வெற்றித் திசை
முத்து ஆதவன் வை.காளிமுத்து
ஒருமுறை செந்தமிழ் அந்தணர் முது முனைவர் இளங்குமரனார் ஐயா அவர்களை, திருச்சி அல்லூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் தவச்சாலையில் சந்தித்தேன். இவ்வாறு சில முறைகள் அவரை அங்கு சந்தித்து இருக்கிறேன். அப்போது அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது ‘‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’’ என்று கேட்டார். ‘‘இரண்டு பெண் குழந்தைகள் ஐயா’’ என்று சொன்னேன் அவர் சொன்னார் ‘‘அவர்கள்தான் தம் பொருள்’’ என்றார். அவ்வாறு சொல்லிவிட்டு” உண்மையான பொருள் என்பது நம்முடைய மக்கள் செல்வம் தான், நம்மிடத்தில் இருக்கிற சொத்து, சுகம், காசு பணம் இவைகள் எல்லாம் பொருள் அல்ல. உண்மையான நம் பொருள் என்பது நல்லறிவுள்ள நம் மக்கள் செல்வங்கள்தான் நம்முடைய பொருள்” என்று சொன்னார். அதற்கு ஒரு திருக்குறளையும் எடுத்துக்காட்டாக கூறினார்,
“தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்” (மக்கட்பேறு-63)
இந்தக் குறளை நாம் நுட்பமாக ஆராய்கின்றபோது,
நாம் பெற்ற மக்கள் தான் நம்முடைய பொருள் ஆவர். அவர்களுடைய, அதாவது நம் மக்களுடைய பொருள் என்பது அவர்கள் பெற்ற மக்களே ஆவர்.
அந்த மக்கள் அவரவர்களுடைய வினையினாலே அமையப் பெறுகிறார்கள். இதனுடைய கருத்து என்னவென்றால், நாம் செய்த நல்ல ,தீய வினைகளுக்கு அதாவது செயல்களுக்கு ஏற்பவே நமக்கு மக்கள் செல்வங்கள் அமைகிறார்கள். நாம் எப்போதும் நல்ல செயல்களையே செய்ய வேண்டும் அது நமக்கும், மற்றவர்களுக்கும் இன்பம் விளைவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
அவ்வாறான செயல்கள் எல்லாம் புண்ணிய செயல்கள் என்றும், அறச்செயல்கள் என்றும் சொல்லுகின்றோம். இவ்வாறான அறச்செயலை செய்கின்றவர்களுடைய உள்ளமானது எப்படிப்பட்டதாக இருக்கும் என்றால், உயர் உள்ளமாக இருக்கும். அவர்களின் எண்ணங்கள் எல்லாம் மேன்மை உடையதாக இருக்கும்.
இப்படிப்பட்ட மேன்மக்களுக்கு பிறக்கும் குழந்தைகள், அவருடைய உயர்ந்த குணங்களை எல்லாம் தாங்கிப் பிறப்பார்கள். அவர்கள் வளர, வளர தம் பெற்றோரைப் போலவே அறிவில் சிறந்து மேன்மக்களாக விளங்குவார்கள். அவர்களால் தான் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் நல்ல பல நன்மைகள் விளையும். அதனால் ஊரும், உலகமும் இப்படிப்பட்ட நன்மக்களைப் போற்றிக் கொண்டாடும்.
இதனால் தான் திருவள்ளுவர் தம் மக்களே தம் பொருள் என்கின்றார்.
இப்படி உயர்ந்த மக்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளும், உயர்ந்த குணங்களை உடையவர்களாகவே பிறப்பார்கள். அவர்கள் குழந்தைகளும், அவர்களுடைய செயல்களின் விளைவினாலேயே அவ்வாறு வாய்க்கப் பெறுகிறார்கள். என்பதுதான் இந்த குறளின் ஆழமான பொருள்.
உலகப் பொதுமறை அருளிய நம் அய்யன் திருவள்ளுவர் ஒரு தெய்வப் புலவர் என்பது உலகம் ஒப்புக்கொள்ளும் உண்மை. அப்படிப்பட்ட பொய்யாமொழிப் புலவர் இரண்டு இடங்களிலே இப்படி மொழிகிறார்,
1″ (யாமறிவது இல்லை= நான்றிந்தவரையில் இல்லை),
2.”யாம் மெய்யாக் கண்டவற்றில்= உண்மையிலேயே நான் பார்த்த வரையில்) என்று.
ஒன்று,
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பெற” (மக்கட்பேறு-61)
எனக்குத் தெரிந்த வரைக்கும் நாம் பெறுகின்ற செல்வங்களிலேயே அறிவறிந்த மக்களைப் பெறுவதை விட வேறு செல்வம் இல்லை.
மற்றொன்று,
” யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை
எனைத்தொன்றும் வாய்மையின் நல்லபிற” (வாய்மை-300)
நான் உண்மையிலேயே கண்ட வரைக்கும் உண்மை பேசுவதை தவிர சிறந்தது என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இந்த இரண்டும் எண்ணியெண்ணி வியக்க வேண்டிய குறட்பாக்கள்.
தம் பொருள் என்பது தம் மக்கள் என்று சொன்னவர் ,அடுத்து நாம் எதையெல்லாம் பெற்றாலும் அப்படி பெறுகின்ற எல்லாவற்றையும் விட அறிவுள்ள மக்களை பெறுவதைத் தவிர வேறு சிறந்த பேறு எதுவும் இல்லை என்கிறார்.
அப்படிப் பெறுவதற்கரிய பேறாக பெற்ற தம் பிள்ளைகளை, எத்தனை பெற்றோர்கள் மதிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
தம்மை விட தம்மக்கள் அறிவுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை, நிறைய பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அல்லது மற்றவர்கள் புரிந்து கொள்கின்ற அளவிற்கு, பெற்றோர்கள் பிள்ளைகளை புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.
ஏனென்றால், எந்த குழந்தையும் தன்னுடைய பெற்றோரிடத்திலே தன்னுடைய திறன்களை வெளிக்காட்டுவதில்லை. அதே நேரம், தன் குழந்தைகளிடத்திலே என்னென்ன திறன்கள் உள்ளது என்பதையும் பெற்றோர்கள் கவனிக்கத்தவறி விடுகிறார்கள்.
எனவே, அவர்கள் தங்கள் குழந்தைகளைக் குறைத்து எடைபோட்டுவிடுகிறார்கள்.
தன் குழந்தைகள் தன்னிடத்திலே கைகட்டி, வாய் பொத்தி தான் சொன்னதை மட்டும் தான் கேட்க வேண்டும், தன் சொல்படி தான் நடக்க வேண்டும், தான் நினைப்பது மாதிரி தான் வாழ வேண்டும், நான் சொல்கிற படிப்பைத் தான் படிக்க வேண்டும், நான் சொல்கிற வேலைக்குத்தான் போக வேண்டும், உனக்காக ஒன்றும் தெரியாது என்று சொல்கின்ற பெற்றோர்கள் தான் மிகுதியாக இருக்கிறார்கள், இது வருத்தத்திற்குரியது.
கண்காணித்தல்
குழந்தைகளுக்கு உலக அறிவை அவர்கள் பெறும்படியான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
அவர்களின் செயல்பாடுகளை நாம் கவனித்து வர வேண்டும். கல்வி, ஒழுக்கம், நண்பர்கள், குடும்ப இணக்கம், சமூக இணக்கம் சார்ந்து எவ்வாறு செயல்படுகிறார்கள்? அவர்களின் போக்கு எத்திசையில் அமைகிறது?என்பதை கவனித்து வரவேண்டும்.
ஆக்கபூர்வமான வழிகளில் அவர்கள் சென்றால், அதை நாம் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக ஊக்குவிக்க வேண்டும்.
அல்லது, அவர்களின் செயல்பாடுகள் முரணானதாகத் தெரிந்தால் அப்போதும், அவர்களை மடைமாற்றம் செய்வதற்கு இயல்பான வழிகளில் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக முயற்சிக்க வேண்டும்.
நடந்து காட்ட வேண்டும்
இளம் வயதில் பெற்றோர்களைப் பார்த்துத்தான் ஏராளமானவற்றை குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு பெற்றோர்களே முதல் ஆசிரியர் ஆகிறார்கள். குடும்பமே முதல் பள்ளிக்கூடம் ஆகிறது. எனவே, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
எதையெல்லாம் நம் பிள்ளைகள் செய்யக்கூடாது என்று நாம் நினைக்கின்றோமோ, அவைகளை எல்லாம் முதலில் நாம் செய்யக்கூடாது என்பதில், உறுதியாக இருக்க வேண்டும்.
தம் பொருளாக வாய்த்த குழந்தைகளை பெற்றோர்கள் எந்நிலைக்கு உயர்த்த எண்ணுகிறார்கள் என்பதையும், தம் உயர்வுக்கு உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்து, தம்மை சீராட்டி வளர்க்கும் பெற்றோர்களுக்கு தாம் செய்ய வேண்டிய கடமை என்ன? என்பதையும், இரண்டு குறட்பாக்களில் அற்புதமாக வலியுறுத்துகிறார் நம் குறளாசான். ஒன்று பெற்றோருக்கான குறள்; மற்றொன்று பிள்ளைகளுக்கான குறள்,
பெற்றோருக்கு
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்” (மக்கட்பேறு-67)
தந்தை தம் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய உதவி என்னவென்றால் கல்வியால், ஒழுக்கத்தால், அறிவின் உயர்வால், உயர் புகழால் உலக ஆன்றோர் வரிசையில் தன் குழந்தை முன்னால் இருக்க வேண்டும் என்பது.
அவ்வாறு உலகத்தின் முதல்வனாக தம் மக்களை உயர்த்த நினைக்கும் பெற்றோர்களுக்கு, தாம் என்ன செய்ய முடியும்? என்று சிந்தித்து அவர்களுக்கு நன்றி கடனாக ஆற்ற வேண்டியவற்றை வலியுறுத்துகிறது அடுத்த குறள்.
மக்களுக்கு
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்” (மக்கட்பேறு-70)
கல்வியில் சிறந்தவனாய், ஒழுக்கத்தில் உயர்ந்தவனாய், அறிவு நிலையில் மேம்பட்டவனாய், பலரும் போற்ற புகழோடு விளங்குகின்றானே, இவன் அல்லவா பிள்ளை! இப்படிப்பட்ட பிள்ளையை பெறுவதற்கு இவனின் பெற்றோர் என்ன தவம் செய்தார்களோ? என்று ஊரும்,உலகமும் வியந்து போற்ற வேண்டுமாம். அப்படிப்பட்ட ஒரு பெயரை பெற்றோருக்கு வாங்கி தருவதுதான், மக்கள் ஆற்ற வேண்டிய தலையாய நன்றிக்கடனாகும் .
இதைத் தவிர தன் பெற்றோருக்கு எத்தனை உதவிகள் செய்தாலும்,எவ்வளவு பொருளை சம்பாதித்துக் கொடுத்தாலும், அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தருவது ஒன்றே, பிள்ளைகளின் தலையாய கடமை என்று வலியுறுத்துகிறார்.
நம் குழந்தைகளை நாம் மதிப்போம்;
நம் குழந்தைகளை நாம் நம்புவோம்;
நம் குழந்தைகளை நாம் ஊக்குவிப்போம்;
நம் குழந்தைகளை நாம் வாழ்த்துவோம்;
நம் குழந்தைகளை நாம் கொண்டாடுவோம்;
வருங்காலம் வசந்தமாகட்டும்!