இளைஞர் உலகம்


பேராசிரியர்கள் திரு. பீலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பீலிப் 
தொபே: 9486795506, 9443608003 04652-261588

தியாக மனப்பான்மை இராது

இன்று குடும்பங்களில் தியாக மனப்பான்மை குறைந்து வருவதைக் காண்கின்றோம். குறிப்பாக கணவனோ, மனைவியோ “அனுபவி ராஜா அனுபவி” உளப்பாங்கைக் கொண்டிருந்தால் அவர்களை அறியாமலே மனமுறிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்கள். தனது துணைவர்,

பாயில் படுத்து நோயில் கிடந்தால்

காதல் கானல் நீரே

என்ற பாடல் வரிகள் சிரிமுக உளப்பாங்கை உடையவர்களுக்குப் பொருத்தமானது.

ஒருமுறை ஆதரவற்றோர் இல்லத்தில் கொஞ்சம் வசதியானவர் போல் தோன்றிய ஒருவரை சந்திக்க நேர்ந்தது.

ஏறக்குறைய நடுத்தர வயதுடைய அவர் ஊன்றுகோலின் துணையுடன்தான் நடக்க முடிந்தது. காரணம் அவரது ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

விபத்து ஒன்றில் இவருக்கு இந்த முறிவு ஏற்பட்டதாம். இவரது மனைவி இவர் படுக்கையில் விழுந்ததும் இவரை விட்டுபோய்விட்டதாகவும் இதனால்தான் இவர் இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பதாகவும் கூறினார்.

இன்றைய உலகில் குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே உள்ள நிலையில் இந்தப் பிள்ளைகள் குறிப்பாக பெண் பிள்ளைகள் செல்லமாக வளர்க்கப்படுகிறார்கள். இதனால் இந்த குழந்தைகள் உறவில் வாழப் பயிற்றுவிக்கப்படுவதில்லை. கடிந்துரைக்கும் கண்டிப்புக்கும் இவர்கள் அன்னியப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் “ஏன் ஒழுங்காக படிக்கவில்லை?” எனக் கேட்டாலே பெற்றோர் ஆசிரியர்களிடம் தகராறு செய்யும் நிலையைப் பார்க்கிறோம். சில நேரங்களில் இது அந்த மாணவர்களை மனமுடையச் செய்து தற்கொலைக்குக்கூட கொண்டு சென்றுவிடுகிறதைப் பார்க்கிறோம். அதுபோலத்தான் தேர்வு முடிவு வந்தவுடன் மன அழுத்தத்தால், தோல்வியை சந்திக்க இயலாமல் பரிதாபமாக மடியும் பல மாணவச் செல்வங்களைப் பற்றி வாசிக்கிறோம்.

சொகுசு வாழ்க்கையில் பழகிப் போனவர்களால் மற்றவர்களுடன் அனுசரித்து வாழ்வது கடினம். அதிலும் அவர்களுக்கு சிரிமுகத்தவர் உளப்பாங்கு இருந்துவிட்டால், மண உறவிலும் சரி, மற்ற உறவிலும் சரி விரிசல் விழுவதை தவிர்க்க இயலாது. எனவே, சிரிமுகத்தவர் இந்த பலவீனம் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உற்சாகம் நீடிக்காது

காதல் திருமணங்கள் பாதியில் முறிவதற்கு பல்வேறு காரணங்களுள் ஒன்று, அது அதிவேகத்தில் செல்வதுதான். முதலில் இவர்கள் கூறுவதைப் பார்த்தால், மரணம் வரை இவர்களை யாரும் பிரிக்கவோ, இவர்களது உறவைச் சீர்குலைக்கவோ முடியாது என்றுதான் தோன்றும். ஒரு பெண் தனது காதலைப் பற்றி பேசும்போது, “அவரைத் திருமணம் செய்ய என் பெற்றோர் விடவில்லையென்றால் நான் செத்தே போய்விடுவேன்” என்றாள்.

இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த இருவரை ஒரு பெரியவர் தலையீட்டால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் சம்மதித்தனர். ஆனால் இரண்டு வருடத்தில் ஒரு பெண் பிள்ளையோடு கதறியபடி, தாய்வீட்டில் வந்து நின்றாள் அந்தப் பெண். திரும்பிப் போக, அதாவது கணவரின் இல்லத்திற்குச் செல்லுமாறு சொல்ல முடியாத நிலையில் அவள் இருந்தாள். ஒரு மருத்துவமனையில் நர்சாக ஒரு சிறு சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறாள். காதலில் தோன்றும் உற்சாகம், கல்யாணம் முடிந்ததும் தேய்பிறைபோல தேய்ந்து போகிறது. சிரிமுக உளப்பாங்குடையவர்கள் இதுபற்றி கவனமாக இருக்க வேண்டும்.

கவனம் சிதறும்

மாணவ, மாணவியருக்கு கருத்தரங்குகள் நடத்தும் போது, அநேக இளையோருக்கு ஒன்றை தெளிவுபடுத்துவதுண்டு – “கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும்”. ஈடுபாடு இருந்தால் கவனம் தானே வரும் எனக் கூறுவோம். இதற்கு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனைப் படைத்த உசேன் போல்ட்டை உதாரணமாகக் கூறுவதுண்டு.

உசேன் போல்ட் நல்ல ஓட்டக்காரர்தான்; ஆனால் அவரது பயிற்சியாளர் இவர் ஓட்டப் பந்தயங்களில் அதிக வெற்றிகளை பெறமுடியாததற்கான காரணங்களை அடையாளம் காண தீவிரமாக இறங்கினார். அப்போது இந்தத் திறமையான ஓட்டப்பந்தய வீரர், தான் ஓடும் போது தன்னோடு ஓடுகிறவர்களைப் பார்த்து ஓடிக்கொண்டிருப்பதைக் கவனித்தார். எனவே உசேன் போல்ட்டைப் பார்த்து, “நீங்கள் இனி ஓடும்போது எக்காரணத்தைக் கொண்டும் உங்களோடு ஓடிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். மாறாக, உங்கள் கவனம் முழுவதும் உங்களுக்கு முன்னால் தெரியும் நேரத்தைக் காட்டும் பலகையின் மேல் இருக்க வேண்டும்” என அறிவுரை கூறினார்.

எனவே, இந்த முறை ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் போது உசேன் போல்ட் நேரம் காட்டும் பலகையின் மேலேயே தனது கண்களை பதிய வைத்துவிட்டு அதை நோக்கி விரைந்தார்.வீரத்துடன் ஓடினார். இதன் காரணமாக 100 மீட்டரை 9.58 வினாடிகளில் கடந்து 2018 ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைத்தார்.

சிரிமுகத்தவர் எதிலும் நீடித்திருக்க இயலாத இயல்புடையவர்கள் என்பதால்தான் இவர்களது கவனம் நாலா புறமும் சிதறுகிறது.

சிறு சிறு காரியங்களிலும் நிறைவை எதிர்பார்ப்பார்.

சிரிமுகத்தவரின் பலவீனங்களில் இவர்களோடு ஒத்துப்போவதற்கு முடியாத ஒரு பலவீனம் இந்த நிறைவுடைமைக் கொள்கையாகும்.

ஒரு அறையிலே பல்வேறு பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன என வைத்துக் கொள்வோம். அதைக் கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல. அவற்றை ஒழுங்குபடுத்தி, இருக்க வேண்டிய இடத்தில் ஒவ்வொரு பொருளையும் வைப்பது நல்லதுதான். ஆனால், இப்படி ஒழுங்குபடுத்தும் போது சில ஒழுங்கின்மைகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனை பெருங்குற்றமாக கருதி ஒருவர் தகராறு செய்கிறார் என்றால், அவர் சிரிமுகத்தவருடைய உளப்பாங்கை கொண்டிருப்பவராவார். இவர்களோடு ஒத்துப்போவதோ அனுசரித்துப் போவதோ மிகவும் கடினமானதாகத் தோன்றும். இந்த விழிப்புணர்வு சிரிமுகத்தவருக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

இப்படி சிரிமுகத்தவரின் பல்வேறு பலவீனங்களை பட்டியலிட்டுப் பார்த்த நாம், இந்த பலவீனங்களை வெற்றி காண்பது பற்றி, சீர்திருத்துவது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

(தொடரும்)