சமூகப் பார்வை –

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் போலீசாருக்கு புதிய ஊக்கத் திட்டம் ஒன்றை, டில்லி காவல்துறை சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. காரணம் டில்லியில் மட்டும் மூன்று ஆண்டுகளில் 22,000 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் 9,000 குழந்தைகளை இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி.. காவல்துறையின் ஊக்கத்திட்டம் என்ன என்கிறீர்களா? இத்திட்டத்தின்படி, 12 மாதங்களுக்குள், 50 குழந்தைகளுக்கு மேல் கண்டுபிடிக்கும் போலீசாருக்கு, பதவி உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காணாமல் போன 76 குழந்தைகளை, 3 மாதங்களுக்குள் கண்டுபிடித்த சீமா டாக்கா என்ற பெண் போலீசுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. புதிய ஊக்கத் திட்டத்தின்கீழ், முதல் பதவி உயர்வு பெறுபவர் சீமா என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் காணாமல் போவது என்பது ஒரு சமூகப் பிரச்சனையாக, அவலமாக மாறி வருகிறது என்பதனைத்தான் இது காட்டுகிறது.
உலகெங்கும் குழந்தைகள் காணாமல் போவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் முக்கியச் செய்தியாக வெளியிட்டன. இதனால் குழந்தையைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து அடுத்த இரண்டாண்டுகளில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாத 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனையொட்டி அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மே 25ஆம் தேதியைக் காணாமல் போகும் குழந்தைகளுக்கான தினமாக அறிவித்தார்.

காணாமல் போன குழந்தைகள்?

காணாமல் போன குழந்தைகள் யார்? என்பதற்குச் சிறார் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2016 வரையறை செய்கிறது. அதாவது பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் அல்லது குழந்தையைப் பாதுகாக்க சட்டரீதியாகக் குழந்தையைப் பெற்றுக் கொண்ட நபர் அல்லது நிறுவனங்கள் ஆகியோருக்கு குழந்தை இருக்குமிடம் தெரியவில்லை என்றால், அது “காணாமல் போன குழந்தை” எனக் கருதப்படும். மேலும், அது இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் நல்வாழ்வு உறுதிப்படுத்தும் வரை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தையாக அது கருதப்படும்.
இந்தியாவில்
இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் சுமார் 73,138 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகக் கடைசியாக வெளியான (2020) தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கைக் கூறுகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக 200 குழந்தைகள் அல்லது ஒவ்வொரு மணி நேரமும் 8 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன குழந்தைகளில் 71 சதவிகிதம் பேர் சிறுமிகள். அதாவது காணாமல் போனவர்களில் சிறுமிகள் 52,049 பேர். சிறுவர்கள் 21,074 பேர். மேலும் 15 திருநங்கைகள் காணாமல் போயுள்ளனர். 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, காணாமல் போன சிறுவர்களின் எண்ணிக்கை 6.5 சதவிகிதமும் காணாமல் போன சிறுமிகளின் எண்ணிக்கை 10 சதவிகிதத்துக்கு மேலாகவும் அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், காணாமல் போன குழந்தைகளில் 80 சதவிகிதத்தினர் 11 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மத்திய பிரதேசத்தில் காணாமல் போன குழந்தைகள் தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. இது தேசிய மொத்தத்தில் 15 சதவிகிதம் ஆகும். 2019 ஆம் ஆண்டில், காணாமல் போன குழந்தைகளில் சுமார் 60 சதவிகிதத்தினர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனதாகக் கூறப்படும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கர்நாடகா, அசாம் மாநிலங்களில் மட்டுமே குறைந்துள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளன. பீகாரில், காணாமல் போன குழந்தைகள் வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் 252% அதிகரித்துள்ளது. பஞ்சாபில், ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 142% அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தினசரி சுமார் 12 குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்கிறது புள்ளிவிபரம்.
காரணம்
குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தற்போது வீட்டில் பெற்றோர்கள் திட்டுவதால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் குழந்தைகள் காணாமல் போவதற்குக் குழந்தையின் பள்ளிச்சூழல், குடும்பச்சூழல், சமூகச் சூழல் ஆகிய மூன்றுமே பிரதான காரணங்களாகும். குழந்தைகளுக்கு நகரங்களின் மீதான ஈர்ப்பும் ஒரு காரணமாக அமைகிறது.
குழந்தைகள் எதற்காக?
வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள் ஒரு கட்டத்தில் கடத்தல்காரர்களின் கையில் சிக்கி குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் தன்பாலின உறவு, பாலியல் தொழில், குழந்தைத் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர். உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் சமூக விரோதிகளும் குழந்தைகளைக் கடத்துகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கடத்தப்படும் பெரும்பாலான ஆண் குழந்தைகள், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் முறுக்குத் தொழிற்சாலைகள், பேக்கரிகள் போன்ற தொழில்களுக்கும், சிறுமிகள் பாலியல் தொழிலுக்கும் கொண்டுசெல்லப்படுவதாகக் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களும்,
ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். காணாமல்போன சிறுமிகளில் 45 சதவிகிதத்தினர் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
என்ன செய்யவேண்டும்
குழந்தைகளைப் பாதுகாக்கவேண்டியது குடும்பத்தின் கடமை. சமூகத்தின் பொறுப்பும் கூட. எனவே, குழந்தைகளைத் தொலைத்தாலோ அல்லது பொது இடங்களில் தனியாக இருப்பதைக் கண்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். காணாமல் போன மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கான குழந்தை ஹெல்ப்லைன் எண் 1098, ரயில்வே சைல்ட்லைன் போன்றவை மத்திய அரசால் இயக்கப்படுகின்றன. அவை மாநில அளவில், காவல்துறை பல அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்களுக்குக் கடமை இருப்பது போல் குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை உருவாக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது.

சட்டம் 

காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளின், பிரச்சினைகள் தொடர்பாக ஙிணீநீலீஜீணீஸீ ஙிணீநீலீணீஷீ கிஸீபீஷீறீணீஸீ (ஙிஙிகி)தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய வழக்குகளைப் பதிய 2013 மே மாதம் உத்தரவிட்டது. நீதிபதி அல் தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், “இந்தியாவில் காணாமல் போன குழந்தைகளின் அனைத்து வழக்குகளும் அறியக்கூடிய குற்றமாக
(நீஷீரீஸீவீக்ஷ்ணீதீறீமீ) பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். விசாரணையில் குழந்தைகள் காணாமல் போனது நிரூபிக்கப்படாவிட்டால், அவர்கள் கடத்தப்பட்டவர்களாக அனுமானம் செய்யப்படவேண்டும்” என்று கூறியது. இது காணாமல் போன குழந்தைகளைப் பாதுகாப்பதில் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் உத்தரவாக அமைந்தது.
தமிழகத்தில், ஜூன் 2019இல் ,நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி அப்துல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச்” காணாமல் போனவர்கள் பற்றி இந்திய தண்டனைச் சட்டத்தில் எந்தக் குற்றப் பிரிவும் இல்லாதபோது, அது கொள்கை வகுப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். இதனால் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்க சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்தது. மேலும், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 174-ஐ திருத்தி காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை ஏன் சேர்க்கக் கூடாது என மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், உள்துறை அமைச்சகச் செயலர் மற்றும் டிஜிபிக்குக் கேள்வி எழுப்பியது. ஆனால், இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுத்ததாகத் தகவல் எதுவுமில்லை.

தீர்வு

பள்ளிச் சூழலும் குடும்பச் சூழலும் சரியாக இருந்தாலே பெரும்பாலான குழந்தைகள் காணாமல் போவது தடுக்கப்படும். தற்போது கொரோனாவின் தாக்கத்தால், பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது அனைத்து குழந்தைகளுக்கும் சமமாகக் கிட்டுவதாகச் சொல்வதற்கில்லை. இதனால் பள்ளிகள் திறக்கப்படும்பொழுது, குழந்தைகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இந்தச் சூழல் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்குக் கொண்டுவரக்கூடும் எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள் இந்தச் சூழலில் இருந்து குழந்தைகளை மீட்க விரிவான செயல் திட்டமும் தீவிரக் கண்காணிப்பும் தேவைப்படுகிறது. கிராமக் குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஊராட்சி பிரதிநிதிகளை ஈடுபடுத்திக் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும்.
குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு மாற்றாக, ஊரடங்கு காலத்தில் நுண் வகுப்பறைகள் நடத்த ஆலோசனைகளைக் கல்வியாளர்கள் வழங்கி வருகிறார்கள். இதைக் கிராம தன்னார்வலர்கள் மூலமாகச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். இது குழந்தைகளைப் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
நாட்டின் கண்மணிகளான குழந்தைகளைக் காப்பாற்றுவதில் குடும்பம், சமூகம், அரசு இணைந்து செயலாற்ற வேண்டும். அவர்கள் நாட்டின் எதிர்கால வளம்.