வெற்றி நமதே – 4
திரு.M.G.இராஜமாணிக்கம் IAS
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ’ என்று போன தொடரில் பேசினோம். ஆனால், நம்மில் நிறையப் பேர் எத்தனையோ கனவுகளை சுமந்துகிட்டு, எவ்வளவு முயற்சி செஞ்சாலும், வெற்றி என்கிறது கனவாகவே போய்விடும். அப்புறம் என்ன, நாளடைவில் அந்த முயற்சியையே கைவிட்டு விட்டு, நாம விரும்பினது தான் கிடைக்கல அதனால கிடைத்தத விரும்புவோம்னு, போகிற போக்கில கிடைக்கிற வேலையை செஞ்சு வாழ்க்கையை நகர்த்திக்கிட்டு இருப்போம்.
எவ்வளவு முயற்சி செஞ்சாலும் ஏன் வெற்றி பெற முடியலயேன்னு தெரியுமா?ஏன்னா, நமக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்கிற திறமை என்னதுன்னு கண்டுபிடிச்சு வளர்க்கிறத விட்டுவிட்டு, சமூகத்தோட எதிர்பார்ப்புல நாம போயி சிக்கிக்கிறது தான்.
வெற்றியாளருக்கு இரண்டு முக்கியமான அடையாளம் இருக்கு.
- தன்னோட திறமையைக் கண்டுபிடிக்கிறது.
- அதை மென்மேலும் வளர்த்துக் கொள்வது.
ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும், இயல்பாகவே ஒரு திறமை சிங்கம் போல தூங்கிட்டு இருக்கும். தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை எவன் தட்டி விடுகிறானோ, அவனே நினைத்ததைச் சாதிக்கிறான்.
ஆனா, இதுல கொடுமை என்னன்னா, பல நேரங்களில் நமக்குள்ள தூங்கிட்டு இருக்கிறது சிங்கம் என்று கண்டுபிடிக்க முடியாமலேயே, நம்முடைய வாழ்க்கை முடிஞ்சிடுது.
ஒரு சின்னக் கதை, கோழி கூண்டுல எப்படியோ ஒரு பருந்து முட்டையும் சேர்ந்திடுது. கோழியும் அது தெரியாம அடைகாத்து குஞ்சு பொறிக்குது. அப்புறம் கோழியும் குஞ்சுகளும் தோட்டத்துல மேயும் போது, மேலே ஒரு பருந்து பறக்குது, அதைப் பார்த்த பருந்து குஞ்சு, கோழி கிட்ட கேக்குது நம்மளால உயரத்துல பறக்க முடியாதான்னு? அதுக்கு கோழி ஒரு dialogue அடிக்குது.
“உயர உயரப் பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாதுன்னு”
அந்த பருந்து குஞ்சு மாதிரி தான், நம்மள்ள பல பேர் வாழ்க்கை, நம்மளோட திறமை என்னன்னு கண்டுபிடிக்காமலேயே கோழி குஞ்சாகவே வாழ்ந்திடுகிறோம். அதனால நண்பர்களே, திறமையைக் கண்டு பிடிக்கிறது தான் வெற்றிக்கான முதல் படி.
அப்படி கண்டுபிடிச்ச திறமையை வளர்த்தோம்னா, வெற்றி நம்ம வாசப்படியில வந்து கால் மேல கால் போட்டு உட்கார்ந்திடும். அதனால, பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஜொலிக்கிற மாதிரி, தன்னோட திறமையை தீட்டத் தீட்டத் தான் ஒருவன் சாதனை படைக்கிறான்.
உதாரணமா, கிராமத்துல ஒருத்தனுக்கு (ஒருத்தின்னு சேர்த்து வாசிச்சுக்கோங்க ஆணுக்குப்் பெண் சளைத்தவர்களில்லை) பயங்கரமான நீச்சல் திறமை, அவனுக்கு திறமை இருக்கின்றதுக்காக நேரா Olympic -ல போய் தங்கப்பதக்கம் வாங்கிட முடியுமா?, அவனோட திறமை வெற்றிக்கான முதல் படி மட்டுமே. அவனுக்கு முறையான பயிற்சி கொடுத்து, அவனோட திறமையை வளர்த்தோம்னா, கண்டிப்பா Olympic-ல gold medal வாங்குவான்.
அதுமாதிரி, தனது லட்சியத்தை நோக்கிய பயணத்தில், எவன் ஒருவன் தனது திறமையை வளர்த்துக் கொள்கிறானோ, அவனே மாபெரும் வெற்றியாளனாகிறான்.
நம்ம கிட்ட வேற எதுவுமே இல்லை என்றாலும், நம்பிக்கையும் திறமையும் மட்டும் இருந்தாலே போதும், ஒரு நாள் உலகையே வெல்லலாம்.
அப்படி ஒண்ணுமே இல்லாம, தன்னோட திறமை ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து, உலகத்தையே சிரிப்பால் கட்டிப் போட்ட ஒருவரின் சரித்திரக் கதை தான் இன்னைக்கு சொல்லப் போறேன்.
‘வறுமை நிலைக்குப் பயந்து விடாதே, திறமை இருக்கும் மறந்து விடாதே’என்று பட்டுக்கோட்டை பாடுனது போல, வறுமை வறுத்தெடுக்க, தன் திறமையால் மட்டுமே உலகையே தன் பக்கம் ஈர்த்த அந்த சரித்திர கலைஞன் வேறு யாரும் இல்லை, தனது நகைச்சுவை மற்றும் நடிப்புத்திறனால் பொடிசு முதல் பெருசு வரை சிரிப்பால் கட்டிப்போட்ட, நகைச்சுவை உலகின் முடி சூடா சக்கரவர்த்தி சார்லி சாப்ளின் தான்.
ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பா, லண்டன் மது விடுதியில் சில்லறைக்குப் பாடும் அம்மா, என மிகச் சாதாரண குடும்பத்தின் இரண்டாவது மகனாகப் பிறந்தவன் தான் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்.
சிறுவயதிலேயே மனநோயாளியாய் மாறிய தாயின் அரவணைப்பில், வறுமை தான் அவனை வளர்த்து எடுத்தது. எப்போதும் பசியின் பிடியில் படுத்துக் கிடக்கும் மகனின் பசியைப் போக்க, அவனது அம்மா சன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு, வீதியில் நடக்கும் நிகழ்வுகளைப் பாட்டு பாடி நடித்துக் காட்டுவாள். அப்ப நம்மல மாதிரி சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்த ஆள் இல்லை சாப்ளின். அம்மாவோட பாட்டையும் நடிப்பையும் சாப்பிட்டு வளர்ந்த ஆள்.
அவனுக்குள்ள ஒளிந்திருந்த நடிப்பு திறமை அப்படித்தான் துளிர்விட்டது. பிற்காலத்துல தனது திறமையான நடிப்பால் பின்னிப் பெடலெடுத்தது இப்படித்தான்.
பின்னர், அவரது அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போக, வீட்டு வாடகை கூட தர முடியாமல் குடும்பம் வறுமையில் வாடியபோது ஆதரவற்றோர் இல்லத்துக்கு தன் சகோதரனோடு மாறிய சாப்ளின், பசியால் அழாத நாட்களே இல்லை.
“உலகையே சிரிக்க வைத்தவன்,கண்ணீரைச் சுமந்து வளர்ந்திருக்கிறான்.”
ஒருமுறை சாப்ளின் ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது, லண்டன் மியூசிக் ஹாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவனுடைய அம்மா தொண்டை வேதனையால், பாடி நடிக்க முடியாமல் அவதிப்பட கூட்டத்தில் ஒரே கூச்சல். அவமானத்தோடு மேடையை விட்டு இறங்கிய தாயின் மானத்தைக் காக்க நினைத்தானோ என்னவோ, அவனே மேடை ஏறி பாட்டுப்பாடி நடிக்க, காது கிழியுற அளவுக்கு சிரிப்பொலிவுடன் சில்லறையும் சீறிப் பாய்ந்தன.
பின்னர் எட்டு வயசுல ஜாக்சன் என்ற நாடக குழுவுல இணைந்து பயிற்சி எடுத்து, தனக்குள்ள தூங்கிட்டு இருக்கிற திறமையைத் தட்டி விடுகிறான் சாப்ளின். இருந்தாலும் மேடை பயத்துல தான் சின்ன வயசுல பயபுள்ள நடிச்சிருக்கு Building strong but, Basement weak மாதிரி.
உண்ண உணவின்றி லண்டன் வீதிகளில் அலைந்து திரிந்து, யாராவது ஒருத்தன் நம்மல பாத்து உதவ மாட்டானான்னு நடந்த சாப்ளினின் திறமையை, உலகம் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது.
அப்புறம் நாமெல்லாம் பார்த்து சிரிச்ச சாப்ளின் இல்லை. தொடக்க காலத்தில் நீண்ட வசனங்கள் பேசி சாதாரண உடை அணிந்து நடிச்ச ஆள் தான். ஆனால், ஒரு நாள் ஒரு சர்க்கஸ் குழுவோட நாடகத்தில் ஜோக்கடிச்சு பேசி நடிச்ச சாப்ளினை யாருமே ரசிக்கல, இதப்பார்த்து வெறுப்பான நம்மாள்
manager – ட்ட போயி என்னப்பா இவங்கெல்லாம் மனுசனா இல்ல மிருகமாப்பா? ஆடாம அசையாம, ஒரு உணர்வு இல்லாமல், சிலை மாதிரி உட்கார்ந்திருக்காங்கன்னு ஆதங்கப்பட, அதுக்கு அந்த manager, இவங்கல்ல பல பேருக்கு நீ பேசுற English புரியாதுப்பா. பாஷை தெரியாத ஆட்கள் கிட்ட நீ பேசிட்டு அவங்கள குறை சொன்னா எப்படின்னு கேட்க, சுருக்குன்னு குத்துச்சு நம்மாளுக்கு. யோசிச்சாப்ல, மொழி தெரியாத ஒருத்தனை எப்படி சிரிக்க வைக்கிறதுன்னு. அப்படி டக்குனு தோன்றிய யோசனை தான் body language லேயே உடல் அசைவையும், முக பாவனையையும் வச்சி act பண்ணி மக்களை சிரிக்க வைக்கலாம்னு Idea click ஆக, தூங்கி வழிஞ்சிட்டு இருந்த கூட்டம் குதூகலமா கும்மாளம் போட, 17 வயசுல, தான் பேசாம தன்னை பற்றி பேசவச்சது இப்படித் தான்.
தனக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கிற திறமை இதுதான்னு எவன் கண்டுபிடித்து வளர்க்கிறானோ, அவன் சாமான்யனா இல்ல, சாதனையாளானாகத் தான் வருவான் என்பது சரித்திரம். அப்படித்தான் body language ல உலகைச் சிரிக்க வைக்க முடியும்னு கண்டுபிடிச்ச சாப்ளினின் திறமைக்கு, தீனி போடற வாய்ப்பு வந்தது.
கார்னோ என்ற குழுவுடன் அமெரிக்காவுக்கு நடிக்கப் போறதுக்கு வாய்ப்பு கிடைக்க, அவனது அபாரத் திறமையைப் பார்த்து புகழ் பெற்ற கீஸ்டோன் திரைப்பட நிறுவனத் தயாரிப்பாளர் மாக் சென்னட் சாப்ளினுக்கு அவரது நிறுவனப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்.
ஜான் ஏறுன்னா முழம் சறுக்குகிற மாதிரி, மெல்ல கலைஞனா வளர ஆரம்பிச்ச சாப்ளினோட, ஆரம்ப படம் எல்லாம் தோல்வியில முடிய, தனது திறமையை வேற மாதிரி காட்ட ஒரு முயற்சி எடுத்தாப்ல.
அப்படித்தான், சக கலைஞர்களின் உதவியோட குண்டா இருந்த ஆளோட தொள தொள pant, சின்ன சட்டை, தொப்பி, கைத்தடி, பெரிய மீசைன்னு costume போட, மீசை முகபாவனையை மறைக்கிறது என்று ஒரு சைடு மீசையை வெட்ட அது அதிகமா போகுது. அப்புறம் அடுத்த பக்கத்த வெட்டுன்னு கடைசியில மிஞ்சின அந்த மீசை தான் நாம் இப்ப வரை பார்க்கிற சாப்ளினோட முகம். அப்படியே பெரிய சைஸ் shoe போட்டுக்கிட்டு தள்ளாடி நடந்து மேடையில ஏறி கால் தடுக்கி விழ சாப்ளினோட நடை, உடை பாவனைல புதுமையைப் பார்த்து அன்னைக்கு சிரிக்க ஆரம்பிச்ச உலகம் இன்னைக்கு வரைக்கும் சிரிப்ப நிப்பாட்டல. இப்படித்தான் படத்துல தான் பேசலனாலும், தனது திறமையால் உலகையே பேச வைத்தான் சாப்ளின் என்ற மகா கலைஞன்.
உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்க கூடாது என தனது வேதனைகளை எல்லாம் உள்ளுக்குள்ளேயே மறைச்சிகிட்டு உலகத்துல எல்லாருடைய வேதனையையும் தன் சிரிப்பால் போக்கிய மகா கலைஞன் ஒருமுறை சொன்னான்.
‘எனக்கு திறமை இருந்துச்சான்னு எனக்கு தெரியாது. ஆனால் என்னோட அம்மா தான் எனக்குள்ள நடிப்புத்திறன் இருக்கின்ற உணர்வை எனக்குள் விதைத்தாள் என்று’
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்…
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்…
அப்படிங்கிற கவிஞர் வாலியோட பாட்டு வரி மாதிரி, வறுமைக்கு பிறந்தாலும், திறமையால் இன்னைக்கும் ஊரும், பேரும் பெருமையுமா உலகமே போற்றும் மாபெரும் கலைஞன் தான் சார்லி சாப்ளின்.
மக்களே, நாமும் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், நமக்குள்ள இருக்கிற திறமையை கண்டு பிடிச்சு அதுக்கு தீனி போட்டோம்னா வெற்றி நமதே… =