வெற்றித் திசை

முத்து ஆதவன் வை.காளிமுத்து

புத்தகங்களை வாசிப்பவர்களை நான்  நேசிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தான் உலகைப் பற்றி யோசிப்பவர்கள். பூவை நேசிக்காத வண்டு உண்டா? புத்தகத்தை வாசிக்காமல் மனிதன் இருக்கலாமா?

மனிதன் ஒரு சிந்தனை நிலையம். சிந்தனைக்கான தீனி புத்தகங்களில் தான் இருக்கிறது. வண்டுக்குத் தெரிகிறது பூவுக்குள் தேன் இருக்கும் செய்தி. ஆனால், மனிதனுக்குத் தெரியவில்லை அறிவுத்தேன் சுரப்பி தான் புத்தகம் என்று.

தாமரை மலரில் கல்வித் தெய்வமும், செல்வத்தெய்வமும் வாசம் செய்கிறார்கள் என்பது நம்பிக்கை. புத்தகப் பூக்களில் தான் அறிவு தெய்வம் ஆட்சி செய்கிறாள் என்பது மதியூகம். கல்வித் தெய்வமும், செல்வத்தெய்வமும் அறிவு தெய்வத்தின் அடக்கமே! சூரியனைக் கண்டவுடன் மலர்கள் மலர்வது போலே நல்ல நூல்களை வாசிக்கும்போது மனிதன் மனத்தால் மலர்கிறான்.அறிவால் விரிகிறான், குணத்தால் உயர்கிறான்.

 மனிதன் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கின்றானோ, அப்போதெல்லாம் வண்டுகளை ஈர்க்கும் பூக்களை போல் மற்ற மனிதர்களை எளிதில் ஈர்க்கின்றான். மலரிலிருந்து எப்போதும் நறுமணம் கமழ்வதைப் போல மனமகிழ்ச்சி பெற்ற மனிதரிடம் எப்போதும் அறிவு மனம் கமழ்ந்து கொண்டே இருக்கும்.

எழுதுகோலும், காகிதமும் இல்லாத உலகம் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. மலரில் இருந்து வெளியேறும் நறுமணத்தைப் பிடித்து வைக்க முடியுமா? அதுபோல்தான் மனித மனத்தில் இருந்து இமைப்பொழுதும் எண்ண அலைகள் எழுந்து பிரபஞ்ச வானில் கலந்து கொண்டே இருக்கிறது.

சிந்திக்காத மனிதன் உண்டா? அல்லது சிந்தனை தான் மனிதன் விருப்பமா? இல்லையே அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நல்ல விதமாகவோ, அல்லது கெட்ட விதமாகவோ சிந்தனை எழுந்து கரைந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைய அறிவியலின் அனைத்து கண்டுபிடிப்புகளும் மனிதன் சிந்தனையின் மகத்தான விளைவுகளே!

சிறந்த நூல்கள் மனித சிந்தனை சக்தியின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவனாக விளங்குகின்றன. சிறந்த புத்தகங்கள் மனிதனின் சிந்தனையை சீரமைக்கின்றன, நெறிப்படுத்துகின்றன, புதிய, புதிய தளங்களுக்கு இட்டுச் செல்கின்றன.சிந்தனையை எப்படித் திறமாக்குவது? சிறந்த சிந்தனைகளை எப்படி செயலாக்குவது? என்பதைச் சொல்லித் தருகின்றன.

புகழ்பெற்ற உலகம் போற்றும் சிந்தனையாளர்களைப் பற்றியும் அவர்களின் சிந்தனை இன்னும் இலட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்விற்கு ஒளியாக நின்று வழிகாட்டுகின்றன என்பதைப் பற்றியும் புத்தகங்களின் வாயிலாகவே நாம் அறிய முடிகிறது.

ஒவ்வொரு மனிதனின் சிந்தனைத் திறனும் மகத்தானது தான். அந்த மகத்தான கருவியை மேதைகள் எப்படிக் கையாண்டார்கள்? எப்படி உலகைச் சீர்திருத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள்? என்பதையெல்லாம் சிறந்த வரலாற்று நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

நமது சிந்தனைகளும் உறங்காத சிந்தனைகளாக மிளிர வேண்டும் என்றால் சிறந்த புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்க வேண்டும், அவற்றை நேசிக்க வேண்டும், அவற்றை சுவாசிக்க வேண்டும்.

‘‘நூலகம் என்பது ஒரு மனநல மருத்துவ நிலையம் என்கின்றார்’’ ‘பாரோ’ அரசன்.புத்தகம் ஒருவனை மனிதனாக மட்டுமல்ல  மகாத்மாவாகவே மாற்றி விடுகிறது.

‘‘சில புத்தகங்களை சுவைக்க வேண்டும்; சிலபுத்தகங்களை அப்படியே விழுங்கி விட வேண்டும்; சில புத்தகங்களை மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக அசைபோட்டு சீரணிக்க வேண்டும்’’ என்கின்றார் ஆங்கில அறிஞர் பேகன்.

அறிவைத் தேடித்தேடிப் பெற வேண்டும். ஒருவன் பறப்பதற்கான சிறகைக் கொடுக்கும் வல்லமை புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு.

அப்துல் கலாம் சொல்கின்றார், ‘‘நல்ல புத்தகங்கள் நல்ல கனவுகளை வளர்க்கும்; நல்ல கனவுகள் நல்ல எண்ணங்களை வளர்க்கும்; நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும்’’ என்று.

ஆப்ரகாம் லிங்கனிடம் அவருடைய நண்பர் கேட்டார், ‘‘படித்தால் பணம் கொட்டப் போவதில்லை பின் ஏன் படிக்கின்றீர்கள்?’’ என்று.

அதற்கு ஆபிரகாம் லிங்கன்,” நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை, பணம் வரும் போது, எப்படிப் பண்போடு நடந்து கொள்வது என்று தெரிந்து கொள்வதற்காகப் படிக்கின்றேன்” என்றார்.

 ஆபிரகாம் லிங்கனுக்கு அப்போது 14 வயது ” The life of Washington – ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு” என்ற நூலைப் படிப்பதற்கு மிக ஆர்வமாக இருந்தார். பரம ஏழையாக இருந்தாலும் அந்தப் புத்தகத்தை எப்படியும் படித்தே ஆக வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டிருந்தார். பலரிடமும் அந்த புத்தகத்தைப் பற்றி விசாரித்தார்  ஆபிரகாம் லிங்கன். இறுதியில், ஜோஸய்யா கிராஃபோர்டு என்ற ஒரு வசதி படைத்த நிலச்சுவான்தார் அந்த புத்தகத்தை வைத்திருப்பதை கேள்விப்பட்டு  12 மைல் தூரம் அந்த சின்ன சிறு வயதில் நடந்தே சென்று அந்தப் புத்தகத்தை அவரிடத்திலே மன்றாடி  கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்தார். மிக்க ஆர்வத்தோடு ஆழ்ந்து படித்தார்.

ஒரு நாள் கடுமையான மழை பெய்கிறது.// அவர் வீடோ மரத்தால் செய்யப்பட்ட ஒரு எளிய குடிசை. குடிசை முழுவதும் தண்ணீர் புகுந்து விட்டது. அந்தப் புத்தகமும்  நனைந்தே போய்விட்டது. ‘‘ஐயோ! திரும்ப நல்ல விதமாக கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று மன்றாடிக் கேட்டு வாங்கிக்கொண்டு வந்தோமே, இப்படி ஆகிவிட்டதே’’ என்று கலங்கிய உள்ளத்தோடு அந்த நிலச்சுவான்தாரிடம் ஓடுகிறார். ‘‘ஐயா, என்னை மன்னித்து விடுங்கள் மழை பெய்து இப்படி ஆகிவிட்டது. புத்தகம் முழுவதும் நனைந்து வீணாய்ப் போய்விட்டது’’ என்று கெஞ்சி மன்றாடி மன்னிப்புக் கேட்கின்றார். புத்தகத்திற்கு ஈடாக கொடுக்க என்னிடம் பணம் இல்லை, நீங்கள் என்ன வேலை கொடுத்தாலும் அந்த வேலையை நான் செய்து  புத்தகத்துக்கான கடனை அடைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டார். அதன்படியே சில நாட்கள் அவருடைய பண்ணையிலே வேலை செய்து அந்தப் புத்தகத்திற்கான கடனை அடைக்கிறார் என்று சொன்னால் ஆபிரகாம் லிங்கன் அடைந்த வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் அவர் படித்த புத்தகங்கள்தான்  என்பதை மறுக்க முடியுமா?

ஜான் ரஸ்கின் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இவ்வாறு கூறுகிறது:

‘‘நமக்கென்று ஒரு உலகம் காத்திருக்கிறது. நமக்கு விருப்பமான நேரத்தில் மிக எளிதாக தொடர்பு வைத்துக் கொள்ளவும், தொட்டுப் பழகவும், நம்மோடு அன்பாகவும், கனிவாகவும் பேசவும் நமக்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பொறுமையோடு காத்துக் கிடக்கவும் அவ்வுலகம் எதிர்பார்த்துக்கிடக்கிறது, அதுதான் – புத்தக உலகம்’’.

புத்தக உலகத்தில்  உள்ள ஒவ்வொரு புத்தகமும் நம்  வரவிற்காக, நாம் படித்துப் பயன் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏக்கத்தோடு காத்துக் கிடக்கின்றது. நாம் தான் அதனைப் பொருட்படுத்துவதில்லை.

 புத்தக நிலையங்களில் தலைசிறந்த அறிவியல் மேதைகளும், அரசியல் தலைவர்களும், நிபுணர்களும் புத்தக வடிவில் நமக்காக காத்துக் கிடக்கிறார்கள். அக்கறையோடும், ஆர்வத்தோடும் அவர்களை அணுகி நாம் நம் அறிவை ஏன் விரிவு செய்து கொள்ளக் கூடாது?

ஒரு நூலை நாம் படிக்கும்போது ஆன்றோர்களோடும், சான்றோர்களோடும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக நூலின் வாயிலாக நாம் அவர்களோடு தொடர்பு கொள்கின்றோம். மேலும், தற்போது வாழ்ந்து வரும் தலைவர்களும், அறிஞர்களும் நம் முன்வந்து அவ்வப்போதைக்கு தேவையான செய்திகளைப் பற்றி பேசினாலும் விரைவாகவும், பரபரப்பாகவும், மேம்போக்காகவும், பொருளற்ற முறையிலும், பொருத்தமற்ற சொற்களை போட்டும் பேசிவிட்டு சென்று விடுவர்.

ஆனால்,புத்தக வடிவில் உள்ள அறிஞர்களும், மேதைகளும் எதைப் பற்றியும் பொறுப்புணர்வோடும், பொறுமையோடும் ஒன்றுக்குப் பலமுறை ஆராய்ந்து பார்த்து சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து மிகத் திறமையாக எடுத்து கூறுவார்கள்.

 எனவே புத்தக வடிவில் உள்ள அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது தான் மிகவும் எளிமையானதும், மிகப் பயன் விளைவிப்பதும் ஆகும்.

சிறந்த நண்பன்

‘‘நண்பர்கள் பலர் நமக்கு துன்பம் வரும் போது நம்மை விட்டுப் பிரிந்து விடுவார்கள். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நம்மை விட்டுப் பிரியாத நண்பன் புத்தகங்களே!’’ என்கின்றார் ஒரு அறிஞர்.

‘‘புத்தகங்கள் இருளில் பயணிப்பவர்களுக்கு ஒரு கைவிளக்காகவும், வழி தவறியவர்களுக்கு வாய்த்திட்ட ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கிறது. புத்தகம் என்பது ஒரு அறிமுகம் இல்லாத நண்பர் போன்றது. ஒரு முறை நீங்கள் வலியச்சென்று பழகி விட்டால் அந்த நண்பனை வாழ்நாள் முழுவதும் கைவிட மாட்டீர்கள்.

இந்த நண்பன்,

துரோகம் செய்ய மாட்டான்.

தவறான வழியைக் காட்டமாட்டான்,

தட்டிக் கொடுப்பான்,

தைரியம் ஊட்டுவான்,

கற்றுத் தருவான்,

கல்வியாளன் ஆக்குவான், சிக்கவைக்க மாட்டான்,

சிந்திக்க வைப்பான்,

 எந்தச் சிக்கலுக்கும் தீர்வாவான், வழிகாட்டுவான்,

வாழவைப்பான்,

உண்மையைச் சொல்வான், உலகப் புகழ் அடையச் செய்வான்,

ஊக்கம் தருவான்,

ஆக்கம் தருவான்.  

புத்தகங்கள் என்பது காகிதங்களால் கட்டமைப்பு செய்யப்பட்ட மனிதர்கள்’’ என்கின்றார் ஆண்டன் மெக்காக்கோ.

காட்சி ஊடகங்கள் ஒரு பொழுதுபோக்கு வாய்ப்பாக இருக்கிறது. ஆனால், வாசிப்பு என்பது வாசகனின் சிந்தனையைத் தூண்டி அவனை செயலூக்கம் மிக்க மனிதனாக மாற்றுகிறது.

 “நல்ல புத்தகங்களே என் அரும்பெரும் ஆசிரியர்கள்” என்கின்றார் அப்துல் கலாம் அவர்கள்.

‘‘வழுக்கும் இடத்தில் ஒரு ஊன்றுகோல் போலச் சான்றோர்கள் சொல் பயன்படும்’’ என்கின்றார் திருவள்ளுவர்.

Life is a learning process”-“வாழ்க்கை முழுவதும் கற்றல் நடைபெறுகிறது என்கிறார் ஓர் அறிஞர்.

மற்றவருடைய அனுபவங்களை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்வது அவை நமது வளர்ச்சிக்குப் பெரும் துணையாக விளங்கும்.

மனித மனம் ஓர் விளை நிலம் போன்றது, அதில் நாம் விரும்பியவாறு பயிர் செய்யவில்லை என்றால், தேவையில்லாத புல், பூண்டு முளைத்து, களைகள் மண்டிவிடும்.

நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலம் மனம் என்ற நிலத்தை நன்றாக உழுது பண்படுத்த முடியும்.

நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அந்நிலத்திற்கு மேலும் உரமிட்டு  பக்குவப்படுத்த முடியும்.

நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலம், நல்ல விதைகளை நாம் நடவு செய்ய முடியும்.

நல்ல விதைகளை நடவு செய்வதன் மூலம், நல்ல விளைச்சலை நாம் அறுவடை செய்ய முடியும்.

அறிஞர் வாய்மொழி

நாள் ஒன்றுக்கு என்னால் ஒரு வரிதான் படிக்க முடியும் என்றால், ஆத்திசூடியைப் படி.

நாள் ஒன்றுக்கு என்னால் இரண்டு வரிகள் தான் படிக்க முடியும் என்றால், திருக்குறளைப் படி.

நாளொன்றுக்கு என்னால் மூன்று வரிகள் தான் படிக்க முடியும் என்றால், திரிகடுகம் படி.

நாளொன்றுக்கு என்னால் நான்கு வரிகள் தான் படிக்க முடியும் என்றால், நாலடியார் படி.

நூல் நிலையம்

நூல் நிலையம் குளிர் பதனம் செய்து சேமித்து வைக்கப்பட்ட சிந்தனைகள்- ஸேம்யல் பிரபு

இலக்கியத்தின் அலமாரிகள்- வில்லியம் டயர்

ஆடம்பரமான ஒன்றல்ல, வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று.

சிறந்த சர்வகலாசாலை.

எப்போதும் அறிவு மணம் வீசிக்கொண்டிருக்கும் பெரியோர்களின் ஆன்மாக்கள் வாழும் திருத்தலம்

ஒரு அறிஞனின் சிறந்த ஆலோசனைக்கூடம்- ஜூடாங்சன்

புத்தகம்

காலமென்னும் பெருங்கடலில் கட்டிய கலங்கரை விளக்கங்கள்- எட்வின் விப்பில்

காலத்தால் அழியாமல் காப்பாற்றி வைக்கப்பட்டுள்ள உள்ளங்கள்- கிறிஸ்டியன் போவி

மூளையின் குழந்தைகள்- ஜோனதான் ஸ்விப்ட்.

தம் பெற்றோரைப் போற்றும் அமரத்துவம் வாய்ந்த புதல்வர்கள்- பிளேட்டோ

சட்டைப் பைக்குள் கொண்டு செல்லும் அழகிய பூந்தோட்டம்- அரேபிய பழமொழி

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் அறிஞர்களின் கருவூலங்கள்- ஜோசப் அடிகள்

மனித மனத்தை வசப்படுத்தும் அற்புதங்கள்- கார்லைல்.

நாட்டின் அறிஞர்களின் உள்ளங்களை நமக்கு  எடுத்துக்காட்டும் கண்ணாடிகள்- எட்வர்ட் கிப்பின்

துன்பப்படுபவருக்கு துணை நிற்கும் தோழர்கள்- கோல்ட் ஸ்மித்

உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் -கதே.

வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் கால விரயமின்றியும், ஆன்றோரின் அரிய அனுபவங்களை தமதாக்கியும் கடினமான  வாழ்க்கைச் சூழலையும் இலாவகமாகக் கடப்பதற்கு வாசிப்பு ஒன்றே வரமாகும். வாசிப்பை வசமாக்குவோம்! வெற்றி நிச்சயம்!! l