இளைஞர் உலகம்
உறவு

பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

சட்டை முகத்தினரின் நற்பண்புகளில் ஒன்று கடவுளின் அன்பை, அகமகிழ்வை, அமைதியை உணர்வ தாகும். அன்பையும் அக மகிழ்வையும் பற்றித் தெரிந்து கொண்ட நாம் இந்த உளப்பாங்கு கொண்டவரின் அமைதியை உணரும் பண்பினைப் பற்றி பார்ப்போம்.

“அமைதி புன்முறுவலோடு தொடங்குகிறது” என்கிறார் அன்னை தெரசா.

முதல் உலக மகாயுத்தம் தொடங்கிய போது இங்கிலாந்தும் அதன் நாடுகளும் “இந்தப் போர் (1914-1918) எதிர்காலத்து போர்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும். இதனால், ஓர் அழகிய அகிலம் உருவாகும்’’ என முழக்கமிட்டு போரை ஆரம்பித்தனர். ஆனால் போரினால் ஏற்பட்ட ஆட்சேதமும், பொருள் சேதமும் போருக்குச் சென்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமல்ல 1939-45 வரை இரண்டாவது உலகப்போர் நடந்தது. வன்முைற வன்முறையைத்தான் உருவாக்கும் என்பதை உலகம் உணர்ந்தது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை உலகில் ஏதாவது ஓர் இடத்தில் ஏதாவது ஒரு வகையில் போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இரஷ்யா-உக்ரேன் யுத்தம் எந்த நேரத்திலும் அணு ஆயுத யுத்தமாக, அகிலம் தழுவிய யுத்தமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமென்ன?

இன்று நாடுகள் அணு ஆயுதங்களைக் குவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளது. கேட்டால் நாம் ஆயுதங்களை கீழே போட்டால் எதிரி நம்மை வீழ்த்திவிடுவான் என்கிறார்கள். ஆனால் இனி ஒரு உலகமகாயுத்தம் வந்தால் மனித இனம் பூமியிலிருந்து பூண்டோடு அழிந்துவிடும் என அனைவருக்கும் தெரிந்தும் புதிய நவீன ஆயுதங்களை செய்வதிலும் வாங்கிக் குவிப்பதிலும் பெருமை கொள்வதைப் பார்க்கின்றோம். இரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் கூட தனது “போரும் அமைதியும்” என்ற புத்தகத்தில் போர் இல்லாமல் அமைதி இருக்க முடியாது என்கிறார். அதற்கு அவர் கொடுக்கும் காரணம் “வாழ்வு முரண்பாடுகள் நிறைந்தது” என்பதாகும்.

இப்படி மனித மனம் பயத்திலேயே வாழும் நிலையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொண்டு நாடுகளிடையே ஏற்படும் சண்டைகளின் போது தங்களது நாட்டு போர் ஆயுதங்களை விற்பனை செய்து நல்ல இலாபம் சம்பாதிப்பதைப் பார்க்கிறோம். இந்த வியாபார நோக்கம் வளர்ந்த நாடுகளில் மாறாத வரை உலகத்தில் சண்டைகள் நடந்து கொண்டுதானிருக்கும்.

அமைதிப் பேச்சுக்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் உலகிலே உள்ள அனைவரும் இணைந்து வாழ வேண்டுமென்ற உணர்வு வரும் வரை இந்தச் சண்டைகள் சிறிய அளவிலாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவேதான் “போரும் அமைதியும்” புத்தகத்தில் 1812-இல் நெப்போலியன் இரஷ்யா மீது போர் தொடுத்ததை மையமாக வைத்து தனது புத்தகத்தை எழுதும் லியோடால்ஸ்டாய், “போரினால் நிலத்தின் மேல் வெற்றி கொள்ளலாம்; ஆனால் மனங்களை வெல்ல முடியாது” எனத் தெளிவுபடுத்துகிறார். அமைதியை யாரும் திணிக்க முடியாது. அந்த நிலையில் அது மயான அமைதியாகத்தான் இருக்கும். இது குடும்பத்திற்கும் பொருந்தும். அசட்டை முகத்தினரிடம் அமைதிக்கான உண்மையான ஏக்கம் இருக்கும். இது இவர்களின் நற்குணமாகும்.

  1. அன்பு காட்டும் ஆற்றல்

கடைசியாக அசட்டை முகத்தினரிடம் அன்பு காட்டும் அபார ஆற்றல் செயல்படுவதைக் காணலாம்.  நிஸ்ஸிம் எசேக்கியேல் என்ற கவிஞர் “தேள் வந்த இரவு” (Night of the Scorpion) என்ற கவிதையை எழுதியுள்ளார். அன்புக்கு, குறிப்பாக தன்னலமற்ற தாயன்புக்கு இலக்கணம் கூறுவதாக இந்தக் கவிதை அமைந்துள்ளது.

ஓர் இரவு நன்கு மழை பெய்ததால் தெருவிலிருந்து ஒரு தேள் இவரது வீட்டுக்குள் நுழைகிறது. அது இவரது அம்மாவை கடித்துவிடுகிறது. வேதனை தாங்க முடியாமல் அம்மா அலறுகிறார். உடனே வீட்டிலுள்ள பிள்ளைகள், கணவர் யாவரும் விழித்துக் கொள்கிறார்கள். அந்த காலத்தில் மின்விளக்குகள் இல்லாத நிலையில் ஹரிக்கேன் விளக்குகளை கொண்டு வந்து தேளைத் தேடுகிறார்கள். ஆனால் தேள் எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது.

இவரது கடிபட்ட இடத்தில் இவர்களுக்குத் தெரிந்த மருந்துகள் எல்லாம் வைத்து கட்டுகிறார்கள். சிலமந்திரங்கள், ஆலோசனைகள் சொல்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத இவரது கணவர் கூட திடீரென பக்திமான் ஆகிவிடுகிறார். ஆனால் அந்த அன்பு தாய் “இந்த தேள் நல்ல வேளை என்னைக் கடித்தது; என் பிள்ளைகளை ஒன்றும் செய்யாதது குறித்து மகிழ்கிறேன்” என்றாள். கவிஞர் இதுபற்றி இறுதியில் கூறும்போது ஒரு தாயால் மட்டுமே இப்படி கூறமுடியும் என்கிறார்.

அசட்டை மனத்தினர் இத்தகைய தாயுள்ளம் கொண்டவர்கள். l