மாண்புமிகு ஆசிரியர்கள் -18

முகில்

சிறு வயது முதலே சிவாவுக்குக் கலைகளிலும் ஓவியத்திலும் ஆர்வம். சினிமா பார்க்கப் பிடிக்கும். கலை சார்ந்த ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று கனவு வளர்த்தார். ப்ளஸ் டூ முடித்துவிட்டு, ஓவிய ஆசிரியருக்கான பயிற்சிப் படிப்பை முடித்தார். மகாகவி சுப்ரமணியபாரதி தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுரை வடக்குவெளி வீதியில் அமைந்த சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு
1997-ஆம் ஆண்டில் அமைந்தது.

இளம் வயதிலேயே ஆசிரியர் பணி. அதுவும் தனக்குப் பிடித்த ஓவியத்தைக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு. உற்சாகமாகத் தனது ‘கல்விப்பணியை’த் தொடங்கினார் சிவா. எல்லா மாணவர்களுக்கும் ஓவியத்தில் ஆர்வம் இருக்காது. பொதுவாக ஓவிய வகுப்புக்கு எந்தப் பள்ளியிலும் பெரிய அளவில் முக்கியத்துவமும் இருக்காது. மாணவர்களைப் பொருத்தவரை அது ஓய்வு அல்லது கேளிக்கைக்கான வகுப்பு. அல்லது வேறு சப்ஜெக்ட் ஆசிரியர்கள் ஓவிய வகுப்பைக் கடன் வாங்கி பாடத்தைத் திணிக்கும் வேலையைத் தொடருவார்கள். இதுவே வழக்கம்.

ஆனால், ஓவிய ஆசிரியரான சிவா தனது மாணவர்களிடம் இப்படி வரை, அப்படி வரை என்று அறிவுறுத்தவில்லை. அவர் வரைந்து கொண்டே இருந்தார். மாணவர்களும் தங்கள் போக்கில் சுதந்திரமாக வரைந்தனர். அதில் யாருக்கெல்லாம் உண்மையாகவே ஓவிய ஆர்வம் இருக்கிறது என்று கண்டறியும் வேலையை மட்டும் செய்தார். ஓவியப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தினார். பரிசுகள் கிடைத்தன. பரிசுகள் கிடைக்காவிட்டாலும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும், போட்டிகளை எதிர்கொள்ளும் திறனும் கிடைத்தன. சென்னையிலும் கும்பகோணத்திலும் அரசு கவின் கலைக்கல்லூரிகள் இருக்கின்றன. அங்கே ஓவியமும் இன்ன பிற கலைகளும் கற்றுத் தரப்படுகின்றன என்ற தகவலைச் சொன்னார். ஆம், கலையில் விருப்பம் கொண்ட மாணவர்களுக்கு அந்தத் தகவலே புதிய ஒன்றாகத்தான் இருந்தது.

அப்படி ஆசிரியர் சிவாவின் வழிகாட்டலால், அரசு கவின் கலைக்கல்லூரிகளுக்குப் படிக்கச் சென்ற மாணவர்கள், ஓவியத்திலும் கலைகளிலும் மேன்மை பெற்று, ஒளிமயமான எதிர்காலத்தில் அடியெடுத்து வைத்தார்கள். ஆசிரியர் சிவாவின் வாழ்க்கையிலும் திருப்புமுனை ஒன்று திருமணத்துக்குப் பிறகு நிகழ்ந்தது. ‘நீங்களும் ஏதாவது டிகிரி படிக்கலாமே!’ என்று மனைவி செந்தாமரைச்செல்வி, கணவரிடம் ஆசையைச் சொன்னார். அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டங்கள் வாங்கியவர்.

தமிழ் மீது பேரார்வம் கொண்ட சிவா, தொலைதூரக் கல்வி மூலம் தமிழ்ப் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்து ஆசை ஆசையாகப் பயின்றார். தொல்காப்பியத்தையும், கம்ப ரசத்தையும், சங்க இலக்கியங்கியங்களின் சாற்றையும் அமுதமாக ரசித்து ருசித்துச் சுவைத்தார். எம்.ஏ. தமிழ் முடித்து பி.எட்., படிப்பையும் நிறைவு செய்து தனது கல்வித்தகுதியை உயர்த்திக் கொண்டார்.

‘இப்போது எனது தகுதிக்கேற்ற பணியை நீங்கள் தருவீர்களா?’ என்று பள்ளி நிர்வாகத்திடம் விளையாட்டாகக் கேட்ட விஷயம் ‘புதிய பாதையை’ அமைத்துக் கொடுத்தது. 2003-ம் ஆண்டில் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார் சிவா. மிகப்பழைமை வாய்ந்த ‘மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி’யில் பணி. மதுரையைச் சுற்றி வாழும் கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பெரும்பான்மையானோர் பயிலும் பள்ளி. புதிய தமிழாசிரியருக்கு ஏமாற்றங்களே பரிசாகக் கிடைத்தன.

தமிழைத் தாய்மொழியைக் கொண்ட மாணவர்கள். ஆரம்பப்பள்ளியில் தமிழைப் பாடமாகப் படித்தவர்கள். ஆனால், அவர்கள் தமிழில் எழுதத் திணறினார்கள். எழுத்துக்கூட்டி வாசிப்பதற்கும் தடுமாறினார்கள். திருக்குறளைக்கூட வெறும் மனப்பாடப்பகுதியாகவே கருதினார்கள். எழுதும் ஒவ்வொரு வாக்கியத்திலும் பிழைகளின் ஆக்கிரமிப்பு. அமுதைப் பொழியும் தமிழை விஷமாக நினைத்துப் பதறினார்கள்.

ஓவிய ஆசிரியராக மாணவர்களின் மனத்தை அன்பால் ஆக்கிரமித்த சிவா, தமிழாசிரியராகத் திகைத்து நின்றார். ஒவ்வொரு தமிழ் வகுப்பும் போராட்டங்களுடன் கழிந்தது. மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும்போது விரக்தி மேலிட்டது. ஒரு கட்டத்தில் மீண்டும் ஓவிய ஆசிரியராகவே இருந்து விடலாம் என்று முடிவெடுத்தார் சிவா. அதற்கான கோரிக்கையை எழுதிக் கொடுத்தார். அப்படிப் பணி மாறுவது என்பது நிர்வாகச் சிக்கல்கள் நிறைந்தது. அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது. தமிழாசிரியராகவே தொடர வேண்டிய சூழல்.

ஆசிரியர் சிவா, அந்தச் சவாலை விரும்பி எடுத்துக் கொண்டார். பிழை மாணவர்களிடம் இல்லை. கற்றுக் கொடுக்க வேண்டிய என்னிடம்தான் இருக்கிறது. மாணவர்களுக்கு ஏற்ப மாற வேண்டியது, கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டியது அவசியம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டார். எந்த ஒரு மாணவனுக்கும் ஒரு குறிப்பிட்ட பாடம் பிடிக்கவில்லை என்பதே தவறு. அவன் விரும்பும் விதத்தில் அந்தப் பாடம் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அல்லது பாடப்புத்தகம் அமையவில்லை என்பதே உண்மை. தமிழ் பேசும் மாணவர்கள் என்றாலும் தமிழ்ப் பாடப்புத்தகத்தின் மொழியானது அந்நியத்தன்மையோடே இருப்பதை சிவா உணர்ந்தார். அந்தத் தமிழின் சுவையை மாணவர்களுக்கு விருப்பமானதமாக மாற்ற ‘கலைப்பாதையை’த் தேர்ந்தெடுத்தார்.

நாட்டுப்புறக் கலைகளிலும் இசையிலும் ஆர்வம் கொண்டிருந்த ஆசிரியர் சிவா, மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். அவர்களைக் குழுக்களாகப் பிரித்தார். செய்யுள்களை, திருக்குறளைப் மெட்டுப் போட்டு பாடல் வடிவில் வந்து பாட வேண்டும் என்றார். ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் உறங்கிக் கொண்டிருந்த இசைக்கலைஞன் உருப்பெற்றான். அது இசையா, ஓசையா என்றெல்லாம் சிவா பிரித்துப் பார்க்கவில்லை. அந்தத் தமிழ்ச் செய்யுள் மாணவர்களின் விருப்பத்துக்குரிய வடிவில் அவர்கள் மனத்தில் பதிய ஆரம்பித்ததை உணர்ந்து மகிழ்ந்தார்.

இது குறள். இதுவே அதற்கான பொருள். இதை மையமாகக் கொண்டு ஒரு கதை சொல்லுங்கள். அல்லது நாடகம் எழுதி நடித்துக் காட்டுங்கள். மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்களது பேச்சுத் திறமையைத் தூண்டினார். பொதுவான தலைப்புகளில் பேசச் செய்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களில் சிவாஜி கணேசன் வீராவேசமாகப் பேசும் வசனங்களைப் பேச மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். அப்படிப் பேசப் பேச அவர்களுக்குள் வார்த்தைகள் வீரியமாகக் கிளைபரப்பின. உச்சரிப்பும் உடல்மொழியும் வசப்பட்டன. இதுபோன்ற பயிற்சிகள் அவர்களது பரிட்சைத் தாள்களிலும் ‘பிழையில்லா தமிழாக’ வளம் பெற்றன. ஒவ்வொரு மாணவனுமே தமிழ் வகுப்புக்காகக் காத்திருக்கும் வசந்த காலம் அந்த மேல்நிலைப்பள்ளியில் உருவாகத் தொடங்கியது.

சிவா உடன் பணியாற்றிய சக தமிழாசிரியர்கள் பாலமுருகன், முத்துக்குமார் போன்றோர் கைகோத்தனர். தமிழுக்கு விழா எடுத்தனர். மொழி விளையாட்டுகளை நடத்தினர். தமிழை விட்டு விலகியிருந்த மாணவர்கள், ‘செம்மொழியான தமிழ்மொழியாம்!’ என்று உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டாடினர். இந்த உற்சாகம் மற்ற ஆசிரியர்களையும் தொற்றிக் கொண்டது. வகுப்பறைகள் பாடங்களை மாணவர்கள் மீது திணிக்கும் தண்டனை அறையாக இல்லாமல், அவர்களோடு உரையாடி, உறவாடி கல்வி கற்பிக்கும் உற்சாகக் கூடங்களாக மாறின.

மாணவர்களிடம் குழு மனப்பான்மையை உருவாக்க சிவா முனைப்புடன் செயல்பட்டார். ஐவகை நிலங்கள் குறித்து பாடப்புத்தகத்தில் இருக்கும் தகவல்களைக் கொண்டு ஓவியம் தீட்டச் சொன்னார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று மாணவர்கள் திணைகளின் பெயர்களில் குழுக்களாகத் தம் திறமையை வெளிப்படுத்தினர். குழுவாகச் சேர்ந்து செயல்படும்போது ஒவ்வொரு மாணவனும் தயக்கத்தை உடைத்து, தனது பங்களிப்பை ஆர்வத்துடன் வெளிப்படுத்தினான். ஆசிரியர் சிவா, கலையின் உதவியால் ஒளி படைத்த, உறுதி கொண்ட, மதி நிறைந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் முனைப்போடு செயல்படத் தொடங்கினார்.

தனக்குப் பள்ளியில் கிடைத்த அனுபவங்களை, மாணவர்களுடனான உற்சாகக் கணங்களை, தனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை, சமூக நோக்கில் தான் புரிந்துகொண்ட விஷயங்களை எல்லாம் ‘ஆசிரியர் நாட்குறிப்பு’ என்ற தலைப்பில் முகநூலில் எழுத ஆரம்பித்தார் சிவா. அது மெதுமெதுவாகக் கவனம் பெறத் தொடங்கியது. ‘முத்துக்குமார் சார் வகுப்புல ஒரு பையன் பேசவே மாட்டான். ஒரு வார்த்தை பதில் சொல்லக்கூட ரொம்ப யோசிப்பான். அவனுக்கு நாடகத்துல ஒரு கேரக்டர் கொடுத்து, நாலைஞ்சு வசனம் பேசச்சொல்லி மேடையேத்துனோம். அவன் பேசப்பேச அவனோட அப்பா, ‘என் மகன் எப்படி பேசுறான் பாருங்க சார்’னு கண்ணீர் விட்டாரு!’ என்று தன் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதினார். பல்வேறு ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், களச் செயற்பாட்டாளர்கள் சிவாவிடம் உரையாடத் தொடங்கினார்கள். ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியரும், எழுத்தாளரும் கல்விச் செயற்பாட்டாளருமான ச. மாடசாமி, சிவாவைத் தேடி வந்து உரையாடிச் சென்றார். இதெல்லாம் ஆசிரியர் சிவாவை அடுத்தக் கட்டம் நோக்கிச் சிந்திக்கச் செய்தது. மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களைச் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தார்.

‘ஆசிரியர் நாட்குறிப்பு பக்கத்தின் சார்பாக ஆசிரியர் சந்திப்பு’ என்றொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவதாகச் சொன்னார்கள். கலந்துகொண்டது இருபதுக்கும் குறைவான ஆசிரியர்கள் என்றாலும் உற்சாகமான சந்திப்பாக அது அமைந்தது. கலந்துகொண்ட ஆசிரியர்கள் தயக்கமின்றி வெளிப்படையாக உரையாடினார்கள். புத்துணர்ச்சியுடன் திரும்பினார்கள்.

அடுத்து சற்றே பெரிய நிகழ்வாக கோடை விடுமுறையில் மூன்று நாள்கள் ‘ஆசிரியர் பன்முகப் பயிற்சி’ முகாம் நடத்தலாம் என்று திட்டமிட்டார் சிவா. அதிகபட்சம் 30 ஆசிரியர்கள். கிராமியக் கலைப்பயிற்சி, நடிப்புப் பயிற்சி, நாடக உத்தி, நடனப் பயிற்சி, கலந்துரையாடல் என்று நிகழ்வுகள் திட்டமிடப்பட்டன. எல்லோரும் செலவுகளைச் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தார்கள். இதை எல்லாம் நடத்தும் அமைப்புக்கு ‘கலகல வகுப்பறை’ என்ற பெயரைச் சூட்டினார் சிவா. கல்வி என்றால் என்ன, ஓர் ஆசிரியரின் பங்களிப்பு என்ன, ஆசிரியர்கள் எப்படித் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும், மாணவர்களின் மனநிலையை உணர்ந்து எப்படி வழிநடத்த வேண்டும், ஓர் ஆசிரியரின் தோழமை என்பது எந்தவிதமான மாற்றங்களை உண்டாக்கும், கலைகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் என்பது மாணவர்களை எப்படியெல்லாம் மேம்படுத்தும் – இப்படி பலவிதமான உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

குறும்படங்கள், ஆசிரியர்களை மையமாகக் கொண்ட உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஆடல், பாடல், கொண்டாட்டம் என்று மூன்று நாள்களில் முப்பது ஆசிரியர்களும் மனத்தடைகள் அகன்று புதிய சிந்தனைகளுடன் கிளம்பிச் சென்றார்கள். இதே குழுவாக மீண்டும் சந்திக்கலாம் என்ற ஆலோசனையை சிவா வரவேற்கவில்லை. காரணம் ஒரு சிறு குழுவாக முடங்கிவிடக்கூடாது என்ற எண்ணமே. புதிதாக வேறு ஆசிரியர்களுக்கு முகாமை நடத்தலாம், உற்சாகத்தைப் பரப்பலாம் என்றே திட்டமிட்டார். கலகல வகுப்பறை அமைப்பு நடத்திய முகாம்களிலும், பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ‘மாற்றி யோசிக்க’த் தொடங்கினர். அவரவர் வேலை பார்க்கும் பள்ளிகளில் நல் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.

‘கலையின் வழி கற்பித்தல் என்பது புதிய முறையல்ல. யார் யாரோ எப்போதோ பயன்படுத்திய முறைதான். ஆனால், வகுப்பறைகள் வெறும் மதிப்பெண் தொழிற்சாலைகளாக மாறுவதைத் தடுக்க, இந்தக் கலை வழிக் கற்பித்தல் முறையை யாராவது அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கடத்துதல் அவசியம்.’

இப்படித் தொடர்ந்து இயங்கும் ஆசிரியர் சிவாவின் வகுப்பறையில் எப்போதும் ஒரு கதைப்பெட்டி இருக்கிறது. கதைப் புத்தகங்களும், பிற புத்தகங்களும் நிறைந்த ஓர் அட்டைப்பெட்டி. இது மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குகிறது. புத்தகங்களே மாணவர்களின் கற்பனைத் திறனை, சிந்திக்கும் ஆற்றலை, சமூக அக்கறையைத் தூண்டும் வலிமையான கருவி. ஆகவே கலகல வகுப்பறை, மெல்ல மலரும் ஆசிரியர், கரும்பலகைக்கு அப்பால், சீருடை, கல்வியினாலாய பயனென்கொல்?, ஆசிரிய வாழ்வினிது என்று தொடர்ந்து புத்தகங்களையும் எழுதி வருகிறார் சிவா.

‘தேர்வை மதிப்பீடு என்று கூறுகிறோம். எவ்வளவு கற்றிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதன் மூலம் மதிப்பெண் குறைந்தவர்களின் சிரமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான கற்பித்தல் முறையை உருவாக்க வேண்டும். அதுதானே உண்மையான மதிப்பீடாக இருக்க முடியும்.’

அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று மாணவர்களுக்கு அறிவுரை சொன்னால் ஒருபோதும் சரி வராது.  ஒரு மாணவனாக, சமூகத்தின் பிரதிநிதியாக என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்பதை மட்டும் எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர் சிவா. பல்வேறு தலைப்புகளில் மாணவர்களோடு சேர்ந்து உரையாடுகிறார். ‘காதல்’ என்ற தலைப்பில் தொடங்கிய உரையாடல், பல நாள்களுக்கு சுவாரசியத்துடன் நீண்டு, மாதவிடாய் குறித்த படத்துடன் முடிவடைகிறது. பருவ வயது மாணவர்கள் குழப்பமும் குறுகுறுப்பும் நீங்கி தெளிவு பெறுகின்றனர்.

‘கலைகளும் அடங்கிய செயல்வழிக் கற்றல் முறையே என்றைக்கும் சிறந்தது. கற்பித்தலில் தொழில்நுட்பங்களை தேவைக்குப் பயன்படுத்த வேண்டும். ஓர் உயிர்ப்பான ஆசிரியர் உணர்வுபூர்வமாகக் கற்றுக் கொடுக்கும் விஷயங்களை, ஸ்மார்ட் கருவிகளால் ஒருபோதும் ஈடு செய்யவே இயலாது’ என்பது ஆசிரியர் சிவாவின் அழுத்தமான கருத்து.

ஒருமுறை ஆசிரியர் தினம் கொண்டாட மாணவர்களிடம் நிதி கேட்டபோது, ஒரு மாணவன் கேள்வி கேட்டான். ‘ஆசிரியர்கள், குழந்தைகள் தினம் கொண்டாட நிதி தராதபோது, நான் மட்டும் ஏன் தர வேண்டும்?’

அந்த மாணவனின் கேள்வியிலிருக்கும் நியாயத்தைப் பாராட்டிய ஆசிரியர் சிவா, ஆசிரியர்களிடம் நிதி திரட்டி குழந்தைகள் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடினார். ஆம், கலகல வகுப்பறைகளே நல்ல மாற்றங்களைச் சாத்தியமாக்குகின்றன. =