உறவு

 

 

கடுமுகத்தவர், அழுமுகத்தவர், சிரிமுகத்தவர் ஆகியோரின் உளப்பாங்குகள் கொண்டோரின் பொதுவான பண்புகள், பலம், பலவீனம், சீர்திருத்தம் ஆகியவற்றை ‘ஸ்வோட்’ ஆய்வு (Swot Analysis) அடிப்படையில் இதுவரை கண்டோம். இப்போது இந்த உளப்பாங்குகள் வரிசையில் 4-ஆவதாக இருக்கும் தூங்குமுகத்தவரின் உளப்பாங்கினை ‘ஸ்வோட்’ ஆய்வுக்கு உட்படுத்துவோம்.

1.பொதுப் பண்புகள்/இயல்புகள்

சோம்பேறித்தனம் (Laziness)

தூங்குமுக உளப்பாங்கை (Phlegmatic Temperament) அடையாளம் காட்டுவதே இந்தப் பண்புதான். சுறுசுறுப்பற்றிருப்பது தான் இவர்களது சிறப்பியல்பு. எந்த சூழ்நிலையிலும் இவர்களது சோம்பேறித்தனம் அப்படியேத்தான் இருக்கும். அதாவது சூழ்நிலைகள் மாறலாம்; ஆனால் இவர்களது செயலற்றிருக்கும் தன்மை (Passivity) மட்டும் மாறுவதில்லை. இந்த வகையில் பார்த்தால் இவர்கள் செயல் மனிதர்களான கடுமுகத்தவரின் நேர் எதிரான உளப்பாங்கைக் கொண்டவராவார்.

இன்று பெருந்தொற்று வந்ததும் வந்தது, மாணவர்கள் பள்ளி/கல்லூரி செல்ல வேண்டாம் என்ற நிலை வந்துவிட்டது. இதனால் வழக்கமாக 4 மணிக்கும், 5 மணிக்கும் அல்லது 6 மணிக்காவது விழித்துக்கொள்ளும் இளையோர் ஆன்லைன் வகுப்புதானே என்ற நினைப்பில் மிக தாமதமாக எழுகிறார்களாம். அலாரம் வைத்தால்கூட, படுக்கையில் கண்விழித்தால்கூட, விழிப்பதற்கும் எழுவதற்குமிடையே ஒரு மூன்றாம் உலக மகா யுத்தமே நடைபெறுகிறதாம். ஒருவர் கருத்துப்படி,

3 மணிக்கு எழுகிறவன் முனிவன்

4 மணிக்கு எழுகிறவன் ஞானி

5 மணிக்கு எழுகிறவன் அறிஞன்

6 மணிக்கு எழுகிறவன் மனிதன். ஆனால்

7 மணிக்கு எழுகிறவன் எருமையாம்.

இதனை ஒரு பள்ளியில் பயிலும் மாணாக்கரிடம் கூறிய போது, பலர் இந்த 7 மணியையும் தாண்டித்தான் விழிப்பதாகக் கூறினார்கள். எனவே அவர்களுக்கு இந்தச் சோம்பேறித்தனத்திலிருந்து காலையில் துயில் எழும் வேளையிலேயே விழிப்பாயிருந்து இதனை வெற்றி கொள்வது பற்றிச் ெசால்லிக் கொடுக்க வேண்டியதாயிற்று. அதாவது சாதாரண வெற்றி பெறுவது எளிதான ஒன்றாக இருக்கலாம்; ஆனால், சாதனை புரியும் வெற்றி புரிவது அரிது. அத்தகைய மனிதர்களைத்தான் உலகம் திரும்பிப் பார்க்கும். இவர்கள்தான் வரலாற்றில் தடம்பதிக்கும் மனிதர்கள். இத்தகைய மனிதர்கள் மற்றவர்கள் தூங்கும் போது விழித்திருந்து வேலை செய்தவர்கள். எடுத்துக்காட்டாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒரு நாளைக்கு 3 மணிநேரம் மட்டுமே தூங்கியவர். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 4 மணிநேரம் மட்டும் தூங்குபவர். மாவீரன் நெப்போலியன் சில நிமிடங்களே தூங்குபவர் – அதிலும் குதிரையில் அமர்ந்தபடியேதான் தூங்குவாராம். மின்சார பல்பினையும் கணக்கற்ற கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனும் தூக்கத்தை வெகுவாகக் குறைத்தவர் என்று பல சான்றுகளை எடுத்துச் சொல்லி இளையோரை காலையில் கண்விழித்து எழத் தூண்டுரை கொடுப்போம்.

இதனால்தான் என்னவோ பழைய திரைப்படப் பாடல் நம் ஒவ்வொருவரையும் பார்த்து,

“தூங்காதே தம்பி தூங்காதே

நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே”

என நம் வாழ்வில் தூங்கினால்,

சோம்பேறியாக இருந்தால் எதையெல்லாம் கோட்டைவிடுவோம் என்று தொடர்ந்து கூறுகிறது.

எனக்குத் தெரிந்த மாணவி ஒருவர் அகில இந்திய மருத்துவத் தேர்வில் தோல்வியைத் தழுவ அவரது சோம்பலே காரணமாக இருந்தது – மிகவும் புத்திசாலியான அந்த மாணவரின் வாழ்வில் இலட்சியத்தை அடையாமல் இருக்கச் செய்தது இவரது சோம்பேறித்தனம்தான்.

நேற்று செய்ய வேண்டியதை

இன்று செய்தால் சோம்பேறி

இன்று செய்ய வேண்டியதை

இன்றே செய்தால் வெற்றியாளர்

மேலும்,

இன்னும் சிறிதுநேரம் தூங்குங்கள்;

இன்னும் சிறிதுநேரம் உறங்குங்கள்.

கையை மடக்கிக் கொண்டு இன்னும்

சிறிதுநேரம் படுத்திருந்தால் வாழ்க்கை

உங்கள்மீது வழிப்பறிக் கள்வனைப் போல்

பாயும். ஏழ்மை நிலை உங்களை

போர்வீரனைப்போல் தாக்கும்

என்பது ஆன்றோர் வாக்காகும். சோம்பேறியின் மூளை சாத்தானின் பரிசோதனைக்கூடம் (An idle brain is the work shop of the devil) என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனால் தூங்கு முகத்தவர் சோம்பலின் மொத்த உருவம் எனலாம்.

எனவே இவர்கள் சுறுசுறுப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும். “சோம்பேறி எறும்பைப் பார்” என்பது சான்றோர் வாக்கு.

உணர்ச்சிச் சமநிலை உள்ளவர்

எவ்வளவுதான் தூங்குமுகத்தவரை சோம்பேறி எனத் திட்டினாலும், உணர்ச்சிச் சமநிலை என்ற இந்தப் பண்பு இவரை பலருக்கு முன்மாதிரியாக இருக்கச் செய்கிறது.

சாக்ரட்டீஸ் உலகப் புகழ்பெற்ற கிரேக்க மாமேதை என்பதை நாம் அறிவோம். இவரது மனைவி சாந்திப்பே அவர்களுக்கு இவர் வீட்டைக் கவனிக்காமல் கிரேக்க நாட்டு இளையோரை சந்தித்து அறிவுரை கூறிக் கொண்டிருப்பது பிடிக்காது. எத்தனையோ முறை அவரிடம் இதை எடுத்துச் சொல்லியும் சாக்ரட்டீஸ் இதைக் கண்டுகொள்ளவில்லை. இது சாந்திப்பே அவர்களுக்கு ஆத்திரமூட்டியது.

ஒருநாள் வழக்கம்போல் இளையோரோடு சாக்ரட்டீஸ் உரையாடிக் கொண்டிருந்தார். சாந்திப்பே அம்மாள் அவரைப் பார்த்து சத்தம் போட்டார். சாக்ரட்டீஸ் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இது சாந்திப்பே அம்மாளுக்கு எரிச்சலூட்டியது. அவர் வீட்டு மாடிக்குச் சென்று ஒரு வாளி நிறையத் தண்ணீர் நிரப்பி அதை மேலிருந்து சாக்ரட்டீஸின் தலையில் ஊற்றினாராம். உடனிருந்த இளையோர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆனால் சாக்ரட்டீசோ சற்றும் பொறுமையிழக்காது,

“கொஞ்சம் முன்னால் இடிமுழக்கம் கேட்டது,

இப்போது மழை பெய்கிறது”

என்று சாந்தத்தோடு எதிர்வினையாற்றினாராம். தூங்குமுகத்தவரைப் பொறுத்தமட்டில் அவர்கள் சிரிமுகத்தவரைப் போல் தங்கள் உணர்ச்சிகளை எளிதில் வெளிக்காட்டுவதில்லை.

2004-ஆம் ஆண்டு உரோமையிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான ஸ்பானிஸ் பிளாசாவில் சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்ட நாங்கள், அன்று அந்த இடத்தில் களப்பணிக்கு சென்றிருந்தோம். அந்த ஸ்பானிஸ் பிளாசா சுற்றுலா ஸ்தலத்தில் பொம்மைபோல் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை யாராவது சிரிக்க வைத்துவிட்டால் அவர்களுக்கு பரிசு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாங்களும் மற்ற சுற்றுலா பயணிகளும் எவ்வளவோ முயன்று பார்த்தோம். ஆனால் அவர் உணர்ச்சிவசப்படவேயில்லை. பொதுவாக இங்கிலாந்து நாட்டினரும் இப்படித்தான் இருக்கிறார்கள். சிறுவர்களாக இருக்கும் போதே இவர்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொடுக்கின்றனர்; உணர்ச்சி சமநிலைக்காகப் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.