கல்வி-அறிவு-ஞானம்
டாக்டர். ஜான் பி.நாயகம்
இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமற் போனால், கல்வி கற்பதிலும், நினைவாற்றல் திறனிலும் பல சிக்கல்கள் உருவாகும் என்பதை கடந்த இதழில் கண்டோம். இனி, நிம்மதியான தூக்கம் வர உதவும் ஒரு எளிய தந்திர யோக முத்திரையைக் காண்போம்.
ஞான முத்திரை
இந்தத் தொடரின் தலைப்பே “கல்வி – அறிவு – ஞானம்” என்பதுதான். ஞானம் உருவாகவும் இந்த முத்திரையைச் செய்யலாம். அது குறித்து பின்னர் விரிவாகக் காணலாம். தற்போது நல்ல தூக்கம் வர இந்த முத்திரையை எவ்வாறு செய்வது என்பதைக் காணலாம்.
அமரும் முறை –
= தரையில் அல்லது நாற்காலியில் அமர்ந்தபடி செய்வது நல்லது.
= இரவில் மிகச் சோர்வாக இருந்தால் படுத்தபடியும் செய்யலாம்.
= நாற்காலியில் அமர்ந்து செய்வதாக இருந்தால் கால் பாதங்கள் இரண்டும் தரையில் படும்படி வைத்துக் கொள்ளவும். கால்கள் இரண்டும் நேராக இருக்க வேண்டும்.
= படுத்தபடியே செய்வதாக இருந்தால், மல்லாக்கப் படுத்து, கைகள் இரண்டும் வளைவின்றி நேராக உடலின் பக்கவாட்டில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் வான் நோக்கி இருக்க வேண்டும்.
= எந்த நிலையில் செய்தாலும் முதுகுத்தண்டு, கழுத்து ஆகியவை வளைவின்றி நேராக இருப்பது அவசியம்.
செய்முறை
= ஆள்காட்டி விரலின் (சுட்டு விரல்) நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப் பகுதிக்கும், முதல்கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் தொடவும்.
= அழுத்தம் தர வேண்டாம். சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும்.
= பிற மூன்று விரல்களும் தளர்வாக, சற்றே வளைந்து இருக்கட்டும்.
= இரு கைகளிலும் முத்திரையைச் செய்யவும்.
= அமர்ந்து செய்யும் போது முத்திரை கைகளை தொடைகளின் மேல் வைத்துக் கொள்ளவும்.
= படுத்துச் செய்யும் பொது, கைகள் உடலின் பக்கவாட்டில் இருக்கட்டும்.
சுவாசம் –
= இயல்பான சுவாசம்.
= சுவாசம் சற்றே ஆழமாகவும் சீராகவும் இருக்கட்டும்.
= கும்பகம் (சுவாசத்தை அடக்குதல்) வேண்டாம்.
எவ்வளவு நேரம்?
குறைந்த பட்சம் 15 நிமிடங்கள். அதிக பட்சமாக 45 நிமிடங்கள் வரையிலும் செய்யலாம்.
= நல்ல தூக்கம் வரும்.
= மனம், எண்ணங்களும் தூய்மையடையும்.
= மனம் அமைதியாகும். மனம் ஒருமுகப்படும்.
= தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
= நினைவாற்றல் பெருகும்.
= நரம்புகளும் உறுதியடையும்.
= தலைவலிகள் மறையும்.
= எதிர்மறை எண்ணங்கள் அகலும்.
= ஞானம் உருவாகும்.
குறிப்பு –
ஞான மார்க்கத்தில் செல்வோருக்கு இந்த முத்திரை பெரும் துணையாக உள்ளது. மாணவர் களின் கல்விக்கும் இது துணை செய்யும்.
தூக்கமின்மையால் வரும் பிற நோய்கள் –
சரியான தூக்கம் இல்லாமற் போனால் கல்வி கற்கும் திறன் கணிசமாகக் குறைந்து போகும் என்பதை ஏற்கெனவே கண்டோம். இது தவிர, தூக்கமின்மை பல நோய்களுக்கும் மூல காரணமாகக்கூடும் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இவற்றுள் முக்கியமானவை என கீழ் கண்டவற்றைக் கூறலாம் –
- உடல் எடை அதிகமாதல்
- மன அழுத்தம்
- நினைவுத்திறன் வீழ்ச்சி
- உயர் ரத்தஅழுத்த நோய்
- நீரிழிவு நோய்
- இதய நோய்கள்
- நரம்புத் தளர்ச்சி
இரவில் நிம்மதியாகத் தூங்கத் துவங்கினாலே இந்த நோய் நிலைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.
மேலை நாடுகளில் பல நோய்களுக்கு இப்போது தூக்கச் சிகிச்சை (sleep therapy) என்ற புது முறை சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது!
நல்ல தூக்கம் வர உதவும் பிற குறிப்புகள் –
= தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். (இரவு ஒன்பதிலிருந்து பத்து மணிக்குள்ளாக). விடுமுறை நாட்களிலும் இந்த நேரத்தை மாற்ற வேண்டாம்.
= தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை உண்டு விடுங்கள். (ஏழு,எட்டு மணிக்கு முன்பாக).
= மாலை ஏழு மணிக்குப் பின் காபி, தேநீர் போன்றவற்றை அருந்த வேண்டாம்.
= மாலையில் சற்றே உடற்பயிற்சி செய்வது அல்லது விளையாடுவது இரவில் நல்ல தூக்கத்திற்கு துணை செய்யும்.
= தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றையும் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அணைத்து விடுங்கள்.
= தூங்குமிடம் அமைதியானதாகவும் அதிக வெளிச்சம் இல்லாததாகவும் இருக்கட்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதோடு, ஞான முத்திரையும் செய்தால் மிக ஆழமான, நிம்மதியான தூக்கம் வரும். கல்வி கற்கும் திறன் பல மடங்கு அதிகரிக்கும்.
அடுத்த இதழில் காலையில் எழுந்ததும் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்க துணை செய்யும் சில எளிய மூச்சுப் பயிற்சிகளைக் காணலாம்.
(தொடரும்)