ஆகாஷ் குமார்

உலக அதிசயங்கள் ஏழு, சங்கீத ஸ்வரங்களும் ஏழு, வானவில்லின் வண்ணங்கள் ஏழு, வாரத்தின் நாட்களும் ஏழு, வளர்ந்து கொண்டுவரும் நமது நவீன அறிவியல் நாகரிக வளர்ச்சியில் மனிதன் ‘ஏழாம் அறிவை’ நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறான் என்றும் கூட அறிஞர்கள் கூறுகின்றார்கள். அதுபோல, பிரம்மாண்ட வாழ்வுக்கு, வெற்றிகரமான வாழ்வுக்கு வழிகாட்டும் – ‘ஏழு நுட்பங்களை’ மிக அழகாகப் பல இடைவெளி – முரண்களோடு “பிடிச்சிருக்கா” என்ற நூலின் மூலம் பரிசளித்திருக்கிறார் ஆசிரியர் ம. திருவள்ளுவர்.

இதோ அந்த பிரம்மாண்ட வாழ்வுக்கான ‘ஏழு நுட்பங்கள்!’

முதல் நுட்பம் : “இயல்புத் திறனும் – இலக்கும்”

பொருந்தட்டும் இமாலய வெற்றி – உறுதி.

“ஒற்றை மனிதராக” இருந்த கலாம் “உலக மனிதராக” உருமாறியது முதல். ஏன்? நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதனை நட்சத்திரங்கள் ஏ.ஆர். ரகுமான், பில்கேட்ஸ், சாய்னா நேவல், இளையராஜா, சச்சின் என இன்னும் பல்லாயிரம் பேர். இவர்கள் அனைவரும் தனக்கான வரலாறை உருவாக்கிச் சாதனையாளர்கள் ஆனது எப்படி? அது இதுதான்! இவர்கள் அனைவரும் தமக்குள் உறைந்திருக்கும் “மெகா – ஆற்றலையும் மகா திறமையையும் – இளமையிலேயே கண்டுபிடித்து பிரம்மாண்டமாக மலர்ந்ததுதான். இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தக்காரர்களாகிவிட்டார்கள். இதுதான் ஒரு சாமானியனுக்கும் – ஒரு சாதனையாளனுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடு எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.”

நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமையை, இயல்புத்திறனை இயற்கை அன்னை நமக்குள் விதைத்துவிடுகிறாள். பிறக்கும் போதே நமக்குள் பேராற்றலை, தனித்திறமையை, இயல்புத் திறமையை ஒரு அட்சயப் பாத்திரமாக, ஒரு பொக்கிஷமாக நமக்குள் புதைத்து வைத்துவிட்ட ஒரு நுட்பம் நிறைவாக, நாம் நமது இயல்பை உணர்ந்து, பின் எழும் துணிவே நமது இலக்கை குறித்து, அந்த இலக்கை உரிய நேரத்தில் அடைவதிலும் உறுதுணையாக அமையும்; அதுவே நம் வாழ்க்கையை ஆனந்தமாய் அமைத்து, நம்முடைய இமாலய வெற்றியை அடைவோம்; இது உறுதி என்று முதல் நுட்பத்தில் ஆசிரியர் விவரிக்கின்றார்.

இரண்டாம் நுட்பம் : “சுயமும் – சூழலும்” –

இணங்கட்டும் இதயந்தொடும் மகிழ்ச்சி உறுதி.

இரண்டாம் நுட்பத்தில், “வாழ்க்கை என்றால் என்ன?” என்ற கேள்வியை எழுப்புகிறார், ஆசிரியர். மேலும் “உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இடையில் நடைபெறும் உறவோட்டமே வாழ்க்கை” என்றும் பதிலளிக்கிறார். அதேப்போல் நம்மைச் சுற்றியுள்ள காற்று, தாவரம், பிரபஞ்சத்தின் பஞ்சபூதம், எண்ணூறு கோடி உயிரினங்கள் என்று நம்மோடு உறவாடிக் கொண்டே இருக்கின்றது. நமக்கும் – நம்மைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் இடையில் நடக்கும் உறவு வெகு இயல்பானதே. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த உறவாடல் நடந்துகொண்டே இருக்கிறது என்பது வெகு நுட்பமாகி வருகிறது.

திறந்த மனதோடு புத்தகங்களையும் – மனிதர்களையும் பல்வேறு சந்தர்ப்பங்களையும் அவை தரும் பாடங்களையும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்துப் பழகுங்கள்… பழகப் பழக பக்குவம் பெற்று சுயமும் – சூழலும் வசப்பட்டு மகிழ்ந்து வெற்றி பெறுவீர்கள் – இது உறுதி என்று வழிகாட்டுகிறார் நூலாசிரியர்.

மூன்றாம் நுட்பம் : “இரட்டை மனம்” – ஒன்றட்டும்

ஓயாத வெற்றி – உறுதி.

மூன்றாம் நுட்பத்தில் ஆசிரியர், “இதுவா? அதுவா? இதைச் ெசய்யலாமா? அதைச் செய்யலாமா? என்று இரட்டை மனதோடு இயங்கும் போது பல வாய்ப்புகளை இழந்துவிடுகிறோம்” என்று கோடிட்டுக் காட்டுகிறார். மேலும், உன்னதப் படைப்புகள், கண்டுபிடிப்புகள், வரலாற்றுச் சான்றுகள் என இவை அனைத்துமே மனம் ஒன்றிய அர்ப்பணிப்புகளோடே நடந்திருக்கின்றன. அவர்களே மாமனிதர்களாக போற்றப்படுகின்றார்கள். “ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடாமல், மனம் ஒன்றிச் செய்யப்படும் செயலே மகத்தானது. அதுவே அர்த்தமாகி, உன்னதமான வெற்றி பெற்று, உலகில் நிலைத்து நிற்கிறது” என்று ஆசிரியர் விளக்குகிறார்.

நான்காம் நுட்பம் : “உணர்ச்சிகள்

வசப்படட்டும்” உன்னத மகிழ்ச்சி – உறுதி

நான்காம் நுட்பத்தில் ஆசிரியர், “குறிப்பிட்ட சில உணர்ச்சிகள் (பயம், கவலை, கோபம்) மனித வாழ்வின் தீவிர எதிர்வினைகளை ஏற்படுத்தும்” என்று குறிப்பிடுகிறார். குறிப்பாக பயம் – படபடப்பை ஏற்படுத்தி – மனதினைச் சுருக்கிவிடும். கவலை – மனிதனின் தன்னம்பிக்கையைத் தகர்த்துவிடும். கோபம் – மனிதத் தன்மையையே இழக்கச் செய்துவிடும். ஆக, இந்த உணர்ச்சிகள் நமக்குள் அடையாதவாறு விழிப்போடு இருக்க வேண்டும். மேலும் பயத்தை வெற்றிக்கொள்ளத் தேவையான ஆற்றல் துணிவு. கவலையை – ஆனந்தம் என்னும் உணர்வால் இடப்பெயர்ச்சி செய்யப் பழக வேண்டும். கோபத்தை பொறுமையால் வீழ்த்த வேண்டும் என்றும், உணர்ச்சிகளை வெல்பவர்களே உயர்ந்தவர்களாகிறார்கள். ஆகவே, இதை உணர்ந்து, தெளிந்து, ஞானம் பெற்று, உலகை வெல் என்று அழைக்கிறார் ஆசிரியர்.

ஐந்தாம் நுட்பம் : “இதயம் திறந்து – எதையும் தரத் தயாராய் இருங்கள்” உலகளாவிய வெற்றி – உறுதி.

ஐந்தாம் நுட்பத்தில் ஆசிரியர் “பெறுவதெல்லாம் தருவதற்கே” என்ற பேருண்மையை விளக்குகிறார். உயரச் செல்லும் போது, வளமை பெருகும் போது – பலர் கிருமிகளாக மாறுவதாக வேதனையோடு பதிவிடுகிறார். நாம் நமது வாழ்வில் சுயநலம் என்னும் கூட்டைவிட்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதை இதயம் திறந்து தந்துவிடத் தயாராகச் சொல்கிறார். மேலும், பெறுவதையெல்லாம் – தருவதற்குத் தயாராய் நாம் மாறும் போது உலகமே நம்மை அரவணைத்துக் கொள்ளக் கூடிய அன்புமயமான சாதனையாளர்களாக மிளிர்வீர்கள் – இது உறுதி என்று நூலாசிரியர் உறுதியளிக்கிறார்.

ஆறாம் நுட்பம் : “இயற்கையின் வசம் ஈந்து – இடைவிடாது செயல்படுங்கள்” ஆத்ம மகிழ்ச்சி – உறுதி.

குழந்தை மண்ணில் பிறப்பதற்கும், கூட்டுப் புழுக்கள் பட்டாம்பூச்சிகளாய் பிறப்பதற்கும், கோழிக்குஞ்சு முட்டையை உடைத்து வெளிப்படவும் பல தடைகளைத் தாண்டி வருகின்றது. பல போராட்டங்களுக்குப் பின்னர் கிடைத்த விடுதலை, பல நூறு பாடல்களுக்கு இசையமைத்த பிறகு ஏ.ஆர். ரகுமானுக்குக் கிடைத்த “ஆஸ்கார்”, பல இடையூறுகளைக் கடந்து எவரெஸ்டை தொட்ட ஹிலாரி போன்றோர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை. மாறாக, “தடையேதும் இல்லாமல் பெறப்படும் வெற்றி நிரந்தரமில்லை” என்றும் ஆசிரியர் கூறுகிறார். பெரும் வெற்றிகளின் அடித்தளம், இடைக்காலச் சறுக்கல்களே/தோல்விகளே. எனவே “முடியாது” எனப் பலர் கூறினாலும் “முடியும்” என்னும் படி உங்களை ஆத்ம வெற்றிக்கு அழைத்துச் செல்லும் – இது உறுதி என்று சாதிக்க அழைக்கிறார் ஆசிரியர்.

ஏழாம் நுட்பம் : “புதிய பார்வை கொள்ளுங்கள்” நிரந்தர வெற்றி – உறுதி.

நிறைவாக, உலகையே புதுப்பிக்கும் ஒற்றை மந்திரம் “புதிய பார்வை” என்கிறார் ஆசிரியர். புதிது புதிதாக பூமிக்கு வரும் மனிதர்களின் புதிய பார்வைகளால் தான் பூமி புத்துயிர் பெறுகிறது. ஆக, அப்படி அள்ள அள்ளக் குறையாத கண்டுபிடிப்புகளையும், கோட்பாடுகளையும், வசதிகளையும் வெளிக்கொணர்ந்து – இந்த பிரபஞ்சத்திற்கு வியப்பைப் பரிசளித்திருக்கிறார்கள். புதிய பார்வைகளால் மட்டுமே பழைய சலிப்பு – அலுப்புகளையும் வெறுப்புகளையும் மாற்றி – உலகையே புதுப்பொலிவோடு, புதிய பார்வையால் நிரந்தர வெற்றி பெறலாம்; இது உறுதி என்று ஏழாம் நுட்பத்தில் ஆசிரியர் குறிப்பிட்டு நிறைவு செய்கிறார்.

எந்த ஒரு எளிய மனிதராலும் இப்படி ஒரு வாழ்க்கையை வடித்து எடுக்க முடியும். “பிடிச்சிருக்கா” என்னும் இந்நூல் காட்டும் ஏழு நுட்பங்களையும் உள்வாங்கிக் கொண்டு அடியெடுத்து வைத்தால் மிக உன்னத வெற்றிகரமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகி, சாதனை நட்சத்திரமாக ஜொலிப்பீர்கள் – இது உறுதி!