வெற்றி நமதே – 01

திருமிகு.M.G.இராஜ மாணிக்கம் I.A.S, அவர்கள்

கேரள மாநில அரசின், தற்போதைய  சிறப்புச் செயலாளர், திருமிகு.M.G.இராஜ மாணிக்கம் I.A.S, அவர்கள், நமது ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழில், “வெற்றி நமதே” என்ற தலைப்பில், ஒரு தொடர் கட்டுரை தருவதற்கு, அன்போடு முன் வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு, நமது மேலான நன்றிகளையும், வணக்கங்களையும் “ஆளுமைச் சிற்பி” மாத இதழின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

திருமிகு. M.G.இராஜமாணிக்கம் அவர்கள், கேரள
மாநிலத்தில், முதன்மை இயக்குநர் – உள்ளாட்சித்துறை மற்றும் ஆணையாளர் – ஊரக வளர்ச்சித் துறையில் தற்போது பணிசெய்து வருகிறார்கள். சிறந்த எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், சமூக ஆர்வலர், தன்னார்வப் பணிகளில்,  மிகுந்த அக்கறை கொண்டவர்.

மக்கள் ஆட்சியர்

திருமிகு. M.G.இராஜமாணிக்கம் M.E., I.A.S, மதுரையில் திருவாதவூரில்  பிறந்து, அனுப்பானடியில் வளர்ந்து, சௌராட்டிரா ஆண்கள்  மேல்நிலைப் பள்ளி மற்றும் தியாகராஜர் நன்முறை மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளிப் படிப்பை முடித்து, மதுரை ராஜா பொறியியல் கல்லூரியில், B.E. படிப்பை முடித்த பின்பு, கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில், M.E. படிப்பில் தங்கப் பதக்கம் (Gold Medal) பெற்றவர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தந்தை
திரு.எம்.குருசாமி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பேஷ்கார். ஆன்மீகப் பணி, மக்கள் பணி, என உதவி செய்து உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர்.

திரு. M.g.இராஜமாணிக்கம் அவர்கள், பள்ளியில் மிகவும் சாதாரணமாகக் கல்வி கற்றவர். பின்னர் பொறியியல் கல்லூரியில், மிகச் சிறந்த பொறியாளராகப் பேசப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டவர். தந்தை விருப்பத்தை நிறைவேற்ற, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, வெற்றி பெற்று, கேரளத்தில் மூணாறு, எர்ணாகுளம், திருச்சூர் எனப் பல மாவட்டங்களில், ஆட்சித்தலைவராகப் பொறுப்பேற்று, அனைத்து மக்களின் பிரச்சனைகளுக்கும், உடனடியாகத் தீர்வு கண்டவர். “மக்கள் ஆட்சியர்” எனப் புகழப்பட்டவர், ‘சிறந்த மாவட்ட ஆட்சியர்’ விருதும் பெற்றவர்.

‘என்டகுளம் எர்ணாகுளம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அனைத்துக் குளங்களையும், இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஒரே நாளில் சுத்தம் செய்ததோடு, இன்றுவரை பல ஆயிரம் குளங்களை, நீர் நிலைகளைப் பராமரித்து வருகிறார். இவரது துணைவியார், திருமதி நிஷாந்தினி ராஜமாணிக்கம் IPS, இன்று திருவனந்தபுரம் காவல் துறை துணைத்தலைவர், இந்திய காவல் பணியில், நேர்மை, உண்மை, உழைப்பு என்ற பண்புகளோடு, பல்வேறு பொறுப்பில் இருந்து, இன்று வரை மக்கள் பணியே தனது பணி, எனச் செயல்பட்டு வரும், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத் திகழ்பவர். மூத்த மகள் பெயர் வெண்பா, இரண்டாவது மகன் நித்திலன். குழந்தைகள் இருவரும், பள்ளிப் படிப்பு படித்து வருகின்றனர்.

திரு. M.G.இராஜமாணிக்கம் அவர்கள், கேரள அரசின் சார்பில் மேல் படிப்பிற்காக, லண்டன் அனுப்பி வைக்கப்பட்டு, தனது கல்வியை உயர்வாகப் பெற்று, பல்கலைக் கழகத்தின் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டு, தங்கப்பதக்கம் பெற்றவர்.

இவரது, இன்றைய பணியின் அருமை பெருமைகள் பலவும், அகில இந்திய அளவில், பல்வேறு ஊடகங்களால் பாராட்டப் பெற்ற பெருமைக்குரியவர். மதிப்புமிகு ஐயா, M.G.இராஜமாணிக்கம் IAS அவர்களின்
கட்டுரை, இந்தப் புத்தாண்டு முதல், நமது வாசகர்களுக்குப் பரிசாக அமைகின்றது. தன்னம்பிக்கைத் தொடராக அமையும், “வெற்றி நமதே” தொடர் வெற்றித் திசையை நோக்கி, நம் இளையோர்களை, மாணவர்களை முன்னடத்திச் செல்லும் என்பதை எண்ணி, பேருவகை அடைகின்றோம்.

திருமிகு. M.G.இராஜமாணிக்கம் IAS அவர்களை, “ஆளுமைச் சிற்பி” மாத இதழுக்கு அறிமுகம் செய்து, நம்மை என்றும் ஊக்கமூட்டும், மதுரைப் புலவர் முனைவர். வை. சங்கரலிங்கம் ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.