வாழ்த்துக் கட்டுரை.

மதுரை.ஆர்.கணேசன்

தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! எனப்பாடிய “..பாவேந்தர்..” பாரதிதாசன் வரிகள் தமிழர்களின் சிந்தனையில் என்றும் வீரியமாய் சுரக்கிறது.!

உலக மொழிகளில் ஆயிரமாயிரமாண்டு வரலாற்றுத் தொன்மை கொண்ட தமிழ் மொழி உச்சரிப்பை சரியாக உச்சரிக்கவில்லை என்றால் வருத்தப்படும் ஆசான்களில் முனைவர் கனகலட்சுமியும் ஒருவர்!

தமிழ் மொழியின் பேச்சு நடை, எழுத்து வடிவம், ஒலி உச்சரிப்புக்கு இப்படி தான் உச்சரிக்கணும் என்று வழியை உருவாக்கியிருக்கும் சென்னையைச் சேர்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முனைவர். கனகலட்சுமி இடை நிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

முனைவர். கனகலட்சுமி 48, DTE, B.Lit.,M.A.,T.P.T.,B.Ed.,Ph.D., தகுதியுடைய ஆசிரியர் பணி 24 ஆண்டுகள், இடை நிலை ஆசிரியராக 17 ஆண்டுகள், ஆசிரியர் பயிற்சியாளராக 3 ஆண்டுகள் அத்துடன் தலைமை ஆசிரியர் பணியில் 4 ஆண்டுகள், மத்திய அரசின் எழுத்தறிவுத் திட்டப்பணி 1 ஆண்டு அனுபவம் கொண்டவர்.

2010 ஆண்டு ஊர்காவல் படையில் துணை வட்டார தளபதியாகவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

இந்தியா, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் நடைபெற்ற சார்க் மாநாட்டிலும் மற்றும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பாரிஸ் பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்று தமிழ் மொழியால் தனித்துவம் பெற்றிருக்கிறார்.

தமிழக அரசிற்கு பயிற்சி புத்தகங்கள், தமிழ் மற்றும் சூழ்நிலையியல் மற்றும் மாநில ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எழுத்தறிவை மேம்படுத்துவதற்காக முறை சாராக் கல்வியில் 3 மற்றும் 5ஆம் வகுப்பு நூல்களை எழுதியுள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் தமிழ் படிக்க, எழுத 45 நாட்கள் என்கிற ஆசிரியர், பெற்றோர் கையேடு உட்பட ஒரே நேரத்தில் 5 புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இதற்காக தமிழக அரசின் பாராட்டும் பெற்றிருக்கிறார். ஒரு மாணவனுக்கு ஒன்றாம் வகுப்பில் உச்சரிப்பும், எழுதும் முறையும் சரியாக இருந்தால் மூன்றாம் வகுப்பில் எழுத்தும். பேச்சுத் திறனும் ஏற்படும் ஐந்தாம் வகுப்பில் அதிக பட்சக் கற்றல் திறன் பெறுகிறான். அத்துடன் எட்டாம் வகுப்பில் நூலகம் சென்று படிக்கும் பழக்கம் ஏற்படும். பத்தாம் வகுப்பில் பகுத்தறிவாளன் ஆக முடியும் என்பதே சிறந்த கற்றலுக்கான அடையாளம். இந்த அடிப்படையில் கற்றால் எந்த மொழியையும் எளிதில் கற்கலாம் எனப் பறைசாற்றுகிறார்.

தமிழைப் போதிக்கும் கனகலட்சுமி, “தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும், தீர்வுகளும்” எனும் தலைப்பில் கள ஆய்வுகள், மற்றும் 45 நாட்களில் தமிழை விரைவாக வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் செய்த ஆய்வுப் பணி உலகிலேயே முதன்மையானது.

2018 ஆம் ஆண்டில் தமிழ் எழுத்துக்கள் ஆய்வுக் களத்தில் 18 ஆண்டுகள் அனுபவம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சி.இ.ஓ., உதவியுடன் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி புத்தகங்கள் கொடுக்கப்பட்டு 1,56, 710, அரசு பள்ளியில் படித்த மாணவர்களை ஒரே நேரத்தில் படிக்க வைத்தும், சரியான உச்சரிப்புடன் பேச வைத்தும்,  பிழையின்றி எழுத வைத்தும் “உலக சாதனை முயற்சி”  செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2014- ஆம்ஆண்டு தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது உள்பட பல்வேறு பொது அமைப்புகளின் விருதுகள் இவரது தமிழ் களப்பணிக்காக கிடைத்திருக்கிறது.

உலக அளவில் ஒரே அடித்தளத்தில் தமிழ் மொழி என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே என்னுடைய லட்சியம் எனக்கூறும் முனைவர். கனகலட்சுமி…,

“..தமிழின் உயிர் எழுத்துகளை சரியாக உச்சரித்தால் குழந்தைகளுக்கு ஐம்புலன்களிலும் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது, ஐம்புலன்களின் இயக்கமே வாசித்தல் என ஆய்வாளர்கள் அனைவரின் கருத்துகள் ஆகும்.

உயிர் எழுத்துகளை தொல்காப்பியரின் விதிப்படி முறையாக நாம் உச்சரித்தால் குழந்தைப் பருவத்திலிருந்து ஐம்புலன்களிளும் குறைபாடு வராது. ஆகவே நமது மொழி மருத்துவ மொழி என நமது முன்னோர்கள் கூறினார்கள்.

மெய் எழுத்துகளை முதன் முதலாக அறிமுகப்படுத்தும் போது நின்று கொண்டுதான் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஏனென்றால் தொல்காப்பியர் உந்தி வழியே தோன்றி என எழுத்துகளின் பிறப்பிடத்தை அறிமுகப்படுத்துகிறார்.

மெய்யெழுத்துகளை அரை மாத்திரை அளவில் உச்சரிக்க வேண்டும். காற்றானது மார்பு, கழுத்து, மூக்கு, வாய் ஆகிய புலன்களில் அடக்கி உச்சரிப்பதே மெய் எழுத்துகளை உச்சரிக்கும் முறையாகும்.

உயிர் எழுத்துகளையும் மெய் எழுத்துகளையும் சரியாக உச்சரிக்கும் பொழுது நாம் யோகா செய்ததற்கான பயன்களைப் பெறலாம். இது நமது தமிழ் மொழியின் சிறப்பாகும்.

‘ந’ எழுத்தை நாக்கைக் கடித்து உச்சரிக்க வேண்டும் அவ்வாறு உச்சரிக்கும் போது நாக்கில் உள்ள சிறுசிறு நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராகும் போதுமான அளவு உமிழ்நீர் சுரக்கும் போதுமான உமிழ்நீர் அளவு சுரக்கும் போது நோய் வராது.

நம் தாத்தா பாட்டி சிறுவயதில் நம்நுனி நாக்கு கூர்மையாக வருவதற்காக தனது பெயரன் பெயர்த்திகளை “தங்கத்தை யார் அடித்தார்கள் மாமா அடித்தானா? மூக்கை அறுத்து விடுவேன்” “..ந்நா..” சொல்லு என்று நாக்கை துருத்தி சொல்லிக்கொடுத்து பழகுவார்கள்.

இந்தப் பழக்கம் தான் நமக்கெல்லாம் மொட்டை நாக்கு வராமல் நாக்கைக்  கூர்மையாக்கி சிறப்பாக பேசுவதற்கு வழிவகை செய்தது. தொல்காப்பியம் படிக்காத நமது தாத்தா பாட்டிகளுக்கு ‘ந’ எழுத்தை நாக்கைக் கடித்து தான் சொல்ல வேண்டும் என்று தெரிந்திருந்தது.

‘ழ்’ எழுத்தை உச்சரிக்கும் பொழுது பிட்யூட்டரி எனும் சுரப்பி உடலில் சுரக்கிறது இந்தச் சுரப்பி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறப்புடையது,  அதேபோல தமிழ் மாத்திரையைச் சரியாக உச்சரிப்பவர்களுக்கு பிற மாத்திரை தேவை இருக்காது.

தமிழ் படிப்பவர்களுக்கு தமிழாசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய காலம். இன்றைக்கு பலநிலைகளில் தமிழ் படித்தால் சிறப்பான பணிகளைப் பெறலாம்.

ஊடகங்களில் வாய்ப்பு

ஊடகங்கள் மொழியை நம்பியே இருக்கின்றன. எழுத்து, பேச்சு என்கிற இருநிலைகளிலும் தமிழ் படித்தோருக்கான வேலை வாய்ப்புகள் நிரம்ப இருக்கின்றன. குறிப்பாக, இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

பத்திரிகைகள், சின்னத்திரை, வானொலி, பண்பலை இவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு.

கணினித் துறையிலும் தமிழ் முதன்மைப் பங்கு வகிக்கிறது. பிரசித்தி பெற்ற பி.பி.சி, சீனா, ஜப்பான், இலங்கை , ஆஸ்திரேலியா, அமெரிக்க வானொலி களில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றறிந்தோருக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன.

தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன.

உலகமெங்கும் இன்று தமிழ்மொழி மிகவும் வேகமாகப் பரவி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். தமிழ் மொழியை முறையாகக் கற்றும், கற்பித்தும் வந்தால் தமிழ் மொழி கற்பதற்கு கடினமே இல்லை.!

தமிழ் மொழி போல் எளிய மொழி எம்மொழியும் இல்லை. உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் தெரிந்து கொண்டால் குறுகிய நாட்களில் தமிழ் படித்து எழுதி விடலாம். இதுவே நம் தமிழ் மொழியின் சிறப்பு ஆகும்.

தமிழ் படிப்பது கடினம் எனும் நிலையை அறவே போக்குவதற்காகவே நான் 18 ஆண்டுகள் எனது ஆய்வை மேற்கொண்டு “தமிழ் கற்பிப்பதற்கும் கற் பதற்கும் மிகவும் எளிது” என்பதை நிரூபித்துள்ளேன்.

தமிழ் மொழியில் அதிகம் எழுத்துகள் உள்ளதால் படிப்பது சிரமம் என மாணவர்கள் நினைக்கிறார்களா என்று கேட்டால்?

அதுவும் ஒரு காரணமாகும். உண்மையைக் கூற வேண்டுமென்றால் ஒலியிலிருந்து தான் வரிவடிவம் தோன்றியது. நாம் ஒலியை அதாவது தமிழில் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்காமல் விட்டுவிட்டு வரிவடிவங்களை மட்டும் நினைவில் இருத்திக் கொண்டு அதன் வழியே தமிழ் படித்து வருகிறோம்.

நம்முன்னோர்கள் நமக்கு அனைத்தையும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள் நாம் அதைத் தேடிக் கண்டுபிடிக்கவில்லை. எழுத்தை வைத்து எழுத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்னும் முறையை நாம் அறியாதே விட்டுவிட்டோம்.

தொல்காப்பியரின் விதியான எழுத்து, சொல், பொருள் என்னும் அடிப்படையில் கற்றல் – கற்பித்தல் அமையவில்லை. 10 ஆண்டுகள் பிழையோடு எழுதி வந்தாலும் ஒரே மணி நேரத்தில் பிழையில்லாமல் எழுத செய்து விடலாம் என்பதே நமது தமிழ் மொழியின் சிறப்பாகும்.

நாம் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் உயிருடன் வாழ வேண்டும் என்றால் நாவில் உமிழ்நீர் சுரப்பதை போல தமிழைப் பேசிக்கொண்டே இருந்தால் மட்டுமே போதுமானது. தமிழ் மொழியை போல நாமும் என்றும் நலமுடன் வாழலாம்…

‘தமிழ்மொழி’ மருத்துவ குணம் கொண்ட நலவியல் மொழி என்று எடுத்துரைக்கும் முனைவர். கனகலட்சுமியின் தமிழ்ப்பணி தொடர ‘ஆளுமைச்சிற்பி’ வாழ்த்துகின்றது.