வெற்றித் திசை

முத்து ஆதவன் வை.காளிமுத்து

அன்னை தெரசா

ரண்டு மிகச்சிறந்த அற்புதங்களை நிகழ்த்தும் மாமனிதர்களுக்குப் புனிதர் என்ற பட்டத்தை வழங்குகிறது வாடிகனில் அமைந்துள்ள உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகம்.

அன்னையின் வாழ்க்கையே ஓர் அற்புதம் தான். அவர் போல் ஒரு அதிசயம் முன்பும் இல்லை; இனியும் சாத்தியமா? என்பது தெரியவில்லை. நவீன உலகில் வாழ்ந்த ஒரு தெய்வம் அன்னை தெரேசா அவர்கள்.

இறக்கும் தருவாயில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் கொஞ்சம் இளைப்பாறுதல் அளித்து அது மரியாதையுடன் மரிப்பதற்கு வழிவகை செய்த அன்னையின்  அன்பு ஒரு அற்புதம் அல்லவா? தன்னிடம் உள்ள இறைமையை உணர்ந்தவர்களால் தான் ஒவ்வொரு உயிர்களிடமும் உள்ள இறைமையை உணர முடியும்.

அவர் மனிதர்களை உடலாகப் பார்க்கவில்லை இறைவனின் ஆலயமாகவே பார்த்தார். கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற நோயாளிகள், சமூகத்தால் விலக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் செத்துக்கொண்டிருப்பவர்கள், அனாதைகள், தொழு நோயாளிகள் என யாவரையும் அவர் இயேசுவாகவே பாவித்தார்.

துறவும், தொண்டும்

அன்னை இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது நம் தவப்பயனே, அன்னை 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அல்பேனியா நாட்டிலுள்ள ஸ்காட்ச் என்ற நகரத்தில் பிறந்தார். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தெரசா இளம் பிராயத்திலேயே துறவை மேற்கொண்டார். பிரதிபலன் எதிர்பார்க்காத தன்னலமற்ற தொண்டை மேற்கொண்டு, வாழ்வை பொருளுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான முடிவு, பாசப்பிணைப்பு கொண்டதனது குடும்பத்தை துறந்து  வெளியேற அவரைத் தூண்டியது .லொரேட்டோ ஆர்டர் என்னும் மத நிறுவனத்தில் கன்னியாஸ்திரி பயிற்சிக்காக தன்னை இணைத்துக் கொண்டார்.

லொரேட்டோ ஆர்டர் கன்னியாஸ்திரிகளின் தலைமையகம் கொல்கத்தாவில் இருந்தது. அதுவே அன்னை இந்தியா வந்தடையக் காரணமானது. 20 ஆண்டுகள் அந்த  அமைப்பின் மூலம் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனாலும் அன்னையின் தேடல் வேறுமாதிரியாக இருந்தது.

குடிசைப் பகுதிகளான சேரிகளிலும், தெருக்களிலும் ஆதரவின்றி அல்லல்படும் ஏழை எளியோருக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வு அவரைத் தூண்டிக்கொண்டே இருந்தது.

1946 செப்டம்பர் பத்தாம் நாள் கொல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங் நகருக்கு தியானம் செய்வதற்காக ரயிலில் சென்ற போது தான் அன்னையின் பணி என்னவென்பதை உணர்த்தும் மின்னலொன்று அன்னையின் உள்ளத்தில் பட்டுத்தெறித்தது.

அதிலிருந்த உள்ளுணர்வுச் செய்தி “லொரேட்டொ சபையை விட்டு மகிழ்ச்சியோடு வெளியேறு; தெருக்களில் வாழும் ஏழை எளியோருக்கு உன் பணி, தேவை இருக்கிறது” என்பதுதான்.

அன்று அவர் தியானம் முழுவதுமே இந்த செய்தியே பிரதிபலித்தது‘. அந்தச் செய்தியை அன்போடு ஏற்று லொரேட்டோவில் இருந்து அதன் பிரிவை தாங்க முடியாத கனத்த இதயத்தோடு வெளியேறிய அன்னை கன்னியாஸ்திரி சீருடையையும் துறந்தார்.

ஏழையோடு தானும் ஒரு பரம ஏழையாக பறந்து விரிந்த அந்த கல்கத்தா தெருவில் தன்னந்தனியாக, ஒரு சின்னஞ்சிறிய சேரியின் மூலையில் 1948 டிசம்பர் 21ஆம் நாள் தனது 38வது வயதில் ஐந்து ரூபாய் பணத்தோடு தன் அறப்பணியை அன்னை தொடங்கினார்.

தொண்டின் தேவையை உணர்ந்த அன்னை வாடிகன் (கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையிடம்) அனுமதியோடு” மிஷனரிஸ் ஆப் சாரிட்டி” என்னும் புதிய சபையைத் தொடங்கினார். அன்னையால் துவங்கப்பட்ட அந்நிறுவனம் 123 நாடுகளில் பரவி பரந்து விரிந்த பன்னாட்டு அமைப்பாகச் சேவை செய்து வருகிறது.

மதங்கடந்த மனிதம்

ஒரு கத்தோலிக்க மதத் துறவியாகவே கடைசிவரை வாழ்ந்தாலும், எவ்வித மதப் பாகுபாடுகளும் இன்றி எல்லா மதத்தினருக்குமான பொதுவான அன்னையாகவே விளங்கினார். ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்காகவும், கைவிடப்பட்ட குழந்தைகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர், நோயாளிகள் , குறிப்பாக தொழு நோயாளிகள் போன்றோருக்கு நிகரற்ற துணையாக விளங்கி அவர்களின் துன்பம் போக்க தொண்டு செய்தார்.

தொழு நோயாளியின் புண்களை தன் திருக்கரத்தாலேயே கழுவி சுத்தம் செய்வதும், மருந்திடுவதும் இறைவனுக்குச் செய்யும் ஆராதனையாகவே அவர் கருதினார். நாதியற்று இறக்கும் நிலையில் அல்லாடும் உயிர்களை தன் மடியில் கிடத்தி தலை கோதி,உடல் வருடி, ஆறுதல் கூறி அரவணைத்து அமைதியோடு உயிர் வெளியேற உதவும் கடமையை இறைவனுக்குச் செய்யும் ஆராதனையாகக் கொண்டார்.

அன்னைக்கு எத்தனை பட்டங்கள் கொடுத்தாலும், விருதுகள் கொடுத்தாலும் அது அன்னையின் சேவைக்கு முன் சர்வசாதாரணமானவைகளே. விருது கொடுப்பவர்களுக்கும், விருதுக்கும் தான் அது பெருமையே தவிர அன்னையின் தொண்டுக்கு அவைகள் ஈடாகாது.

விருதுகள்

* 1962 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசு பன்னாட்டு புரிந்துணர்வுக்கான இரமன் மாக் சேசே விருது,

* 1971ஆம் ஆண்டு கிறித்துவ நிறுவனச் சேவை மற்றும் உலக அமைதிக்காக திருத்தந்தை 23ஆம் யோவான் பரிசு,

* 1962 ஆம் ஆண்டு பத்ம விருது குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது,

* 1972 ஆம் ஆண்டு பன்னாட்டு புரிந்துணர்வு ஜவஹர்லால் நேரு விருது,

* 1972 ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான” பாரத ரத்னா” விருது,

* 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசின் டெம்பிள்டன் அறக்கட்டளை பரிசு,

* 1979 ஆம் ஆண்டு நார்வேயின் உலக அமைதிக்கான “நோபல்” பரிசு,

* 1983 ஆம் ஆண்டு இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்களால் “ஆர்டர் ஆப் மெரிட் விருது”

* 1985 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அவர்களால் அமெரிக்க அதிபர் பதக்கம்,

* 1992 ஆம் ஆண்டு பாரத சிரோன்மணி விருது,

* 1993 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் சத் பாவனா விருது,

* 1993 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் அமைதி விருது,

* 1995 ஆம் ஆண்டு நேதாஜி விருது மற்றும் தபால் தலைகள் வெளியீடு.

இவ்வளவு விருதுகள் அன்னையைத் தேடி வந்த போதும் அவைகளை சாதாரணமாகவே கடந்து சென்றார்.

நோபல் பரிசு வழங்கப்பட்ட போது பேசிய அன்னையின் பேச்சு அனைவரையும் நெகிழச் செய்தது

“எனக்காக என் பெயருக்காக எந்த விருதுகளும் வேண்டாம், நான் தேர்ந்தெடுத்தது ஏழைகளின் ஏழ்மையையே. நானோ பற்றற்ற துறவி, எனக்கு பரிசு எதற்கு? எனினும் இந்த “நோபல்” பரிசை பட்டினியில் வாடுவோர், உடுத்த துணி இன்றி நிர்வாணமாய்த் திரிவோர், பார்வையற்றோர், ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், சமூகத்தால் சுமை என கருதப்பட்டோர், தொழுநோயால் துன்புறுவோர் ஆகியோரின் பெயரில் ஆண்டவன் கிருபையாக நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்கள்.

அன்னையிடம் நெருங்காமலே கூட அவரின் தெய்வீக நல்லெண்ணத்தாலும், நல் அன்பாலும் நம்பிக்கை கொண்டு அவரை மனத்தால் நினைத்து உருகியவர்களுக்கும் மகிமைகள் நடந்துள்ளன. அவற்றில் இரண்டினை நிரூபணமாக ஏற்றுக் கொண்டது வாடிகன்.

ஒன்று

மேற்கு வங்காளத்தை சேர்ந்த “மோனிகா பெஸ்ரா” என்ற ஐம்பது வயதுப் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். கொல்கத்தாவில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர். இவரது வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு முற்றிய நிலையில் உயிர்க்குப் போராடி வந்தார். சாப்பிட முடியாமல், உறங்கவும் முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார் மோனிகா பெஸ்ரா.

பார்க்காத வைத்தியம் இல்லை. எல்லாவிதமான சிகிச்சைகளை செய்தும் குணமாகவில்லை. இந்நிலையில் அன்னை தெரேசா அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அன்னையை மனமுருகி வேண்டிப் பிரார்த்தனை செய்துள்ளார். ஒருநாள் அன்னை தெரசாவின் “மிஷினரி ஆப் சேரிட்டி”ல் இருந்து அவரைத் தேடி வந்த சகோதரிகள் மோனிகா பெஸ்ராவின் வயிற்றில் ஒரு டாலரை கட்டி விட்டுள்ளனர். அதற்குப் பிறகு நடந்த அற்புதங்களை பற்றி என். டி. டி விக்கி அளித்த பேட்டியில் மோனிகா பெஸ்ரா இவ்வாறு கூறுகிறார்.

“என் வயிற்றில் மிகப்பெரிய கட்டி உருவானது புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின் சிகிச்சை பெற்று வந்தேன். ஆனால் குணமாகவில்லை. கடந்த 1998 ஆம் ஆண்டு ஒருமுறை சர்ச்சுக்கு சென்றேன். அங்கிருந்த அன்னை தெரசாவின் போட்டோவில் இருந்து ஒரு ஒளி பீறிட்டு வந்து என் மீது பாய்ந்தது .நான் அதிர்ச்சி அடைந்தேன். என் உடல் நடுங்கியது. கண்களை இருக்க மூடிக்கொண்டேன்.

அதன்பின் கடந்த 2003ஆம் ஆண்டு இரண்டாம் போப் ஜான் பாலைச் சந்தித்தேன். எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி கேட்டார். அன்னை தெரசாவின் அற்புதம் பற்றி வாடிகனும் உறுதிப்படுத்தியது. அன்னை தெரசா எனக்கு கடவுள் மாதிரி நான் குணமடைய எனக்கு உதவினார். அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். புற்றுநோயால் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பட்ட வலியை நினைத்தாலே பயமாக இருக்கிறது. சிலிகுரியில் உள்ள மருத்துவமனைக்கு என்னை அழைத்துச்சென்றனர்.

அங்கு ரத்தப் பரிசோதனை செய்தனர் நான் மிகவும் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறினர். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

ஒருநாள் அன்னை தெரசாவின் “மிஷினரிஸ் ஆப் சேரிட்டி”யில் இருந்து வந்திருந்த சகோதரிகள் என் வயிற்றில் ஒரு டாலர் கட்டி விட்டனர். சில மணி நேரங்களில் வயிற்று வலி போய்விட்டது. அதேபோல் புற்றுநோய் மறைந்து விட்டது. கடுமையான வயிற்று வலியில் தூங்க முடியாமல் இருந்தேன். ஆனால் என் வயிற்றில் டாலர் கட்டி விட்ட பின்பு எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை. அதிகாலை 1 மணிக்கு கண் விழித்தேன். புற்றுநோய் மறைந்து விட்ட உணர்வு ஏற்பட்டது. வயிற்றில் இருந்த வீக்கம் காணவில்லை. எனக்கு அருகில் படுத்திருந்த பெண்களை எழுப்பி விட்டேன் அவர்களும் என் வயிற்றைப் பார்த்து வீக்கம் இல்லை என்றனர்” இவ்வாறு மோனிகா கூறினார்.

” மருத்துவர்களால் மோனிகாவின் புற்றுநோயை குணப்படுத்த முடியவில்லை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மட்டும் தான் கூறினார்கள். ஆனால், அன்னையின் கருணையினால் தான் என் மனைவியின் புற்றுநோய் குணமாகியது” என்று மோனிகாவின் கணவர் சென்கு முர்மு என்.டி.டிவி க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆசீர்வதிக்கப்பட்டவர்; முதல் அற்புதம்

2003 ஆம் ஆண்டு மோனிகா பெஸ்ரா வாடிகனுக்கு அழைக்கப்பட்டார் அதன் பேரில் போப் இரண்டாம் ஜான் பாலை சந்தித்துப் பேசினார் மோனிகா.

மோனிகாவின் நேரடி வாக்குமூலத்தின் மூலம் அன்னை தெரசாவின் அற்புதத்தை உறுதிப்படுத்தி நிரூபனப் பிரகடனம் செய்தது வாடிகன்.  அந்த அற்புத செயலுக்காக போப் இரண்டாம் ஜான் பால் அன்னை தெரசாவிற்கு “ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்ற பட்டத்தை வழங்கினார்.

இரண்டாவது அற்புதமும், புனிதர் பட்டமும்

ஆசீர்வதிக்கப்பட்டவர் என்ற பட்டம் வழங்கப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவது அற்புதம் ஒன்று நிரூபணம் ஆகியது. பிரேசில் நாட்டில் ‘‘மார்சிலோ ஹதாத் ஆண்டிரினோ” என்ற இளைஞர் குணப்படுத்தவே முடியாது என்ற அளவுக்கு மூளையில் தொற்று ஏற்பட்டு கோமாவில் இருந்துள்ளார்.

அன்னை தெரசாவின் தொண்டின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட மார்சிலோவின் மனைவி அன்னை தெரசாவை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்து வந்தார். அவரின் பிரார்த்தனை பலித்து கோமாவில் இருந்த இளைஞர் மார்ச்சிலோ ஹதாத் ஆன்டிரினோ அதிசயமாக மூளைத் தொற்று குணமாகி நினைவு திரும்பி மீண்டு வந்துள்ளார்.

2003இல் வங்காளத்தைச் சேர்ந்த மோனிகா பெஸ்ராவுக்கு நடந்த அற்புதமும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டில் பிரேசில் சேர்ந்த மார்சிலோ ஹதாத் ஆன்டிரினோவின் அற்புதமும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டமும் வழங்கப்படும் என்று மார்ச் மாதம் 2016ல் போப் பிரான்சிஸ் அறிவித்தார். அதன்படி 04.09.2016 செப்டம்பர் திங்கள் 4ம் நாள் அன்னை தெரசாவுக்கு “புனிதர் பட்டம்” அறிவிக்கப்பட்டது. ஆசீர்வதிக்கப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த அன்னை தெரசா இன்று முதல் புனிதராக இருப்பார். கத்தோலிக்க புனிதர்களின் வரிசையில் இனிமேல் அன்னை தெரசாவும் இடம் பெறுகிறார் என்ற பிரகடனத்தை வாடிகன் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் முறைப்படி அறிவித்தார்.

நவீன் சாவ்லா

அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அன்னையின் ஒப்புதலோடு எழுதியவர் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா. அன்னையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்,

‘‘அன்னை தெரசாவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்ற பட்டம் வழங்கப்படுவதற்கு ஒரு அற்புதச் செயல் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டாவது அற்புத செயல் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு புனித பட்டம் வழங்கலாம் என்றும் வாடிகன் தேவாலயம் கூறியது. என்னைப் பொறுத்தவரை அன்னை தெரசாவின் வாழ்க்கையே ஒரு அசலான ஒரு அற்புதம் என்று நம்புகிறேன்.

அன்னையின் குழந்தைப் பருவம் முதல் அவர் இறக்கும் வரை அவரிடம் இருந்த தெய்வீகத் தன்மையின் இழை ஒருபோதும் குன்றாமல் இருந்தது. வெளிப்படையான நற்பண்புகளும், பரிவும் கொண்ட அன்னை தெரசா தனது வாழ்நாளில் ஒரு புனிதராகவே வழிபடப்பட்டார் என்று நானும் என்னை போலவே உலகில் உள்ள கோடான கோடி மக்களும் நம்புகிறோம்.’’

இவ்வாறு மனிதத்தெய்வமாக வாழ்ந்த அன்னை இன்றும் நம்மிடையே புகழுடம்போடும், அருளுடம்போடும் வாழ்ந்துதான் வருகிறார்.அன்னையை மனமுருகி வணங்கி அன்னையின் அன்பிற்குப் பாத்திரமாவோம்! =