சமூகப் பார்வை – 27
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
வாசிப்பு வரை எல்லாமே வேகம் என்றாகிவிட்டது. ஒருநாள் நான் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தபோது வந்த என் நண்பர் ஒருவர், “புத்தகத்தைத் தேடி, கண்ணாடியைப் போட்டு வாசிக்க ஏன் சிரமப்படுற? இன்றைக்குத் தான் எவ்வளவு வசதி இருக்கிறது? ஏதாவது தெரியணும்னா யூ டியூப் சேனலில் விடியோ பார்க்கலாமே” என்றார். என் மீதான கரிசனம் அவருக்கு. ஆனால் புத்தகம் வாசிக்காவிட்டால் நான் சுவாசிக்கவே மறந்துபோவேன் என்பதனை அவர் அறிந்திருக்கவில்லை.
விடியோ என்றால் நாம் சிரமமின்றி பார்த்துவிடலாம். விஷயங்களும் கிடைக்கும். ஆனால் அது சோம்பேறித்தனத்தின் ஒரு உருவமாகக்கூடப் பார்க்கப்படுகிறது. அதற்காக விடியோ பார்ப்பதை குறை சொல்வதாக நீங்கள் நினைக்கக்கூடாது. வாசிப்பது சிரமமாகத் தோன்றினாலும் அது நம்மைச் செதுக்கி உயர் இடத்துக்குக் கொண்டு செல்லும் என்பதனை மறந்துவிடக்கூடாது. ஒருவர் பேசுவதைக் கேட்பது மூலமும், அல்லது காட்சி ஊடகங்களைப் பார்ப்பதன் மூலமும் நாம் நிறைய விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளமுடியும் என்றாலும், வாசிப்புக்கு எனத் தனிப்பட்ட சில குணாதிசயங்கள் உண்டு.
இன்றைக்கு வாசிப்பு
இன்றைக்கு குடும்பத்தோடு வாசிப்பது என்பது இல்லையென்றாகிவிட்டது. குறைந்தபட்சம் கணவனும் மனைவியும் ஒரு புத்தகத்தைச் சேர்ந்து வாசிப்பதோ, அது குறித்து விவாதிப்பதோ கூட குறைந்துவிட்டது. இதிலும் மிக வேதனையான விஷயம் சில வீடுகளில் கணவன் வாசிப்பாளராக இருந்தால், அவன் வாங்கும் புத்தகங்கள் அனைத்தும் “வீண் செலவு” என்றே மனைவி கருதுகிறார். மனைவி வாசிப்பாளராக இருந்தால், ” படித்து என்னச் செய்யப்போகிறாளாம்” என்ற சலிப்பைக் கணவரிடமிருந்து கேட்கமுடிகிறது. புத்தகங்களை விரும்பிப் படிக்கும் தம்பதியரின் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கான சாத்தியங்கள் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.
வாசிப்பை நேசித்தவர்கள்
மகாத்மா காந்தி மேற்கொண்ட, இன்னும் சொல்லப்போனால் அவர் உயிரினும் மேலாக நேசித்த அகிம்சை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை என்ற அவருக்கான “ஆயுதங்கள்” எல்லாம் புத்தக வாசிப்பு மூலமாகத்தான் அவருக்குக் கிடைத்தன. இவை தொடர்பாக மூன்று புத்தகங்களை அவர் குறிப்பிடுகிறார். ஒன்று, ஆங்கிலேயரான ஜான் ரஸ்கின் எழுதிய “கடையனுக்கும் கடைத்தேற்றம்”. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை காந்திஜி குஜராத்தி மொழியில் ‘சர்வோதயா’ என்ற பெயரில் மொழி பெயர்த்தார். இரண்டாவது, ஹென்றி டேவிட் தோரோ என்ற அமெரிக்கர் ஆங்கிலத்தில் எழுதியது. இது ஒத்துழையாமை கோட்பாட்டைச் சொல்வது. அநியாயத்திற்குக் கீழ் பணியாததுதான் ஒத்துழையாமை. மூன்றாவது, ரஷிய ஞானி லியோ டால்ஸ்டாய், ரஷிய மொழியில் எழுதிய ‘இறைவன் சாம்ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது’. இது ரஷ்யாவில் தடை செய்யப்பட்டது. 1894ஆம் ஆண்டில் ஜெர்மனியில் வெளியாகியது. காந்திஜியைப் புரட்டிப்போட்ட புத்தகங்கள் இவை.
நஞ்சு கொடுக்கப்படும் வரை நூல்களைப் படித்துக் கொண்டிருந்தவர் கிரேக்க நாட்டு சாக்ரட்டீஸ். படிப்பகங்களுக்கு அருகில் உறங்கும் இடத்தை கேட்டார் அம்பேத்கர். தான் படித்த புத்தகத்தை முடித்து விடவேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போடச் சொன்னவர் அறிஞர் அண்ணா. 33 ஆண்டுகள் நூலகத்தில் மூழ்கி “மூலதனம்” எனும் கம்யூனிச சித்தாந்தத்தைக் கண்டு பிடித்தார் கார்ல் மார்க்ஸ். இவர்களெல்லாம் வாசிப்பை நேசித்தவர்களில் சிலர்.
வாசிப்பின் பயன்கள்
கையெழுத்தில் அல்லது அச்செழுத்தில் உள்ளதைக் கண்களால் கண்டு, வாயால் உச்சரித்து, சொல்லின் பொருள் உணர்வதே வாசிப்பு என்பது டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் கருத்தாகும். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி. வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். அவற்றில் சில..
ஞாபகமறதி குறையும் : வாசிப்பு மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி. வாசிப்பை வழக்கமாகக் கொண்டிருப்பதன் மூலம் மூளை தொடர்ச்சியாகச் செயற்பாட்டில் இருக்குமாம். இதனால் வாசிப்பாளர்களுக்கு அல்ஸைமர் போன்ற நோய் ஏற்படுவது குறைகிறது என்கிறது ஆய்வு.
கவனிப்புத் திறன் மேம்படும் : ஆழமாகப் படிக்கும்போது நாம் அதனுள் மூழ்கிப் போகிறோம். வாசிப்பது நம் அன்றாடப் பழக்கமாகும்போது நம்முடைய கவனிப்புத்திறனும் அதிகமாகும். இதனால் எந்தவொரு செயலையும் கவனத்தோடு செய்யும் ஆற்றல் மேம்படும்.
நினைவாற்றல் மேம்படும் : வாசிப்புப் பழக்கம் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சி. வாசிக்கும்போது புத்தகத்தில் உள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள், நிகழ்வுகளை நினைவில் பதியும். இது நம் நினைவாற்றலை மேலும் வலுப்படுத்தும்.
மன அழுத்தம் குறையும் : நாம் வாசிக்கும் புத்தகம் நம்மை வெவ்வேறு நபர்களுடன் வேறு ஓர் உலகத்திற்கு இட்டுச்செல்கிறது. மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு புதிய சூழலைக் கொடுத்து புத்துணர்வை ஏற்படுத்தும்.
ஆய்வு மனப்பான்மை ஏற்படும் : ஒரு புத்தகத்தை எழுதியவரிடம் உடனடியாக கேள்விகளைக் கேட்க முடியாது. உடனடியாக ஒரு உரையாடலைத் தொடங்க முடியாது. ஆக எழுதியிருப்பதை ஒன்றுக்குப் பத்துவிதமாக யோசிக்க, அதனை அலசி ஆராய நமக்கு நேரம் கிடைக்கும்.
பகுத்தறிவுத் திறன் அதிகரிக்கும் : நம் வாழ்வில் நிகழும் சம்பவங்களை வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
புதிய சொற்கள் வசப்படும் : வாசிப்பதில் இருக்கும் முக்கியமான அனுகூலம் புதிய சொற்களை அறியமுடியும்.
எழுதும் திறன் அதிகரிக்கும் : பல புத்தகங்கள், கட்டுரைகள் என்று வாசிக்கும் போது மற்றவர்களின் எழுத்து நடையை (ஸ்டைல்) அறியமுடியும். இதன் மூலம் எழுத்துத் திறனை அதிகரிக்கலாம். நமக்கான எழுத்து நடையை உருவாக்கலாம்.
அர்த்தமற்ற பேச்சு அகலும் : வாசிக்கும் போது உங்கள் அருகில் உள்ளவர்களுடன் அர்த்தமற்ற உரையாடல் இருக்காது. ஒரு சிறந்த நூலினை வாசித்து முடித்த பின்னரும் கூட, அதைப்பற்றியே சிந்தனை சுழலும். வீணாகப் பேசுவது இயல்பாகக் குறைந்து போகும்.
உற்சாகப்படுத்தும் : மனம் சோர்ந்த நேரங்கள், நம்மை மற்றவர்கள் நிராகரிக்கும், அவமானப்படுத்தும் தருணங்களில் மௌனமாக அவற்றை ஏற்றுக்கொண்டு நல்ல நம்பிக்கை தருகிற புத்தகத்தை வாசித்தால் தன்னம்பிக்கை மேம்படும். நம்மை உற்சாகப்படுத்தும். நாம் படித்த நூல், சில நேரங்களில் தவறுகள் செய்வதை, தடுக்கிறது. கருத்துகள் ஒருவனின் ஆழ்மனத்திற்குள் நுழைந்து அவனைப் புதிய மனிதனாக மாற்றிவிடுகிறது.
எதை வாசிப்பது
வாசிப்புப் பழக்கம் என்பது எளிதில் பிடிபடாத விஷயம். சிலருக்கோ புத்தகம் எடுத்து கையில் வைத்தாலே தூக்கம் வந்துவிடும். சில புத்தகங்கள், வாசிப்பவர்களை ஈர்த்து நூலினுள் பயணிக்க வைத்துவிடும். அதனால்தான் சிலருக்குப் படிக்கும்போது எதாவது இடையூறு ஏற்பட்டால் கடுங்கோபம் எட்டிப்பார்க்கும். எந்த மாதிரியான புத்தகம் கிடைத்தாலும் அதைப் படித்து அதிலுள்ள செய்திகளை உள்வாங்கிக் கொள்வது என்பது ஒரு கலை. ஒரு சிலருக்குக் கவிதை இலக்கியம், சிலருக்கு நாவல், சிலருக்குப் படக்கதை, சிலருக்குத் திகிலூட்டும் கதைகள், இன்னும் சிலருக்குத் தன்னம்பிக்கை வெளியீடுகள் என அவரவர்க்கு என சில விருப்பங்கள் இருக்கலாம்.
மாதம் இரு புத்தகங்களாவது வாசிக்க முயற்சிப்போம். வாசிப்பை வலியத் திணிக்காதீர்கள். நமக்கு விருப்பமான உணவைச் சாப்பிடுவது போல அது இருக்கட்டும். அன்றாட வாழ்க்கையின் இயல்பான செயல்பாடாக வாசிப்பு அமையட்டும். வாசிப்பு எந்தத் துறையைச் சார்ந்தும் இருக்கலாம். தன் தொழில் தொடர்பாக வாசிப்பதை நாம் வாசிப்பு என்று கொள்ள முடியாது. பல துறைப் புத்தகங்களையும் வாசிக்கும்போது தான் ஒருவருடைய வாசிப்பு வளம் விரிவடைகிறது. வாசிக்கும் எல்லாப் புத்தகங்களும் நன்றாக இருக்கவேண்டும் என நாம் கணிக்கமுடியாது. வரையறுக்கவும் கூடாது. ஆனால், அவற்றின் வழியேதான் முக்கியமான புத்தகங்களை, நமக்கு ஊட்டம் அளிக்கும் புத்தகங்களை, நாம் சென்றடைய முடியும் என்பதனை மறந்துவிடக்கூடாது.
புத்தகத்தை எங்கு வைக்கலாம்
வாசிப்புப் பழக்கம் நம் தொடர் நிகழ்வாக இருக்கவேண்டுமானால் வீட்டில் ஒரு மூலையில் அட்டைபோட்டு புத்தகத்தை அடுக்கி வைத்திருக்கக்கூடாது. கண்ணில் படும்படியாக புத்தகம் வைக்கப்படவேண்டும். எனது வீட்டில் இருக்கும் மூன்று அறைகளில் (மொத்தமே மூன்று அறைகள் தான்) எங்கு நோக்கினும் புத்தகங்கள். “பாண்டியன் ஸ்டோர் தொடரில் வீட்டில் அரிசி மூட்டைகளை அங்கங்க வைச்சிருப்பாங்க. அதுபோல நீங்களும் புத்தகத்தை வச்சிருக்கீங்க..” என்று என் மனைவி அடிக்கடி அங்கலாய்ப்பது உண்டு. “புத்தகங்கள் நம் கண்ணில் படும்படி இருந்தால், நம் கவனம் வாசிப்பை வலியுறுத்தும்” என என் மனைவிக்கு நான் பதிலளிப்பதுண்டு.
யாருக்கு வாசிப்பு
எதையும் செவி வழியாக, ஒருவர் சொல்லக் கேட்டு, கற்பதை, கற்றுக் கொள்வதை விட, ஒரு விஷயத்தைப் பார்த்து, அதனை உணர்ந்து, வாசித்தறிந்து கற்றுக் கொள்வது, கற்றலை வலிமையாக்கும். குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவேண்டும். தொடர்ந்து வாசிக்கும் குழந்தையின் சிந்தனைவெளி விரிவடைகிறது. பல புதிய விஷயங்களைத் தேடிக் கற்றுக் கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது. கற்பனாசக்தி, மொழி அறிவு, உலக அறிவு இவை அதிகரிக்கின்றன. ஒரு கருத்தினை நாம் கல்வியின் மூலம் வலிந்து திணிப்பதற்கும், அதைக் குழந்தைகள் தாமாகவே புத்தகங்களின் மூலம் வாசித்துக் கற்றுக் கொள்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. வாசித்துக் கற்றுக்கொள்ளும் குழந்தைக்குப் புரிதல் அதிகமாக இருக்கும்.
பள்ளிக்கூடங்களில் வாசிப்புக்கு என, வாரம் மூன்று வகுப்புகள் ஒதுக்கலாம். பெரிய நூலகங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதலை வழக்கப்படுத்தலாம். பள்ளிகளில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தலாம். மாணவர்களுக்குத் தேவையான இதழ்களை அரசு வாங்கி பள்ளி நூலகங்களுக்கு வழங்கவேண்டும். இதற்கான நிதியை பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டுடன் வழங்கவேண்டும். இன்றைக்கு ஏறக்குறைய எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வு புத்தக வாசிப்பில் இருக்கிறது என பலர் அறிவதில்லை. பேச்சிலிருந்துதான் புத்தகங்கள் உருவாகின்றன. ஆனால், புத்தகங்கள்தான் பேச்சை வாழ வைக்கின்றன. வாசிப்பு வாழ்வை மேம்படுத்தும். =