அல்மாஸ் அகமது.நு.
“தன் பலத்தை உணராத யானை சின்னக்குச்சிக்கும், சங்கிலிக்கும் பயப்படுவதுபோல, பெண்கள் தங்கள் சக்தியை உணராமல் இருக்கிறார்கள்” என்பார் எழுத்தாளர் பிரபஞ்சன். இப்போது பெண்ணினம் தன் சக்தியை உணரத் தொடங்கிவிட்டது. உலகையே பெண்கள் ஆளத் துவங்கியிருக்கிறார்கள்.
இப்படி எல்லா துறைகளிலும் பெண்கள் கோலோச்சுகிறார்கள் அரியாசனம் நோக்கி முனைகிறார்கள், பெரும் பதவிகளில் வியக்க வைக்கும் திறனோடு தலைமைப் பண்போடு செயலாற்றுகிறார்கள் என்பது பெருமகிழ்ச்சிக்குரியதே! எனினும் அந்தப் பெண்களின் விகிதாச்சாரம் என்ன? வெகுசிலவே இருக்கும் சாதனைப் பெண்களை அடையாளம் காட்டி அடிப்படையே மாறிவிட்டது என்று சொல்வது அபத்தம். ஆயிரம் ஆண்டுகால விலங்கை உடைத்து பெண்கள் திமிறி எழுந்தாலும், ‘பெண் அடிமைத்தனம்’ முற்றும் அற்றுப்போகவில்லை. ஆதிக்கச் சிந்தனை இன்னும் ஆண்களின் பொதுப்புத்தியிலிருந்து அகன்றுவிடவில்லை. அவளுக்கான உலகம் வீடுதான், சாம்ராஜ்ஜியம் சமையலறைதான். சுதந்திரம் தேர்வு எல்லாம் கணவனாலும் பெரியவர்களாலும் தீர்மானிக்கப்படுவதுதான் என்கிற நிலையில் பல பெண்களின் வாழ்க்கை சங்கிலியால் கட்டப்பட்ட யானையைப் போன்றே இருக்கிறது.
அண்மையில் திரைக்குவந்து பரவலான பாராட்டுதல்களைப் பெற்றிருக்கும் “The Great Indian Kitchen” திரைப்படம் அதனை நிரூபணம் செய்கிறது. சமீப காலங்களாக உன்னத சினிமாக்களை வழங்கிவரும் மலையாள திரையுலகிலிருந்து இயக்குனர். ஜியோ பேபி உருவாக்கியிருக்கிற நூறு நிமிட ஓட்ட அளவைக் கொண்ட இந்தத் திரைப்படம் பெண்கள் அனுபவிக்கும் நூற்றாண்டு கால வலியை வேதனையை துணிச்சலோடு பதிவு செய்கிறது. நாட்டியத் துறையில் தேர்ச்சி பெற்று பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்ற ஒரு பெண், திருமணமாகி சென்ற வீட்டில் முற்றும் முழுதுமான வேறொரு வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள எவ்வாறு நிர்பந்திக்கப்படுகிறாள், ஆணாதிக்கம் அவளை எப்படியெல்லாம் துண்டாடுகிறது, இறுதியில் தான் பேரார்வம் கொண்டு நேசித்த நாட்டியப் பணியையும் மேற்கொள்ள முடியாமல் எப்படி துன்புறுகிறாள் என்பதை மிகையில்லாமல் ஒரு இந்தியக் குடும்பத்தின் பின்னணியில் ஒவ்வொரு பெண்ணும் அடைய நேர்கிற குடும்பவெளி வாழ்வியல் சிக்கலை மிகத்துல்லியமாகக் கடத்தியிருக்கிறார் இயக்குனர் ஜியோ பேபி.
அதிகாலை கணவருக்கு காபி தருவதிலிருந்து தொடங்கி மலைபோல் குவிந்திருக்கிற உண்டுமுடித்த பாத்திரங்களை சுத்தப்படுத்தி வைத்து உறங்கச் செல்வது வரையென ஒரு நாளின் பெரும்பகுதி பெண்ணுக்கு சமையலறையிலேயே கழிகிறது இதில் எங்கே அவளுக்கான பிரத்யேக நேரம் வாய்க்கிறது?
சமையல் வேலை, துணிகளைத் தூய்மைப்படுத்துதல், பாத்திரங்களை கழுவுதல், இடுப்பை பிடித்துக்கொண்டு வியர்வைச் சிந்த வீட்டைச் சுத்தப்படுத்துதல், மீண்டும் அதனையே மறுநாள் தொடருதல் என பெண்களின் அன்றாடங்களைத் திரும்ப திரும்பக் காட்டி பார்வையாளர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும் நோக்கோடு அமைக்கப்பட்டிருக்கிற காட்சிகளைக் காணும்போது, “சமையலறை என்பது பெண்களின் ஆயுள்சிறை. இங்கே ஒவ்வொரு சாப்பாட்டு மேஜையிலும் பெண்களின் ரத்தம் தான் மறைமுகமாகப் பரிமாறப்படுகிறது. பெண் இல்லற கிரிக்கெட்டில் சமையலறைக்கும் படுக்கை அறைக்கும் ரன்கள் எடுத்தெடுத்தே ரணமாய்ப் போனாள்” என்ற கவிஞர். வைரமுத்துவின் சொற்கள் நினைவில் வந்துபோகின்றன.
நடனப் பயிற்றுனராக பணிக்குச் செல்லும் தன் விருப்பத்தை கதாநாயகி தெரிவிக்கறபோது, ‘பெண்கள் வேலைக்குச் செல்வது நல்லதல்ல. அது குடும்ப வாழ்விற்கு ஒத்துவராது. வீட்டோடு இருப்பது தான் பெண்ணிற்கு அழகு. தேசத்தின் மந்திரிமார்கள் ஆட்சியாளர்களைவிட பெண்கள் செய்கிற வேலை மிக உயர்ந்தது’ என்று மென்மையாகச் சொல்லும் பிற்போக்கு மாமனாரின் வார்த்தைகளில் ஆணாதிக்கமே வெளிப்படுகிறது. ‘பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் இல்லை, ஆண்களினும் மேன்மைமிக்கவர்கள்’ என்று சொல்லப்படுவதெல்லாம் பெண்களை வார்த்தைகளால் வசியப்படுத்துவதற்கே அன்றி வேறில்லை. உண்மையில் பெண்களுக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமே அல்லாமல் சரிகை பூசிய வார்த்தைகளில்லை.
அலுவலகத்திலிருந்து உண்டு முடித்த கழுவாமல் கொண்டுவரப்பட்ட டப்பாவை திறக்கிறபோது அடிக்கிற வீச்சத்தையும், மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க கடமைப்பட்டவள் என்பதைச் சொல்லும்போது காலங்காலமாக ஆண்களின் ரத்தத்தினுள் ஊறியிருக்கும் ஆணாதிக்கத்தின் நெடியையும், பெண்ணுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விதிகளின் அழுத்தத்தையும் பொறுத்துக்கொண்டு வாழும் கதாநாயகி, ஒரு கட்டத்தில் அவையனைத்தையும் ஆவேசமாக உதறி வெளிவந்து நிற்கிறபோது, அவள் தம்பி “கொஞ்சம் தண்ணி எடுத்துட்டுவா” என்று கேட்கிற காட்சியில், “உனக்கு தாகம் எடுத்தா நீ போய் எடுத்துக் குடிக்கமாட்டியா?” என்று தனக்குள் அடங்கியிருந்த குடும்பமும் சமூகமும் உண்டாக்கிய ஒட்டுமொத்த சினத்தை வெளிக்கொணர்வாள். ஆண் சமூகத்தின் கன்னத்தில் அறைகிற வசனம் அது.
ஒவ்வொரு ஆணும் தன் வாழ்வை திரும்பிப் பார்த்து திருத்திக்கொள்வதற்கும், தன் வீட்டுப் பெண்களின் வலியை உணர்ந்து அவர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தித் தரவும், சமையலறை என்பது பெண்களுக்கானது மட்டுமில்லை என்று தெளியவும் The Great Indian Kitchen தூண்டுகோலாக அமையும். “எவனொருவன் குற்ற உணர்ச்சி இல்லாமல் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க நேரிடுகிறானோ அவன் வெற்றிபெற்றவன்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்லியிருப்பது உண்மையிலும் உண்மை.