு உருவாகியிருக்கும். நீங்கள் அந்த படத்தில் அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்திருக்காவிட்டாலும் கூட, போதுமான முக்கியத் தகவல்களைத் தெரிந்தவுடனேயே இந்தப் படம் தான் அங்கு இருக்கிறது என்று உங்கள் மூளைக்குத் தெரிந்து விடும்.
கீழே உள்ள புகைப்படத்தில் காரின் சில துண்டுகள் விடுபட்டுபோய் உள்ளது. இருந்தும் அந்த படத்தில் இருப்பது கார் தான் என்று நமக்கு நன்றாக தெரிகிறது அல்லவா? அது போலத் தான் நாம் போதுமான மூளை இணைப்புகளை உருவாக்கிவிட்டாலே நாம் அந்தப் பாடத்தில் அல்லது நாம் எதைக் கற்கிறோமோ அந்த விஷயத்தில் நிபுணர் ஆகிவிடுவோம்.
நீங்கள் போதுமான மூளை இணைப்புகளை உருவாக்கியும் தொடர்ந்து பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? அந்த மூளை இணைப்புகள் மறையத் தொடங்கிவிடும். கீழே உள்ள படத்தில் காரின் படம் மறையத்தொடங்குவது போல் இருக்கிறது அல்லவா? அப்படி தான் நம் மூளை இணைப்பும் மறையத்தொடங்கிவிடும். அதனால் நமக்கு அந்தப் பாடத்தில் படித்தது நினைவில் இருந்து விலக தொடங்கும். அதனால் தொடர்ந்து பயிற்சி செய்வது மட்டுமே மூளை இணைப்பை வலுவானதாக வைத்திருக்க உதவும்.
ஆனால் எப்படிப் பயிற்சி செய்ய வேண்டும்? ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டால் அதில் உள்ள அனைத்துத் தகவல்களையும் படிக்க வேண்டுமா? இல்லை முக்கியத் தகவல்களை மட்டும் படித்தால் போதுமா? எளிமையாக புரியும் தகவல்களை மட்டும் படிக்கலாமா? கடினமான தகவல்களை அப்படியே விட்டுவிடலாமா? தொடர்ந்து ஒரே மாதிரியான தகவல்களைப் பயிற்சி செய்வதால் நம் திறன் வளருமா? நாம் கற்கும்போது இரண்டு வகையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்று ஆழமான பயிற்சி, மற்றொன்று இடைவிலகல் பயிற்சி.
ஆழமான பயிற்சி (Deliberate Practice)
நாம் தொடர்ந்து பயிற்சி செய்தால் வலுவான மூளை இணைப்புகளை உருவாக்கலாம் என்று பார்த்தோம். ஆனால், எப்படிப் பயிற்சி செய்கிறோம் என்பதும் முக்கியம். நமக்கு ஒரு விஷயம் ஏற்கனவே தெரிந்துவிட்டால் மீண்டும் மீண்டும் அதையே தொடர்ந்து பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். இப்போது உங்களுக்கு கணக்கில் அல்ஜிப்ரா தெரிந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். பிறகு பயிற்சி செய்யும்போதெல்லாம் தொடர்ந்து அல்ஜிப்ராவை மட்டுமே பயிற்சி செய்து கொண்டே இருக்கக் கூடாது. இதனை, சோம்பல் வகைக் கற்றல் என்று கூறுவார்கள். அதாவது ஆங்கிலத்தில் Lazy Learning. இந்த சோம்பல் வகைக் கற்றலை நாம் தொடர்ந்து செய்து வந்தால் நம் மூளையில் புதிய டென்ட்றிக் ஸ்பைன்கள் தோன்றாது. புதிய டென்ட்றிக் ஸ்பைன்கள் தோன்றினால் தானே நாம் கற்றது வலுவான மூளை இணைப்பாக உருவாகும்? அதேபோல வேறு விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டும் பயிற்சி செய்யக்கூடாது. போன் பார்த்துக்கொண்டே படிப்பது. டிவி பார்த்துக்கொண்டே படிப்பது. இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. பிறகு என்ன செய்ய வேண்டும்? நாம் ஆழமான பயிற்சியைச் செய்ய வேண்டும்.
ஆழமான பயிற்சி என்றால் என்ன? கடினமான விஷயங்களை நாம் பயிற்சி செய்ய வேண்டும். கணிதம் படிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு எந்தப் பகுதி கடினமாக இருக்கிறதோ, வரவில்லையோ அதைத் தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும். இதுபோன்று கடினமான விஷயங்களை பயிற்சி செய்வது மூலம் தான் முக்கியமான இணைப்புகள் உருவாகுகின்றன. நாம் ஏற்கனவே மேலே பார்த்தது போல முக்கியமான இணைப்புகளை உருவாக்கிவிட்டால் போதும். நாம் அனைத்தையும் கற்கவில்லை என்றாலும் கூட அந்தப் பாடத்தில் நிபுணராகும் அளவுக்குப் புரிதல் உருவாகிவிடும்.
இடையில் விலகல் (Interleaving).
நாம் பயிற்சி செய்யும்போது பின்பற்ற வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் இடைவிலகல். இடையில் விலகுதல் என்றால் என்ன? படித்துக்கொண்டிருக்கும்போது பாதியில் விட்டு விட்டு ஓடிவிடுவது என்று நினைத்துவிடாதீர்கள். இந்த இடைவிலகல் என்பது முக்கியமான டெக்னிக். அதை விரிவாகப் பார்ப்போம்.
உங்கள் வீட்டில் இயந்திரங்களைப் பழுது பார்க்கும் கருவிகள் இருக்கின்றனவா? சுத்தியல், ஸ்க்ரூ டிரைவர், ஒயர் கட்டர் இப்படி? இதை வைத்து நாம் உதாரணத்தைப் பார்ப்போம். நீங்கள் சிறுவயதில் அந்தக் கருவிகளை உங்கள் தந்தையோ அல்லது வீட்டில் யாரோ பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டிருப்பீர்கள். உங்கள் தந்தை என்ன செய்வார்?
முதலில் சுத்தியலைப் பயன்படுத்த சொல்லித் தருவார். ஒரு ஆணியை எடுத்து சுவற்றில் வைத்து சுத்தியலால் அடித்துக் காட்டுவார். நீங்களும் அதேபோலச் செய்வீர்கள். இப்போது உங்களுக்கு ஆணி எப்படி அடிக்க வேண்டும் என்று தெரிந்துவிட்டது. அடுத்து திருகு ஆணியை (Screw) உங்கள் தந்தை காட்டுகிறார். என்ன செய்வீர்கள்? திருகு ஆணியையும் அதே போல சுத்தியலால் அடிக்க முயற்சிப்பீர்கள். சரியா?
ஏனென்றால் உங்களுக்கு சுத்தியல் என்ற ஒரே ஒரு கருவியை மட்டும் தான் பயன்படுத்த தெரியும்.திருகு ஆணியும் பார்ப்பதற்கு ஆணி போல இருப்பதனால் அதையும் சுத்தியலை கொண்டு தான் அடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வீர்கள். ஆனால் ஆணியும், திருகு ஆணியும் வெவ்வெறு கருவிகள் அல்லவா? எங்கே எதனை பயன்படுத்த வேண்டும் என்று நாம் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? இதேபோல தான் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களிலும் செயல்படுகிறோம்.
நாம் ஒரே உத்தியை மட்டும் தொடர்ந்து கற்றுவந்தால் அந்த உத்தியை மட்டுமே பயன்படுத்தி எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முயற்சி செய்வோம். திருகு ஆணியை வைக்க வேண்டிய இடத்தில் திருகு ஆணிக்கான கருவியையும், ஆணி அடிக்க வேண்டிய இடத்தில் சுத்தியலையும் பயன்படுத்த நாம் தெரிந்திருக்க வேண்டும். இதற்குதான் இடைவிலகல் முறை பயன்படுகிறது.
நாம் கற்கும் விஷயத்தில் ஒரே விதமான உத்தி அல்லது ஒரு அம்சத்தை மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்யாமல், இடையில் விலகிச் சென்று வெவ்வேறு உத்திகளையும், அம்சங்களையும் தொடர்ந்து பயிற்சி செய்வதே இடைவிலகல் எனப்படும். நாம் எந்தப் பிரச்னைகளுக்கு எந்த உத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் முக்கியமான திறன். இதனால் நாம் ஒரு உத்தியை சிறப்பாகப் பயிற்சி செய்து வைத்திருக்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. எந்த உத்தியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சியும் நமக்கு முக்கியம். இது நாம் படிக்கும் பாடமாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும், அனைத்திலும் பயன்படும்.
நமக்குப் பொதுவாகச் சொல்லித்தரப்படும் பாடங்கள் அனைத்தும் நேர் வரிசையில் தான் இருக்கும். ஆனால் நிஜ வாழ்வில் நமது மூளை நேர் வரிசையில் சிந்திக்காது. உதாரணமாக நீங்கள் கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொள்ளும்போது பவுன்சர் ஆடுவது எப்படி, யார்க்கர் ஆடுவது எப்படி என்று வரிசையாகக் கற்றிருக்கலாம். ஆனால் விளையாடும்போது எப்போது பவுன்சர் வரும், எப்போது யார்க்கர் வரும் என்று சொல்ல முடியாது. எப்படி பந்துபோட்டாலும் அடிப்பதற்கு நாம் தயராக இருக்க வேண்டும். இதேதான் பாடத்திலும். நீங்கள் அல்ஜிப்ரா படிக்கும்போது ஒரு பகுதியை முடித்துவிட்டு கொஞ்சம் முக்கோணவியல் படிக்கலாம். இப்படி மாற்றி மாற்றிப் பயிற்சி செய்யும்போது சூழலுக்கு ஏற்றாற்போல எந்தக் கணித்ததைஎப்போது பயன்படுத்த வேண்டும் என்று உங்கள் மூளை தானாக முடிவெடுத்துவிடும்.
இந்த உத்தியைத்தான் இடை விலகல் உத்தி என்கிறோம் இந்த உத்தியை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் மூளை ஒரே வரிசையில், ஒரே வகையில் சிந்திக்காமல் முன்னும் பின்னுமாக வெவ்வேறு வகையில் சிந்திக்க நிர்பந்திக்கப்படுகிறது. இதன்மூலம் பிரச்சனைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும், ஒற்றுமைகளையும் சிறப்பாக கண்டறிந்து அதன் மூலம் தீர்வை எளிதாக எட்ட உதவுகிறது.
அன்றாட வாழ்வில் பயிற்சி
நாம் கற்றதை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது வலுவான மூளை இணைப்புகளை உருவாக்க உதவும். உங்களால் கூட்டல், கழித்தல் உள்ளிட்ட அடிப்படைக் கணக்கை கடைசி வரை மறக்க முடியாது. ஏன் தெரியுமா? நீங்கள் அதை அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறீர்கள். காய்கறி வாங்கும்போதும், வரவு செலவு கணக்கு பார்க்கும்போதும் உங்களுக்கு அந்த கணக்குப் பயன்படுகிறது. அதேபோல நீங்கள் கற்கும் விஷயங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் அந்த பாடம் என்றைக்குமே மறக்காது. அதற்காக எல்லாப் படத்தையும் சராசரி பொதுவாழ்வில் பயன்படுத்த முடியாது தான். ஆனால் நாம் தொடர்ந்து அந்த தகவல்களை தெரிந்துக்கொள்வதோடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.
நாம் சென்ற பகுதியில் பார்த்தது போல ஜூலியஸ் யேகோ யூடியூப் வீடியோக்களை மட்டும் பார்த்துக்கொண்டேயிருந்தால் ஈட்டியெறிதலில் சிறப்பு பெற்றிருக்க முடியாது. அந்த உத்தியை அவர் தொடர்ந்து நிஜ வாழ்வில் பயன்படுத்தியதால் தான் அவர் நிபுணத்துவம் அடைந்தார்.
கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்கு
உங்களுக்கு கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில்தான் ஆர்வம் அதிகமா? அது சார்ந்த மூளை இணைப்பை உருவாக்க விரும்பவரா? நீங்கள் புத்தகத்தில் தரப்பட்டிருக்கும் கணக்குப் புதிர்களுக்கு பின்னால் இருக்கும் விடையைப் பார்க்காமல் பதில் எழுத முயற்சி செய்ய வேண்டும். நாம் ஒரு பாடத்தைப் படித்தவுடன் புரிந்தது போலவே இருக்கும். கேள்வியைப் படித்துவிட்டு புத்தகத்தில் உள்ள விடையைப் பார்த்தால் ‘இது தான் எனக்கு தெரியுமே’ என்று தோன்றும். ஆனால் விடையைப் பார்க்காமல் எழுதும்போது எதுவும் நினைவில் இருக்காது. அதனால் கேள்விகளுக்குப் பதிலை புத்தகத்தின் பின்னால் பார்க்காமல், நாம் புரிதலில் இருந்து பதிலை உருவாக்க முயற்சி செய்வது சிறந்த பலனைத் தரும். உங்கள் புரிதலில் இருந்து விடையைத் தேடும்போது ஒவ்வொரு முடிச்சாக அவிழ்வது போல வரிசையாகச் சிக்கல்களைத் தீர்த்து இறுதியில் விடையை அடைவீர்கள்.
முதலில் பயிற்சி செய்யும்போது உங்களுக்கு அறிவியல், கணக்கு கேள்விகள் கடினமாக இருக்கலாம். நம்மால் செய்யவே முடியாது எனத் தோன்றலாம், ஏனென்றால் ஆரம்பத்தில் அந்த பாடம் தொடர்பான மூளை இணைப்புகள் உருவாகியிருக்காது. ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது அந்தப் இணைப்புகள் உருவானவுடன் அந்தக் கேள்விக்கான விடையும் எளிதாக நம் மூளைக்குத் தென் பட தொடங்கும்.
நாம் விடை தெரிந்தவுடன் விட்டு விடக் கூடாது. அவ்வப்போது தொடர்ந்து நினைவுப்படுத்திப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே நம் மூளை இணைப்பு மறைந்துபோகாமல் இருக்க உதவும்.
நீங்கள் பெஞ்சமின் ஃபிராங்கிளின் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவை கட்டமைத்தவர்களின் முக்கியமான ஒருவர். கண்டுபிடிப்பாளர். எழுத்தாளரும்கூட. ஃபிராங்கிளின் இளம்வயதில் எழுத மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு எழுத வரவில்லை. அதற்காக அவர் எழுத்தை விட்டுவிடவில்லை. உடனே ஒரு திட்டத்தை உருவாக்கினார்.
ஏதாவது ஒரு கட்டுரையையோ, கவிதையையோ படித்தால் அதுகுறித்த ஒரு சில முக்கிய குறிப்புகளை மட்டும் எழுதிக்கொள்வார். இப்போது அந்தக் குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு அந்தக் கட்டுரையைத் தானே தன் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுத முயற்சிப்பார். பிறகு தான் எழுதிய கட்டுரையை உண்மையான கட்டுரையுடன் ஒப்பிட்டு எந்த வார்த்தைகள் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. எது சரியாக புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட வார்த்தையை கட்டுரையை எழுதியவர் எப்படி பயன்படுத்தி இருக்கிறார். எப்படி ஒரு கருத்தை அவர் விவரிக்கிறார். தாம் எப்படி விவரிக்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்த்து திருத்திக்கொள்வார்.
ஃபிராங்கிளின் தொடர்ந்து இந்த உத்தியை மாற்றி மாற்றிப் பயிற்சி செய்தார். இதன்மூலம் அவரது எழுத்து கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறத் தொடங்கியது. எந்தெந்த வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கண்டுக்கொண்டார், இதன்மூலம் சிறந்த கட்டுரைகளைப் படைக்கவும் கற்றுக்கொண்டார்.
பெஞ்சமின் ஃபிராங்கிளின் அடுத்தவர் கட்டுரைகளை, கவிதைகளைப் படித்துப் பார்த்து அதை அப்படியே மனப்பாடம் செய்யவில்லை. அவரே தன் சொந்த வார்த்தைகளால் உருவாக்குவது மூலம் தன் எழுத்து குறித்த மூளை இணைப்பையும் அவர் உருவாக்கினார். இதன்மூலம் சிறப்பாக எழுதுவதற்கான ஒழுங்குமுறை அவருக்கு உருவானது. இதே முறையை நாமும் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்.
நாம் எற்கனவே பார்த்தது போல எந்த பாடத்தையும் இன்ச் இன்ச்சாக கற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நாம் ஒரு பாடத்தின் முக்கியமான கருத்துக்களை, பகுதிகளை மற்றும் கற்றுக்கொண்டால் போதும் அந்தக் கருத்துக்களை நம் மூளை தானாகே இணைத்து அந்தப் பாடம் குறித்த முழுப் புரிதலை நமக்குக் கொடுத்துவிடும். புதிர்களைச் சேர்ப்பது போல.
முதல் கருத்து மட்டும்தான் கடினமாக இருக்கும். ஏனென்றால் அவை அடிப்படை அல்லவா? அதற்கான மூளை இணைப்பு உருவாகிவிட்டால் இரண்டாவது தகவல் கொஞ்சம் எளிதாக புரியத்தொடங்கும், மூன்றாவது தகவல் ஏற்கனவே இருக்கும் இரண்டு தகவல்களின் புரிதலைக் கொண்டு இன்னும் எளிதாக விளங்கும்.
(தொடரும்)