திரு.ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

சமூகப் பார்வை – 30

ந்த பூமியின் ஒட்டுமொத்த “உரிமையாளர்” நாம்தான் என்று இறுமாந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பூமியானது, இதில் வாழும் பல்வேறு உயிர்களுக்கும் சொந்தமானது. தும்மும்போது வெளிவரும் வைரசுகளிலிருந்து, இனப்பெருக்கத்திற்காகக் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கும் பறவைகள், வகைவகையான விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் மொத்த கலவையையே பல்லுயிரியம் என்கிறோம். இந்தப் பல்லுயிர்களுக்கும் சொந்தமானதுதான் பூமி.

ஒரு உயிரிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து கிளை கிளையாய் விரிந்து ஏராளமான உயிரினங்களாய்ப் பெருகியிருக்கிறது. 4000 வகையான பாக்டீரியாக்கள், 5000 வகையான வைரசுகள், 25,000 தாவரச்சிற்றினங்கள் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள், சிலந்திகள், 40,000 க்கும் மேற்பட்ட வகையான நண்டுகள், இறால்கள், 45,000 க்கும் அதிக முதுகெலும்புள்ளவைகளான மீன்கள், தவளைகள், ஊர்வன, பாலூட்டி இனங்கள், இறுதியாய் மனிதர்கள் என இப்புவி பல்லுயிர் வளமிக்க பூமி. அதனாலேயே பூமிக்கு ‘உயிர்க்கோளம்’ என்று இன்னொரு பெயரும் உண்டு.

இந்த உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்காகவும், உலகச் சமுதாயத்தினரிடையே உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், ஆண்டுதோறும் மே 22ஆம் தேதி சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழலில் நாம்..

இயல்பாகவே, சுற்றுச்சூழல் குறித்து அக்கறை கொண்டவர்கள்தான் நாம். 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை ஆண்ட பேரரசர் அசோகரின் ஆட்சிக்காலத்திலேயே, உயிர்ப் பலிகள், விளையாட்டிற்காக வேட்டையாடுதல் மற்றும் வனப்பகுதிகளை எரித்தல் போன்றவை தடை செய்யப்பட்டிருந்தன. அரச பிரகடனத்தின் மூலம், பாலூட்டிகள், பறவைகள் மற்றும் மீன் போன்றவற்றுக்காகப் பாதுகாக்கப்பட்ட புகலிடங்கள் முதல்முறையாக முறைப்படி உருவாக்கப்பட்டன. நம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களும், மனிதர்களிடையேயான ஒற்றுமையையும் இயற்கை மீது கொள்ளவேண்டிய கரிசனத்தையும் போதிக்கின்றன. இந்தியப் பாரம்பரியம், பூமித்தாயை சிறப்பிப்பதில் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.

உலகில் பல்லுயிர் வளமிக்க 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.5 சதவிகிதம் தான். ஆனால் 7 சதவிகிதம் பல்லுயிர் வளமிக்கப் பகுதிகள் இந்தியாவில் தான் இருக்கிறது. உலகின் மொத்த தாவர சிற்றினங்களில் சுமார் 11.8 சதவிகிதம் நம்நாட்டில் தான் உள்ளன. அதில், பூக்கும் தாவரங்கள் மட்டும் 17,500 சிற்றினங்கள். அதில் 4,950 சிற்றினங்களை நாம் இந்தியாவில் மட்டுமே காண இயலும். இது போலவே விலங்குகளும்! இருவாழ்விகளில் 62 சதவிகிதம் இந்தியாவிற்கே உரித்தானது. இதுவரை கண்டறியப்பட்ட 153 வகைப் பல்லிகளில் 50 சதவிகிதம் இந்தியாவில் மட்டுமே உள்ளன. சிங்கமும், புலிகளும் உள்ள ஒரே நாடு இந்தியா. அதேபோல் மருத்துவத் தாவரங்கள், தானியங்கள் என.. அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழகத்தில் ஏறக்குறைய 5,640 பூக்கும் தாவரங்கள், 534 பறவை இனங்கள், 3,609 பூச்சி இனங்கள், 2,500 மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய செறிவான உயிரினப்பன்மை வளத்துக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு வகையான நிலப்பரப்புகளும் பருவ நிலையும் முக்கியக் காரணிகள் எனலாம்.

இன்றைய நிலை

இயற்கைதான் மனிதகுலத்தின் உயிர்நாடி. நம் ஆரோக்கியம், உணவு, பொருளாதாரம் மற்றும் நல்வாழ்வு என அனைத்தும் இயற்கை சார்ந்தது. ஆனால் அந்த இயற்கையானது நெருக்கடியில் உள்ளது. உலகின் “மதிப்பிடப்பட்ட ஆயிரக்கணக்கான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இனம் அழியும் அபாயத்தில் உள்ளன. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவு உலக மக்கள்தொகையில் 40 சதவிகிதத்தினரின் நல்வாழ்வைப் பாதிக்கிறது” என்கிறது ஐ.நா.

தொழில்மயமாகி வரும் உலகில் இயற்கை வளங்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்களை நம்பியுள்ள ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பூமியில் நாம் உயிர் வாழ்வதற்கு வனப்பகுதி முக்கிய காரணம். காடுகள் மற்றும் அதில்வாழும் உயிரினங்கள் அழிக்கப்படுவதுதான் தற்போது நாம் எதிர்கொள்ளும் பெரும் சவாலாகும். மேலும் நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் மாசு காரணமாக, மரங்கள் பெருமளவுக்கு அழிந்து வருகின்றன. போதாக்குறைக்குப் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதன் மூலமாகவும் மரங்கள் சரிந்து விழுகின்றன.

யானைப்பாதை

உலகளவில் சராசரியாக 33.3 சதவிகிதம் வனப்பகுதி உள்ளன. மனிதர்களும், இன்ன பிற உயிர்களும் நல்ல காற்றை சுவாசித்து வாழ, ஒரு நாட்டின் பரப்பளவில் அதன் 33 சதவிகித பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தற்போது இந்தியாவில் 21 சதவிகித அளவிற்கே வனப்பகுதிகள் உள்ளன. 2001 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 16 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பிலான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக உலக இயற்கை வள அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் ஏராளமான உயிரினங்களை அழியும் நிலைக்குத் தள்ளியிருக்கிறோம். பணப்பயிர்களுக்காக வனத்தைச் சூறையாடியிருக்கிறோம்.

70 சதவிகிதம் நீர்நிலைகளை அழித்திருக்கிறோம். உலகளவில், கடந்த 100 ஆண்டுகளில், 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பயிர் வகைகள் வயல்வெளிகளிலிருந்து இல்லாமல் போய்விட்டதுடன், இது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பையும் வெகுவாகப் பாதித்துள்ளது. உள்நாட்டு விலங்கினப் பெருக்கம் பாதி அளவிற்குக் குறைந்து விட்டதோடு, மீன்பிடி தொழிலும் வெகுவாகப் பாதித்துள்ளது. இதன் காரணமாக, வேளாண் – உயிரிப் பன்முகத்தன்மை மற்றும் அதனுடன் சார்ந்த நமது பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான அறிவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

விலங்குகளின் வாழிடங்களைச் சிதைத்தி ருக்கிறோம். உதாரணமாக, யானைகளின் வலசைப்பாதைகள். யானைகள் அதனுடைய மூதாதையர்கள் எந்த பாதையில் பயணித்தார்களோ, அந்த பாதையில் தான் காலங்காலமாக பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாதைகளுக்கு யானைகளின் வலசைப் பாதை என்று பெயர்.  இந்த யானைகளின் வலசைப் பாதைகள் விளை நிலங்களாகவும், மக்கள் வாழும் பகுதிகளாகவும், ஆக்கிரமிப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், நெடுஞ்சாலைகளாகவும், ரயில் பாதைகளாகவும் மாறி விட்டன. இது யானைகளுக்குத் தெரியாதல்லவா? அதனால் யானைகள் ஊருக்குள். வயல்வெளிகளுக்குள் வருகின்றன. மின்வேலி அமைத்து அவற்றை இரக்கமின்றிக் கொல்கிறோம். யானைகளை அழித்தல் பெரும் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் உணரவில்லை. எப்படி என்கிறீர்களா..?

ஒரு யானை வழக்கமாக நாளொன்றுக்கு 200 முதல் 250 கிலோ அளவு வரை உணவை உட்கொள்ளும். அதுமட்டுமில்லாமல் நாளொன்றுக்கு 100 முதல் 150 லிட்டர் வரை தண்ணீரை குடிக்கும். யானைகளின் உணவு என்பது இலைகள், தழைகள், பழங்கள், மரப்பட்டைகள், குச்சிகள் போன்றவையாகும். யானை உட்கொள்ளும் உணவில் 20 முதல் 25 கிலோ விதைகள் மற்றும் குச்சிகளாகும், இவை யானைகளின் சாணம் மூலம் மீண்டும் மண்ணில் விழுகிறது.  இவை மரங்களாக வளர்கின்றன. இந்த அடிப்படையில் ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சம் மரங்களை உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் யானையின் சாணம் விழுமிடத்தில் சிறுசிறு புழுபூச்சிகளுக்கு உணவாகிறது. அதுமட்டுமல்லாமல் யானைகள் நடக்கும்பாதை மற்ற விலங்குகளுக்கான பாதையாகவும் மாறுகிறது. இதையெல்லாம் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பல்லுயிர் பெருக்கத்தினை அழிக்கும் காரணிகளை எட்வர்ட் ஓ வில்சன் என்ற ஆய்வாளர் “ஹிப்போ”(HIPPO) என்று அழைக்கிறார். அதாவது (1). வாழிடம் அழித்தல் (H-Habitat destruction.) (2) ஆக்கிரமிப்பு உயிரினங்கள் (I-Invasive species) (3) மாசுபாடு (P-Pollution), (4) மக்கள்தொகை பெருக்கம் (P-human over population), (5) வளத்தை அதிகமாகச் சுரண்டல் (O-Overharvesting) என்கிறார். இவற்றைச் செய்து கொண்டிருக்கிறோம்.

என்ன செய்திருக்கிறோம்?

இயற்கையைத் துவம்சம் செய்வது குறித்து நாம் இப்போது மெல்ல மெல்ல உணர ஆரம்பித்திருக்கிறோம். புலிகளைக் காக்க 37.761 சதுர கிலோமீட்டர் ஒதுக்கியிருக்கிறோம். கிட்டத்தட்ட 27 புலிகள் சரணாலயம் இந்தியாவில் உண்டு. பிரதமர் நரேந்திர மோடி புலிகளின் எண்ணிக்கை, 2022 இல் 3,167 ஆக அதிகரித்துள்ளது என்கிறார். யானைகளுக்கும், காண்டாமிருகங்களுக்கும் கூடச் சரணாலயங்கள் வைத்திருக்கிறோம். 13 உயிர்க்கோள இருப்பிடங்கள், 485 வனவிலங்கு சரணாலயங்கள், 87 தேசிய பூங்காக்கள் எனப் பெரும் பரப்பை வனஉயிர்களைக் காப்பதற்காகவே அமைத்திருக்கிறோம். தவிரவும் சிங்கங்களுக்கு, காண்டாமிருகங்களுக்கு, மான்களுக்கு, காரியல் எனும் முதலைகளுக்கு என்று தனித்தனியாக வாழிடங்கள் ஒதுக்கியிருக்கிறோம். இவை போதுமானதல்ல.

ஏன் உயிரினப்பன்மை தேவை?

மனித இனத்தின் தொடர்ச்சியான உயிர்வாழ்விற்கு, உயிரியல் பன்முகத்தன்மையின் அனைத்து நிலைகளும் அவசியம். சுற்றுச்சூழல் அமைப்புகளில் பல்வேறு விலங்குகள் அவற்றுக்குரிய இடங்களில் நிம்மதியாக வாழும்போது, நாம் அனைவரும் சிறந்த, மாறுபட்ட உலகில் வாழ முடியும். உயிரியல் பன்முகத்தன்மை, பல்வேறு வகையான பயிர்கள் வளர உதவுகின்றன. .இதனால், இயற்கை பேரழிவுகளிலிருந்து நாம் மீள்வது எளிதாகிறது. நமக்குத் தேவையான பல்வேறு அடிப்படை பொருட்களான உணவு, எரிசக்தி, மருந்துப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய வளங்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் உயிரினப்பன்மை முக்கியப் பங்கு வகிக்கிறது.

புரிந்து கொள்வோம்

பல்லுயிர் இழப்பு பூமியின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும். ஏற்கனவே புவி வெப்பமடைதல், பெரும் அழிவுக்குக் காரணமாக இருப்பதை உணர்ந்து வருகிறோம். முக்கியமான ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. பாம்புகளைக் கொன்றால் எலிகள் பெருகும். யானைகளைக் கொன்றால் அது சார்ந்திருக்கும் வனச்சூழலே சிதையும். பேரழிவு நிகழும். புலிகளைக் கொன்றால் மான்கள் பெருகும் அதனால் வனப்பரப்பு சீர்குலையும். ஆனால், மனிதர்களே இல்லாவிட்டாலும் இப்புவி உயிர்ப்புடன் இருக்கும். உணவுச்சங்கிலியில் அப்படியொன்றும் நாம் முக்கியமானவர்கள் அல்ல. இதை உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொள்வோம். பல்லுயிர் வளத்தைப் பாதுகாப்போம். l