வெற்றித் திசை.ஆதவன் வை.காளிமுத்து

‘‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே;

ஆனந்த  சுதந்திரம்  அடைந்து விட்டோம்  என்று

ஆடுவோமே  பள்ளி  பாடுவோமே!”

என்று அடிமை இந்தியாவில் இருந்து கொண்டு சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பதாக   சிந்தித்தவர்     மகாகவி பாரதியார்.

பாரதியின்        தீர்க்க தரிசனம்       பலித்தேவிட்டது.  ஆனாலும் பெற்ற சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவிக்கும் நிலையில் இந்தியாவின் நிலைமை இல்லை.

சுதந்திரம் அடைந்து தன் சொந்தக்காலில்     நிற்பதற்கு இந்தியா போராடிக்கொண்டிருந்தது.     மக்களின் பசியைப் போக்க  என்ன  வழி?  பஞ்சத்தை  எப்படி  எதிர்கொள்வது  என்று சிந்தித்த   வேலைகளில் இந்தியாவில்  தொழில் வளர்ச்சியும், பொருளாதார  நிலைகளும்  மிக  மிக  மந்தமாக  இருந்தன.

மூன்று வேளையும் உணவுக்கு உத்திரவாதம்              இன்றி மக்கள் தவிக்கும் நாட்டில் அறிவியலைப்              பற்றிய பேச்சுக்களெல்லாம் அபத்தமானது என்று  எண்ணினார்கள் அரசியல்  அறிஞர்கள்.

அதே நேரத்தில் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான சிந்தனைகளை முன்னெடுத்தவர்தான்    விக்ரம் சாராபாய் அவர்கள்.

இன்றைய பஞ்சம், பட்டினி, வறுமை எல்லாம் நிரந்தரமில்லாதது என்றார் அவர்.

அறிவியல் துறையை  நாம் முன்னெடுக்காவிட்டால்; நம் மக்கள் என்றைக்கும் பட்டினி கிடந்து தான்  சாக  வேண்டும் என்று                அறிவியலுக்கு  ஆதரவான முழக்கத்தை முன்னெடுத்தவர்  தான்  விக்ரம்  சாராபாய்  அவர்கள்.

பசி    ஒருபக்கம், பட்டினி ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் நாம் தொழில் நுட்பங்களை     மேம்படுத்தி முன்னேறுவோம்   என்று   சுதந்திரமான   புதிய   இந்தியாவிற்கு புதிய   சிந்தனையை   வழங்கிய   மகத்தான   மனிதர்   சாராபாய் அவர்கள்.

இந்தியாவின்  எதிர்காலத்தைப்  பற்றி அவர்  செய்த சிந்தனையின்  விளைவுதான்  அவரை  இந்தியாவின்  விண்வெளி இயலின்  தந்தை  என்று  போற்றப்படும்  நிலைக்கு உயர்த்தியது.

இப்போது இந்தியா விண்வெளி ஆராய்ச்சித்துறையில் மகத்தான பல சாதனைகளைப்  படைத்திருக்கிறது. அனைத்து அறிவியல் துறைகளிலும்   இந்தியா   அடைந்திருக்கும்   அபார உயரங்களுக்கெல்லாம்  விக்ரம்  சாராபாயின்   தளராத நம்பிக்கையும்,  அயராத  உழைப்பும்  தான்  காரணம்  என்றால் அது  மிகையன்று.

அன்றைய   காலகட்டத்தையும்   மீறி,   அன்றைய   இந்திய மக்களின்      மனநிலைகளுக்கும்  அப்பால்  புதுமையான சாத்வீகத்தோடு    கூடிய    விக்ரம்    சாராபாயின்    சிந்தனையின் விளைவு  தான்  அகில  உலகமும்  வியக்கும்  வண்ணம்  நாம் அடைந்துள்ள  அறிவியல்  வளர்ச்சிகள்.

விக்ரம் சாராபாயின்  சீரிய  சிந்தனைகளை கச்சிதமாய் உள்வாங்கிக் கொண்டவர்தான்  இந்தியாவில்  மகாத்மா காந்தியடிகளுக்குப்                   பிறகு அனைவராலும் மதித்துப் போற்றப்படும்  டாக்டர்.ஏ.பி.ஜெ.  அப்துல் கலாம்  அவர்கள்.

அப்துல்  கலாம்  அவர்கள்  வழங்கிச் சென்றுள்ள  சிந்தனைகள்  உலக அரங்கில் இந்தியாவை  ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி அழைத்துச் செல்லவிருக்கிறது என்பதில்  எள்ளளவும்  சந்தேகம்  இல்லை. மனிதச்  சிந்தனைக்கு   எல்லையே   இல்லை   என்பதற்குச் சான்றுதான்  இன்று  செவ்வாய்  கிரகத்தை  ஆய்வு  செய்துவரும் “சந்திராயன்”  விண்கலம்.

இத்தனை   மகிமைகளுக்கும்   காரணம்   விக்ரம்   சாராபாய் என்னும்  ஒரு  மகத்தான  மனிதனின்  சிந்தனைகள்  தான்.

எனவே சிந்தியுங்கள், புதிது புதிதாக சிந்தியுங்கள். புதிய  சிந்தனைகள்  தான்  நமக்கு புதிய,   புதிய உலகங்களைக்  காணச்  செய்யும்.  புதிய  சிந்தனைகள் தான் வாழ்க்கையின் புதிய  பரிமாணங்களை  நோக்கி  நம்மை  வழி நடுத்தும்.

அந்தச்சிறுமி அந்தக் குடும்பத்தின் நான்காவது குழந்தை. அவள் எப்போதும் கடைசி வரிசை யில், அதிலும்  ஜன்னலுக்கு  அருகில் அமர்வதில் தான் அவளுக்கு அலாதியான  விருப்பம்.

அப்போதுதானே தன்     சிந்தனைச் சிறகுகளை தான் விரும்பியவாறு  விரிக்க  முடியும்.

ஆம்! அவள் எப்போதும் அன்னாந்து பார்ப்பதில் அதிக ஆர்வம்  கொள்வாள்.

நீல வானத்தின் எல்லையில்லாப் பெருவெளி யில் தன் எண்ணக்  குதிரைகளைத்  தட்டிவிடுவாள்.

பறப்பாள்; பறப்பாள்; தன்சின்னஞ்சிறு  மனத்திரையில் அகண்டு வான் மண்டலத்தையும் அடுக்கிவிடும்              வல்லமை கொண்டது  அவளது  சிந்தனைகள்.

மற்ற குழந்தைகள் எல்லாம் விதவிதமாய் வரைவார்கள். ஆனால்  அவள்   எப்போதும்   நீலவானத்தையும்,  அதில் பறந்து  செல்லும்  விமானத்தையுமே  அதிகம்  வரைவாள்.

தண்ணீரில்  காகிதக்  கப்பல்களைச்  செய்து  விடுவார்கள் சிறுவர்கள். ஆனால்  அவள்  அதிலும்  விமானத்தையே  செய்து விடுவாள்.

ஒரு   நாள் அவள் கனவுகளும், கற்பனைகளும், சிந்தனைகளும் நனவாகிவிட்டது. வானமும் அவளின் வசப்பட்டது.

 உலகில்  யாரும்  செய்ய  முடியாத,  சிந்திக்கவே  முடியாத அற்புதத்தைச்  செயலாக்கினாள்.

ஆம்!     எல்லையற்ற பார தூரமான     பரவெளியில் தன்னந்தனியாக உலாவினாள்.     பெண்ணினத்திற்கு     இனி யாராலும்   பெற்றுத்தர   முடியாத   பெரும்   புகழைப்   பெற்றுத் தந்துவிட்டு  மண்ணிலே  பிறந்த  மகள்  விண்ணோடு  விண்ணாய் வியாபித்துப்  போனாள்.

அவள்தான்       வான்  உள்ளவரை  வாழும்  வரம் பெற்ற

“கல்பனா  சாவ்லா”.

அவள்   பெண்ணினத்தின்   பெருங்கனவு!   பெண்ணினத்தின் பெரும் பேறு!

“கல்பனா  சாவ்லா”

என்பதன் பொருளே

“கனவுகளின் சாம்ராஜ்யம்”

என்பதுதானாம்! =