திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

சமூகப் பார்வை – 29

சென்னை மடிப்பாக்கம் பொறியியல் பட்டதாரி கோபிநாத், சென்னை மாடபாக்கம் வினோத்குமார், திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி சந்தோஷ், கோவை வெள்ளலூர் மோகன் குமார். சேலம் மாவட்டம் அரிசிப்பாளையம் குணசீலன், சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் சரவணகுமார், சென்னை கோயம்பேடு தினேஷ் இவர்களெல்லாம் ஜல்லிக்கட்டில் சீறிவந்த காளையைப் பாய்ந்து சென்று அடக்கியவர்கள் அல்ல. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுத் தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டவர்கள். இதற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல என்பதற்கு, சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த  பவானி ஓர் உதாரணம். அதுமட்டுமா ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுப் பணத்தை இழந்து, கடனை அடைக்க வழிப்பறியில் ஈடுபட்ட சிவில் இன்ஜினியரும் உண்டு. பல்வேறு பிரச்சனைகள் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள நிலையில்,  இப்போது ஆன்லைன் சூதாட்டமும் அதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.

ஆன் லைன் ரம்மி காரணமாகத் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. இதுவரை 47 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

தடை சட்டம்

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின்போது (2020ஆம் ஆண்டு) ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.

இதன்பின் தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பதால் நேரிடும் தற்கொலைகளைத் தடுக்க வலுவான புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஜூன் மாதம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்குச் செப்டம்பர் 26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அக்டோபர் 1ஆம் தேதி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. பிறகு ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் கொடுத்த அவசர சட்டம் கடந்த ஆண்டு (2022) நவம்பர் 27ஆம் தேதி காலாவதியானது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகப் பரிசீலனையில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் தற்போது அதை அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இன்றைக்கு இது அரசியல் உரு கொண்டிருக்கிறது. ஆனால், இது தமிழகத்தின் எதிர்கால இளைஞர்கள் சார்ந்த அவலம் என்பதை மறந்துவிடக்கூடாது. காரணம் தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவு படித்த இளைஞர்கள்.

தடை உடைந்ததேன்..?

தமிழ்நாட்டைப் போலவே, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் இத்தகைய விளையாட்டுகளைத் தடை செய்ய முயன்றன. இருப்பினும், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவின் உயர்நீதிமன்றங்கள், “திறன் சார்ந்த இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை” என்று கூறி அந்தச் சட்டங்களை ரத்து செய்துள்ளன. சிக்கிம், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் அவற்றை முறைப்படுத்தி அனுமதிக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான தடைகள் எப்படி உடைகின்றன என்பது குறித்து வழக்கறிஞர்கள் சிலரிடம் கேட்டோம். “2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதை எதிர்த்து ஜங்க்லி கேம்ஸ், ரீட் டிஜிட்டல், ப்ளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, இது மூளையைப் பயன்படுத்தி விளையாடும் திறன் சார்ந்த விளையாட்டா அல்லது அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி விளையாடும் விளையாட்டா என்ற கேள்வி வந்தது.”

“சென்னை கிண்டியில் நடத்தப்பட்டுவந்த குதிரைப் பந்தயத்துக்கு எதிரான வழக்கிலும் கால்நூற்றாண்டுக்கு முன்பு இது போன்ற கேள்வி எழுந்தது. அப்போது, அது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே அல்ல, குதிரையின் உடல்வாகு, அதனை ஓட்டுபவரின் திறன், பந்தய வியூகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு நடத்தப்படுவது என்று சாமர்த்தியமாக வாதாடி, அதைத் தொடர்ந்து நடத்த அனுமதி பெற்றார்கள். அதே மாதிரி ஆன்லைன் விளையாட்டு குறித்த வழக்கிலும், “மூளையைப் பயன்படுத்தும் திறன் சார்ந்த விளையாட்டு” என்று கேமிங் நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது, ஒரு வழியாகச் சட்டத்துக்கு எதிராகத் தற்காலிக தடையைக் கேமிங் நிறுவனங்கள் பெற்றன. இந்திய அரசின் சட்டமானது சூதாட்டத்தைத் தடை செய்கிறது. ஆனால், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் திறன் சார்ந்த விளையாட்டு என்ற அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளதால் அதற்குத் தடை விதிக்கப்படவில்லை,”

“ஆன்லைன் விளையாட்டில் வெளிப்படைத் தன்மை இல்லை. நிஜ வாழ்வில் விளையாடும் ரம்மியில் எதிரில் விளையாடுபவர்களில் யாருக்கு லாபம் கிடைக்கும், யார் நஷ்டமடைவார்கள் என்பதெல்லாம் தெளிவாகத் தெரியும். ஆனால், இதில் முன்பின் தெரியாத முன்பே எழுதப்பட்ட ப்ரோகிராமிங் மூலமாக விளையாட்டு நடத்தப்படுகிறது ” என்கிறார்கள்.

எப்படிப் பண இழப்பு?

எப்படி இந்த விளையாட்டில் மக்கள் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள்? எப்படிப் பண இழப்பு நேர்கிறது? ஏன் அதிலிருந்து மீளமுடியவில்லை? என்ற கேள்விகளைச் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் முன் வைத்தோம்.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் அவர்களே குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விளையாட ஊக்குவிப்பார்கள். ஜெயிக்கவும் விடுவார்கள். வெற்றியைக் கண்டு விளையாடுபவர் குஷியாகிவிடுவார். உற்சாகமாக விளையாடுவார் இரண்டு மூன்று ரவுண்ட் வரை வேட்டைதான். அதன் பிறகு சறுக்க ஆரம்பிப்பார். அப்போது விளையாடுபவர் யோசிப்பார். “யோசிக்காதீங்க.. விட்டதைப் பிடிங்க..” எனப் பரிந்துரைப்பார்கள். விட்டதைப் பிடிக்கவேண்டும் என்று மனமும் சொல்லும். இது மனித இயல்புதான். இதைபயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கொழிக்கின்றன”.

மேலும், “இந்தியாவில் ஒருவேளை ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டாலும்கூட, அவற்றைத் தயாரித்த கேமிங் நிறுவனங்கள் வேறு பெயரில், வேறு வடிவில் அதைத் தயாரித்துப் புதிதாக அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. பப்ஜியை தடை செய்தபோது, அதைத் தயாரித்த டென்சென்ட் கேமிங் நிறுவனம் வேறு வடிவில் மீண்டும் அதை அறிமுகப்படுத்தியதை மறந்துவிடக்கூடாது” என்கிறார்கள்.

தடை வருமா?

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “ஏற்கனவே 19 மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டுத் தொடர்பான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் தடை மசோதா குறித்து அரசு ஆலோசிக்கும்.” என்கிறார். அரசுக்கு வரி வருவாய்க் கிடைக்கிறது. ஆகையால் இந்திய அளவில் அதற்குத் தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ஒருவேளை அதையும் தாண்டி தடையே செய்தாலும், பப்ஜியை போல் வேறு வடிவில் வருவதற்கான சாத்தியங்களும் உள்ளன.

என்ன செய்யலாம்?

ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசின் ‘‘The number that changed our lives”  என்று பெயரிடப்பட்டுள்ள பிரச்சாரம், சூதாட்டத்தில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு உதவுகிறது. ஆலோசனை வழங்குகிறது. அதுபோல Gamble Aware என்ற குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு அழைக்கும் நபர்கள், தங்களது மொழியைப் பேசும் ஆலோசகரைப் தேர்ந்தெடுத்து, சூதாட்டம் தொடர்பான தங்கள் பிரச்சனைகளைச் சொல்லவும் வசதி இருக்கிறது. இந்த ஏற்பாடுகளையெல்லாம் இங்குள்ள அரசும் செய்யலாமே?.

தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மத்திய அரசே உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிப்பதோடு அதற்கான செயலிகளை நீக்குவதற்கான உத்தரவு உள்ளிட்டவற்றை மத்திய அரசு பிறப்பிப்பதும் அவற்றைக் கண்காணிப்பதுமே நிரந்தரத் தீர்வாக அமையும். விளையாட்டு என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் அதிக வரி வருவாய்க் கிடைக்கிறது என்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யாமல் இருந்தால் பெரும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்கவேண்டியது வரும். உயிரிழப்புகள் தவிர்க்கமுடியாததாகிவிடும்.

தற்கொலை தீர்வல்ல..

பேராசிரியர் ஸ்சேலி கேயின்ஸ்பரி (Sally Gainsbury) சிட்னி பல்கலைக்கழகத்தில் சூதாட்ட சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் உள்ளார். “சூதாட்டம் விளையாடுகிறவர்கள் யாருடைய ஆலோசனைகளையும் கேட்பதில்லை என்றும் சூதாட்டப் பிரச்சனைகளை அனுபவிக்கும் நபர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களும் பாதிக்கப்படுகிறார்கள்‘‘ என்கிறார். வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. எனவே, ஆன்லைன் விளையாட்டிலிருந்து விலகி இருங்கள். இது நேர்மையான வருமானம் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இது நாம் நேர்மையாகச் சம்பாதித்த பொருளையும் காலி செய்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்தோடு, தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. கடன்வாங்கி விளையாடத் தெரிந்த உங்களுக்குக் கடன் வாங்கி வாழ்வாதாரத்தைப் பெருக்கத் தெரியாதா? வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளைக் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். எத்தனையோ விளையாட்டுகள் இருக்க.. ஏன் இந்த விபரீத விளையாட்டு.? வேண்டாம். =