மாண்புமிகு ஆசிரியர்கள் -17

முகில்

‘லாக்-டௌன்’ என்ற வார்த்தையை இந்தியர்கள் முதன் முறையாகக் கேள்விப்பட்ட கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பக் காலம். கொரோனா குறித்த வதந்திகளும், அறியாமை நிறைந்த செய்திகளும் எக்கச்சக்கமாகப் பரவிக் கொண்டிருந்த சமயம். பெரு நகர, நகர வாழ் குழந்தைகள் எல்லாம், ‘தினமும் லீவு. அடுத்து ஸ்கூல் எப்போ திறப்பாங்க என்றே தெரியாது’ என்று உற்சாகத்துடன் வீட்டுக்குள் கிடந்தனர். பின்பு ஆன்-லைன் வகுப்புகள் என்றொரு வாசல் அவர்களுக்குத் திறந்தது. லௌட் ஸ்பீக்கர் அலற, ஹெட்போன்கள் அதிர, ஸ்மார்ட் போன்கள் சூடாக, ஸூமிலும் கூகுள் மீட்டிலும் மியூட் – அன்மியூட் என்று ஏதோ கல்வி அவர்களை அரைகுறையாகவாவது சென்று சேர்ந்தது.

ஆனால், இந்தியாவின் பழங்குடி கிராமங்களின் நிலை மிகவும் பரிதாபகரமாகிப் போனது. வேலைக்குப் போகக்கூடாது. வீட்டிலேயே கிடக்க வேண்டுமாம் என்ற அறிவிப்பெல்லாம் அந்த மக்களுக்குப் புரியவே இல்லை. நோயின் தீவிரத்தன்மை குறித்தும் அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்களிடமிருந்த ஒரே கேள்வி, வேலை இல்லை என்றால், அடுத்த வேளை உணவை யார் தருவார்கள்? மாணவர்களின் நிலைமை மிகவும் மோசம். பள்ளிக்குச் சென்றால் ஏதோ ஒரு வேளையாவது உணவு கிடைக்கும் என்ற சூழலும் காலவரையின்றித் தடைபட்டது. அதுவும் ஜார்கண்ட் போன்ற கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலத்தின் பழங்குடி கிராம மக்கள், என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைத்துக் கிடந்தனர். அங்கே பலரிடம் சாதாரண போன்கள்கூட கிடையாது. இண்டர்நெட், ஈமெயில், வைஃபை, ஆன்லைன் கிளாஸ் என்பதெல்லாம் அவர்களுக்கு வேற்றுக்கிரக வார்த்தைகள். ஏகப்பட்ட பில்லியனர்களின் உபாசகராக இருக்கும் இந்திய அரசு, இன்னும் மின்சாரமும் கழிவறை வசதியும் இல்லாத கிராமங்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் அவலமும் தொடரத்தானே செய்கிறது.

‘என் மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ?’ என்ற கேள்வி சபன் குமாரை இரவுகளில் தூங்க விடவே இல்லை. அவர், ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் அமைந்த துமர்தார் என்ற சிறிய கிராமத்தின் உத்ரக்ரமித் மத்திய வித்யாலயாவின் தலைமை ஆசிரியரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். கொரோனா சூழலில் உலகமே முடங்கிப் போக, இந்த ஆசிரியருக்கோ, தனது உலகமாகக் கருதிக் கொண்டிருந்த மாணவர்களது எதிர்காலம் குறித்த கவலை வாட்டியது.

அவரிடம் படிக்கும் மாணவர்கள் பலரும் முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வருபவர்கள். அவர்கள் பெற்றோர்கள் யாருமே கல்வியின் அருமையையும் அவசியத்தையும் உணர இயலாத துர்பாக்கியசாலிகள். 2015-ம் ஆண்டில் சபன் குமார் அங்கே பொறுப்பேற்கும்போது இருநூறுக்கும் குறைவான மாணவர்களே பள்ளியில் இருந்தனர். தன் அயராத முயற்சியால் மாணவர்களின் எண்ணிக்கையை முந்நூறுக்கும் அதிகமாக உயர்த்தியிருந்தார். கொரோனா வில்லனாக வந்து நின்றது.

கொரோனாவைவிட வறுமை மிகப்பெரிய நோய். கல்வி தடைபட்டால் அந்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கே வர இயலாத சூழல் உருவாகிவிடும். வயிற்றுப்பாட்டுக்காக ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். மாணவிகளின் நிலைமை இன்னும் பரிதாபமாகிவிடும். திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். பள்ளிக்கல்வியை முடிக்காமலேயே பிள்ளைகளுக்குப் பாலூட்டும் தாய்மாராக அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். யோசிக்க யோசிக்க சபன் குமாருக்கு மன அழுத்தம்தான் அதிகமானது.

வறுமையோடு பிறந்த ஒரு மனிதனை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வலிமை கல்விக்கு மட்டுந்தான் உண்டு என்று சபன் குமார் தன் அனுபவத்தில் உணர்ந்திருந்தார். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். பீகாரின் ஒரு கிராமத்தில் தன் நண்பன் ஒருவரது வீட்டில் தங்கிப் படித்தார். சிரமங்களை எல்லாம் விழுங்கிக் கொண்டு கல்விக்கூடத்துக்குச் சென்றார். அவமானங்களை எல்லாம் சகித்துக் கொண்டு இந்தி பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2004-ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் இணைந்தார். அத்தனைக் காலம் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு. அவரிடம் கல்வி பயில வந்த மாணவர்களுக்கும் நல்ல காலம் ஆரம்பித்தது.

சபன் குமார் கல்வியை, பரிட்சைகளுக்கான களமாக மாணவர்களிடம் திணிக்கவில்லை. புதிய கதவுகளைத் திறக்கும் சாவியாக நினைக்கச் செய்தார். விருப்பத்துடன் படிக்கச் செய்தார். புத்தகங்களை நண்பர்கள் ஆக்கினார். தேர்வு பயத்தை எதிரி ஆக்கினார். அவர்களது சின்னச் சின்ன வெற்றிகளையும் கொண்டாடினார்.

‘ஒவ்வொரு முறை நான் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும்போதும் உலகின் மகிழ்ச்சியான பணக்காரனாகவே என்னை உணர்வேன். ஒருவருக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதைவிட மிக மகிழ்ச்சியான, உயர்ந்த விஷயம் எதுவுமே இருக்க முடியாது.’

நல்லாசிரியராக நல் அனுபவங்களைச் சுமந்து கொண்டு தும்காவில் அமைந்த துமர்தர் உத்ரக்ரமித் மத்திய வித்யாலயாவின் தலைமை ஆசிரியராக 2015-ம் ஆண்டில் வந்து சேர்ந்தார். கொரோனாவில் ஆரம்ப மாதங்களில் ‘எங்கே செல்லும் இந்தப் பாதை’ என்று சபன் குமாருக்கும் புரியவில்லை. வாரங்களும் மாதங்களும் கரையக் கரைய இந்தியா ஆன்லைன் வகுப்புக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டது. அதற்கெல்லாம் வாய்ப்பே  இல்லை என்ற சூழலில், தன் மாணவர்களின் கல்வி கெடாமல் இருக்க தானும் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். பாடம் நடத்த முக்கியமாக என்ன தேவை?

கரும்பலகை.

களிமண், பசுஞ்சாணம், சாம்பல், அரிசி களைந்த தண்ணீர் இவை இருந்தால் போதும். குழைத்து, சுவற்றில் பூசி கருப்பு வண்ணம் அடித்தால் கரும்பலகையை உருவாக்கி விடலாம் என்று சோதனை முறையில் செய்து பார்த்துக் கொண்டார். துமர்தார் கிராமத்துக்குச் சென்றார். பல மாணவர்களின் வீடுகளின் சுவர்களிலும், ஊரில் பொதுச்சுவர்கள் சிலவற்றிலும் கரும்பலகைகளை உருவாக்கச் சொன்னார். பூச வேண்டிய கருப்பு வண்ணப்பூச்சைக் கையோடு எடுத்து வந்தார். கரும்பலகைகள் உருவாகின. துமர்தாரைச் சுற்றியிருக்கும் வேறு சில கிராமங்களுக்கும் சபன் குமார் சென்றார். அங்கும் அவர் பள்ளி மாணவர்கள் வசித்தனர். அவர்களது வீட்டுச் சுவர்களிலும் கரும்பலகைகள் உதித்தன.

சபன் குமார், அவரது பள்ளி ஆசிரியர்கள் என்று மொத்தம் நாலு பேர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இடத்தில் ஆசிரியப் பணி. மாணவர்களுக்கு மாஸ்க், சானிடைசர், சாக்பீஸ், டஸ்டர், நோட்டுகள், புத்தகங்கள் என்று தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பினர். கையில் ஒலிப்பெருக்கிகளை வைத்துக் கொண்டு, தள்ளியிருந்தே கரும்பலகையில் பாடம் நடத்தினர். மாணவர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் உருவாக்கப்பட்ட கரும்பலகைகளில் பாடங்களை எழுதிக் காட்டினர். தள்ளியிருந்தே சந்தேகங்களைக் கேட்டனர். தேர்வுகளும் எழுதினர். சமூக இடைவெளியுடன் அங்கே ‘இடைவெளி விழாமல்’ கல்விப்பணி புதிய பாதையில் தொடர்ந்தது.

ஆன்லைன் வகுப்புக்கு வழியே இல்லாத சூழலில் தலைமை ஆசிரியர் சபன் குமாரின் இந்த கரும்பலகை மாடல் வீடு தேடிக் கல்வி முயற்சி கவனம் பெற்றது. மீடியாக்கள் பாராட்டின. வேறு சில மாநிலங்களிலும் சில ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க, வீடு தேடிச் சென்றனர். சபன் குமார் தன் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு நிறுத்தவில்லை. அந்தந்த ஊர் மக்களுக்கு அந்தப் பேரிடர்க் காலத்தில் தேவையான அத்தியாவசிய உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தார். கொரோனா நோயின் தாக்கம் குறித்த அரசின் தகவல்களையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். சார்ட், கிரையான்ஸ் கொடுத்து குழந்தைகளை வரையச் சொல்லி ஊக்கப்படுத்தினார். ஊரின் பொதுச் சுவர்களில் எண்களையும் எழுத்துகளையும் எழுதி வைத்தார். தேவையான ஓவியங்களை வரைந்து வைத்தார்.

தொடர்ந்து தங்கள் பிள்ளைகள் வீட்டிலிருந்தபடியே படித்ததால், எந்தப் பெற்றோருக்கும் அவர்களது கல்வியை இடைநிறுத்தும் எண்ணம் தோன்றவில்லை. மாணவர்களுக்கும் படிப்பு மீதான பிடிப்பு விட்டுப் போகவில்லை. மீண்டும் பள்ளிகள் இயங்கத் தொடங்கியபோது பெரும்பாலான மாணவர்களும் மாணவிகளும் புத்தகப்பையை எடுத்துக் கொண்டு உற்சாகமாக வகுப்புகளுக்கு வந்தனர். 2022 பிப்ரவரியிலிருந்து அவர்களது ஊரிலிருந்த கரும்பலகைகள் வெறுமனே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

அப்போது சபன் குமாருக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது மாணவர்களையே மாலை நேரத்தில் ஆசிரியர்களாக மாற்றும் திட்டம். நாமறிந்த அறிவொளி இயக்கம்தான். அதன் சற்றே மாறுபட்ட வடிவம். துமர்தார் கிராமத்திலும் சரி, அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் சரி, பெரும்பான்மையான மக்கள் விவசாயக் கூலிகள் அல்லது வேறு கூலி வேலைகளுக்குச் செல்பவர்கள். அவர்கள் பலருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது.

‘உங்கள் வீட்டில், ஊரில் கரும்பலகைகள் இருக்கிறதல்லவா. அதில் உங்கள் பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் எழுதக் கற்றுக் கொடுங்கள். எண்களைக் கற்றுக் கொடுங்கள்’ என்று தன் மாணவர்களிடம் சொன்னார். அந்த மக்களின் தாய்மொழி சந்தாளி. அதை எழுதப் படிக்க சபன் குமாரும் கற்றுக் கொண்டார். மாலை வேலைகளில் அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் குழந்தைகள் ஆசிரியர் அவதாரம் எடுத்தனர்.

முதலில் அந்தப் பெரியவர்கள் தயங்கினார்கள். ‘வேலை இருக்கு’ என்றும், ‘உனக்கு வேற வேலை இல்ல’ என்றும் ஒதுங்கினார்கள். குழந்தைகளைச் சத்தம்கூடப் போட்டார்கள். ஓரிருவர் ஆர்வத்துடன் முன் வந்தனர். ‘வாங்க தாத்தா. நான் உங்க பேரை எழுதச் சொல்லித் தர்றேன்’ என்று பேரன்களும் பேத்திகளும் கிழவர்களின் கைகளில் சாக்பீஸைத் திணித்தார்கள். கிழவிகள் வெட்கப்பட்டு புன்னகை செய்ய, கையைப் பிடித்து எழுத்துகளை வரையச் சொல்லிக் கொடுத்தார்கள். முதன் முதலில் தங்கள் பெயர்களைச் சுயமாக எழுதிப் பார்த்த நொடியில் அவர்களது முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. இப்படியாக ஒவ்வொரு ஊர்களிலும் பெரியவர்களின் கற்கும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக அதிரித்தது. தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு எவ்வளவு அவசியமானது என்பதையும் அந்த மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

‘கைநாட்டு வைங்க’ என்று போஸ்ட் ஆபிஸில் ஊழியர் சொல்லும்போது, ‘பேனாவைக் கொடுங்க சார். இப்ப எனக்குக் கையெழுத்தே போடத் தெரியும்’ என்று நோட்டில் பெயரை எழுதிய பவன் லால் முர்முவின் முகத்தில் அவ்வளவு பெருமை. முதல் முதலாகக் கையெழுத்துப் போட்டு நலத்திட்ட உதவியைப் பெற்றுக் கொண்ட மங்லி பாட்டியின் மனத்தில் தன் வாழ்வில் பெரியதொரு விஷயத்தைச் சாதித்த திருப்தி. ‘அந்தக் காலத்துல பள்ளிக்கூடம் போகல்லாம் எங்களுக்கு வாய்ப்பே இல்ல. இப்ப எங்க பேரப்பிள்ளைங்க எங்களை நாலெழுத்து தெரிஞ்ச படிப்பாளி ஆக்கிட்டாங்க. எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்குது. எல்லாத்துக்கும் காரணம் சபன் குமார் சார்தான்’ என்று பெரியவர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். அவரும் வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் பெரியவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறார். அந்தக் கிராமங்களில் இப்போதெல்லாம் கரும்பலகைகளுக்கு ஓய்வே கிடைப்பதில்லை. யாராவது அதில் ஆசை ஆசையாக எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.

China Central TV என்ற சீன அரசின் கட்டுப்பாட்டில் வரும் தொலைக்காட்சி நிறுவனம், சபன் குமாரின் கரும்பலகைக் கல்விப் புரட்சி குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ஜப்பானின் ஒஸாகா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனது கரும்பலகைத் திட்டம் குறித்து ஆன்லைனில் செமினார் நடத்தியிருக்கிறார் சபன் குமார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அர்ஜெண்டினா என்று சர்வதேச அளவில் சபன் குமாரின் கல்விப் பணிகள் கவனமும் பாராட்டும் பெற்றிருக்கின்றன.

இத்தனையையும் அமைதியாகச் சாதித்த சபன் குமாருக்கு ஓர் ஆசிரியராக சமூக மாற்றத்திற்கு வித்திட்டதில் மனநிறைவு.

‘‘கல்வி மட்டுமே வறுமையை வெல்லும் ஒரே ஆயுதம்’’ என்ற உண்மையை இப்போது இந்த மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். இனி இந்தச் சமூகம் நிச்சயம் முன்னேறி விடும்!’ =