சமூகப் பார்வை – 7.

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

அமெரிக்கத் துணை அதிபருக்கானத் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ், தனது சகோதரியின் நான்கு வயதான பேத்தியிடம் “உன்னால் அதிபராக முடியும்” என்று அழுத்திச் சொல்லும் வீடியோ இப்போது வைரல் ஆகியிருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் பெண் எவரும் அதிபரானதில்லை. உலகளவிலான பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தின் மீது விருப்பம் இருக்கிறது என்பதுதான் நிஜம்.

சமூக, பொருளாதாரத் தளத்தில் இன்றைக்குப் பெண் ஓரளவு வெற்றிபெற்றிருந்தாலும் அரசியல் தளத்தில் பெண்ணுக்கான வெற்றி என்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. நம் நிதியமைச்சராகப் பெண் ஒருவர் இருக்கிறார் என்பதில் நமக்கு அவ்வளவு பெருமை. இதைப் பெருமை என்பதைவிட ஒரு பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறோம் அல்லது பீற்றிக்கொள்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். நமக்குப் பெண் மீது உண்மையான கரிசனம் இருக்குமேயானால் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடாவது அளித்திருப்போம்.

நாடாளுமன்றத்தில் பெண்கள்

உலக அளவில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்து ‘இண்டர் பார்லிமெண்டரி யூனியன்’ நடத்திய ஆய்வின்படி 1995இல் 11.3 சதவிகிதமாக இருந்த பெண்களின் எண்ணிக்கை 2020இல் 24.9 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. பொலிவியா, ஸ்வீடன், பின்லாந்து, தைவான், ஸ்பெயின், போர்ச்சுக்கல், நியூசிலாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் பெண்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

மேலும், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை 27.7 சதவிகிதம். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 20.6 சதவிகிதம், சவுதி அரேபியாவில் 19.9 சதவிகிதம். ஆனால் இந்தியாவில் இது 14 சதவிகிதம்தான். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் சர்வதேச அளவில் மற்றும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

முதல் மக்களவையின் (1950) மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 5 சதவிகிதம் மட்டுமே பெண்கள் இருந்தனர்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு இந்த எண்ணிக்கையில் கூடுதலாக 9 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திரிபுரா, நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், இமாசல பிரதேசம், முந்தைய ஜம்மு–காஷ்மீர் மாநிலம் ஆகியவற்றிலிருந்து ஒரு பெண் எம்.பியும் இல்லை. நாகாலாந்து சட்டசபையில் பெண் உறுப்பினரே இல்லை. மாநில சட்டமன்றங்களில் சராசரியாகப் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது ஒன்பது சதவிகிதம்தான். தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மொத்தம் உள்ள 75 அமைச்சர்களில், 8 பேர் மட்டுமே பெண்கள்.

இட ஒதுக்கீடு மசோதா

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவிகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்குச் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதா 1996இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு 1998, 1999, 2008 ஆகிய வருடங்களிலும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இவை நிறைவேற்றப்படாமலேயே காலாவதியாகிவிட்டன. இந்த மசோதாவுக்கு உறுப்பினர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த உறுப்பினர் கிழித்து எறிந்தார். ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் போன்றோர், “குட்டையாக முடி வெட்டிய பெண்களால், மற்ற பெண்களைப் பற்றிப் பேசமுடியுமா, நமது பெண்களைப் பற்றிப் பேசமுடியுமா” என்று கேள்வி எழுப்பியதும் நினைவில் இருக்கிறது. இன்றைய எதிர்ப்பு என்பது பண்டைய ஆட்சியின் நீட்சியே.

ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்களின் வசதிக்காக நம்மை ஜாதி, மதம், இனம் எனப் பிளவுபடுத்தினர். 1935– ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டமானது பெண்களுக்குத் தனி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதாகக் கூறி, மேலும் பிளவை உண்டாக்கியது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் சமூகக் கட்டமைப்புப் பாதிக்கப்படும் என்றனர்.

அரசியலமைப்புச் சபையில் இடம் பெற்று இருந்த ஹன்சா மேத்தா, “நாங்கள் (பெண்கள்) இட ஒதுக்கீட்டையோ, தனி வாக்காளர் பட்டியலையோ கேட்கவில்லை. நாங்கள் கேட்பது எல்லாம் சமூக, பொருளாதார, அரசியல் நீதியே” என்றார். அப்போது இந்தியா பிளவுபடாமல் ஒற்றுமையாக இருக்கப் போராடிய காலம். எனவே இட ஒதுக்கீடு கேட்கும் பெண்கள் நாட்டின் மீது பற்று இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். அந்தச் சூழலில் இட ஒதுக்கீட்டைப் பெண்கள் வலியுறுத்தாமல் இருந்ததில் நியாயம் இருந்திருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்.

பின்னர், அரசியல் சட்டத்தை உருவாக்கிய அரசியலமைப்புச் சபையில் 389 பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். இதில் 15 பேர் மட்டுமே பெண்கள். அரசியலமைப்புச் சபையில் இடம் பெற்று இருந்த குறைந்த எண்ணிக்கையிலான பெண்கள் மத்தியிலேயே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவில்லை. சிலர் வெளிப்படையாக எதிர்த்தனர். அரசியலமைப்புச் சபையில் உறுப்பினராக இருந்த ரேணுகா ராய், “பெண்கள் இட ஒதுக்கீடு கேட்பது, பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். பெண்களின் அறிவு, திறமையை அவமதிப்பதாக இருக்கும். சுதந்திர இந்தியாவில் பெண்கள் திறமையின் அடிப்படையில் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படாது” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இதற்கு விஜயலட்சுமி பண்டிட், சரோஜினி நாயுடு ஆகிய இருவரையும் உதாரணமாகக் காட்டினார். பாலினப் பாகுபாடு குறித்து அவர் கருத்தில் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

அரசியலமைப்புச் சபையில் இடம் பெற்று இருந்த சில ஆண் உறுப்பினர்களும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை விரும்பவில்லை. பெண்கள் என்றால் வீட்டில் இருக்கவேண்டும் அவர்களுக்கு நிர்வாகம் செய்யுமளவுக்குத் திறமை போதாது என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. இதனை நாசூக்காக “பெண்கள் அறிவால் ஆள்வதை விட இதயத்தால் ஆள வேண்டும்” என்றார் ஹெச்.வி காமத். லோக்நாத் மிஸ்ரா என்பவர், “ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் விடுதலை, சம வாய்ப்பு வேண்டும் எனில், அது நமது சமூகக் கட்டமைப்புக்கு முடிவு கட்டுவதாக இருக்கும்” என்றார். ரோகினி குமார் சவுத்ரி என்பவர், “பெண்கள் ஒவ்வொரு துறையிலும் ஆண்களை வெளியேற்ற முயற்சிப்பார்கள். அதில் இருந்து ஆண்களுக்குச் சட்டரீதியாகப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார். வேறு சிலர் அரசியல் சட்டத்தில் இடம் பெறும் சில ஷரத்துக்கள் பெண்கள் முன்னேறுவதற்குப் போதுமானவை என்று கருதினார்கள். எனவேதான், பெண்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பலமாக ஆதரித்த டாக்டர்.பி.ஆர். அம்பேத்கரால் கூட இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்தமுடியவில்லை.

இப்போது என்ன பிரச்சனை என்றால், “மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு தேவை” எனக் கூறி ஒதுக்கீட்டுக்கு இடையூறு செய்கிறார்கள். “சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதில் மாற்றங்கள் கொண்டு வரலாம். மாற்றங்களைக் காரணம் காட்டி, சட்டம் இயற்றுவதற்கே முட்டுக்கட்டை போடக் கூடாது” என்கின்றன பெண்ணிய அமைப்புகள்.

 பெண்களுக்குத் தகுதி இல்லையா?

தமிழகத்தில் சமீபகாலமாக நடைபெறும் போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பினை அதிகமாகக் காண்கிறோம். கூடங்குளம், நியுட்ரினோ, நெடுவாசல் போன்ற சூழலிய போராட்டங்கள், டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்கள், தண்ணீருக்காகச் சாலை மறியல் என அனைத்திலுமே பெண்கள்தான் முன்னிலை வகித்தார்கள். ஆனால் இந்தப் பிரச்சனைகள் அரசியலாகும்போது பெண்களுக்கு அதில் இடமில்லாமல் போய்விடுகிறது. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண்கள் எத்தனை பேர் சட்டசபை, நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டிருக்கிறார்கள்? சுருக்கமாகச் சொல்வதானால் போராட்டக் களத்தோடு பெரும்பாலான பெண்களின் அரசியல் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள்.

குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் தேர்தலில் வெற்றி பெற பணபலமும், ஆள்பலமும் தேவை. இந்த இரண்டிற்கும் நம்நாட்டுப் பெண்களுக்கு வாய்ப்பில்லை. உதாரணமாக, பொருளாதார ரீதியாகப் பார்த்தால் வேலை செய்பவர்களில் பெண்களின் பங்கு 23.3 சதவிகிதம் மட்டுமே. விவசாயம் செய்யும் பெண்களில் 14 சதவிகித பெண்களுக்கு மட்டுமே சொந்தமாக நிலம் உள்ளது. பெரும்பாலான சொத்துக்கள் ஆண்கள் வசமே உள்ளன.

பெண்களாலேயே சாத்தியம்

கொரோனாவை எதிர்கொண்டதில் பெண்கள் தலைமைவகிக்கும் நாடுகளே அதிகச் சாதனை நிகழ்த்தின.

ஜெஸிந்தா ஆர்டனைப் பிரதம மந்திரியாகக் கொண்ட நியூசிலாந்து, ஏஞ்சலா மெர்கலைத் தலைமைச் செயற்குழுவில் கொண்ட ஜெர்மனி, நான்கு பெண் தலைமையிலான கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி செய்யும் பிரதமர் சன்னா மரீன் என்ற பெண்மணியின் தலைமையில் பின்லாந்து, பிரதமர் எர்னா சோல் பெர்க் தலைமையில் நார்வே, சாய் இங் வென் என்பவரை ஜனாதிபதியாகக் கொண்ட தைவான் ஆகியவை அதற்கு ஓர் உதாரணம்.

பெண்கள் அரசியலின் தலைமை பொறுப்புகளில் இருப்பது மட்டுமே, அன்றாட வாழ்வில் சமத்துவத்தை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். பொது வாழ்வில் பெண்கள் பெறும் வெற்றி அந்நாட்டில் உள்ள பெண்களின் கனவுகளைத் தூண்டும் வகையில் இருப்பதையும், பெண் தலைவர்களைக் கொண்டுள்ள நாடுகள், அங்குள்ள ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மனதாரப் போராடி வருவதையும் காண்கிறோம்.

என்ன செய்யவேண்டும்

பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, அது அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை. மக்கள்தொகையில் சரிசமமாக இருக்கக்கூடிய பெண்களுக்கு நியாயமாக 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பல்வேறு நெருக்கடிகள் இருந்துவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டத்துக்காகக் காத்திருக்காமல் தாங்களாகவே முன்வந்து, தங்கள் கட்சியின் வேட்பாளர்களாகப் பெண்களை அதிக எண்ணிக்கையில் நிறுத்திடவேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 13 சதவிகித தொகுதிகளிலும் பாரதிய ஜனதா 12 சதவிகித தொகுதிகளில் மட்டுமே பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. இந்தநிலையில் மாற்றம் தேவை. பெண்களைப் பெருமைப்படுத்துதல் அங்கீகரித்தல் என்பதெல்லாம் அவர்களை அதிகாரத்தில் அமர்த்துவதே.. =