வாழ்த்துக் கட்டுரை

-மதுரை.ஆர்.கணேசன்

அறிவு, மனம், உடல், உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் “..யோகா..” கலை! இந்தியாவில் தோன்றி வளர்ந்து இன்றைக்கு உலகமெல்லாம் ஒழுக்க நெறியை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது.

உடலை வில்லாக வளைப்பதும், நெளிவதும், சுருள்வதும், போன்ற பலபல வித்தைகளைச் செய்வதற்கு யோகாசனங்களை தனக்குள் வசப்படுத்திக் கொண்டால் போதும் என்பதை தன்வசப்படுத்திக் கொண்ட ஒரு சிறுமி யோகாவில் அடுக்கடுக்கான சாதனைகள் புரிந்து வருகிறார்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகேயன், தேவிபிரியா தம்பதியின் ஒரேமகள் கே.பிரிஷா (12) தான் “உலகின் இளம் வயது யோகா சாதனையாளர் ” தற்போது மீனா சங்கர் வித்யாலயா பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறார்.

பிரிஷா இந்த வயதிற்குள்ளாகவே ஒன்றல்ல ரெண்டல்ல “மூன்று டாக்டர் பட்டங்களை” பெற்றிருக்கிறார் என்பது இந்தியாவில் வேறு யாரும் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று
சொல்லலாம்!

யோகா கற்றுக் கொண்டால் இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா? அது என்ன உடம்பா அல்லது ரப்பரா? இந்த குட்டிபொண்ணு பிரிஷா என்னம்மா பண்றா! போன்ற ஆச்சர்யங்களை புருவம் உயர பார்வையாளர்களால் பேச வைத்திருக்கிறார்.

என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க..! “சர்வதேச யோகா சாம்பியன்” பட்டத்தை சிறுவயதியிலேயே பெற்றிருக்கிறார்.

 “உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர்” என்ற பட்டத்தை மத்திய அரசின் தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அங்கீகரித்து அங்கீகாரச் சான்றிதழ் வழங்கி உள்ளது,

உலக சாதனைக்காக கண்ணை மூடிக்கொண்டு புத்தகம் படிப்பது, நான்கு வழிச் சாலையில் ஐந்து நிமிடங்கள் ஒற்றை கையால் சைக்கிள் ஓட்டுவது, அத்துடன் ஒருநிமிடம் ஒற்றை கையால் சைக்கிளை பிடித்துக் கொண்டே மற்றொரு கையில் ஒருவளையத்தை சுற்றிக் கொண்டே ஓட்டுவது, ஸ்கேட்டிங், இன்னிசை கருவிகள் வாசித்தல், கபோட ஆசனத்தில்
அதிவேகமாக ரூபிக்ஸ் கியூப் சரிசெய்வது,

பந்த சக்கராசனத்தில் 30 வினாடிகள் தனது கைவிரல் இடுக்கில் கத்தியால் குத்துவது, வாமதேவ ஆசனத்தில் 30 வினாடிகள் வேறு ஒருநபரின் கைவிரலுக்கிடையில் கத்தியால் குத்துவது மேலும் விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில் புத்தகத்தை தலைகீழாக படிப்பதும், புத்தகத்தை அதிகநேரம் விபரீத சக்ர பந்த ஆசனத்தில் பின்னோக்கி படிப்பதும் என்று நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

வாமதேவ ஆசனத்தில் அதிவேகமாக பிரான் விட்டாவை சரி செய்வது போன்ற 29 மிகவும் கடினமான ஆசனங்களை செய்திருக்கிறார். தன் இலக்கை விட கூடுதலாக ஒவ்வொரு ஆசனங்களையும் இரண்டு மடங்கு செய்து காட்டியிருக்கிறார். மேலும் இதுமாதிரியான ஆசனங்கள் யாரும் கண்ணை மூடிக்கொண்டு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே இளம் வயதில் யோகாவும், நீச்சலிலும் அதிக சாதனைகள் நிகழ்த்தியதிற்காக அமெரிக்காவில் குளோபல் யுனிவர்சிட்டி இவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கான கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

பிரிஷா மாவட்ட அளவு முதல் தேசிய அளவிலான பல்வேறு அமைப்புகளின் சார்பாக நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை யோகாராணி, யோகா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட விருதுகள்
210-க்கும் மேலான தங்கப்பதக்கங்கள்
பெற்றுள்ளார்.

யோகா மற்றும் நீச்சலில் உலக சாதனைகள் படைத்ததிற்கான அடையாளமாக வீட்டில் உள்ள ஒருஅறை முழுவதும் அரசு மற்றும் பொது அமைப்புகளாலும் பெற்ற அங்கீகாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் நடந்த யோகாசனப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சாம்பியன் பட்டங்களும் பெற்றிருக்கிறார்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு பிரிஷாவை ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில வெளிநாட்டு ஊடகங்கள் வருடந்தோரும் பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறது.

மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் – நேருயுவகேந்திரா இளையோர் அமைப்பு சார்பில் நடைபெற்ற யோகாசன போட்டிக்கு பிரிஷாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.

நேஷனல் யூத் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் யோகாசனப் போட்டிக்கு நடுவராகச் சென்று சிறப்பித்திருக்கிறார்.

கொரோனா பரவியிருந்த நேரத்தில் “ஆன்லைன்” மூலமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யோகா பயிற்சி
சொல்லித்தந்திருக்கிறார்.

தமிழ், ஆங்கிலம், தெலுகு, இந்தி, போன்ற மொழிகள் தெரியும். எத்தனை இலக்கம் எண்களையும் அதே எண்ணிக்கையிலான ஒன்பதை கொண்டு பெருக்கினால் கிடைக்கும் விடையை சிலவினாடிகளில் சொல்லி விடுகிறார்.

துப்பாக்கிசுடுதல், நீச்சல்போட்டி, கராத்தே, டென்னிஸ், பூப்பந்து, ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு வீராங்கனை. அத்துடன் கீபோர்ட், கிடார், ரூபிக்ஸ் கியூப், இசை, நடனம், ஓவியம் உள்பட அனைத்திலும் தன்திறமைகளை அனாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சூரியநமஸ்காரம் மற்றும் எளிய ஆசனங்கள் மூலம் நோய்களைப் போக்கும் ஆசனங்கள் பற்றி தெரிந்துகொள்வதற்காக தன்னுடைய யோகா செய்யும் படங்கள் மூலமாகவும், ஆஸ்துமா, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் வராமல் இருக்கவும்.,

ஒருவேளை வந்தால் அதற்கான யோகாசனகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றியும் அதற்கு பயன்களையும் பற்றி 32 பக்கங்கள் கொண்ட “யோகா இன்றே செய்வோம் இன்பம் பெறுவோம்” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் அந்த புத்தகத்தை படிக்கும் போது யோகாவை எவ்வளவு உணர்ந்து கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை எளியோர் மற்றும் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், என்.சி.சி., மற்றும் காவல் துறை அதிகாரிகள், முதியவர்கள் போன்றவர்களுக்கு கடந்த இரண்டு வருடமாக “இலவச யோகா வகுப்பு” எடுத்து வருகிறார்.

பார்வையற்ற பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் கணேஷ்குமார் என்ற மாணவனுக்கு தன்னைப் போலவே சாதனையாளராக ஆகவேண்டும் என ஆறுமாதம் சிறப்பு பயிற்சி கொடுத்து யோகாவில் உலக சாதனை பண்ண வைத்திருக்கிறார். அத்துடன் அவன் உலக அளவில் முதன்முதலாக பார்வையற்ற யோகா சாதனை மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிஷாவின் திறமையைக் கண்டு வியந்து “குழந்தை மேதை” என்று புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநர் கிரண்பேடி பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார்.

தனது எட்டு வயதில் அரசு நடத்திய பயிற்சி வகுப்பிற்கு அனைவருக்கும் யோகா திட்டத்தின் கீழ் பிரிஷா “யோகா ஆசிரியை” ஆகியிருக்கிறார்.

இவரது சாதனைகள் TNPSC AND BANK போட்டித் தேர்வுகளில் இடம் பெற்றிருக்கிறது.

பிரிஷா மட்டும் சாதனைச் சிறுமி அல்ல! இவரது பாட்டி சர்வதேச யோகா சாதனையாளர், அம்மா யோகாவில் பட்டப்படிப்பு முடித்தவர். அப்பேர்ப்பட்ட ஒருகுடும்பம் யோகாவால் சமுதாயத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்!

பிரிஷாவின் பெற்றோரிடம் பேசினோம்..,

“எங்களது மகள் பிரிஷா தனித்தன்மை வாய்ந்த, பெண் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். அவள் எந்தவொரு விஷயத்தையும் கற்றுக்கொள்வது என்றாலும் அதில் ஆர்வம், முழுமூச்சுடன் செய்வாள்.

நானும், என் அம்மாவும் யோகா செய்வதைப் பார்த்து ஒருவயது குழந்தையாக இருக்கும் போதே யோகா செய்ய ஆரம்பித்தாள். நானும் யோகா செய்து கொண்டே அவளுக்கு யோகாவில் இருக்கும் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தேன்.

ஐந்து வயசு முதலே மாநிலம், தேசியம் சர்வதேச அளவில் யோகா போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகள் வாங்கியிருக்கிறாள்.

யோகா, கராத்தே போன்ற பலகலைகளில் சிறந்து விளங்குவதால் மலேசியாவில் நடந்த யோகாசனப் போட்டியில் கலந்து கொண்ட பிரிஷாவுக்கு “லிட்டில் யோகா ஸ்டார்” என்ற பட்டத்தை வழங்கி கௌரவப்படுத்திருக்கிறார்கள்.

ஏழுவயதில் முதல் உலக சாதனை நிகழ்த்திய பிரிஷாவுக்கு ஒன்பது வயதில் நியூஜெருசேலம் யுனிவர்சிட்டி முதல் “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கியிருக்கிறது.

கடந்த மாத இறுதியில் இரண்டாவது டாக்டர் பட்டத்தை WORLD TAMIL UNIVERSITY (WTU) USA HONORABLE DOCTORATE AWARD கிடைத்திருக்கிறது.

யோகாவில் அளவில்லா சாதனைகள் மற்றும் பல்வேறு சமூக சேவைகள் செய்ததிற்காக பிரிஷாவுக்கு மூன்றாவது டாக்டர் பட்டம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யுனிவர்சல் டெவலப்மென்ட் கவுன்சிலிங், (இந்தியன் எம்பயர் யூனிவர்சிட்டி) வழங்கியிருக்கிறது.

இதுவரை “70 உலக சாதனைகள்” புரிந்திருக்கிறாள் என்கிற போது எங்களுக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

யோகாவில் இருக்கும் அதீத ஆர்வம் அக்கறை போல படிப்பிலும் இருக்கிறது. நல்லா படிக்கிறாள், ஸ்கூல் டைம் முடிஞ்சதும் பார்வையற்ற மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு சென்று யோகா பயிற்சி “இலவசமாக” சொல்லி கொடுக்கிறாள்.

பிரிஷா ஒழுக்கமாகவும், பெரியவங்களுக்கு மரியாதையுடன் நடந்து கொள்ளுவாள். தன்னோட மனசை எப்போதும் சந்தோசமாக வைத்துக்கொள்வாள். புத்திக்கூர்மை, தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறதால் அவளால் எதையும் சாதிக்க முடிகிறது.

“..தோன்றின் புகழொடு தோன்றுக அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று..” வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க பிரிஷா புகழோடு தோன்றியிருப்பது கடவுளுக்கு நன்றி
கூறுகிறேன்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது அதை பெற்றோர்கள் கண்டறிந்து குழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்தி வளர்க்கணும். அதில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் யாவரும் பிரிஷா போல சாதிக்க
முடியும்…”

யோகாவில் பேராளுமையாக திகழும் பிரிஷாவிடம் பேசினோம்..,

“எங்க பாட்டியும், அம்மாவும் யோகா செய்யும் போது பார்த்து செய்ய ஆரம்பிச்சேன். யோகா செய்வது மூலம் மைண்ட் ரிலாக்ஸ், மெமரிபவர் அதிகமாகும் எனக்கும் சின்ன வயசிலிருந்து எந்த நோயும் வரல காரணம் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

யோகாவை ஸ்போட்ஸ்சில் சேர்க்க உள்ளதாக சொல்கிறார்கள். ஒலிம்பிக் அளவில் ஜெயிக்க ஆசையா இருக்கு யோகாவில் இன்னும் நிறையா உலக சாதனைகள் பண்ண வேண்டும்.

யோகா செய்யும் பொழுது எப்போதும் சந்தோசமாக இருக்க முடியும், என்ன நினைச்சாலும் பண்ணலாம், முறையாக கற்றுக் கொண்டால் எந்த நோயும் வாராது மற்றவங்களுக்கு சொல்லித் தரும் போது ரொம்ப சந்தோசமாகவும் மனநிறைவும் தருகிறது”. அற்புதமான ‘யோகா’ கலை மூலம் சாதனை படைத்து மிளிரும் ‘பிரிஷா’வின் வெற்றிகள் தொடர ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகிறது.