சமூகப் பார்வை – 12

-திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

நான் இருக்கேன்.. எதுக்குக் கவலைப்படற..” என்று உங்கள் கைகளை யாராவது வாஞ்சையுடன் பற்றிச் சொல்லும்போது பொசுக்கென உங்களுக்குக் கண்ணீர் எட்டிப் பார்த்தால் நீங்கள் அறுபது வயதைக் கடந்துவிட்டதாக முடிவுக்கு வரலாம். இந்த ஆறுதல் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கும் முதியோர் பல கோடிப் பேர். முதுமை மனிதன் சந்திக்கும் தவிர்க்க முடியாத பருவம்.

முதியோரை மதித்தலும் பேணுதலும் நம் பண்பாட்டுத் தன்மையாகக் கருதப்படுகிறது. உலகமயமாக்கல், நகர்ப்புறமாதல் போன்றவற்றால் கூட்டுக்குடும்பம் காணாமல் போய், தனிக் குடும்பங்கள் உருவாகியபோது அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்த முதியோர்தான். இன்றைக்குக் கொரோனாவால் முதியோர் ஆழமான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். கொரோனா வேகமெடுத்தவுடன் பெரும்பாலான குடும்பங்களில் வீட்டிலுள்ள முதியவர்கள் சந்தேகமாகப் பார்க்கப்பட்டார்கள். தனிமைப்படுத்தப்பட்டார்கள். “கோவிட் -19 தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள வயதானவர்களுக்கு அவர்களின் உடல்நலம் மட்டுமல்ல, அவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வின் மீது சமமற்ற மற்றும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ
குடெரெஸ்.

அதிகரிக்கும் முதியோர்

வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்பம் மனிதனின் ஆயுளை அதிகரித்து வருகிறது. எனவே உலக அளவில் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் முதியோர் 8.6 சதவிகிதம். நம் நாட்டில் அதிகபட்சமாகக் கேரள மாநில மக்கள்தொகையில் 13.5 சதவிகிதத்தினர் முதியோர். அதற்கு அடுத்த இடத்தில் 11 சதவிகிதத்துடன் இமாச்சலப்பிரதேசம் உள்ளது. மக்கள் தொகையில் 10 சதவிகித முதியோர்களைக் கொண்ட தமிழகத்துக்கு மூன்றாவது இடம். எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 1.2 கோடி முதியோர் உள்ளனர். 86 லட்சம் முதியோர்களுடன் மராட்டியம் இரண்டாவது இடத்திலும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர்களுடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. முதியோர்களில் 71 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் அதிலும் கைம்பெண்கள் ஆவர். இவர்களில் பாதிப்பேர் சமூகத்தின் அடித்தட்டு மக்கள்.

‘‘இந்தியாவில் 2050ஆம் ஆண்டுக்குள் முதியோர் எண்ணிக்கை 34 கோடியைத் தாண்டும்’’ என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. “2050க்குள் இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை 31.68 கோடியைத் எட்டும்” என ஐநா அமைப்பும், “32 கோடியைத் தாண்டும்” என ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற அமைப்பும் மதிப்பிட்டிருக்கின்றன. உலகில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. எனவே முதியோர் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பிரச்சனைகள்

75 வயதைக் கடந்த பேராசிரியர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். “எப்படியிருக்கிறீர்கள்” என்றேன். அவ்வளவுதான், “ஏதோ இருக்கேன். வேலைக்கு வரும் பெண், போஸ்ட்மேன், கூரியர் தருபவர், வீட்டுக்கு வரும் விற்பனைப் பிரதிநிதி போன்றவர்கள்தான் பேசுகிறார்கள். வீட்டில மகன், பேரன் பேத்திகளெல்லாம் அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு மொபைல் பேசிட்டு இருக்காங்க. எங்கிட்ட யாரும் பேசறது இல்லை..” எனச் சொல்லிவிட்டுப் புன்னகைத்தபோது அதில் வேதனையும் விரக்தியும் தெரிந்தது. இதுதான் முதியோர்கள் எதிர்கொள்ளும் தலையாயப் பிரச்சனை.

மேலும் முதியோரின் மன அழுத்த பிரச்சனைக்கு ஏராளமான காரணங்கள். குறிப்பாகக் குடும்ப விஷயங்களில் தன்னிடம் கருத்துக்கேட்கவேண்டும் என முதியோர் பலரது எதிர்பார்ப்பு. ஆனால் அது பெரும்பாலான வீடுகளில் நடப்பதில்லை. தொடர்ந்து மற்றவர்களால் உதாசீனப்படுத்தல், பொருளாதார ரீதியில் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, தளர்ச்சியுறும் உடல்நலம், குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள்தான் முதியோரின் வாழ்நிலையை இன்றைக்குத் தீர்மானிக்கின்றன. இதில் பெண் முதியோர்கள் நிலை மிகவும் மோசம். கணவன் இறந்துவிட்டால், உடல் ஆரோக்கியம் தொடங்கிச் சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரத் தேவைகள் என எல்லாவற்றிலும் பிரச்சினைகள்தான். அனைத்து வகையிலும் பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் வாழ்கின்றனர். ஓய்வூதியம், சொத்து உள்ள முதியோர்களும் ஏதோ ஒரு நிலையில் விரக்தியாக இருப்பதனைக் காணமுடிகிறது. தென் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கோடீஸ்வர முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்குக் குடும்பப் புறக்கணிப்பே காரணம் எனக் கூறப்பட்டது. “அண்மைக்காலமாகத் தற்கொலை செய்து கொள்ளும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்கிறது ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம்.

முதியோரின் இன்றைய நிலை

முதியோர்களை,. தனித்து வாழும் முதியோர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகள் அல்லது உறவினர் என எவரும் இல்லாதவர்கள், ஏழ்மையில் உழல்பவர்கள் என்ற வகைப்படுத்தலாம். “ஏஜ் வெல் அமைப்பு” (Age Well Foundation) நாடு முழுவதும் 50,000 முதியவர்களிடம் நடத்திய ஆய்வில் தனிமை, உறவுச்சிக்கல் உள்ளிட்ட காரணங்களினால், 43 சதவிகித முதியவர்கள் உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறுகிறது. மற்றொரு ஆய்வானது, இந்தியாவில் ஐந்தில் ஒரு முதியோருக்கு மனநல ஆலோசனைகள் தேவைப்படுவதாகச் சொல்கிறது.

இந்தியா முழுவதும் 15 ஆயிரம் மூத்தோர்களிடம் “அகர்வால் ஃபவுண்டேஷன்” ஆய்வு மேற்கொண்டது. அதில் நகர்ப்புறப் பகுதிகளில் 64.1 சதவிகிதம் பேரும், கிராமப்புறங்களில் 39.19 சதவிகிதம் பேரும் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருக்கும் முதியோர் 27.3 சதவிகிதம் பேர் என்கிறது ஆய்வு. மூத்த குடிகள் நடத்தப்படும் விதம் குறித்து நாட்டில் 19 நகரங்களில் “தி ஹெல்ப் ஏஜ் இந்தியா” நடத்திய ஆய்வில் முதியோர் மரியாதைக்குறைவாக நடத்தப்படுவது பெங்களூரில் அதிகம் என்கிறது. இங்கு முதியோரில் 70 சதவிகிதம் பேர் மரியாதைக்குறைவுக்கு ஆளாகிறார்கள். ஹைதராபாத்தில் இது 60 சதவிகிதமாக உள்ளது. 49 சதவிகிதத்துடன் சென்னை ஐந்தாவது இடத்தில்
உள்ளது.

இந்தியாவில் தனிமையில் வாழும் முதியோருக்குத் தேவையான வசதிகள் இருப்பதாகச் சொல்லமுடியாது. “குளோபல் ஏஜ் வாட்ச் இன்டக்ஸ்” (Global Age Watch Index) என்ற கணிப்பானது, ஒரு நாடு அந்நாட்டு முதியோருக்கு வழங்கும் வருமானம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைச் சுட்டிக் காட்டுகிறது. அந்தச் சுட்டியின்படி கணிப்பிடப்பட்ட 96 நாடுகளுள் இந்தியா 71 ஆம் இடத்திலிருந்தது. அதாவது இந்தியாவில் மிகக் குறைந்த வசதிகளையே முதியோர் பெறுகிறார்கள். 90 சதவிகிதம் பேருக்கு அரசின் எந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் போய்ச் சேரவில்லை.

சட்டம்

நம் நாட்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை “பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டம்- 2007” உறுதி செய்கிறது. பெற்றோரைப் புறக்கணித்தால், மூன்று மாதம் சிறைத் தண்டனை என அரசு சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டம் குறித்து முதியோர் பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. அப்படியே இருந்தாலும், “நம்மை இம்சித்தது நம்ம பிள்ளைங்க..” என வலிகளைச் சுமந்துகொள்ளும் முதியோர் 80 சதவிகிதம் பேர் உள்ளனர் என்கின்றது
ஆய்வு.

என்ன செய்யவேண்டும்

மூத்த குடிமக்கள் பாதுகாப்பை வெறும் சட்டத்தால் உறுதி செய்துவிட முடியாது. நம் செயல்பாடுகள்தான் அவர்களுக்கு ஆறுதல் தரும். பெரும்பாலான முதியோர்கள் ஏங்குவது கொஞ்சம் அன்பு, அக்கறையுடன் கூடிய நான்கு வார்த்தைகள், முடிந்தால் கொஞ்சம் உதவி, அவ்வளவுதான். இதனைச் செய்யும் வாய்ப்பு நம் எல்லோரிடமும் இருக்கிறது. குடும்பத்தில் மூத்த அங்கத்தினர் இருப்பது அனுபவ வெளிச்சத்தை வழங்குகிறது என்பதை இளைய, நடுத்தர வயதினரும் உணர வேண்டியது அவசியம். நம்மை வளர்த்த பெற்றோர்களையும், பாசம் காட்டிய தாத்தா பாட்டிகளையும் புறக்கணிக்காதீர்கள், குறிப்பாக மரியாதைக் குறைவாக நடத்தாதீர்கள். எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் பெறுவோம் எனக் குழந்தைகளிடம்
சொல்லுங்கள்.

வரும் தலைமுறையினர் மத்தியில் முதியோர்களை மதித்தல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும். “இந்தக் குடும்பமே நல்லா இருக்குன்னா இவங்களாலத்தான்” எனத் தாத்தா, பாட்டி பற்றிச் சொல்லுங்கள். பெருகி வரும் முதியோர் இல்லங்களைக் குறைப்பதற்கான முயற்சியை நாம் நம் வீட்டிலிருந்து
துவங்குவோம்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதியோர் பெருமைகள் பற்றி ஆராயப்படுதல், வெகுசனத்தொடர்பு சாதனங்களில் அடிக்கடி இதுபற்றிப் பேசுதல், முதியோர் குறித்து (Geriatrics) முதியோரியல் படிப்புப் பள்ளிகளில், கல்லூரிகளில் இடம் பெறுதல் அவசியம். நடப்பாண்டு (2021) முதியோர் தினத்தின் மையக்கருவாக “அனைத்து வயதினருக்கும் டிஜிட்டல் சமத்துவம்” என்று ஐ.நா. வரையறுத்துள்ளது. டிஜிட்டல் உலகில் முதியோரின் அணுகல் மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பு தேவை என்கிறது.

முதியோர் என்ன செய்யவேண்டும்

முதியோர்களும் முதுமையை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். தமக்கு ஈடுபாடு இருக்கும் செயற்பாடுகளான இறைவழிபாடு, தியானம், நூல்கள் வாசித்தல் போன்றவற்றில் அதிக நேரத்தினைச் செலவிடப் பழகிக்கொள்ள வேண்டும். இதனால் இவர்கள் ஆத்மார்த்த ரீதியில் புத்துணர்வை ஓரளவு பெற்றுக்கொள்ள முடியும். பிடித்தமான நூலைப் படிப்பதற்கும், படைப்பதற்கும் முதுமை ஒரு வரப்பிரசாதம் எனக் கொள்ளவேண்டும். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் எண்பது வயதைத் தாண்டிய பின்னும் எழுதிக் கொண்டிருந்தார். ஜான் கிளென் தன்னுடைய 77வது வயதில் தன்னுடைய இரண்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாய் நடத்தினார். பொழுதுபோக்குகளைத் தொடர்வதும், காலத்துக்கேற்ற புதிய பொழுதுபோக்குகளைக் கையாள்வதும் உற்சாகத்தை மீட்டெடுக்கும் என அறிவுறுத்துகின்றனர் மனோதத்துவ
நிபுணர்கள்.

பொதுவாகவே நுகர்வு கலாச்சாரம் மேலோங்கிய பின்னர், முதியோர்கள் வீட்டின் சுமையாகக் கருதப்படுகிறார்கள். “முதியோரது தேவைகளும், உரிமைகளும் புறக்கணிக்கப்படுவது தொடர்ந்தால், அவை சமூக வளர்ச்சிக் கொள்கைகளைச் சிதைத்துவிடும். அவர்களைப் பொதுத்தளத்திற்குக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமூகத்தில் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க வழி செய்ய வேண்டும். முதியோர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும்.” என்கிறார் ‘ஏஜ் வெல்’ அமைப்பின் நிறுவனர் ஹிமான்ஷூ ராத்.

அனுபவங்களின் பொக்கிஷங்களான அவர்களை அவமதிப்பது, தலைசிறந்த நூலகம் ஒன்றை உதாசீனப்படுத்துவதற்குச் சமமானது. அந்தத் தவற்றை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.

(அக்டோபர் 1 சர்வதேச முதியோர் தினம்)