வாழ்வியல் திறன்கள்
முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்
உலகில் ஒவ்வொருவரும் அவரவர் தோன்றும் துறையில் புகழ் பெற வேண்டும் என்பது இயல்பான விருப்பம். அதற்கான முயற்சிகளில் முனைப்புடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டும், உரிய பயிற்சிகளை மேற்கொண்டும் முதன்மைநிலை அடைவது வெற்றி நிலை. ஆனால் அந்நிலையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று அறப்பாதையிலிருந்து அகன்று, குறுக்குவழியில் அடைய முயல்வது, குன்றிய நிலை. அண்மையில் விளையாட்டுப் போட்டிகளில் உச்சத்தைப் பெற வேண்டும் என்ற உந்துதலில் மிக இளைய வயதில் தங்களின் அரிய உயிரை இழந்த இருவரின் செய்திகள் நம்மை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. இரண்டு செய்திகளும் மிகப் பிரபலமான முன்னணி தினசரியில் வெளியிடப்பெற்றன.
28.2.2023, செவ்வாயன்று பக்கம் 4 இல் வெளியிடப்பட்டது. மாநில அளவிலான ஆணழகன் போட்டி வடலூரில் நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்க 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்திருந்ததாக அறியப்பெறுகின்றது. குறிப்பிட்ட 55 கிலோகிராம் எடைப்பிரிவில் பங்கேற்க மிக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்த 21 வயது இளைஞர் பயிற்சியின் இடைவெளி நேரத்தில் உணவருந்திய போது திடீரென்று மயங்கி விழுந்ததாகவும், அவரை உடனடியாக மருத்துவச் சிகிச்கைக்காக மருத்துவமனை அழைத்துச்சென்றதாகவும், ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் அவரை சோதித்து, அவரை இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும் செய்தி வந்திருந்தது. இந்த செய்தியை அறிந்து சிந்தித்து போது, அந்த இளைஞர் வழிகாட்டிகளின் உதவியோடு பயிற்சி மேற்கொண்டிருந்த போதும், கடுமையான பயிற்சி மட்டுமின்றி எப்படியாவது வென்று சாதிக்க வேண்டும் என்ற மனஉளைச்சலிலும் இருந்திப்பார் என்றும் நமக்கு அறியமுடிகின்றது.
‘உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்” (குறள்.473)
என்று ‘வலியறிதல்’ என்ற அதிகாரத்தில் திருவள்ளுவரின் நெறிகாட்டல் சிந்தையில் தட்டியது.
- தன்னிடம் உள்ள வலிமையின் எல்லை அறியாதிருத்தல்
- எப்படியும் சாதித்துவிட வேண்டும் என்ற ஆர்வமிகை
- பயிற்சி என்ற பெயரில் எல்லை கடந்த மிகக்கடுமையான வழிகளில் முயலுதல்
- தம்மின் இலக்கை அடைந்துவிடவேண்டும் என்று கண்மூடித்தனமாக செயல்படுதல்
- இறுதியில் எண்ணிய நோக்கத்தை நிறைவுசெய்யாமல் தேங்கிவிடுதல்.
மேற்குறித்த குறளானது. ஒருவர் தம்மின் வலியறிந்து செயலை உரிய வண்ணம் செயல்படுத்தத் தவறும் போதுதான் சாதனைகள் சரிகின்றன என்ற செயல்வீழ்ச்சியின் அடிப்படைக் காரணத்தை உணர்த்துகின்றது. இவ்வகையில் செயல் குன்றும் நிலைக்கு ஆட்படுவர்கள் பலராக அமைந்துவிடுகின்றனர் என்ற உணர்த்தலும் சிந்தனைக்குரியது. மேலும் பத்திரிக்கையில் அமைந்துற்ற செய்தியின்படி அந்த இளைஞர் தம்மின் உயிரை இழந்தது ஈடுசெய்ய இயலாத இழப்பாக இருப்பதுதான் இன்னலின் உச்சமாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, 30.03.2023 வியாழனன்று, முதன்மை நாளிதழில், பக்கம் 8 இல் “பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து சாவு” என்ற செய்தி மேலும் அதிர்ச்சியைத் தந்தது. இந்தச் செய்தியில் கூடுதலாக, பல மாவட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற அந்த 25 வயது இளைஞர், மாநில ஆணழகன் போட்டியில் முதன்மை பெற வேண்டும் என்ற உந்துதல் காரணமாக “ஸ்டீராய்டு ஊசி” பயன்படுத்தியதாக வெளியாகியிருந்தது. அவரைப் பரிசோதித்து மருத்துவத்தை மேற்கொண்ட மருத்துவர்கள், இயற்கை எய்திய இளைஞர், அதிக அளவில் ஸ்டீராய்ட் ஊசிகளை எடுத்துக்கொண்டதால், 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மருத்துவரின் முடிவுகள் பலருக்குச் செய்தியாக இருப்பினும் இதுபோன்று உயர்நிலைப் போட்டிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முயல்பவர்களுக்கு உரிய அறிவுறுத்தலாக உள்ளது எனலாம்.
“கடிந்த கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்” (குறள்.658)
என்று குறள் ஆன்ற நெறிமுறையை உலகிற்குத் தருகின்றது. செய்யத்தகாதன என்ற கடிந்து விலக்கப்பெற்ற செயல்களை ஏதோ ஒரு காரணத்திற்காகப் பற்றி அந்தச் செயல்களை ஒரு வேளை நிறைவேற்றினாலும் இறுதியில் துன்பத்தையே தரும்.
- வாழ்க்கையில் இலக்குகள் மிகவும் இன்றியமையாதது
- ஆனால், அவ்விலக்குகளை அடையும் வழிமுறைகளும் முறையானதாக இருக்க வேண்டும்
- தவறான வழியில் மேற்கொள்ளும் எந்த முறைகளும் தற்காலிக வெற்றியை மட்டுமே நல்கிட முடியும்
- அறமற்ற வழியில் பெறக்கூடிய எந்த ஆக்கங்களும் மனநிறைவைத் தந்திடாது
இவ்வாறாக,விளையாட்டுப் போட்டிகளில் விபரீத வழிகளில் முயன்று பெறற்கரிய உயிரை இழக்கும் நிலையை எண்ணிப்பார்க்கும் போது வருத்தமாகவுள்ளது. போட்டிகளில் பங்பேற்பது கூட ஒரு வெற்றிதான் என்ற மனப்பான்மையை சிறிய வயதிலிருந்தே, ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் அழுத்தமாக நிறுவி, அவர்களின் மனப்பான்மையை விரிவு செய்ய வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், சான்றோர்களின் காலத்திற்குகந்த கடமையாகும்.
“உள்ளியது எய்தல் எளிது” (குறள்.540) என்ற குறள்வழி, மனத்தின் ஆழத்தில் “முடியும்” என்ற உரத்த நம்பிக்கையை விதைத்து, அன்றன்று உந்து சக்தியுடனும், மாறா ஊக்கத்துடன் முயல்பவர்களுக்கு ஸ்டீராய்ட்ஸ் தேவையிருக்காது, விடாமுயற்சியே உற்ற சக்தியாக அமைந்து வெற்றி அரியாசனத்தில் அமர்த்துவது உறுதி. உயிரிழப்புகள் இதுபோன்று நிகழ்வதை இல்லாமல் அறிவுறுத்தி நெறிபடுத்துவது சமூக ஆர்வலர்களின் உரிய கடமையாகவும் உள்ளது. l