மாண்புமிகு ஆசிரியர்கள் -12
முகில்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிக்கிமின் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி மக்கள், லெப்சா இனத்தவர்கள். இமயமலையும் மலை சார்ந்த வாழ்க்கையும் வாழ்ந்தவர்கள். காலப்போக்கில் பூடான், நேபாளம், டார்ஜிலிங் தொடங்கி ஜப்பான் வரை சென்று பரவி வாழ்ந்தவர்கள். இவர்களது லெப்சா மொழி, நேபாளிய மற்றும் சிக்கிமிய மொழிகளின் கலவையால் அமைந்தது. கலாசாரமும் அப்படித்தான். மிகவும் எளிய மக்கள். இயற்கையைக் கடவுளாக வணங்குபவர்கள். இவர்களது இசையும் நடனமும் பறவைகளின், விலங்குகளின் சத்தங்களிலிருந்தும் அசைவுகளிலிருந்தும் உருவாக்கப்பட்டவையே. காட்டில் விளைபவையும், மூங்கில் குருத்துகளும் இவர்களது விருப்பத்துக்குரிய உணவு. பேராசை இல்லாதவர்கள். கொடுத்து உதவும் குணமுடையவர்கள். காலத்தின் சூழலாலும், கொடூர அரசியல்களாலும் அடையாளமின்றி, எண்ணிக்கையில் குறுகி, ஒடுக்கப்பட்ட இனமாக மாறிய பல்வேறு பழங்குடிகளில் லெப்சா இனமும் ஒன்று. லட்சக்கணக்கில் வாழ்ந்த லெப்சா மக்கள், சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெறும் ஆயிரங்களில் சுருங்கிப் போனது சரித்திரத்தின் மீச்சிறு துயரம்.
இப்படி ஒடுக்கப்பட்ட ஓர் இனத்திலிருந்து எப்போதாவது சில வெளிச்சப்புள்ளிகள் தோன்றும். அந்தப் புள்ளிகளும் உயரத்தை அடைந்த பிறகு, தனக்கான சுய அடையாளம், சுய முன்னேற்றம், சுய வாழ்க்கை, சுய நலத்தோடு ஒதுங்கிவிடுவது வெகு இயல்பான நிகழ்வு. ஆனால், ஒரு சில வெளிச்சப்புள்ளிகள் மட்டுமே, ஓர் அடையாளம் பெற்று வேர்விட்ட பிறகு, தனது சமூகத்துக்கான மீட்பராக மாறி அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் வழிகாட்டும் சூரியனாக பிரகாசிப்பார்கள். அப்படி ஒரு சூரியன்தான் இந்த ஆசிரியை. இவர், ஆசிரியை மட்டுமல்ல, அதற்கும் மேலே.
கீபு சேரிங் லெப்சா (Keepu Tsering Lepcha), 1942-ம் ஆண்டில் சிக்கிமின் லெப்சா பழங்குடி இனத்தில் பிறந்தவர். அவரது தந்தை அப்போதே கஷ்டப்பட்டு படித்து அரசுப் பணியில் இணைந்தவர். ஆகவே, தன் மகளையும் கல்வியில் சிறந்தவளாக மாற்ற முனைப்புடன் இயங்கினார். ஓர் அரசு ஊழியராக அவருக்கு சிக்கிமின் பல்வேறு பகுதிகளுக்கு, குறிப்பாக பின் தங்கிய கிராமங்களுக்கு, பணியிட மாறுதல்கள் நிகழ்ந்தன. குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றார். எங்கே சென்றாலும் தன் மகளின் படிப்புக் கெடாமல் பார்த்துக் கொண்டார். கூடவே தன் குழந்தைகளுக்கு முக்கியமான சமூகப் பாடம் ஒன்றையும் கற்றுக் கொடுத்தார்.
‘நாம் படித்து முன்னேறுவது மட்டும் விஷயமல்ல. நம் கல்வியால் இந்தச் சமூகத்தில் இன்னும் எத்தனைப் பேரை கைதூக்கி விடப்போகிறோம் என்பதே முக்கியம். நம் முன்னேற்றம் என்பது இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்தோடு இணைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.’
கீபுவின் பிஞ்சு மனத்தில் ஆழமாகப் பதிந்த பாடம் இது. விருப்பப்பட்டு கல்வி கற்றார். தந்தையோடு பல்வேறு பின் தங்கிய கிராமங்களுக்குச் சென்றார். தான் சார்ந்த சமூகத்தின் பரிதாப நிலை கீபுவின் மனத்தைச் சங்கடப்படுத்திக் கொண்டே இருந்தது. தான் வளர்ந்து பெரிய ஆள் ஆனதும் ஏதாவது பெரியதாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் வளர்ந்து கொண்டே இருந்தது.
கேங்க்டாக்கில் பள்ளிப்படிப்பை முடித்த கீபு, கல்லூரிப் படிப்புகளுக்காக கல்கத்தா சென்றார். வெற்றிகரமாகப் படிப்பை முடித்த பிறகு, ஆசிரியராக வேண்டும் என்று முடிவெடுத்தார். ‘கல்விக்கூடங்களே சமுதாய முன்னேற்றத்திற்கான திறவுகோல்’ என்ற தெளிவு அவருக்கு இருந்தது. கேங்டாக்கின் என்சே மேல்நிலைப்பள்ளியில் கீபுவின் கற்பித்தல் பணி ஆரம்பமானது.
சில காலத்திலேயே அரசுப் பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பு கீபுவுக்கு அமைந்தது. அந்தக் காலத்தில் திபெத்திய அகதிகள் இந்தியாவை, குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களை அண்டி வந்து கொண்டிருந்த அவலமான சூழல் நிலவிக் கொண்டிருந்தது. 1958-ம் ஆண்டில் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. திபெத்திய மக்களின் ஆன்மிக அரசியல் தலைவரான 14வது தலாய் லாமா, இந்தியாவின் தர்மசாலாவுக்குப் புகலிடம் தேடி வந்தார். அதைத் தொடர்ந்து சுமார் 80,000 திபெத்திய மக்கள், அடுத்த பத்தாண்டுகளில் நம் மண்ணுக்கு வந்து சேர்ந்தனர். சிக்கிமிலும் ஆயிரக்கணக்கானோர் அடைக்கலம் புகுந்திருந்தனர். பெற்றோரை இழந்த பல்வேறு திபெத்திய பெண் குழந்தைகள், கீபு பணியாற்றிய பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கான ஹாஸ்டலிலேயே கீபு தாமாக முன் வந்து தங்கிக் கொண்டார். சொந்த மண்ணையும் பெற்றோரையும் இழந்து, புன்னகையைத் தொலைத்து நின்ற குழந்தைகளின் தாயாக, வாழ ஆரம்பித்தார். கல்விதான் உன்னை உயர்த்தும். படிப்பு மட்டும் உனக்கிருந்தால் போதும், நீ உலகின் எந்த மூலையிலும் வேர்விட்டு வாழலாம் என்று உணர வைத்தார்.
கீபு, ஆசிரியையாகவும் தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றிய ஒவ்வோர் ஆண்டுமே அந்தந்தப் பள்ளிகளின் பொற்காலம்தான். பள்ளிகளின் கட்டமைப்பைச் சரி செய்வது தொடங்கி மாணவர்களின் தேவைகளையும் மனநிலையையும் புரிந்து அதற்கேற்பத் திட்டங்களை வகுத்து கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவது வரை கீபு தனக்குக் கிடைத்த களங்கள் அனைத்திலும் திறனுடன் இயங்கினார்.
காலமும் அனுபவங்களும் அவரை மேலும் உயரத்துக்குக் கொண்டு சேர்த்தன. சிக்கிம் கல்வித்துறையின் துணை இயக்குநராகப் பதவியில் அமர்ந்தார் கீபு. ஆரம்பக் கல்வியில் பாடத்திட்டங்களைக் காலத்திற்கேற்ப புதுமையாகவும் இனிமையாகவும் வளமையாகவும் மாற்றி அமைத்தார். பாடப்புத்தகங்கள் நண்பனாகப் புத்துயிர் பெற்றன. கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு உற்சாகம் கொடுக்க, பிராந்திய மொழிகளில் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தார். இப்படிப் பல மாற்றங்கள். சிக்கிம் மாநிலத்தின் அடிப்படைக் கல்வி அமைப்பு கீபுவின் அவசிய முயற்சிகளால் வலிமை பெற்றது.
தவிர, ஓர் ஆசிரியையாக கீபுவும் இடைவிடாது கற்றுக் கொண்டே இருந்தார். ஆங்கிலம், இந்தி, நேபாளி, பெங்காலி, லெப்சா, பூடியா என்று ஆறு மொழிகள் பேசும் வல்லமையை வளர்த்துக் கொண்டார். 1994-ம் ஆண்டில் கீபு குடிமைப் பணிகள் துறையில் அதிகாரியாகத் தேர்வு பெற்றார். இணைச் செயலாளராகப் பதவியில் அமர்ந்தார். அந்த நொடியில் இருந்து அவர் ஓய்வையே விரும்பவில்லை. எந்நேரமும் சிக்கிம் மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக அடுத்தகட்ட திட்டங்களை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் முனைப்பு காட்டினார். அதே சமயம், கிராம மேம்பாட்டு அமைப்பின் திட்ட இயக்குநராகச் செயல்பட ஆரம்பித்த கீபு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் நலனுக்காகச் செயல்பட ஆரம்பித்தார். சுமார் 28 ஆண்டுகள் அந்தப் பணியைச் செவ்வனே செய்தார் கீபு. அவர் வழியாக பல்வேறு நலத்திட்டங்கள் சிக்கிமின் கடைக்கோடி கிராமங்களுக்கும் சென்று சேர்ந்தன.
இன்னொரு பக்கம், அருகி வரும் லெப்சா இனம் குறித்த கவலைகள் கீபுவின் மனத்தை அரித்துக் கொண்டே இருந்தன. லெப்சா இனத்தின் இரண்டு தலையாய பிரச்னைகள் கல்வியறிவின்மை மற்றும் மதுப்பழக்கம். மதுப்பழக்கத்தால் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையுமே இழந்த லெப்சா குழந்தைகள் அநேகம் உண்டு. அதிலும் சுமார் 99% குழந்தைகள் கல்வியறிவற்றவர்கள். கல்வி மட்டுமே லெப்சா இனத்தின் வருங்காலத்தை ஒளி பொருந்தியதாக மாற்றும் என்று கீபு நம்பினார்.
- கீபு, சன்மரி என்ற ஊரில் ஆதரவற்ற லெப்சா பழங்குடிக் குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றைத் தொடங்கினார். அதற்காக தனது பரம்பரை நிலம் ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டார். ஆறு அறைகள் கொண்ட ஒரு வீடு, ‘லெப்சா காட்டேஜ்’ ஆக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருபது குழந்தைகள் அங்கே இருந்தனர். உணவு, உடை, கல்வி, மகிழ்ச்சி எல்லாமே அங்கே அந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்தன. ஆதரவற்ற ஒரு லெப்சா குழந்தை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தனது காட்டேஜில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் கீபு இயங்கினார். இப்போது லெப்சா காட்டேஜ் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் விரிவடைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே குழந்தைகளுக்கு லெப்சா மொழியும், கலாசாரமும் சேர்ந்தே கற்பிக்கப்படுகிறது. வருங்காலத்திலும் லெப்சா இனத்தின் பண்பாட்டைக் கட்டிக் காத்து, அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வதற்கான அவசியமும் உணர்த்தப்படுகிறது. தவிர, சமூகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் லெப்சா மக்களுக்கு மருத்துவ உதவிகளும், பொருளாதார உதவுகளும் கிடைப்பதற்கு கீபு தன்னாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
சிக்கிமுக்கு ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்கள் மூலம் கிடைக்கும் உதவிகளை முறைப்படுத்தி அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த கீபு முனைந்தார். 1997-ம் ஆண்டில் கீபு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புடன் இணைந்து Human Development Foundation of Sikkim (HDFS) என்ற அரசுசாரா அமைப்பை உருவாக்கினார். சிக்கிமில் வாழும் ஆதரவற்ற மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளியை உருவாக்குவதே அதன் நோக்கம். கேங்டாக்கில் Padma Odzer Choeling School உருவாக்கப்பட்டது. இப்போது அந்தப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பத்தாம் வகுப்பு வரை முடித்து கல்விப் பயணத்தின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார்கள். பலர் முதல் தலைமுறை பட்டதாரிகளாகி சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2005-ம் ஆண்டில் கீபுவின் பெயர் நோபல் அமைதிப் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பெருமை அவருக்கு உண்டு. 2009-ல் இந்திய அரசு அவருக்கு பத்ம வழங்கி கௌரவித்தது. Jewel of Sikkim என்ற பட்டம், CNN-IBN வழங்கிய Real Heroes Award உள்ளிட்ட பல்வேறு பெருமைகளைப் பெற்றுள்ள கீபு, சமூகம் சார்ந்த தனது பணிகளைக் கருத்தில் கொண்டு திருமணமே செய்து கொள்ளவில்லை.
‘எனக்கு எப்போதுமே அதில் ஈடுபாடு இல்லை. ஆனால், எனக்கு நிறைய குழந்தைகள் உண்டு’ என்று நெகிழும் கீபுவை, அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட லெப்சா இனக் குழந்தைகள் பலரும் அம்மா என்றே அழைக்கின்றனர். மாண்புமிகு ஆசிரியராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய கீபு, கல்வியாளராக, சமூக சேவகராக தன் எல்லைகளை விரித்துக் கொண்டு, எண்பது வயதைக் கடந்த பிறகும் ஓயாமல் களத்தில் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார். ‘‘சிக்கிமின் அன்னை தெரசா’’ என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார். சிக்கிம் குழந்தைகள் கீபுவை ‘நிகுன்’ என்று வாஞ்சையுடன் அழைக்கின்றனர். சிக்கிமிய மொழியில் ‘பாட்டி’ என்று பொருள்.
‘நான் ஆரம்பித்து வைத்த செயல்பாடுகள் எல்லாம் என் காலத்தோடு முடிவடைந்து விடக்கூடாது. கடினமான சூழலைக் கடந்து அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்தெடுக்கப்பட்ட அடுத்த தலைமுறையினர் இன்னும் பெரிதாக இந்தச் சமூகக் காரியங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்று வருங்கால சந்ததியினருக்கும் அனுபவ வழி காட்டியாகச் செயல்படுகிறார்.
கீபு சேரிங் லெப்சா – சிக்கிம் மாநிலத்தின் பெருமைமிகு சமூகப் பேராசிரியை! =