வெற்றித் திசை
முத்து ஆதவன் வை.காளிமுத்து
நான் இப்படி உயர்ந்திருப்பதும், இதற்கு மேல் உயரத்துக்கும் போவது எல்லாமே என் தாய் என்னும் தேவதை எனக்குக் கொடுத்த வரத்தால் தான்.
-ஆப்ரஹாம் லிங்கன்
அன்பான மாணவச் செல்வங்களே!
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். முதன்முதலில் நாம் வணங்கப்பட வேண்டிய தெய்வம் மாதா (தாய்) என்று ஆதிகாலத்திலிருந்தே நம் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் தெய்வம் அம்மா.
இரண்டாவது இடம் தந்தைக்கு. “தந்தைதாய் ஈருடலும் ஒன்று சேர்ந்து தழைத்து ஒரு உயிராக உலகில் வந்தோம்” (ஞானக்களஞ்சியம்) – என்ற வரிகளுக்கேற்ப நம் பிறவிக்குக் காரணமான தந்தை இரண்டாவது தெய்வம்.
மூன்றாவது இடம் குருவிற்கு. இவர் குரு, ஆசான், ஆசிரியர், வழிகாட்டி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். தந்தை கரு கொடுத்தார், தாய் நாம் கருக்கொள்ள தன் உடலில் இடம் கொடுத்தார்.
இவ்விருவரும் உயிர் கொடுத்து உணர்வு கொடுத்தவர்கள் என்றால் அந்த உணர்வுக்கு மேன்மேலும் ஊக்கமூட்டி, உணர்வு என்பதை வித்தாக்கி அதிலிருந்து அறிவுப்பயிர் வளர ஆதாரமாய் விளங்குபவர் ஆசான் (குரு) ஆவார். மனிதன் அறிவினால் உயர்வு பெற்றவன்.
எண்ணும், எழுத்தும் போதித்து சிந்தனையைச் சிறப்படையச் செய்து, எண்ணத்தை மேன்மையடையச் செய்து, அறிவை உயர்த்தி ஆன்றோனாக்கும் மகத்தான பணி குருவினுடையது.
இவர்கள் மூவரும் கண்கண்ட தெய்வங்கள் என்பார்கள், ஏன்? இவர்களை நாம் கண்களால் கண்டு மகிழமுடியும். ஆனால் கண்களால் காண முடியாத தெய்வத்தை நான்காவதாக வைத்தார்கள்.
நான்காவதாக கூறப்பட்ட தெய்வத்தையும் நமக்குக் காட்டிக் கொடுப்பவர் யாரென்றால் அவர்தான் குரு. “குருவன்றி யார்க்கும் கூடவொன்னாதே” என்பது அவ்வையின் வாக்கு.
குரு, தெய்வம் பற்றியும் அவர்களின் சிறப்புப் பற்றியும் பிறகு பார்க்கலாம்.
முதலில் தாய், தந்தை பற்றி பார்க்கலாம். இவர்கள் மாதா, பிதா என்று வடமொழியாலும், அம்மா, அப்பா என்று அழகுத் தமிழிலும் அழைக்கப்படுபவர்கள்.
அம்மா என்பதில் அ=உயிரெழுத்து; ம்=மெய்யெழுத்து;
ம்+ஆ= மா என்பது உயிர்மெய் எழுத்து.
அப்பா என்பதில் அ= உயிரெழுத்து; ப்= மெய்யெழுத்து
ப்+ஆ= பா என்பது உயிர்மெய் எழுத்து.
முதலெழுத்து அகரத்தில் (அ-வில்) தொடங்கி ம்+ஆ என்றும், ப்+ஆ என்றும் ஆகாரத்தில் நீள்கிறது. உயிர் எழுத்தின் குறிலான அ-வும் நெடிலான ஆ-வும் தொடர்ந்து வருகின்றது. இதிலிருந்தே தெரிகிறது அல்லவா அம்மா, அப்பாவின் சிறப்பு.
அதுமட்டுமல்ல, மனிதனுக்கு அடுத்த நிலையில் உயர்வாக மதிக்கப்படுவதும், மனிதனுக்கு தாய்பாலுக்கு மாற்றாக ஒரு பால் உண்டென்றால் அது ஆவின் (பசுவின்) பால் தானே. தாய்பாலோடு, பசுவின் பாலும் உண்டுதானே மனித உடல் வளர்ந்துள்ளது.
மாந்த இனத்தோடு, பசுவினத்தைப் பிரித்துப் பார்க்க முடியுமா? தாய்பால் வற்றிப் போனால், பசுவின் பாலைக் கொடுத்து நம்மை வளர்க்கின்ற பெற்றோர்கள் பசுவை கண்கண்ட தெய்வமானது என்று தொட்டு இன்றுவரை வணங்கி வருகிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க பசுவினமும் அம்மா என்றே அழைப்பது எவ்வளவு சிறப்பு!
நாமும் முதன்முதலில் உச்சரிக்கும் சொல் அம்மா. பசுவினமும் எப்போதும் உச்சரிக்கும் ஒருசொல் அம்மா என்பது. பசுவிற்கு நாடு, மொழி, இன பேதமில்லை. உலகில் எந்த நாட்டில் உள்ள பசுவும் அகரத்தை முன்வைத்து ஆகாரத்தை பின்வைத்து நீட்டி “அம்மா…” என்றே வழங்குகிறது.
அமெரிக்காவில் உள்ள மாடு மம்மி என்றெல்லாம் அழைப்பதில்லை. இது உயிரின் சிறப்பு, தமிழின் சிறப்பு. அப்படிப்பட்ட தெய்வீக மொழி பேசும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்ததே நாம் பெற்ற பெரும் பேறு அல்லவா?
அம்மா
அம்மா தன்னுடைய இரத்தத்தையே தான் பாலாக ஊட்டி நம்மை வளர்க்கிறாள். நாம் தாய்ப்பால் அருந்தும் வயது வரை அந்த தாய் தன் வாயைக் கட்டி வாழ்வாள். ஆம்! அதனால் தான் “வாயைக் கட்டி; வயிற்றைக் கட்டி வளர்த்தேன்” என்கிறார்கள்.
தாம் ஏதாவது ஆசைப்பட்டதை, நாவுக்குச் சுவையானதைச் சாப்பிட்டுவிட்டால் அதனால் நம் குழந்தைக்கு ஏதாவது கேடு வந்து விடுமே என்று பயந்து, பயந்து, பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் உண்பவர் தாய்.
தாய் நாளெல்லாம் நமக்காக பத்தியம் இருந்தவள். நாம் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதற்காக, தான் பட்டினி கிடப்பவள் நம் தாய்.
எனவேதான் “தாயிற் சிறந்த கோவிலும் இல்லை” என்றார்கள்.
தாய் தன் குழந்தைக்காக தன்னுயிரையும் கொடுக்கத் தயங்காதவள். நாம் தான் நம் தாயின் உலகம். அதைத் தவிர வேறொன்றும் அவள் விரும்புவதில்லை.
அன்பு மழலை செல்வமே! ஒரு கணம் அவளை நினைத்துப் பார்! நமக்காகவே உழைத்து உழைத்து ஓடாய் தேய்பவள் நம் தாய். தனக்கு நல்ல உணவு இல்லை என்றாலும், தன் குழந்தைகள் நல்ல உணவு உண்ண வேண்டும், தனக்கு ஒரு நல்ல துணிமணி இல்லை என்றாலும் தன் பிள்ளைகள் மற்றவர்களைப் போல் நல்ல துணிமணி உடுத்த வைத்து அழகு பார்ப்பவள் நம் தாய்.
நாம் சிரித்தால் அவள் சிரிப்பாள், நாம் அழுதால் அவள் அழுவாள். மாறாக அவளுக்கென்று எந்த ஆசாபாசமும் வைத்துக் கொள்ளாத ஒரு துறவிதான் நம் தாய்.
அவளுக்கு மிகப்பெரிய, ஆகச்சிறந்த மகிழ்ச்சியைக் கொடுப்பது ஒன்றுதான், ஒரு மகனின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
அது எது? நீ வளர்ந்து பெரியவனாகி, கைநிறைய சம்பளம் வாங்கி, அல்லது பெரிய தொழிலதிபராக, கோடி கோடியாக சம்பாதித்து அவ்வளவு சம்பளத்தையும் அவள் கைகளில் கொண்டு கொடுக்க வேண்டும் என்று எந்தத் தாயும் நினைப்பதில்லை.
நல்லது, பொல்லதை வாங்கிப்போட்டு அதில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும் என்றும் எந்தத் தாயும் எதிர்பார்ப்பதில்லை.
நீ கவனிக்கும் கவனிப்பு, உன் பராமரிப்பு, உன் செல்வம் எதுவும் ஒரு தாயை மகிழ்ச்சிப்படுத்தாது.
பிறகு எப்போது ஒருதாய் பெருமகிழ்ச்சி கொள்வாள் தெரியுமா? இதோ வள்ளுவர் பெருந்தகை கூறுவதைக் கேள்!
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” –குறள்:69
தன்னுடைய மகன், தான் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்த மகன், நிறையப் படித்து, உயர்ந்த பல பதவிகளைப் பெற்று உலகில் பிறரால் இவன் அறிவாளி என்று புகழப்படும் போது,
தன் மகனை பிறர் வாயால் சான்றோன் எனக் கூறக் கேட்கும் போது ஒரு தாய் அவனை பத்துமாதம் சுமந்திருந்து, பிரசவ காலத்தில் சுகமாக ஈன்றெடுத்தபோது எவ்வளவு மகிழ்ச்சியை அடைந்திருப்பாளோ, அதைவிடப் பலமடங்கு மகிழ்ச்சியை, உவகையை அடைவாளாம்.
தன்னைச் சுமந்த தாய்க்கு தன்மக்கள் கொடுக்கும் மகிழ்ச்சி என்பது தன்னை ஒரு சான்றோனாக உயர்த்திக் கொள்வது தான் என்னும் போது,
நீ உனது தாய்க்கு அந்த மகிழ்ச்சியை அளிப்பதற்கான முயற்சியைத் துவங்கி விட்டாயா? அதாவது உன்னை சான்றோனாக்கும் முயற்சியை உன்னளவில் துவங்கி விட்டாயா? உன்னைச் சான்றோனாகச் செதுக்கிக் கொள்ள தயாராகிவிட்டாயா? அப்படியானால் அதற்காக உன் கையில் உள்ள சிற்றுளி தான் கல்வி. அதை விழிப்புணர்வோடு கையிலெடு. ஆசானின், ஆசிரியரிகளின் துணைகொண்டு, அவர்களின் வழிகாட்டுதலின்படி உன்னை நீயே செதுக்கு. ‘சிற்பியும் நீயே, சிற்பமும் நீயே’ என்பதை உணர்ந்து கொள்.
அதற்கு உன் அன்னையின் முழு நல்லெண்ணம் உனக்குத் தேவை. அதைத் தான் ஆசிர்வாதம் என்பார்கள். அதைப் பெறுவதில் நாள்தோறும் கவனமாய் இரு. காலை எழுந்தவுடன் அன்னையை வணங்கு, பணிந்து நட, அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்.
அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாவிட்டாலும் கூட பாதகமில்லை. அவர்கள் மனம் நோகும்படியாக எந்த செயலையும் செய்துவிடாதே. அவர்கள் மனம் புண்பட்டால் அது உனக்கு பெரும்பாவமாக அமைந்துவிடும்.
அவர்களிடம் நாகரீகம் பார்க்காதே, எந்த நிலையிலும் அந்தத் தாய்தான் உன் முதல் தெய்வம் என்பதை மறவாதே. அவர் உருக்குலைந்திருந்தாலும் அது உனக்காகத்தான் என்பதையும் மறவாதே. இந்த பண்பு உன்னிடம் வந்து விட்டால் போதும். உலகில் யாரும் உன் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எந்த மலையையும் தகர்க்கும் தைரியம் உனக்கு வந்து விடும்.
“அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவள் அடிதொழ மறப்பவன் மனிதனில்லை”
என்ற வைரவரிகளை மறந்துவிடாதே; வெற்றி நிச்சயம்! =