ஆளப் பிறந்தோம் -18
திரு.இள.தினேஷ் பகத்
என் இனிய சகோதர / சகோதரிகளுக்கு வணக்கம். TNPSC Group-4 தேர்வு சூன் மாதத்திலும் TNPSC Group-1 தேர்வு சூலை மாதத்திலும் நடக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் Group-2 தேர்வு நடைபெறும் என TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. எனவே TNPSC போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் அமர வாழ்த்துகிறேன்.
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுமே சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மான்கள் வாழும் காட்டில் தான் புலிகளும் வசிக்கின்றன. மீன்கள் வாழும் ஆற்றில் தான் முதலைகளும் வாழ்கின்றன. மனிதர்கள் என்று எடுத்துக் கொண்டால் உலக அரங்கில் ஏறக்குறைய 800 கோடிக்கும் மேல் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை முறை. அவரவர்களுக்கும் ஏற்றவாறு சவால் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சவால்களை வாய்ப்பாக ஏற்பவர்கள் வெற்றி மாலைகளை ஏந்துகிறார்கள். சவால்களை எதிர்கொள்ளத் தயங்குபவர்கள் தோல்வியுற்று விரக்தியைத் தழுவுகின்றனர்.
நம் அனைவருடைய வாழ்க்கையிலும் நிச்சயம் கடினமான காலக்கட்டம் ஒன்றினை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இருப்பினும் சோதனை காலத்திற்குப் பிறகு வசந்த காலம் உண்டு என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, நேர்மறை எண்ணங்களுடன் போட்டித் தேர்வுக்குத் தயாராகுங்கள். நிச்சயம் நீங்கள் கற்ற கல்வி ஒரு அறனாக உங்களைப் பாதுகாக்கும். இதையே திருவள்ளுவர் இந்தக் குறள் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
‘‘அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்’’
இந்தத் திருக்குறளுக்கு உதாரணமாக அக்னிபுத்ரி ஒருவரின் கதையைப் பார்ப்போம். கேரளா மாநிலத்தில் ஆலப்புழாவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறக்கிறார். இளம் வயதில் அறிவியல் மீதும் கணிதம் மீதும் ஆர்வம் கொண்டவர்க்கு பின்னர் இயற்பியலின் மீது அந்த கவனம் திரும்பியது.
திருச்சூரிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படித்து, பிறகு எம்.டெக். படிப்பை புனேயில் உள்ள இராணுவத் தளவாட கல்லூரியில் ஏவுகணைப் பிரிவை தேர்ந்து எடுத்து பட்டம் பெற்ற பிறகு, குடிமைப் பணிக்கான தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் ISRO-இல் இளநிலை விஞ்ஞானி பணிக்கு அறிவிப்பு வருகிறது. உடனே IAS தேர்வினைப் புறக்கணித்து 1985-ஆம் ஆண்டு ISRO-இல் இளநிலை விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தார்.
ஏவுகணை தொடர்பான ஆராய்ச்சியில் பல நாட்கள் 12 to 16 மணிநேரம் வரை கூட ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் திறமையையும், ஆர்வத்தையும் பாராட்டிய APJ அப்துல் கலாம் அவர்கள் 1988-ஆம் ஆண்டு இவரை அக்னி-3 ஏவுகணை திட்டத்தின் உதவி இயக்குனராக நியமிக்கிறார். பிறகு அக்னி-IV மற்றும் V-இல் திட்ட இயக்குனராக தலைமை தாங்கிப் பெரும் சவால்களைத் திறம்பட எதிர்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.
யார் அவர்? என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் எனத் தெரிகிறது.
“Gender does not matter, you work as a scientist, not as a women”
‘‘பாலினம் என்பது முக்கியமல்ல, நீ ஒரு விஞ்ஞானியாகத்தான் பணியாற்ற போகிறாய்; பெண்ணாக அல்ல.’’
என்று தான் கற்ற கல்வியால் உயர்வு பெற்றவர் தான் நம் அக்னி புத்ரி டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள்.
பாராளுமன்றத்தில் வேலை!
இந்த மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் (Parliamentary Interpreter) பணியில் சேர்வது எவ்வாறு என்று பார்க்கலாம்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை வரை இந்தியைக் கட்டாய, விருப்ப மொழிப் பாடமாக எடுத்துப் படித்து ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அ) இளங்கலை வரை ஆங்கிலத்தைக் கட்டாய விருப்ப மொழிப் பாடமாக எடுத்து, இந்தி பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அ) இளநிலை வரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் விருப்பப் பாடமாகப் படித்து ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பொதுப் பிரிவினர் 35 வயது வரையிலும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை
மொழி பெயர்ப்பாளர் பணிக்குத் தேர்வு நான்கு கட்டங்களாகத் தேர்வு நடைபெறும்.
- Stage-1 (Oration Test)
சொற்பொழிவுத் தேர்வின் போது (Regional Language Interpreter) பிராந்திய மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு 7 தலைப்புகள் ஆங்கிலத்திலும், 7 தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுடைய மொழியிலும் (உதாரணமாகத் தமிழ்) 3 நிமிடங்கள், ஆங்கிலத்தில் 3 நிமிடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியிலும் பேச வேண்டும்.
- Stage-2 (Written Test)
எழுத்துத் ேதர்வில் Regional Language Interpreter 50 கொள்குறி வகை கேள்விப் பொது அறிவு (ம) நடப்பு நிகழ்வுகளில் இருந்தும் 150 மதிப்பெண்களுக்குக் கொள்குறி வகையில் பொது ஆங்கிலம் (General Regional Language) நமக்கு பிராந்திய மொழி தமிழ் என்பதால் பொதுத் தமிழிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும். பிறகு 100 மதிப்பெண்ணுக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் செய்யும் வகையில் வினாக்ககள் அமைக்கப்பட்டிருக்கும்.
- Stage-3 (Simultaneous Interpretation Test) ஒரே நேரத்தில் விளக்கச் சோதனை
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் (ம) ஆங்கிலிருந்து தமிழுக்கும் மொழி மாற்றம் 5 நிமிடங்களில் செய்யும் வகையில் தேர்வு நடைபெறும். இதற்கு மதிப்பெண் 200 ஆகும்.
- Stage-4: Interview (நேர்காணல்)
எழுத்துத் தேர்வு (ம) Oration Test-இல் வெற்றி ெபற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் மக்களவை (அ) மாநிலங்களவையில் மொழிபெயர்ப்பாளராக (Parliamentary Interpreter) பணியிடம் ஒதுக்கப்படும்.
இந்தத் தேர்வு அறிவிக்கைகளைத் தெரிந்து கொள்வதற்கு https://loksabha.nic.in and https://rajyasabha.nic.in என்ற வலைதளத்தினைத் தொடரலாம்.
– நன்றி. அடுத்த இதழில் வேறொரு வேலை வாய்ப்புத் தகவல்களுடன் சந்திக்கிறேன்.