கவிஞர்.இரா.மேகலா, காரைக்கால்

சராசரியாக இந்தியனின் ஆயுட்காலம் 69 வயது என கணித்திருந்தாலும், இன்று  நாற்பது வயதை  நெருங்கி விட்டாலே, சொல்லிலடங்கா நோய்களின் கோரப்பிடியில் பிடிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வருகிறோம். ஆனால் 105 வயதில் இன்றும் ஆரோக்கியத்துடன் இருந்து இயற்கை விவசாயத்தில்   சாதனை புரிந்து, இன்றைய இளையச் சமுதாயத்தினருக்கு எடுத்துக்காட்டாக வாழும் ஓர் அற்புதப் பெண்மணி என்றால் அவர் பாப்பம்மாள் தான். கோவை மண்ணிற்கே உரிய குளிர்ந்த மனமும் இன்முகமும் கொண்டவர்.

கடந்த நூற்றாண்டில், பாப்பம்மாள் இரண்டு உலகப் போர்கள், இந்தியாவின் சுதந்திரம், பல இயற்கை பேரழிவுகள் மற்றும் இப்போது கோவிட்-19 தொற்றுநோய் என பலவற்றைக் கண்டு, 105 வயதில் ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் முரட்டு விவசாயப் பெண்மணி..

மேற்குத்  தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பவானி ஆற்றங்கரையில் பசுமைப் போர்த்திய தேக்கம்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார் ரெங்கம்மாள் என்னும் பாப்பம்மாள். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கி உண்டு ஆரோக்கியம் காக்கலாம் என்றெண்ணும் ஆர்வலர்களுக்கு பாப்பம்மாள் ஒரு வரப்பிரசாதமே. கம்பு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, சாமை போன்ற தானிய வகைகளை விளைவித்து, அவரும் அவற்றையே உண்டு வருவதே அவரது ஆரோக்கியத்தின் ரகசியம் என்கிறார். வெள்ளி அருவி போன்ற நீண்டக் கூந்தலும், முதுமைக்கே அழகான அவரது சுருங்கியத் தோலும் அவரைப் பற்றி அறியும் ஆவலை நமக்கு மேலும் தூண்டுகின்றன.

1914 ஆம் ஆண்டு  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சார்ந்த தேவலாபுரத்தில் மருதாச்சல  முதலியாருக்கும் வேலம்மாளுக்கும்   மகளாகப் பிறந்தார். தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவர், தனது  நான்கு வயதில் தாய் வழி பாட்டியின் ஊரான தேக்கம்ப்பட்டிக்கு அழைத்துவரப்பட்டு வளர்க்கப்பட்டார். அவரது தாய் தந்தையர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். அவரது பாட்டி வேறு ஊரில் நடத்தி வந்த மளிகைக் கடையை விற்று விட்டு பேரக் குழந்தைகளுடன் வந்து சேர்ந்தார். பாட்டியும் பாப்பம்மாளும் சேர்ந்து மீண்டும் மளிகைக் கடையை நடத்தத் துவங்கினர். அப்பொழுது அவரது தாயாரின் மூன்று பவுன் நகையை விற்று தனது அக்காவிற்கு திருமணம் முடிக்க எண்ணினர். சிறுவயது முதலே துணிச்சல் நிறைந்த பெண்மணியாக இருந்த பாப்பம்மாள், தனது தாயாரின் நகையை எடுத்துக் கொண்டு அடகுக் கடைக்குச் சென்றார். ஆனால் சிறுபிள்ளையிடம் பணம் தரமாட்டோம் என்றுச் சொல்லவே, தனது பாட்டியை அழைத்து வந்து பணத்தினைப் பெற்று தனது சகோதரியின் திருமணத்தை முடித்தனர். வேலையில் இது அது என்று எவ்வித பாகுபாடும் பார்க்காமல், எல்லா வேலைகளையும் செய்த பாப்பம்மாளுக்கு இருபது வயதில் ராமசாமி என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. சிறிது காலம் கழித்து அவரது பாட்டியும் இறந்து போகவே,  பிறகு  உணவகம் வைத்து நடத்தத் துவங்கினர்.

1992 ல் தனது கணவரும் இறந்து போக அது நாளிலிருந்து தனிக்கட்டையாக வாழ்க்கையை ஓட்டி வருகிறார். தனது கணவர் இருக்கையில், வியாபாரமும் நன்றாகச் செல்லவே, கிடைத்த லாபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை வாங்கிச் சேர்த்தார். இவ்வாறாக தனது முப்பது வயதில் பத்து ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரியான பாப்பம்மாள், அப்பொழுதிலிருந்தே இயற்கை விவசாய முறையைத் தொடங்கினார்.

பல்வேறு வகையான பருப்புகளையும் தானியங்களையும் பயிரிட்ட அவர் அவற்றையே தமது அனுதின உணவாகவும் உட்ெகாண்டு வருகிறார்.. அரிசி உணவினை எப்பொழுதாவது, பண்டிகைக் காலங்களில் அதுவும் மிகக் குறைவாகவே உட்ெகாள்வார். மேலும் பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளையும் தவறாமல் உண்டு வந்தார். அதுவே தனது ஆரோக்கியத்தின் ரகசியம் என்கிறார். வெள்ளாட்டுக் கறியை, நன்கு வேகவைத்து விரும்பிச் சுவைக்கும் பாப்பம்மாள் அதனை வைத்துக் கொண்டு, இரண்டு இட்லி அல்லது தோசை என அதனையும் அளவாகவே சாப்பிட்டு வந்தார். 1970 லிருந்து, தினமும் காலையில் குளித்துவிட்டு வாழை இலையில் சாப்பிட்டு வருவது அவரது இளமையின் ரகசியம். ஒருமுறை அவரிடம் நேர்க்காணலுக்குச் சென்றவர்களிடம் மிகவும் வருத்ததுடன் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதாவது இக்கால தலைமுறையினர் நாங்கள் உண்டது போன்ற உணவு முறைகளை இப்பொழுது எடுத்துக் கொள்வது இல்லை. ஆதலால் அவர்கள். இன்று மருந்தை உணவாக கொள்கின்றனர். நாங்களோ அன்று உணவை மருந்தாகக் கொண்டோம் என்கிறார் மிகவும் பெருமையாக. காபி, தேனீர் போன்றவற்றை அறவே தவிர்க்கும் அவர் கொத்துமல்லி நீரையும், சுடு  நீரையுமே பருகி வருகிறார். இதுவரை அவர் மருத்துவமனைக்கே சென்றதில்லை. பல்வேறு பகுதிகளிலிருந்து, என்னைப் பார்க்கத்தான் மக்கள் இங்கு வருகிறார்கள் என்றும் பெருமையாகக் கூறுகிறார். 

தனது பத்து ஏக்கர் நிலத்தில் தற்பொழுது இரண்டரை ஏக்கர் அளவிற்கு வாழையையும்,வெண்டையையும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கிறார். தினமும் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு காலை ஐந்தரை மணிக்கு வயலுக்குச் சென்றால், மாலை பொழுது சாயும் வரை, ஆளோடு ஆளாக நின்று வேலை செய்வார். மண் பானையில் பழையச் சோறுடன் இரண்டு வெங்காயமும் பச்சைமிளகாயையும் போட்டு உணவாக எடுத்துச் செல்வார். அதுவே அவருக்கு நாள்  முழுக்க சக்தி தருவதாகவும் கூறுகிறார்.

விவசாயத்தின் பல்வேறு யுக்திகளை அறியும் பொருட்டு, தமிழக அரசு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஒரு இளைஞரைப் போலச் சேர்ந்தார். பின்னாளில் இவ்வளவு ஏக்கர் கணக்கான விவசாய நிலத்திற்கு சொந்தக்காரராக இருந்து எடுத்துக்காட்டு இயற்கை விவசாயம் செய்யும் அவரை, கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு கருத்தரங்கங்களிலும் கலந்துக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்திச்  சிறப்பித்து வருகிறார். ஆரோக்கியம், விவசாயம், ஆலோசனை  மட்டுமல்லாது அரசியலிலும் கலக்கி இருக்கிறார் பாப்பம்மாள். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தீவிர ரசிகை அவர்.  ஒருமுறை ஸ்டாலினை சந்தித்த போது, தான் எப்படியாவது கருணாநிதியை சந்திக்க வேண்டுமென தனது விருப்பத்தையும் தெரிவித்தார். ஆனால் விதியின் விளையாட்டு, இவருக்கு முன்பாகவே அவர் சென்று விட்டார்.

1959 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்,காரமடைப் பகுதியின் கவுன்சிலராகவும், தேக்கம்பட்டி பகுதியின் வார்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் சிறந்த உறுப்பினராக இருந்து கொண்டு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதையும் விருப்பமாகத் தெரிவித்துள்ளார்.   பெற்றோரின் ஆதரவற்ற சூழலில் வளர்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் தன்னால் இயன்ற அளவில் இம்மண்ணிற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைத்தார். அவரது ஐம்பது வருட விவசாயப் பணியினைப் பாராட்டி, மத்திய அரசாங்கம் அளித்த நம் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதினையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். 105 வயதிலும் அசராமல் மண்வெட்டியை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு விவசாயப் பணிச் செய்ய செல்லும் இவருக்கு பத்ம விருது கொடுக்கப்பட்டது சரிதானே!

“எனது வாழ்க்கையில் நானே ராஜா, நானே மந்திரி” என்னும் சொல்லை உற்சாகமாக உச்சரிக்கும் அவரது வாழ்க்கை முறை நமக்கு ஓர் எடுத்துக்காட்டே. ஏதோ இவ்வுலகிற்கு வந்தோம்,சாதாரண அன்றாடப் பணிகளைச் செய்து வாழ்வை கழித்தோம் என்று இல்லாமல்,தன்னால் இயன்ற புதுமையைப் புகுத்தி சாதனையை நிகழ்த்திக் காட்டிடும் இவர் உண்மையில் ஓர் இரும்பு மனுஷியே.