ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய போர்முனை முதல் தெருமுனை வரை நூல் வெளியீடு
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
போர்முனைக்குப் பயன்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கி இந்திய ராணுவப் படைகளுக்கு மூளையாகச் செயல்படும் டி.ஆர்.டி.ஓ – ராணுவ விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிப் படைப்புகள் எப்படி தெருமுனை வரை பயன் தருகிறது என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கி ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ என்ற அறிவியல் தமிழ் நூலை எழுதியுள்ளார்.
26-02-21 அன்று இந்நூல் இணைய வழியில் வெளியிடப்பட்டது. விண்வெளி விஞ்ஞானி பத்ம மயில்சாமி அண்ணாதுரை தலைமை விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட்டார். சென்னை ஆவடியில் உள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்(Combat Vehicles Research and Development Establishment-CVRDE) இயக்குனர் திரு.வி.பாலமுருகன். அப்துல்கலாம் அவர்களின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ்,எழுத்தாளரும் ஐ.பி.எஸ் அதிகாரியுமான டாக்டர்.சாமூண்டேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
வெளியீட்டு விழாவில், விருந்தினர்கள் பேசியதாவது
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
வழக்கமான எழுத்தாளர்களைத் தாண்டி, துறைசார்ந்த விஞ்ஞானிகள் அறிவியல் தொழில்நுட்பத்தை எழுதுவது ஆரோக்கியமான போக்கு. டாக்டர் வி.டில்லிபாபு, அறிவியல் தமிழுலகிற்கு கிடைத்த அரிய கண்டுபிடிப்பு. 24 அத்தியாயங்களில் ராணுவ ஆராய்ச்சியின் மக்கள் சார்ந்த அறிவியலை சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.
இந்தியாவின் ‘நேவிக்’தொலையுணர்வு செயற்கைக்கோ ள்கள் ராணுவ வீரர்களுக்கு பேருதவியாக இருக்கின்றன. கார்கில் போரில் தன் கால்களை இழந்த ஒரு ராணுவ வீரர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘இந்திய செயற்கைக்கோள்களினால் தற்போது ராணுவத்தில் உள்ள எனது மகன் பாதுகாப்பாக தேசப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான்’ என்பதே அச்செய்தி.
விஞ்ஞானி வெ.பொன்ராஜ்
ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கிய, சமூகத்திற்கு பயன்படக்கூடிய தொழில்நுட்பங்க ளையும் படைப்புகளையும் தொகுத்துப் புத்தகமாக எழுதியிருப்பது பாராட்டத்தக்க முயற்சி. மக்களுக்கான அறிவியலை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு நூலாக இது திகழுகிறது.
இப்படிப்பட்ட மக்கள் சார்ந்த தொழில்நுட்பப் படைப்புகளைச் சந்தைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும். பொருளாதாரம் உயரும்.
முனைவர்
பா.சாமூண்டேஸ்வரி ஐ.பி.எஸ்
மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த தொழில்நுட்பத் தீர்வுகள், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான தீர்வுகள், இளைஞர்க ளுக்கு ராணுவ ஆராய்ச்சியிலுள்ள வாய்ப்புகள் என பல தளங்களில், தகவல் களஞ்சி யமாக திகழ்கிறது இந்த நூல்.
எளிமையான உதாரணங்களோடு அன்றாட வாழ்வின் அறிவியல் படைப்புகளை சுவாரசிமாக சொல்லும் இந்த புத்தகம் இளைய தலைமுறை கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.
ஒரு காவல் அதிகாரியாக, இந்த நூலில் எழுதப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை காவல்துறையில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்படுகிறது.
விஞ்ஞானி வி.பாலமுருகன்:
டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் 52 க்கும் அதிகமான ஆய்வுக்கூடங்களின் சமுதாயப் படைப்புகளை எளிமையான தமிழில் எழுதியிருக்கிறார் வி.டில்லிபாபு. ஆளில்லாமல் இயங்கும் ராணுவ வாகனங்கள் கண்ணிவெடி, கதிரியக்க பகுதிகளில் இயங்கி அவைகளை கண்டுணரும். இதனால் உயிர்பலி தடுக்கப்படுகிறது.
உடனடி பாலங்களை ராணுவ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இப்படிப்பட்ட தகவல்களை சொல்லும் இந்த நூலை பொதுமக்கள் படித்து பயன்பெற வேண்டும்.
விஞ்ஞானி வி.டில்லிபாபு தனது ஏற்புரையில் கூறியதாவது:
வாசகனுக்கு வலிக்காமல் அறிவியலைத் தமிழில் சுவாரசியமாகச் எழுதுவது, பள்ளி மாணவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அறிவியல் தொழில்நுட்பக் தகவல்களைக் கொண்டு போய் சேர்க்கும்.
ஒரு மொழியின் உயிர்ப்புக்கும் செழுமைக்கும் அறிவியல் படைப்பிலக்கியங்கள் அதிகம் தேவை. இளைஞர்கள் யுவதிகள் பெருமளவில் தமிழில் அறிவியலை எழுத வேண்டும். ஆங்கிலத்துக்கு இணையாக சீன மொழியில் எழுதப்படுகிற அறிவியல் கட்டுரைகள் அம்மொழியை இணையத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். இது தமிழில் அறிவியல் பதிவுகள் பெருக உதவும்.
இந்து தமிழ்திசை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.